- Ads -
Home கட்டுரைகள் கிருஷ்ண ஜயந்தி நாளில் பிறந்து, ராமபிரானை பிரசாரம் செய்த… ரசிகமணி!

கிருஷ்ண ஜயந்தி நாளில் பிறந்து, ராமபிரானை பிரசாரம் செய்த… ரசிகமணி!

கடந்த நூற்றாண்டில், தமிழுக்கு மூன்று மணிகள் பிரபலமாயிருந்தனர். பண்டிதமணி, ரசிகமணி, கவிமணி என அம்மூன்று மணிகள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார், பண்டிதமணி கதிரேச செட்டியார் ஆகியோர்.

#image_title
tamilnadu govt symbol tkc mudaliar

கடந்த நூற்றாண்டில், தமிழுக்கு மூன்று மணிகள் பிரபலமாயிருந்தனர். பண்டிதமணி, ரசிகமணி, கவிமணி என அம்மூன்று மணிகள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார், பண்டிதமணி கதிரேச செட்டியார் ஆகியோர். மும்மணிகளின் பெயருக்கு முன்னும் மணியான பட்டங்கள், பெயருக்குப் பின் அடையாளங்களாய் அலங்கரித்தன!

இவர்களில் ரசிகமணி டி.கே.சி., குற்றால முனிவர் என்ற அடைமொழியுடன் வாழ்ந்த கம்பனின் ராமனுக்கு ரசிகரானவர். அவர் பிறந்தது என்னவோ கிருஷ்ண ஜயந்தி நாளில்! 1891ல் ஆவணி மாத ரோஹிணி நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருநெல்வேலி தீத்தாரப்ப முதலியார் – மீனம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். டி – தீத்தாரப்ப முதலியார், கே – கிளங்காடு (பூர்விகம்),   சி – சிதம்பரநாத முதலியார் என மூன்றெழுத்தில் பிரபலமானவர்களில் முக்கியமானவர் டி.கே.சி.

தென்காசியில் வசித்து வந்தார் ரசிகமணி டி.கே.சி.,யின் பேரன் தீப.நடராஜன். அவர் கடந்த 2021ல் காலமாகி விட்டார். முன்னர், அடிக்கடி அவர் வீட்டுக்குச் சென்று பேசிக் கொண்டிருப்பேன். தன் தாத்தா டிகேசி., குறித்து நிறையத் தகவல்கள் சொல்வார். அவர் இருந்த இடமும் ராமாயணத்துடன் தொடர்புடையதாகவே இருந்தது. தென்காசி பரதன் திரையரங்கு அருகே, ஹனுமந்தபுரம் தெருவில் இருந்தது அவர் வீடு. ‘பஞ்சவடி’  என்பது வீட்டின் பெயர்.

ரசிகமணிக்கு தமிழ், சுதேசிய வாழ்க்கை, பாரம்பரிய கல்வி முறை, மருத்துவம் இவற்றில் தான் ஈடுபாடு அதிகம். எனக்கு காய்ச்சல் வந்து அவதிப்பட்ட போது கூட, வீட்டில் குற்றாலக் குளிர் நீரில் குளிப்பாட்டி, வீட்டு மருந்து கொடுத்து சரி செய்தார். எங்களை படிப்பதற்காக ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பினாரில்லை, வீட்டிலேயே நம் கல்வியைக் கற்றுக் கொடுத்தார் என்றார் தீப. நடராஜன்.

டிகேசி.,க்கு கல்கி, சதாசிவம், ராஜாஜி என அக்கால ஆளுமைகள் பலர் மிக நெருக்கம். சென்னைக்கு வரும்போது டி.கே.சி., எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வீட்டில் தங்குவார். தந்தை மகள் உறவைப் போல், டி.கே.சியை மதித்தார். ஒருமுறை வடக்கே சென்றபோது, தனியாக அடுப்பு எடுத்துச் சென்று, அவருக்கு தோசை வார்த்துக் கொடுத்தாராம்.

டிகேசி.,யின் குடும்பம் விருந்தோம்பலில் கரை காணாதது. அதை அவர் பேரன் வீட்டிலும் நான் அனுபவித்துள்ளேன்.

ஒருமுறை மணக்க மணக்க மிளகாய்ப்பொடி நல்லெண்ணெய் சகிதமாக  சுடச் சுட இலக்கியத் தோசை உண்ட அனுபவமும் எனக்கு உண்டு. காரணம், ரசித்து, ருசித்து சாப்பிடுவது, உள்ளர்த்தங்களை உணர்ந்து அதன் ஊடாக நின்று உணர்வால் உள் கலந்து உண்பது என, ரசிகமணி எப்படியெல்லாம் ரசித்துச் சாப்பிட்டார், கம்பனையும் தமிழையும் எப்படி எல்லாம் அனுபவித்தார்  என்று,  தன் தாத்தா பற்றி தீப.நடராஜன் சொன்னவற்றை இங்கே தருகிறேன்.

டிகேசி.,க்கு ஆரமபக்கல்வி தென்காசியிலும், உயர்கல்வி திருச்சியிலும், பட்டப்படிப்பு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும், சட்டப்படிப்பு திருவனந்தபுரத்திலும்  அமைந்தது. 1908ல் தன் மாமா மகள் பிச்சம்மாளை திருமணம் செய்துகொண்டார். சிறிது காலம் நெல்லை வண்ணார்பேட்டையில் வழக்கறிஞர் பணி செய்தார்.

அப்போது திடீரெனத் தாக்கிய மலேரியா காய்ச்சல் அவரை முடக்கிப் போட்டது. அந்நாளில் கம்ப ராமாயணம் படிக்கத் தொடங்கினார். உடல் கண்ட காய்ச்சல் போனது, உளம் கண்ட கம்பன் காய்ச்சல் அவரை நிரந்தரமாய் ஆட்கொண்டது. வழக்கறிஞர் தொழிலை மறந்தார், கம்பன் இலக்கியப் பணியிலேயே காலத்தைக் கழித்தார்.

1941ல் மகன் தீபன் இறந்த பின், குற்றாலத்தில் குடும்பத்தாருடன் வாசம் செய்யத் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் இலக்கியப் பணியாற்றியும் விருந்தோம்பல் வேள்வி செய்தும் வாழ்ந்து, 16.02.1954ல் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவரது பணிகள் அளவிடற்கரியன.

1928-1930 வரை சட்டமேலவை உறுப்பினராகவும், 1930-1935 வரை இந்து அறநிலையத்துறை ஆணையராகவும் இருந்தார். அதனால் தான், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக இருந்த போது தமிழக அரசுக்கு, (தான் பிற்த, தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் அடையாளமான ஆண்டாளின் ஊரான) ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை சின்னமாக வைக்க ரசிகமணி பரிந்துரைத்த போது அதை அப்படியே ஏற்று செயல்படுத்தினார்.

“தமிழருக்குத் தமிழே துணை” என்னும் மந்திரத்தைச் சொன்னவர் டி.கே.சி. அவர் ஏன் ரசிகமணி ஆனார் என்பதற்கு அவரது வாக்கே எடுத்துக்காட்டு.

“ரசிகர் என்றால் தேன்வண்டைப்போல் அனுபவிப்பதுதான். மறுபடியும் மறுபடியும் புஷ்பத்தில் வந்து விழ வேணும். கவியை விட்டு நம்மால் போக முடிகிறதா. இல்லை” என்பது, ரசிகத் தன்மைக்கு அவர் காட்டிய உதாரணம். கவிதையை அனுபவிக்க வேண்டும். கவிதையிலேயே மூழ்க வேண்டும். எந்தவொரு கலைஞனுக்கும் தான் வெளிப்படுத்தும் கலை ஒரு ரசிகனால் ஏற்கப்பட்டு அனுபவிக்கத் தக்கதாய் அமையவேண்டும் என்பதுவே குறிக்கோளாக இருக்கும்.

ALSO READ:  சமயபுரம் கோயிலில் புரட்டாசி பௌர்ணமி 108 விளக்கு பூஜை

ரசிகனால் ரசிக்கப் படுவதற்காகவே தனது கவிதை இருத்தல் வேண்டும் என்ற எண்ணத்துடனேயே கவிஞன் கவிதையைப் படைத்து அளிக்கிறான். அப்படி, கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு தோன்றிய ரசிகர்தான் ரசிகமணி டி.கே.சி.
வாழ்வு முழுமையும் கம்பர், கம்பர் என்றே கூறி வந்தவர்.

கம்பரை அறிமுகப் படுத்துவதும், கம்பர் கவியை அனுபவிக்கச் செய்வதுமே அவரின் மூச்சுக் காற்றாய் இருந்தது. அதனால் தான் தமிழ் இதழியல் வரலாற்றில் நெடுநாள் வந்த தொடராய், கல்கியில் அவர் எழுதிய ‘கம்பர் தரும் காட்சி’ தொடர் பத்தாண்டுகளைக் கடந்து வெளிவந்தது!

பண் என்ற சொல்லும் பாடு என்ற சொல்லும் பழந்தமிழ் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள சொற்கள். அவ்விரு சொற்களையும் இணைத்து, ‘கல்ச்சர்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ப்பதமாக ‘பண்பாடு’ என்ற சொல்லைத் தமிழுலகுக்குக் கொடுத்தவர் ரசிகமணி.

ரேடியோ என்ற சொல்லுக்கு வானொலி என்ற தமிழ்ப்பதத்தைக் கொடுத்ததும் ரசிகமணியே. பின்னாளில், வானொலி என்ற இதழ் வெளிவந்தது. அதற்கு ஆசிரியராக இருந்தவர் ரசிகமணியின் புதல்வர் தீபன்.

ஓவியம், சிற்பம் ஆகிய கலைச் செல்வங்களையும் இனங்கண்டு வெளிப்படுத்தியவர். தென்காசி கோயில் மகா மண்டபத்தில் பத்துத் தூண்களில் வடித்துள்ள சிற்பங்களைப் படமெடுத்து, விளக்கம் எழுதி, கல்கி தீபாவளி மலரின் வெளிவரச் செய்தார்.

தென்காசி கோயிலைக் கட்டிய பராக்கிரம பாண்டியனுக்கு, கோயில் பின்னாளில் கேடு அடையும் என உள்ளுணர்வு சொல்லியதால், “அக்கேட்டினை நீக்கி செப்பனிட்டு சரி செய்வோரை இன்றே பணிகின்றேன்” என்று கல்வெட்டில் பாடலாக வடித்தான். டிகேசி அக்கல்வெட்டைக் கண்டுபிடித்து அப்பாடலை உலகறியச் செய்தார்.

“ஆராயினும் இந்தத் தென்காசி மேவு பொன் ஆலயத்து
வாராததோர் குற்றம் வந்தால் அப்போழ்து அங்கு வந்ததனை
நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன்
பாரார் அறியப் பணிந்தேன் பராக்கிரம பண்டியனே”!
இப்பாடலைக் கோயிலில் உள்சுவரில் எழுதிப் போட்டிருக்கிறார்கள்.

டிகேசி, குற்றாலத்தில் கிணற்றுக்குள் கிடந்த பெரிய கற்களை வெளியே கொண்டு வரச் செய்த போது அரிய சிலைகள் வெளியே வந்தன. அச்சிலைகளை குற்றாலத்தில் உள்ள சித்திரசபை மண்டபத்தில் நிறுவினார்.

ராமாயண கதை நம்முடைய நாட்டின் தங்கச் சுரங்கம். அதிலும் கம்பன் பாடிய ராம கதை இருபத்தி நான்கு மாற்று அபரஞ்சி. இந்தத் தங்கத்தை எடுத்துக் காட்டிய தங்க நிபுணர்களுக்குள் நம்முடைய டி.கே.சி. அவர்கள் முதல் இடம் பெற்று விட்டார், இதை யாரும் எந்தப் புலவரும் மறுக்க முடியாது. ஸ்ரீராமபிரான் எப்படிக் கம்பன் உள்ளத்தில் மற்றும் ஒரு முறை அவதரித்தானோ, அவ்வாறே கம்பனும் டி.கே.சி.யின் உள்ளத்தில் மறுபடியும் அவதரித்தான், தற்காலத் தமிழருக்காக என்று நான் சொல்லுவேன்” என்றார் ராஜாஜி.

டி.கே.சி. அவர்கள் தமிழர்களுக்கு தமிழ் உணர்வு ஊட்டிய மகான். ஆங்கில மோகத்தில் மூழ்கிக் கிடந்த பற்பல அறிஞர்களையும் தமிழிலே பேசவும் எழுதவும், தமிழ் மேல் ஆசை கொள்ளவும், தமிழார்வம் மிக்கவர்களாக உருமாற்றம் பெற வைத்த அரும்பணியைச் செய்தவரும் டி.கே.சி.தான் என்பதை எண்ணி ஒவ்வொரு தமிழனும் பெருமை அடையலாம். கம்பரைப் போல்,  தம் சமகால கவிஞர் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையையும் தமிழ் மக்களிடையே எடுத்துச் சொல்லி கவிமணியின் பெருமையை உணர்ந்து கொள்ளச் செய்தவரும் டி.கே.சி.தான்!

“கம்பராமாயணத்தை இன்று தமிழுலகம் அறிவதற்கும் மதிப்பதற்கும் படிப்பதற்கும் காரணமாயிருந்தவர் நம் ரசிகமணி அவர்களே. ஷேக்ஸ்பியர் கவிதைத் தரத்தைவிடக் கம்பன் கவிதை ஒரு சிறிதும் தாழ்வில்லாதது என்று சொன்னாற்போதாது. அதனினும் மேம்பட்டதாகும் என்று ஆங்கிலம் கற்ற புலவர்களிடையே அஞ்சாமல் எடுத்துக் கூறின ஆண்மையாளர் அவர். அந்தக் கருத்தை எழுத்துக்களின் மூலமும் சொற்பொழிவுகளின் மூலமும் ஓயாமல் எடுத்து விளக்கி நிலைநாட்டி கம்பர் கவிதைக்கு ஏற்றம் தந்த பெருமை நம் ரசிகமணி அவர்களையே சாரும். ஆங்கிலம் கற்றவரே கற்றவரென்றும், தமிழ்க் கல்வி இழிவானது என்றும், தமிழில் பேசுவதும் எழுதுவதும் அநாகரிகமென்றும் எண்ணி வந்த காலமொன்றிருந்தது.
பட்டதாரிகள் பலர் மேடை மீதேறி நின்று எனக்குத் தமிழில் பேச வராது; ஆங்கிலத்திலேதான் பேச முடியும் என்று பெருமையோடு சொல்லி வந்தார்கள். அந்தக் காலத்தில் நமது ரசிகமணி ‘தமிழில் சொல்ல முடியாதது என்ன உண்டு?’ என்று ஆர்வத்தோடு கூறி, அவர்களைத் தமிழாசையும் கவிதை வெறியும் கொள்ளச் செய்தார்.
அவர்,யாவருக்கும் உத்தம நண்பர், எனக்கு உயிர் நண்பர். என்னைத் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று உபசரித்ததை நான் என்றும் மறக்க முடியாது. அன்னை போலிருந்து என்பால் அன்பு சொரிந்தார். அருவியில் நீராட்டினார். அருகிலிருந்து உணவூட்டி உபசரித்தார். என்னைப் பாராட்டினார். என் கவிதைகளைப் பாராட்டினார்.”
– கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

ALSO READ:  மக்களுக்கான டிஜிட்டல் பயன்பாட்டை முழுமை பெறச் செய்வோம்: மனதின் குரலில் மோடி!

“டி.கே.சி. என்று ஒருவன் இருந்தான். அவன் ‘தமிழைப் போன்ற உயர்ந்த மொழி உலகத்திலேயே கிடையாது. கம்பரைப் போன்ற உயர்ந்த கவிஞன் உலக இலக்கியத்தில் கிடையாது’ என்று சொல்லுவான் என்பதை நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். மற்றவர்களையும் சொல்லச் செய்ய வேண்டும். 500 ஆண்டுகள் அல்லது, 1000 ஆண்டுகள் கழிந்த பின்னாவது நான் சொன்னதை உண்மை என்று உலகமே ஒப்புக்கொள்ளும்” – மரணம் நெருங்கிய நிலையில் டி.கே.சி உதிர்த்த அமரத்துவ வார்த்தைகள்!

டி.கே.சி பார்வை – தனித்துவமான ஒரு பார்வை. அவரது அணுகுமுறையும், நோக்கும் இலக்கியத்தில் மட்டுமின்றி, இசையிலும், பிற கலைகளிலும், கல்வி, பண்பாடு, சமயம் என்று பல நிலைகளிலும் பரவி நிற்கிறது. “உண்மையைக் கூசாமல் சொல்லத் தீர்த்து விடுகிற பேர்வழி நான்” என்று தன்னைப் பற்றி அவர் வாக்குமூலம் தந்திருக்கிறார். இதனாலேயே அவர் பலவித எதிர்ப்புகளுக்கும் ஆளானார்.


தமிழறிஞர்கள் யாரும் செய்யத் துணியாத பலவற்றை தமிழுக்குச் செய்தவர் டி.கே.சி. அவற்றில் முக்கியமானது – கவி எது என்று கண்டுணர்ந்து சொன்னது செய்யுள் உருவில் எழுதப்பட்ட அனைத்துமே ‘கவிதை’ என்று சொல்லப்பட்ட போது, கவி வேறு, செய்யுள் வேறு என்னும் வித்தியாசத்தைப் பார்க்கக் கற்றுத் தந்தார்.
கம்பராமாயணம் முழுவதையும் பல ஆண்டுகள் கற்றார். கற்றபின், டி.கே.சி.யின் உள்ளுணர்வு, கம்பன் கவிகளுக்கிடையில் வெறும் செய்யுள்கள் விரவிக் கிடப்பதைக் கண்டது. கம்பன் கவிதை முத்திரை இல்லாத இடைச் செருகல்களை எல்லாம் அவர் தூக்கி எறிந்தார். கம்பனில் தொடங்கிய ரசிகமணியின் இலக்கியப் பார்வையும் ரசனையும் தமிழ்க் கவிகள் அனைத்திலும் ஊடுருவிச் சென்றது. அதன் பயனாக எத்தனையோ தமிழ்க் கவிஞர்களுடைய கவிகளை ரசிகமணி சுண்டிப் பார்த்து, பாடிப் பார்த்து, ரசித்து, பின் வெளிப்படுத்தினார்.

முன்னோரது படைப்பு எனும் ஒரே காரணத்துக்காக எந்தவொரு இலக்கியத்தையும், கவிதையையும், கதையையும், கருத்தையும் ரசிகமணி ஏற்றுக் கொண்டது என்பது கிடையாது. தமிழ்ச் சமுதாயமும் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றே அறிவுறுத்தியும் வந்தவர் டி.கே.சி.
திருக்குறள், திருவாசகம், தேவாரம், திவ்யப் பிரபந்தம், ஒளவையார், பட்டினத்தார், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், இரட்டைப் புலவர்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, நந்திக் கலம்பகம், கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், குற்றாலக் குறவஞ்சி, காவடிச்சிந்து இன்னும் பல கவிஞர்களின் சிறப்பான கவிகளை டி.கே.சி. தமிழர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். அவரது விளக்கத்தோடும், பார்வையோடும், தமிழ்க் கவிகளை அணுகுவோர்க்கு ஏற்படும் அனுபவம், தனியான, மேலான, சுவையான அனுபவம்.

தேவாரப் பாடல்கள் அனைத்தையும் மொத்தமாக டி.கே.சி ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பர் சுவாமிகளது பல கவிகளை அனுபவித்து, ரசித்துப் போற்றிய ரசிகமணி “கூற்றாயினவாறு” என்ற முதல் பாடலை ஒதுக்கி விட்டிருப்பதைக் காண்கிறோம். தாங்கள் பெற்ற அருமைப் பிள்ளை சீராளனை பெற்றோர் இருவரும் வாளால் அரிந்தனர் என்ற கருத்தை டி.கே.சி. ஒப்புக் கொள்ளவில்லை.

அதே போன்று பக்திப் பரவசம் மிக்க அருமையான கவிகளை அற்புதத் திருவந்தாதியில் காரைக்கால் அம்மையார் வழங்கியுள்ளாரே, அவைகளைப் படித்து அனுபவிப்பதை விட்டு விட்டு மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்களே புலவர்கள் என்று ஆதங்கப்பட்டவர் டி.கே.சி.

ரசிகமணியின் பேராண்மைக்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சி. 80 ஆண்டுகளுக்கு முன் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் ஒரு தேநீர் விருந்துக்கு கல்லூரியின் பழைய மாணவரான டி.கே.சியையும் அழைத்தார்கள். அவர் அப்போது சென்னை சட்டசபை எம்.எல்.சியாக இருந்தார். ஸ்காட்லாந்து பாதிரியார் ஒருவருக்கான வரவேற்பு நிகழ்ச்சி அது. அடிமை இந்தியாவில், இந்திய மக்கள் நாகரிகமற்றவர்கள், கல்வி அறிவில் தாழ்ந்தவர்கள் என்று ஆங்கிலேயர்கள் எண்ணியிருந்தனர்.பாதிரியாரிடம் டி.கே.சி.யை அறிமுகப்படுத்தினர்.  பாதிரியார் அவரிடம் ஏளனம் தொனிக்க கேட்டார்.

“ஸ்காட்லாண்ட் தேசத்தில் எங்களுக்கு மரங்கள் என்றால் ரொம்பப் பிரியம். இந்தியர்களான உங்களுக்கு எப்படியோ?” – கேட்டார் பாதிரியார்.

டி.கே.சி சொன்னார்: “மரங்களிடத்தில் எங்களுக்குப் பிரியம் கிடையாது. நாங்கள் மரங்களிடம் பக்தியே செலுத்துகிறோம்” என்று சொல்லி, பாதிரியாருக்கு விளக்கமும் தந்தார் டி.கே.சி.

“தமிழ் நாட்டில், ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு ஸ்தல விருட்சம் உண்டு. குற்றாலத்தில் பலாமரம்; திருநெல்வேலியில் மூங்கில் மரம்; திருப்பெருந்துறையிலே குருந்தமரம் & இப்படியாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு மரம் உண்டு. தாவர வர்க்கத்துக்கு, ஒவ்வொரு செடிக்கும் மரத்துக்கும் தனித்தன்மை உண்டு. அவற்றுக்குள் ஒரு ஞாபகசக்தியும் இருந்து தொழிற்படுத்துகிறது. ரோஜாச் செடியிலிருந்து ரோஜாப்பூதான் பூக்கும்; அதற்குரிய தனியான மணமும், வண்ணமும்தான் அந்த மலரில் இருக்கும். தப்பித் தவறி எந்த ரோஜாச் செடியாவது பிச்சிப்பூவைப் பூத்து வைக்குமா?
இந்த அற்புதங்கள் எல்லாம் இறைத் தத்துவமல்லவா என்பதை எங்கள் முன்னோர்கள் உணர்ந்ததன் காரணமாகத்தான் ஸ்தல விருட்சம் என்று கோவில்கள் தோறும் வைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்” என்று டி.கே.சி. விளக்கம் கொடுத்தார். கேட்ட ஸ்காட்லாண்டுக்காரர் வாயடைத்துப் போனார்.

ALSO READ:  திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை: அண்ணாமலை!

அறிவியல் சொற்களை தமிழில் கொண்டு வருவது குறித்த விவாதம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அறிவியலில் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்; அறிவியல் சொற்களை புதிதாக உண்டாக்குவதில் காலத்தை வீணாக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
“கலைச் சொல் கமிட்டி’யில் சயன்ஸ் சம்பந்தம் இல்லாதவர்களே இதுவரை இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரே நோக்கம் வடமொழியை விருத்தி பண்ணிவிட வேண்டும், அல்லது தமிழை விருத்தி பண்ணிவிட வேண்டும், சையன்ஸ் எப்படியேனும் போகட்டும் – என்றுதான் எண்ணுகிறார்கள்.
விஷயந்தான் முக்கியம் என்று எண்ணிவிட்டால் வார்த்தைகளின் ஆதிக்கம் முன்னணிக்கு வராது.
மேல்நாட்டான் ஒரு பிள்ளையைப் பெற்றான். அதற்கு ஏதோ “விக்டர்’ என்று பெயரிட்டான். நாமும் அவனை “விக்டர்’ என்று சொல்லி விட்டால் தமிழ் கெட்டா போகும்? போகாது. அதுபோல உடம்பைப் பிரித்துப் பார்த்தான். ஒரு உறுப்புக்கு “மால்பிகியன் காப்ஸியூல்’ என்று ஏதோ பெயரிட்டான். நாமும் அந்தப் பெயரையே இட்டு அழைத்தால் கேடு ஒன்றும் விளைந்து விடாது. நாளடைவில் வேறு பெயர் இட்டு நம்மவர்கள் அழைக்க ஆரம்பித்தால் அதைச் சேர்த்துக் கொள்ளுகிறது.

மோட்டார் டிரைவர்களும் கிளீனர்களும் கலைச் சொற் கழகத்தின் உதவி இல்லாமலே மோட்டாரை ஒக்கிட்டு விடுகிறார்கள்; ஓட்டி விடுகிறார்கள். நம்மை விட்டு வார்த்தை மோகம் என்று ஒழியுமோ தெரியவில்லை. அது ஒழிந்தால்தான், தானே சயன்ஸ் கைக்கு வரும்.
முன்னேறிய நாடெல்லாம் சயன்ஸை வாழ்க்கைக்கும் பொருள் விருத்திக்கும் சாலைத் தொழிலுக்கும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும்போது, நாம் சௌகரியமாக, சாவகாசமாகப் பிரதி பதங்களைத் தேடிக் கொண்டிருக்கிறாம். – என்பது அவருடைய கருத்து.

குற்றாலம் மலைமேல் சிற்றருவிக்கு அப்பால் ஒரு திறந்த வெளியில் பாறை ஒன்று இருக்கிறது. மாலை நேரத்தில் டி.கே.சி., ராஜாஜி, கல்கி மற்றும் இலக்கிய நண்பர்கள் அங்கு கூடி ரசிகமணி பாடும் கவிதைகளையும் அவரது விளக்கத்தினையும் கேட்டு மகிழ்வார்கள். அந்தப் பாறையில் இருந்து கீழே பார்த்தால் தென்னஞ்சோலைகளும் மரகதப் பச்சையில் வயல்களும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தொலைவில் முருகன் கோயில் கொண்டிருக்கும் திருமலைக்கோவில் ஒருபுறமும், இன்னொரு புறம் “ரெட்டைக் கோபுரம்”  (அப்போது தென்காசி கோபுரம் மின்னல் தாக்கி சிதைவுண்டு இரண்டு பகுதியாக நின்றது. பின்னாளில் தான் கோபுரம் எடுத்துக் கட்டப்ப்ட்டது) தென்காசி அங்கேதான் இருக்கிறது என்று சுட்டிக் காட்டிக் கொண்டும் இருக்கும். – ரசிகமணியின் அனுபவம்.

கம்ப ராமாயணத்தில் பல்வேறு காலகட்டங்களில் அதனைப் படித்த புலவர்கள் தங்கள் மேதைமையை கம்பனில் சேர்த்து, தங்கள் பாடல்களையும் கம்பராமாயணப் பாடல்கள் என்று நுழைத்து விட்டார்கள். அப்படி, கம்பராமாயணத்தில் இடைச்செருகல்கள் நிறைய உண்டு என்று வருத்தப்பட்டார் ரசிகமணி டி.கே.சி. அவர் கம்பனில் கரை கண்டவர். கம்பராமாயணத்தில் உள்ள இடைச்செருகல்களை சரியாக அறிந்து, அவற்றை நீக்கி, அந்தப் பாடல்களை எல்லாம் தனியாக ஒரு பக்கத்தில் தொகுத்து பிற்சேர்க்கை என்று அறிவித்தார். அவர் தள்ளிய பாடல்களில் கம்பனின் கவிப் புலமையும் இல்லை; சொற்களில் பிற்காலத்திய கட்டுமானம் இருக்கும்; நவீன தமிழ்ச் சொற்கள் கையாளப்பட்டிருக்கும். பேச்சு நடை அமைந்திருக்கும். அப்படி அவர் முதலாக, அமரர் அ.ச.ஞானசம்பந்தன் போன்ற தமிழ் சான்றோர்கள் பலரும் நீக்கிய இடைச் செருகல் பாடல் ஒன்றில்தான், சேதுவின் முகப்பை ராமன் அம்பு கொண்டு கீறியதாக ஒரு வரி வருகிறது. அது கம்பன் பாடல் இல்லை என்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version