spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைஉலக மகளிர் தினத்தில்! பாரதத்தில் மலர்ந்த வீர மங்கையர்!

உலக மகளிர் தினத்தில்! பாரதத்தில் மலர்ந்த வீர மங்கையர்!

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா…  பாரதியின் வரிகளை வரும் மகளிர் தின கல்லூரி பேச்சுப் போட்டிக்காகப் படித்துக் கொண்டிருந்த என் சகோதரியின் மகள் வர்ஷா திடீரெனக் கேட்டாள்…  “அது என்ன மாமா மாதவம்? எங்களுக்கு மாதவன்னா தெரியும்! ஒருவேளை எழுத்துப் பிழையோ..?”
அவளது பலமான யோசனைக்குப் பின்னே மாதவத்தின் பொருளை அவளுக்கு விளக்குவதா? அல்லது மங்கையராய்ப் பிறத்தலின் மகிமையைச் சொல்லி மாதவத்தின் மேன்மையைச் சொல்வதா…? சற்று குழம்பித்தான் போனேன்! இந்த மண்ணில் பெண்ணாய்ப் பிறப்பதற்கு பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று ஒற்றை வாக்கியத்தில் முடித்து விடலாம்தான்! ஆனால் ‘அது எப்படி?’ என்ற அவளது எதிர்க் கேள்வியும், கூடவே பெண் சிசுக் கொலை தொடங்கி, பரவலாக நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும் நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி, இதற்காகவா பெண்கள் அந்த ‘மாதவம்’ செய்து பிறக்க வேண்டும் என்ற அவளது நக்கல் மொழியும், சற்று விரிவாகவே அவளிடம் விவாதிக்க வைத்தது. கூடவே நம் மண்ணின் பரம்பரைக் கதைகளையும் சொல்ல வைத்தது!
வேத காலம் தொடங்கி புராண இதிகாச காலம் வரையில் சாதித்த பெண்கள், சரித்திரத்தில் இடம் பெற்ற பெண்மணிகள் என சிலரைச் சொல்லிக் கொண்டே வந்தேன். ஆனாலும் அவர்களில் பலர் சமுதாயக் கட்டுகளெனும் இக்கட்டுகளைச் சந்தித்து துன்பப் பட்டே தங்களை நிலை நிறுத்தியிருக்கிறார்கள்… இதைச் சொன்னபோது, அப்படி என்றால் அவர்களும் மாதவம் செய்துதான் பிறந்தார்களா? என்று அவளிடம் இருந்து எதிர்க்கேள்வி வந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்!
செல்வச் செழிப்புடன் பிறந்து, துயர் எதையும் சந்திக்காமல், வாழ்க்கையை மனம் நிறைந்த போக்கில் அனுபவித்துப் போனவர்கள் சரித்திரத்தில் இடம் பிடித்ததில்லை. ஏழ்மையிலேயே பிறந்து, வறுமையையும் துயரையும் தங்கள் தலைவிதியெனத் தாங்கி வாழ்ந்து மடிந்த கோடிக்கணக்கானோர் சரித்திரத்தின் பக்கங்களில் ஒற்றை வரியில் கூட பதிவாகவில்லை. ஆனால், சீமாட்டிகளாகவோ அல்லது ஏழையாகவோ பிறந்து, வரும் துயரை விரட்டப் போராடி, தங்கள் மன உறுதியையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தியவர்களே இன்றளவும் நம்மால் பேசப் படுகின்றனர்.
இதிகாச புராண நாயகிகள் பலரை இன்றளவும் நாம் நினைவு கூர்கிறோம். காலை எழுந்ததும், பஞ்ச கன்யைகள் என ஐந்து பேர் பெயரைச் சொல்லி வணங்கி எழுவது இந்த நாட்டின் பரம்பரைப் பழக்கம். ‘அஹல்யா திரௌபதி சீதா தாரா மந்தோதரி ததா, பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் மகாபாதக நாசனம்’ என்று இரண்டு வரியில் சொல்லி ஒவ்வொரு நாளும் இந்த ஐவரையும் நினைவு கூர்ந்தால், நம் பாதகங்கள் விலகும் என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்.
இந்த ஐவரில் நால்வர் ராமாயண காலத்தில் இருந்தவர்கள். அகலிகை, தன்னை அறியாமல் தவறுக்குத் துணை போனாள். சீதையோ வஞ்சகத்தால் வீழ்ந்தாலும், மனத் திட்பத்தால் உயர்ந்து நின்றாள். தாரை தன் கணவன் தவறான வழி சென்ற போது இடித்துரைத்து தர்மம் பல சொல்லி நல்வழிப் படுத்த முயன்றாள். அவளைப் போன்றே மந்தோதரியும் கணவன் ராவணனை நல்வழிப் படுத்த முயன்றாள். இவர்கள் நால்வரும் தர்மம் பயின்றவர்கள். தங்கள் கணவன் வழியே வந்த இக்கட்டுகளை உடைக்க முயன்றவர்கள். ஆனால் திரௌபதியின் வீரம் மகாபாரதத்தில் வருகிறது. அவள் தனக்கு வந்த இக்கட்டையும் சமாளித்தாள். தன் கணவர்க்கு வந்த இக்கட்டுகளையும் எதிர்கொண்டாள்.
மகாபாரதம் இன்னும் சில பெண்மணிகளைக் காட்டுகிறது. அவர்களில் முக்கிய இடம் பிடித்தவள் அம்பை. பாரதக் கதை  பீஷ்மரின் தர்மத்தில், வீரத்தில் இருந்து துவங்குகிறது. தந்தை சந்தனுவுக்கு பிறகு, சிற்றன்னை மகன்கள் சித்ராங்கதனையும் தொடர்ந்து விசித்ரவீர்யனையும் மன்னனாக்கினார் பீஷ்மர். நரை கூடி கிழப் பருவம் கண்டபோதும், உடல் வலு குறையாது போர்க்கலையில் மன்னனாகத் திகழ்ந்த பீஷ்மர், விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க தகுந்த பெண்ணைத் தேடி வந்தார். அப்போது காசி தேச அரசன் தன் மகள்களான அம்பா, அம்பிகா, அம்பாலிகா என மூவருக்கும் சுயம்வரம் நடத்தினார். அதில் கலந்து கொண்டார் பீஷ்மர்.  மணம் புரிய மாட்டேன்; பிரம்மச்சரிய விரதம் காப்பேன் என்று சபதம் பூண்டிருந்த பீஷ்மரைக் கண்டு அவையோர் ஏளனம் செய்தனர். ஆனால் பீஷ்மரோ சுயம்வரத்தின் முன்னே மன்னர்கள் தடுத்து போர் செய்தும் அவர்களை எல்லாம் வென்று, மூவரையும் அஸ்தினாபுர அரசனான விசித்ர வீர்யனுக்கு மணம் முடிக்க அழைத்துச் சென்றார். மூவரில் முதலாமவளான அம்பா மட்டும் தான் சௌபல அரசன் சால்வனைக் காதலிப்பதாகவும், இந்த வலுக்கட்டாய திருமணத்தில் விருப்பமில்லை என்றும் சொன்னாள்.
அதை நியாயம் என உணர்ந்த பீஷ்மர், அவள் விருப்பப் படியே செல்லலாம் என்றார். அதனால் தன் காதலன் சால்வனிடம் சென்று தன்னை மணம் புரியுமாறு கோரினாள் அம்பா. ஆனால் சால்வனோ, வேறொருவர் வலுவில் கவர்ந்து சென்று, தானும் யுத்தத்தில் தோற்று அவரிடம் இருந்து வரும் பெண்ணை மணக்க முடியாது என்று மறுத்தான். வேறு வழியின்றி பீஷ்மரிடம் சென்று தன்னை மணந்து கொள்ளுமாறு அம்பா கோரினாள். ஆனால் தன் விரதத்தைச் சொல்லி பீஷ்மர் மறுக்க, இப்படி ஆறு வருடங்கள் இருவரிடமும் மாறி மாறிச் சென்று கெஞ்சினாள் அம்பா. ஒரு கட்டத்தில் கோபமுற்று, கட்டை விரல் நிலத்தில் பதிய கடும் தவம் செய்தாள். அவள் தவத்தின் பயனாய், சிவபெருமான் வரம் கொடுத்தார். ஆனால் அவளது அந்தப் பிறவியில் அவள் எண்ணம் கைகூடாது என்று அறிந்து, தீயில் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்டாள்.
அவளே மறு பிறப்பில் சிவனருளால் துருபதன் மகள் சிகண்டியாகப் பிறந்து, பின் ஆணாக மாறினாள். இதற்காக அவள் சந்தித்த போராட்டங்கள் பல. இந்த அம்பை தான் பீஷ்ருக்கே எமனாக வந்தாள். ஒரு பெண்ணின் மனதை அறியாமல் தமது பலம், அதிகாரம், அந்தஸ்து போன்றவற்றால் அவளை பலவந்தமாக ஒருவர் அடைய முயற்சித்தால் அதன் விளைவு  விபரீதமாகும் என்பதைப் புரியவைத்தவள் அம்பா. பீஷ்மர் தனக்காக பெண்களைக் கவர்ந்து வராவிட்டாலும்கூட, சுயம்வரச் சூழலில் அப்பெண்ணின் சுதந்திர மனதுக்கு மதிப்பளிக்காமல், அவர்களின் சம்மதமும் கருத்தும் பெறாமல் வலுக்கட்டாயமாக அழைத்து வந்த தவறுக்கு, அம்பா மூலமே தன் வாழ்வின் இறுதியை அணுகினார் பீஷ்மர்.
அடுத்து வருபவள் திரௌபதி. சிவபெருமானை நோக்கி கடுந்தவம் செய்தவள். தவத்தின் முடிவில் பெருமான் வரம் என்ன வேண்டுமெனக் கேட்க, தர்மம், பலம், வில்லாள சக்தி, அழகு, பொறுமை என பெரும் குணங்கள் கொண்ட கணவன் தனக்கு அமைய வேண்டும் என்ற தன் விருப்பத்தைக் கோரினாள். ஆனால் இந்த ஐவகை குணமும் ஒருவனுக்கு ஒருங்கே அமையாததால், ஐந்து கணவர்க்கு மனைவியாகும் சூழல் அமைந்ததை மகாபாரதம் காட்டுகிறது. அதுவும் கூட அவளது அப்பிறவியில் இல்லாமல், மறு பிறவியில்! அதிலும் அவள் நெருப்பில் தவம் செய்து தோன்றினாள்.
சுயம்வரத்தில் தன்னை ஈர்த்த அர்ஜுனனுடன் அவள் வந்த போதும், பாண்டவரின் தாய் குந்தி, என்ன என்று பார்க்காமலே ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொன்ன வார்த்தைக்காக ஐவரையும் கணவராக ஏற்றாள். பின்னாளில் தருமன் தன்னை பந்தயமாக வைத்து சூதில் தோற்றபோது வெகுண்டெழுந்தாள். எந்த தர்மவான் தன் கணவனாக வரவேண்டும் என்று விரும்பி வரம் கேட்டாளோ அவனிடமே தர்மம் இதுதானா என்று வாதிட்டாள். சபையில் துச்சாதனன் தன் மானம் குலைய துகிலுரிந்து அவமானப் படுத்தியபோது, சபதம் செய்தாள். எந்த மடியில் வந்து அடிமையெனக் கூறித் தன்னை அமரச் சொன்னானோ அந்த துரியோதனன் தொடையைப் பிளந்தும் துச்சாதனன் கரம் பிளந்தும் ரத்தத்தைக் கூந்தலில் தடவி பிறகே கூந்தலை முடிவேன் என்றாள். அந்த சபதத்தை நிறைவேற்ற பல ஆண்டுகள் அவள் போராட வேண்டியிருந்தது. தன் கணவன் பீமன் மூலம் அதனை நிறைவேற்றிக் கொண்டாள்.
பெண்ணுக்கு எதிரான போக்கைக் கண்டு கண்டித்த மனவலிமை, கொடுமை கண்டு நில்லாமை, ஏற்ற சபதம் முடித்தல் என திரௌபதி வீரத்தின் விளைநிலமாய் மகாபாரதத்தில் திகழ்கிறாள். கண்ணன் சகோதரியான மாயா தேவியே திரௌபதியாய்ப் பிறந்தாள் எனும் நம்பிக்கையால் இன்றளவும் நாட்டின் பல இடங்களில் திரௌபதி தனி தெய்வமாகவே வணங்கப் படுகிறாள். தமிழகத்திலோ திரௌபதிக்கு ஆலயங்கள் பல.
மகாபாரதத்தில் இன்னொரு வீர மங்கை, கண்ணனின் மனைவியான சத்யபாமா. வீரத்தின் விளைநிலமாய், கண்ணனுடன் போர்க்களம் சென்றவள். ருக்மிணியோ, கண்ணனை பலர் சொல்லக் கேட்டு அவனது குணநலன் மனத்தில் கொண்டு காதலித்தாள். முகம் காணா நிலையிலும் முழுதாய்க் காதலித்து, தன் காதலை அவனிடம் தெரிவிக்கச் செய்து, அவன் தன்னைக் கவர்ந்து செல்ல வழியும் கூறி தன் விருப்பத்தை நிலை நாட்டினாள். சத்யபாமா போர்க்கலை பயின்று கண்ணனுக்குத் துணையாய் நரகாசுரனுடன் போர்க்களம் சென்றவள். தேரோட்டியாய் வீரம் காட்டியவள். கண்ணன் அயர்ந்த நேரத்தில் அவனைக் காக்க தானே வில்லேந்திப் போரிட்டவள். பெண்ணின் வீரமும் தியாகமும் பாமாவின் வழியே வெளிவருகிறது.
இன்னொரு பெண், ஒரு தாயாய் அமைந்தவள். கண்ணனின் தங்கை சுபத்ரா. அர்ஜுனனை மணந்தவள். தன் மகன் அபிமன்யுவை வீர இளைஞனாய் உருவாக்கஜ், அர்ஜுனனிடம் தான் கற்ற போர்க்கலையை மகனுக்குக் கற்பித்தவள். அவனை சிறந்த வில்லாளனாக உருவாக்கி போர்க்களம் அனுப்பிய தியாகத்தினள்.
இன்னும் எத்தனை எத்தனை வீர மங்கையரைக் காட்டுகிறது மகாபாரதம். அன்று முதல் இன்றுவரை, பிரச்னைகளை சந்திக்காத பெண்கள் இருந்ததில்லை. பிரச்னைகளிலேயே உழன்று வந்தாலும் வாழ்ந்தாலும் அவற்றை எப்படி முறியடித்து ஜொலித்தார்கள் இந்த மங்கையர்கள் என்பதைப் பார்க்கும் போது, அவர்களின் சமுகப் பங்களிப்பைப் பார்க்கும்போது, மங்கையராய்ப் பிறத்தல் மாதவம் செய்ததாலே என்று தெரிகிறதே!
– செங்கோட்டை ஸ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe