சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் – 44
தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
த்ருண ரஜ்ஜு நியாய: – த்ருணம் – புல், ரஜ்ஜு – கயிறு
வரலாறு – வைக்கோல் துரும்பு எத்தனை பலவீனமானது என்பது நமக்குத் தெரியும். சிறிது காற்று வீசினாலே பறந்து போகும். புல்லுக்கு மதிப்பு இல்லை என்று எடுத்தெறிந்து பேசுவார்கள். ஆனால் அவற்றைத் திரித்துச் செய்த கயிற்றுக்கு வலிமை உண்டு.
அல்பானமபி வஸ்தூனாம் சம்ஹதி: கார்யசாதிகா |
த்ருணைர்குணத்வமாபன்னை: பத்யந்தே மத்ததந்தின: ||
– ஹிதோபதேசம்.
பொருள் – மிக அற்பம் என்று நினைக்கும் பொருட்கள் கூட ஒன்றாகச் சேர்ந்தால் மிகப் பெரிய வேலைகளை சாதிக்க இயலும். புற்கள் பலவற்றைச் சேர்ந்து கயிறாகத் திரித்தால், அந்தக் கயிற்றால் மதயானையையும் கட்ட முடியும். (சம்ஹதி: – Close, Union, Combination).
பள்ளிப்பாடத்தில் ‘ஒற்றுமையே வெற்றிக்கு வழி’ என்ற கதையை படித்திருக்கிறோம். ஒரு சிறு குச்சியை எளிதாக உடைக்க முடியும். அதுவே ஒரு பத்து குச்சிகளை ஒன்றாகக் கட்டினால் அவற்றுக்கு வலு வந்து விடும். அதனை எளிதாக உடைக்க முடியாது. இதுவே ‘த்ருண ரஜ்ஜு’ நியாயத்திலுள்ள நீதி. பல புற்கள் சேர்ந்து கயிறாக மாறினால் அதன் வடிவம், குணம், சாமர்த்தியம் எல்லாம் மாறிவிடுகின்றன.
இந்த நீதியை போதிக்கும் குறும்படம் ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலானது. ‘ஆண்ட் ஈட்டர்’ என்ற ஒரு ஐந்தாறு அடி உயரம் கொண்ட விலங்கு எறும்புகளைத் தின்று வாழும் பாலூட்டி மிருகம். அந்த மிருகத்தை எதிர்த்து போராடிக் கொன்ற எறும்புகளின் கும்பல் பற்றிய கதை அந்த குறும்படம். அதில் ஆயிரக்கணக்கான எறும்புகள் சேர்ந்து ஒரு பந்து போல் உருவாகி அந்த மிருகத்தின் தொண்டையை அடைத்து அதனைக் கொன்றுவிட்டன. ஒற்றுமையாக இருந்தால் பலம். அதுவே வெற்றிக்கான
வழி என்ற நீதி இந்த வீடியோவில் காட்டப்பட்டது. வலிமையுள்ள பாம்பு வெறும்
சிற்றெறும்புகளிடம் சிக்கி இறந்தது என்பது ‘சுமதி சதகம்’ கூறும் நீதி.
தனிமனித பலம், சங்க பலம் என்பது பற்றி பல கதைகள் உள்ளன.
* சூரிய கிரணங்கள் நமக்கு ஜீவனை அளிக்கின்றன. உயிரினங்களுக்கும்
தாவரங்களுக்கும் பிராணனை அளிக்கின்றன. ஒளிச்சேர்க்கை, மூலம் ஆற்றலைப் பெறுவதற்கு உதவுகின்றன. சூரிய கிரணங்கள் மனிதர்களுக்கு டி வைட்டமினை அளித்து எலும்புக்கும் தோலுக்கும் வலிமை சேர்க்கின்றன.
இந்தக் கிரணங்களை ஒரே இடத்தில் குவித்தால்? அதன் குணம் மாறிவிடும்.
பூதக்கண்ணாடியின் மூலம் சூரிய கிரணங்களை ஒருங்கிணைத்தால் என்ன ஆகும்? அக்னி பிறக்கும். ஒன்றிணைவதில் வலிமை உள்ளது, சக்தி பிறக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
* இரும்புத் துண்டிற்கும் காந்தத்திற்கும் என்ன வேறுபாடு? காந்தத்தின்
குணங்களே வேறு. அதில் இருக்கும் கூறுகள் ஒரே திசையில் இருப்பதால்
காந்தத்திற்கு அத்தகைய சிறப்பான குணம் ஏற்படுகிறது. சூரிய கிரணங்களின் ஒரு பகுதியான லேசர் கிரணங்கள் மூலம் சிகிச்சை செய்வது. எக்ஸ்ரே கிரணங்களை பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்துவது போன்றவை இந்த நியாயத்திற்கான உதாரணங்கள்.
* சத்ரபதி சிவாஜியின் படையில் இருந்த காட்டுவாசிகளான மாவலிகள், படைத்தலைமையின் ஆணைக்கு ஏற்ப நடந்து கொண்டதால் வெற்றி பெற முடிந்தது. விளையாட்டுகளில் பலவீனமான டீம் கூட வெற்றி பெறுவதைப் பார்க்கிறோம். டீம் உறுப்பினர்களிடைய இருக்கும் ஒற்றுமையால் வெற்றி சாத்தியமாகிறது.
படைப்பில் உபயோகமற்றது என்று எதுவுமே இல்லை. எவற்றை எவ்வாறு உபயோகிப்பது என்று அறிந்தவர் அரிது. புல்லைக் கூட பயனுள்ளதாக மாற்றுவது என்பது சமர்த்தனால் இயலும் என்று கூறுகிறது இந்த புகழ்பெற்ற சுலோகம்.
அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி – நாஸ்திமூலமனௌஷதம் |
அயோக்ய: புருஷோ நாஸ்தி – யோஜக: தத்ர துர்லப: |
பொருள் – மந்திரத்திற்கு உதவாத எழுத்தே இல்லை. மருந்தாகப் பயன்படாத தாவரமே இல்லை. உபயோகமில்லாத மனிதனே இருக்கமாட்டான். ஆனால் எழுத்துக்களிலும் தாவரங்களிலும் மனிதர்களிடமும் இருக்கும் உயர்வை அடையாளம் கண்டு அவற்றை எவ்வவாறு உபயோகப்படுத்துவது என்று அறியும் சமர்த்தன் தேவை.
‘பயனற்றவன் என்று யாருமே இல்லை. அவர்களைச் சரியாக பயன்படுத்திகொள்ளாததே குறை” என்பார் சுவாமி சின்மயானந்தர். (Nobody is useless. They are used less). அற்பமான பொருட்களை அதிக வலிமையாக மாற்றுவதே இந்த நியாயம் அளிக்கும் செய்தி.