சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 45
தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
அன்யோன்யாஸ்ரய ந்யாய: – அன்யோன்யம் – ஒருவருக்கொருவர். ஆஸ்ரயம் –சார்ந்திருப்பது.
ஒன்றை மற்றொன்று சார்ந்திருப்பது அன்யோன்யாஸ்ரயம். மக்கள் அரசனைச் சார்ந்திருப்பதும், அரசன் பிரஜைகளைச் சார்ந்திருப்பதும் இதற்கு உதாரணம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ‘ராஜா’ என்ற சொல்லே பிரஜைகளின் மேல் அவனுக்கு இருக்கவேண்டிய பொறுப்பைக் காட்டுகிறது. ‘ரஞ்ஜனத்வாத் ராஜ:’ – அதாவது, அரசாட்சியால் மக்களை மகிழ்விப்பவன் ராஜா. மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்றால் அரசன் நல்லவனாக இருக்க வேண்டும் அப்படிபட்ட அரசனை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘அன்யோன்யம்’ என்ற சொல் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழ்வதைக் குறிக்கிறது.
மகாபாரதத்தில் ஒரு சுலோகம் ‘அன்யோன்யாஸ்ரயம்’ பற்றி சிறப்பாகக் கூறுகிறது.
ராஜானாம் ப்ரதமம் விந்தேத் ததோ பார்யாம் ததோ தனம் !
ராஜஸ்ய ஸதி லோகஸ்ய குதோ பார்யா குதோ தனம் !!
பொருள் – முதலில் நல்ல அரசனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அதன் பிறகுதான் மனைவியைத் திருமணம் செய்து கொள்வதோ, செல்வம் சம்பாதிப்பதோ செய்ய வேண்டும். அரசன் கெட்டவனாக இருந்தால் பிரஜைகளுக்கு மனைவி எங்கே? செல்வம் எங்கே? (அவை
அவனிடம் நிலைக்காது).
‘அவினாபாவ சம்பந்தம்’ (விட்டு நீங்காமை) என்று கேள்விப் பட்டிருக்கிறோம். “நீ இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் நீ இல்லை” என்ற பதங்களும் பாடல்களும் கூட கேட்டிருக்கிறோம். அவற்றின் உண்மை நிலையும் பொய் நிலையும் கூட நாமறிந்ததே.
‘அன்யோன்யாஸ்ரயம்’ என்ற சொல்லில் சார்ந்திருப்பது, ஆதரிசமாக வாழ்வது, சுயநலம், அனுகூலம், தர்மத்தைக் கடைப்பிடிப்பது, பலனடைவதில் விருப்பம் என்று பல உணர்ச்சிகள் உள்ளன என்பர் ஆய்வாளர்.
‘தர்மோ ரட்சதி ரட்சித:’ – ‘தர்மம் காக்கப்பட்டால், காத்தவரை தர்மம் காக்கும்’ என்பது மகாபாரதக் கூற்று. “வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் விதிக்கப்பட்ட, உலக நலனுக்கான செயல்களின் தொகுப்பை தர்மம் என்பார்கள்” என்பது அறிஞர்களின் விளக்கம். இது ‘அன்யோன்யாஸ்ரயம்’ என்பதற்கான உதாரணம்.
பரஸ்பரம் சார்ந்திருப்பது
நிர்வனோ பத்யதே வ்யாக்ரோ நிர்வ்யாக்ரம் சித்யதே வனம்
தஸ்மாத் வ்யாக்ரம் வனம் ரக்ஷேத் வ்யாக்ரம் ச பாலயேத் !!
(மகாபாரதம் – உத்தியோக பர்வம் 29/55)
பொருள் – வனத்திலிருந்து வெளிவந்த புலி கொல்லப்படுகிறது. புலி இல்லாத வனம் மக்களால் அழிக்கப்படுகிறது. அதனால் வனத்தைப் பாதுகாக்க வேண்டும். வனம் புலியைப் பாதுகாக்கும். இது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா திருதராஷ்டிரனுக்குக் கூறிய உதாரணம்.
விதுரரும் இதே பொருள்படும் சுலோகங்களை திருதராஷ்டிரனுக்குக் கூறுகிறார். (உத்தியோக பர்வம் – 37/45,46). பாண்டவர்களையும் கௌரவர்களையும் சேர்ந்து வாழச் சொல்லி அறிவுறுத்துகிறார். அந்த சந்தர்பத்தில் ‘பரஸ்பரம் அன்யோன்யம்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக,
சஹாய பந்தனா ஹ்யர்தா: சஹாயாஸ்யர்த பாந்தவா:
அன்யோன்ய பந்தனா வேதா வினான்யோன்யம் ந ஸித்த்யத: !!
என்ற சுலோகத்தைக் கூறுகிறார்.
பொருள் – செல்வம், துணை நிற்பவர்களோடு முடியிடப்பட்டு உள்ளது. உதவியும் செல்வத்தோடு முடியிடப்பட்டே கிடைக்கும். செல்வம், உதவுபவர்கள் – இந்த இரண்டும் பரஸ்பரம் சேர்ந்திருப்பவை. பிரிந்திருந்தால் பலனளிக்காது என்று விதுரர், கௌரவர்களும் பாண்டவர்களும் அன்யோன்யமாக இருந்தால் கிடைக்கும் பயன்களை
குறித்துக் கூறுகிறார்.
பரஸ்பர அனுகூலம் – கணவனும் மனைவியும் இணைந்திருக்கும் குடும்பம் அன்யோன்யாஸ்ரயத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. “பாரத தேசத்தின் திருமண அமைப்பு புராதனமானது, மிகச் சிறப்பானது” என்று உலகமே புகழ்ந்து பாராட்டுகிறது.
வாழ்வின் விழுமியங்களோடு மிக உன்னதமான சிகரங்களை எட்டும் இந்த திருமண அமைப்பு அன்யோன்யாஸ்ரயத்தால் தான் பரிகாசமாக விளங்குகிறது. ஆதி தம்பதிகளான பரமசிவன், பார்வதியின் அன்யோன்யத்தைப் பற்றி ‘’ஜகத்குரு சங்கராச்சாரியார்
சௌந்தர்யலஹரியில் கூறிய முதல் சுலோகம் …
சிவசக்த்யாயுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சே தேவம் தேவோ ந கலு குஸல: ஸ்பந்திதுமபி !
அதஸ்த்யாமாராத்யாம் ஹரிஹர விரிஞ்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி !!
பொருள் – ஹே பகவதி! ஈஸ்வரன், சக்தியான உன்னோடு சேர்ந்தால்தான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்ய இயலும் .
நான்கு ஆசிரமங்களின் அன்யோன்யம் –
பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானபிரஸ்தம், சன்யாசம் எனப்படும் வர்ணாசிரமங்கள் தனித்தனியாக அன்றி, ஒன்றோடொன்று சேர்ந்திருப்பதால், வாழ்வின் சாதனைகளை மெருகேற்றிக் கொள்வதற்கு ஏதுவாகிறது. இந்த நான்கு ஆசிரமங்களின் இடையே உள்ள அன்யோன்யம், தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற புருஷார்த்தங்களை அடையச் செய்யும் மார்க்கமாகத் திகழ்கிறது.
பரஸ்பரம் அனுகூலமாகத் திகழ்வதற்கு எடுத்துக்காட்டாக, ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனன் ஆகிய இருவரின் நட்பைக் கூறலாம். இவ்விருவருடைய நட்பு சுயநலமற்றது. தர்ம ரட்சணையை நோக்கமாகக் கொண்டது.
‘தர்மத்தோடு கூடிய குறிக்கோள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்’ என்று கூறும் இந்த கீதையின் சுலோகம் (18/78) ‘அன்யோன்யாஸ்ரய’த்தின் பலனை எடுத்துரைக்கிறது.
யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ: யத்ர பார்தோ தனுர்தர:
தத்ரஸ்ரீ விஜயோ பூதி: த்ருவா நீதிர்மதிர்மம: !!
பொருள் – எங்கே யோகேஸ்வரனான ஸ்ரீகிருஷ்ணர் இருக்கிறாரோ, எங்கே வில்லேந்திய அர்ஜுனன் இருக்கிறானோ, அங்கே செல்வம், வெற்றி, ஐஸ்வர்யம், திடமான நீதி ஆகியவை இருக்கும்.
துரியோதனன், கர்ணன் ஆகிய இருவரின் நட்பு இதற்கு முற்றிலும் மாறானது. ராவணன், வாலி ஆகிய இருவரின் நட்பும் சுயநலத்தோடு கூடியது. அவர்களுடைய நட்பு, அதர்மத்திற்காக செய்து கொண்ட ஒப்பந்தம்.
நிகழ்கால உதாரணங்கள்
–சுயநலத்தோடு கூடிய, கள்ளமான அன்யோன்யாஸ்ரயத்திற்கு (INDI –A) இந்தி கூட்டணி அரசியல் கூடாரத்தின் உறுப்பினர்களை உதாரணமாகக் கூறலாம். சைனா, பாகிஸ்தான் இடையேயான நட்பும் அப்படிப்பட்டதே. அமைச்சர்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே இருக்கும் அன்யோன்யாஸ்ரயத்தின் குறிக்கோள் நல்லதானால் நன்மையான பலன் விளைகிறது.
‘அன்யோன்யாசிரயம்’ – இந்துமதக் கொள்கை –
சுற்றுச்சூழலும் மனிதனும் பரஸ்பரம் சார்ந்திருக்க வேண்டும் என்பது பாரதிய சித்தாந்தம். இதுவே இந்தியர்களின் வாழ்க்கைமுறை. மனித வாழ்வு, பூமியைச் சார்ந்துள்ளது. விலங்கினம், பறவைகள், பூச்சிகள், பூகோளம், காற்று, நீர் – இவை அனைத்தும் பரஸ்பரம் பிரிக்க முடியாதவை. உயிரினங்கள் அனைத்தும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. “ஈஸாவாஸ்யமிதம் சர்வம்” – ஜகம் அனைத்தும் பகவானின் சொரூபம். இதுவே ஹிந்து மத தத்துவம்.
பிற நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல நம் ஹிந்து தர்மத்தில் உள்ளன. அதற்கு மாறானது சைனாவின் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோவின் சித்தாந்தம். 1958ம் ஆண்டு மாவோ, அஞ்ஞானத்தால் மக்களுக்கு ஒரு பாவம் நிறைந்த உத்தரவைப் பிறப்பித்தான். சைனா நாட்டில் குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவை தானியங்களைத் தின்று விடுகின்றன என்று கண்டுபிடித்து ஒவ்வொரு பறவையும் எத்தனை தானியங்களைத் தின்கின்றன என்று கணக்கிட்டு மொத்தத்தில் தேசத்தில் எத்தனை தானியங்கள் நஷ்டமாகின்றன என்று கணக்கிடச் செய்தான். பறவைகளைக் கொன்று எடுத்து வருபவருக்கு அந்த கொடூரன், பரிசுகளும், பண வெகுமானங்களும் அறிவித்தான். அதனால்
விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், உத்யோகிகள் எல்லோரும் அத்தகு மரண இயக்கத்தை இரண்டாண்டு காலம் தொடர்ந்தனர்.
இத்தகு மனிதத்தன்மையற்ற கொடூரச் செயலால் சைனாவில் பசிக் கொடுமை தலைவிரித்தாடியது. மனித இறப்புகள் பல நேர்ந்தன. சோறின்றி ஆயிரக்கணக்கானவர் மரணித்தனர். அப்போதுதான் அந்த நாத்திக சக்ரவர்த்தியின் கண் திறந்தது. பறவைகள் இல்லாததால் பயிர்களை வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள் தாக்கி சாகுபடி குறைந்து
போனது.
படைப்பில் ஒன்றின் மீது ஒன்று சார்ந்து வாழ்வதே இயற்கை. பாரத தேசத்திற்கு மட்டுமே இந்த ‘அன்யோன்ய ஆஸ்ரயம்’ பற்றித் தெரியும். பாரத மக்கள் இயல்பாகவே ஏழை எளியவர், பறவைகள் விலங்குகள் என்று அனைத்து உயிரினங்களிடமும் கருணையும் அன்பும் கொண்டவர்கள். பறவைகளுக்காக வீட்டின் முன்னால் நெற்பயிர்களைக் கட்டித் தொங்க விடுவார்கள். எறும்புகளுக்கு மாவும் சர்க்கரையும் தூவுவார்கள். கோ
சாலைகளைக் கட்டி கால்நடைகளை ஆதரிப்பார்கள். அன்ன சத்திரங்களை ஏற்படுத்தி, ஏழை எளியவர்களை ஆதரிப்பார்கள்.