கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், ஆசிரியர் கலைமகள்
வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
கலைமகள் இதழ் தமிழகத்தின் சரித்திரங்களை நமக்கு அவ்வப்பொழுது எடுத்து இயம்பும் இலக்கியத் திங்கள் இதழ். எத்தனையோ மகான்கள், தமிழ் இலக்கிய ஆளுமைகள் கலைமகளில் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாரதியார் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக வெளிவந்த கட்டுரையை ‘கலைமகள்’ பத்திரிகையில் தீபாவளி சிறப்பிதழில் 1941-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மறு பிரசுரம் செய்திருந்தோம்.
பாரதியாரின் படைப்புக்கள் வெளியானால் அந்தப் பத்திரிகையைப் பற்றி பிரிட்டிஷ் காரர்கள் அதிகமாக நோட்டமிடுவார்கள். சில கஷ்டங்களுக்கும் கூட அந்த பத்திரிகைகள் உள்ளாவது உண்டு! தேசத்தின் மீதும் தெய்வீகத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட கலைமகள் மாத இதழ் சுதந்திரப் போராட்ட காலத்தில் பல சுதந்திர தியாகிகளின் எழுத்துக்களைப் பிரசுரம் செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பாரதியார் எழுதி கலைமகளில் மறு பிரசுரம் கண்ட கட்டுரையை அப்படியே கீழே தந்துள்ளேன்……………. ‘
பாரத் மாதா கி ஜெய்’
பாரதியின் கட்டுரை
“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம்.சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்தற்காலத்திலே இந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.
நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்துபோய்விட்டான். பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள்.
நாமெல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து, நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம். ஆனால் சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையினது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்ய வேண்டும்.எத்தனை தரம் கொன்றபோதிலும் மறுபடியும் மறுபடியும் உயிர் தளிர்ப்பது ராட்சதர்களுடைய சுபாவம். அவர்களுடைய மர்ம ஸ்தலத்தை அழித்த பிறகுதான் மடிவார்கள்.
அதுபோலவே லட்சுமிதேவி நரகாசுரனை வதைத்தவுடனேயே நாம் அவனுடைய மர்ம ஸ்தலத்தை அழித்து விடாமையால் அவன் மறுபடியும் தளிர்க்கத் தொடங்குகிறான். ஆதலால் நாம் இனியேனும் நரகாசுரனுடைய மர்ம ஸ்தலத்தை நன்றாக அறிந்து அதைத் தாக்காமல் இருப்போமானால் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.
தீபாவளி தினத்திலேகூட அந்நிய தேசத் துணிகள் வாங்கும் ஈசுவரத் துரோகிகள் நமது நாட்டிலே இருப்பார்களானால் நரகாசுரன் எவ்வாறு ஒழிவான்? லட்சுமிதேவி எப்படி ஜயமடைவாள்?
பாரத புத்திரர்களே! ராட்சதர், அசுரர், பிசாசர் முதலான துர்க்குணங்களுடைய ஜன்ம விரோதிகளே! உங்களுடைய உண்மையான சுபாவத்தை அறிந்து கொள்ளுங்கள்.மஹா வீரத்தன்மை பெற்று அஷ்ட லட்சுமிகளுக்கும் இருப்பிடமாகி விளங்குதற்குரிய வழிகளைத் தேடுங்கள். உங்களுக்கெல்லாம் பரிபூர்ணமான மேன்மையும் சர்வாபீஷ்டங்களும் சித்தியடைவதாக.
ஓம் தத் ஸத். வந்தேமாதரம்.”
“எப்போதும் இந்தியனாக இருப்போம்! இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்கி தேசத்திற்கு வளம் சேர்ப்போம்!! பாரதியின் கட்டுரை சொல்லாமல் சொல்லும் விஷயம் இது”