- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் சங்க இலக்கியங்களில் திருக்கார்த்திகை விழா

சங்க இலக்கியங்களில் திருக்கார்த்திகை விழா

புலவர் நக்கீரர் பாடிய அகநானூற்றின் 141-ஆவது பாடலிலே இதுகுறித்து என்ன கூறியிருக்கிறது தெரியுமா?

#image_title
#image_title

பத்மன்

திருக்கார்த்திகை தீபத் திருவிழா தமிழர்களின் மிகப் பழைய திருவிழா என்பதற்கும், அத்திருநாள் திருவண்ணாமலை திருத்தலத்திலே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பதற்கும் சங்க இலக்கியமான அகநானூற்றிலேயே சான்று உள்ளது.

புலவர் நக்கீரர் பாடிய அகநானூற்றின் 141-ஆவது பாடலிலே இதுகுறித்து என்ன கூறியிருக்கிறது தெரியுமா?

“மழைகால் நீங்கிய மாக விசும்பில்,
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த,
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்,
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய,
விழவுடன் அயர வருகதில் அம்ம!” – என்கிறது அப்பாடல்.

இதன் பொருள்: “மழை பெய்யாத பருவத்திலே, பரந்து விரிந்த வானத்திலே, முயல் குட்டி போன்ற நிழல் தென்படுகின்ற முழுமையான சந்திரன் தோன்றுகின்ற பௌர்ணமி தினத்திலே, அறுமீன் எனப்படும் ஆறு நட்சத்திரக் கூட்டமான கார்த்திகை நட்சத்திரம் சேருகின்ற இருள் நீங்கிய நாளிலே, தெருக்களிலே வீடுகள்தோறும் அருகருகே விளக்குகளை ஏற்றிவைத்து, மாலைகளைத் தொங்கவிட்டு, பழமையான வெற்றி பொருந்திய தொன்மை வாய்ந்த ஊரிலே நடைபெறுகின்ற விழாவைச் சிறப்பாகக் கொண்டாட நீங்கள் உங்கள் சுற்றத்தாரோடு வாருங்கள்” என்று ஒரு பெண் தனது தோழிகளிடம் கூறுகிறாள்.

ALSO READ:  திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

அவ்வகையிலே, இருள் அகன்று தெருவெங்கும் ஜெகஜ்ஜோதியாக விளக்குகள் எரிகின்ற திருநாள்தான் திருக்கார்த்திகை தீபத் திருவிழா. அது கொண்டாடப்பட்டும் பழம்பெரும் வெற்றி பொருந்திய நகரம் திருவண்ணாமலை திருத்தலம்.

கார்த்திகை மாதத்தில் இல்லங்கள் தோறும் இருளை அகலச் செய்யும் அகல் விளக்குகளை ஏற்றிவைத்துக் கொண்டாடுவது வழக்கம். இதனை அகநானூறு, நற்றிணை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் சிறப்பாகப் பாடியுள்ளன. புலவனாகவும் இருந்த பாண்டிய மன்னன் பெருங்கடுங்கோ, பாலைத் திணையில் பாடுவதில் வல்லவன். ஆகையால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்றும் அழைக்கப்பட்டான்.

அந்த அரசப் புலவன் அகநானூற்றுப் பாடல் ஒன்றில், கார்த்திகை விளக்குகளை இலவ மரத்தில் பூக்கும் பூக்களுக்கு உவமையாகக் கூறியுள்ளான். “பெருவிழா விளக்கம்போல, பலஉடன் இலைஇல மலர்ந்த இலவமொடு” என்பன அப்பாடல் வரிகள்.

மிகப் பெரிய விழாவான திருக்கார்த்திகையின்போது ஏற்றப்படும் வரிசையான விளக்குகளைப்போல, இலைகளே இல்லாத இலவ மரத்திலே வரிசையாகப் பல பூக்கள் பூத்திருந்தனவாம்.

இதேபோல் நற்றிணையில் இதே புலவன் பாடியுள்ள மற்றொரு பாடல்,
“அறுமீன் பயந்த அறம்செய் திங்கள்,
செல்சுடர் நெடுங்கொடி போல,
பல்பூங் கோங்கம் அணிந்த காடே” என்று கூறுகிறது.

ALSO READ:  மதுரை மாவட்ட கோவில்களில் நாளை சனி மஹா பிரதோஷம்!

“ஆறு விண்மீன்கள் அடங்கிய கார்த்திகை நட்சத்திரத்தின் பெயர் கொண்ட அறம் புரிவதற்கு ஏற்ற புனித மாதத்தில், ஒரு நீண்ட கொடியைப் போன்று சுடர் விடும் விளக்குகள் வரிசையாக ஏற்றிவைக்கப்படுவதைப் போல, வரிசையாகப் பல பூக்கள் மலர்ந்திருக்கும் கோங்க மரங்கள் நிறைந்த காடு” என்பது இதன் பொருள்.

இவ்வாறு சங்க இலக்கியங்களில் பெருவிழா என்றும் போற்றப்படுகிறது திருக்கார்த்திகைத் திருவிழா.

நெற்றி விழியார் பயந்த கனலே நெடும்படையோய்
வற்றா நதியாள் சுமந்த சுடரே வடிவழகா
வெற்பு மகளாள் அணைத்த மகவே வெகுயெழிலா
கற்புடைப் பெண்டிர் தலைவனே காப்பாய் கதிரைவேலே!

நேராய் நிமிர்ந்து நிறைவாய் விரிந்த நெடுஞ்சுடரே
ஓரார் இருளும் உணரார் பிழையும் ஒறுத்திடுவாய்
தீராப் பகையும் திறமில் உறவும் திருத்திடுவாய்
சீரார் அருணைத் திருக்கார்த் திகையின் திருவிளக்கே!

அனைவருக்கும் திருக்கார்த்திகைத் தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version