
ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 48 – கபி முஷ்டி ந்யாய:
தெலுங்கில் – பி,எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
கபி முஷ்டி ந்யாய: – கபி – குரங்கு, முஷ்டி – கை முஷ்டி
குரங்கு பானையில் கை விட்டதைப் போல..
நம் முனிவர்கள் இயற்கையை ஆழ்ந்து கவனித்து, ஆச்சர்யப்படும் நியாயங்கள் பலவற்றை அளித்துள்ளார்கள். அவற்றில் இந்த ‘கபி முஷ்டி ந்யாயமும்’ ஒன்று. இது தொடர்பான கதை ஒன்று உள்ளது.
குரங்கு ஒன்று இருந்தது. ஒரு ஜாடியில் சுவைமிக்க உணவைப் பார்த்து, தின்ன ஆசை கொண்டது. அந்த ஜாடியின் வாய் மிகக் குறுகியது. குரங்கு தன் கையை அதில் நுழைத்து உணவைக் கையில் எடுத்து, இறுக்கப் பிடித்துக் கொண்டது. குரங்கால் கையை வெளியில் எடுக்க முடியவில்லை. இழுத்துப் பார்த்தது. கையில் இருக்கும் உணவை உதறி விட்டால், கை வெளியே வந்து விடும். ஆனால் அந்த அறிவு குரங்குக்கு இல்லை.
இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டு, ‘கபி முஷ்டி’ ந்யாயத்தை சான்றோர் அளித்தனர். இந்தக் கதையில் ஒரு சிறந்த கருத்து உள்ளது. குரங்கு, உணவு அல்லது தானியத்தைத் தின்ன ஆசை கொண்டு, கைப்பிடியை உதறாததால், கையை வெளியில் எடுக்க முடியாமல் இன்னலுக்கு உள்ளானது. அதே போல், ஆசை காரணமாக செல்வத்தைத் துறக்க இயலாமல், இன்னல் படுகின்றனர் மனிதர்கள் என்பது செய்தி.
அந்த கூஜா அல்லது ஜாடியின் சிறிய வாயில் கையை நுழைத்த போது இல்லாத தொல்லை, கையை வெளியில் இழுக்கும் போது ஏன் ஏற்பட்டது? அந்த வானரம், அந்த கூஜாவில்தான் குறை இருக்கிறது என்று எண்ணி, அதனை நிந்தித்தது. இதுவே இந்த நியாயத்தில் உள்ள சிறப்பு.
குரங்கு கூஜாவின் மேல் குறையை ஏற்றியது போலவே, நம் போராசை காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு, நாம் பிறரைக் குறை கூறுகிறோம். நம் குறைகளை நாம் உணர்வதில்லை. இதுவே ‘கபி முஷ்டி’ ந்யாயம்’.
சுக போகங்கள், உறவுகள் என்று எதைப் பிடித்துக் கொண்டாலும் துயரமே மிஞ்சும். துறந்து விட்டால் மோட்சம். இதுவே இந்த கதையின் உட்பொருள். பிடிப்பு, விடுப்பு என்ற இரண்டையும் சார்ந்தே வாழ்க்கை உள்ளது.
ஒன்றைப் பெற வேண்டும் என்றால், ஒன்றை விட வேண்டும். வாழ்க்கையில் பிடித்துக் கொள்ள வேண்டியவை சில உண்டு. துறக்க வேண்டியவை சில உண்டு. இதைக் கூறும் நியாயமே இது.
விட வேண்டியவற்றை விட்டு விட்டால் துன்பம் நீங்கி விடும். குரங்கின் கதையில் கைப்பிடியின் அளவு பெரியதானதால் இன்னல் ஏற்பட்டது. வெளியில் இருந்து எஜமானி கம்பால் அடித்துத் துன்புறுத்தினாலும், அது கைப்பிடியை விடவில்லை. பாவம். விடத் தெரியவில்லை. விட விரும்பவில்லை. வாழ்க்கையில் இதனால்தான் மனிதனுக்கு கஷ்டம் வருகிறது. ஏதேதோ முட்டாள்தனமான யோசனைகள், விருப்பு, வெறுப்பு, உறவு பகை, இவற்றை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டால், கஷ்டப்படுவார்கள் என்பது செய்தி.
வானரம் என்றால் சஞ்சலமான மனம். அது, பார்க்கும் பொருளின் மேல் எல்லாம் ஆசைப்பட்டு அதைத் தொடவும், சொந்தம் கொண்டாடவும் நினைக்கிறது. அதனால் இக்கட்டில் சிக்கித் தவிக்கிறது.
பர்த்ருஹரி, மனத்தின் இயல்புக் கிரமத்தை விவரிக்கையில், ‘சிருங்கார சதகத்தில்’ இவ்விதம் கூறுகிறார்.
ஸம்ருதா பவதி தாபாய,
த்ருஷ்டா சோன்மாதகாரிணீ
ஸம்ருஷ்டா பவதி மோதாய…
பொருள் – எண்ணிய உடனே தவிப்பை ஏற்படுத்தும். பார்த்தவுடனே பைத்தியம் பிடிக்கச் செய்யும். தொட்டவுடன் மோகத்தை ஏற்படுத்தும்… என்று இந்த நியாயத்தின் கதைக்கு விளக்கம் கூறுவது போல் உள்ளது இந்த சுலோகம்.
பிடித்துக் கொண்டால் பந்தம். விட்டு விட்டால் மோட்சம். இதுவே இந்த நியாயம் கூறும் சூட்சும செய்தி. விட்டு விட வேண்டியவர்களை விடாமல் இருந்ததால் எத்தனை நஷ்டம் ஏற்பட்டது என்று கூறும் சம்பவங்கள் இராமாயண, மகாபாரதத்தில் பல உள்ளன.
புத்திரப் பிரேமை
துரியோதனன் பிறந்த உடனே, கழுதை கத்துவது போல அழுதான். அதைக் கேட்ட கழுதைகளும் நரிகளும் பெரிதாக ஊளையிட்டன. சில அபசகுனங்கள் தென்பட்டன. அந்த தீய சகுனங்களைப் பார்த்து விதுரரும், பிறரும், ‘இந்த மூத்த புதல்வன் பிறந்த உடனே அபசகுனங்கள் காணப்படுகின்றன. உனக்கும் உன் குலத்திற்கும் அமைதி கிடைக்க வேண்டுமென்றால் இந்த ஒரு மகனைத் துறந்து விடு. இன்னும் உனக்கு தொண்ணூற்று ஒன்பது புதல்வர்கள் பிறப்பார்கள்’ என்று எடுத்துச் சொன்னாலும் திருதராஷ்டிர மகாராஜா கேட்கவில்லை. புத்திரப் பிரேமை என்ற மோகத்தின் காரணனமாக, விட வேண்டியை குறித்து விதுரன் கூறிய இந்த சுலோகம் புகழ் பெற்றது.
த்யஜேதேகம் குலஸ்யார்தே, க்ராமஸ்யார்தே குலம் த்யஜேத் |
க்ராமம் ஜனபதஸ்யார்தே ஆத்மார்த்தே ப்ருதிவீம் த்யஜேத் ||
(மகாபாரதம் – ஆதிபர்வம் – 114/38)
பொருள் – குலத்தின் நலனுக்காக ஒரு மனிதனைத் துறக்க வேண்டும். கிராமத்தின் நலனுக்காக குலத்தை விட்டு விட வேண்டும். தேசத்தின் நலனுக்காக கிராமத்தையே துறக்க வேண்டும். தன் ஆத்ம நலனுக்காக பூமியையே துறக்க வேண்டும். ஆனால் மோகம் அத்தனை எளிதாக விடக் கூடியதா?
காமாசுரன்
சீதா தேவியை சிறையில் அடைத்த ராவணனுக்குப் பலர் அறிவுரை கூறினர். ‘தவறு செய்கிறாய். அந்த மகா சாத்வியை விட்ட விடு’ என்றனர். அவன் கேட்கவில்லை. கண் முன்னால் படைத் தளபதிகளும் அன்பான சகோதரர்களும், உயிருக்குயிரான புதல்வர்களும் மாண்ட போதிலும், அவனுடைய கண்களை மூடிய காமப் புரை விலகவில்லை.
ராம பாணத்தால் அடிபட்டு வீழ்ந்த ராவணனின் அருகில் வந்த மனைவி மண்டோதரி, ‘சீதாவை விட்டு, ராமனோடு நட்பு கொள் என்று நான் கூறிய சொற்களைக் கேட்டகாமல் போனாயே’ என்று அழுது புலம்பினாள்.
‘சீதையின் மேல் நீ கொண்ட மோகமே உன்னைக் கொன்றது. உண்மையில் அந்த பதிவிரதையின் தவம் உன்னை எரித்தது’ என்று புலம்பினாள்.
‘கபி முஷ்டி’ ந்யாயத்திற்கு எடுத்துக்காட்டாக, விட்டுக் கொடுக்காத பிடிவாதமான காம, மோக அசுரர்களின் கதைகளை ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். இவற்றின் செய்தி –புலனின்பங்களும், தளைகளும் பிடித்துக் கொண்டால் துக்கம், விடாவிட்டால் அழிவு, விட்டால் மோட்சம்.
பிடிப்பும் விடுப்பும்!
ஸ்ரீசைலம் காடுகளில் ஒரு சாது வசித்தார். தன்னை தேடி வரும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கூறி உதவினார். ஒரு நாள் அவருடைய தரிசனத்திற்காக ஒரு ஜமீன்தாரின் மனைவி வந்தாள். தன் கணவனின் உடல்நலக் குறைவு பற்றிக் கவலையோடு கூறினாள்.
‘அவருக்கு நுரையீரல் கோளாறு. மருத்துவர்கள் சிகிச்சை செய்கின்றனர். சிக்கல் என்னவென்றால், ஜமீன்தார் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர். அவரால் அதை விட முடியவில்லை. மருத்துவர்கள் எடுத்துரைத்தாலும், தீய பழக்கம் என்னை விடாமல் பிடித்துக் கொண்டது என்கிறார்’ என்று வருத்ததோடு கூறி அறிவுரை கேட்டாள்.
சாது சற்று யோசித்து, அவரை அழைத்து வரச் சொன்னார். மறு நாள் காலை ஜமீந்தார் வரும் நேரத்தில், அந்த சாது, ஆசிரம வாயிலில் இருந்த ஒரு தூணை இறுகப் பிடித்து அணைத்தவாறு நின்றிருந்தார்.
‘ஜமீந்தார் அவர்களே, உங்களுக்கு வரவேற்பு கூறக் கூட என்னால் முடியவில்லை. இந்தத் தூண் என்னைப் பிடித்துக் கொண்டு விடமாட்டேன் என்கிறது’ என்றார் சாது.
ஜமீந்தாருக்கு வியப்பு ஏற்பட்டது. ‘சுவாமி, அது எப்படி சாத்தியம்? நீங்கள் அல்லவா தூணைப் பிடித்து அணைத்துக் கொண்டுள்ளீர்கள்?” என்று கேட்டார்.
அதைக் கேட்டு சாது சிரித்து, ‘ஜமீந்தார் அவர்களே, உங்களை புகைப் பழக்கம் பிடித்துக் கொண்டு விட மாட்டேன் என்கிறது என்று நீங்கள் கூறினீர்களே… அதே போலத்தான் இதுவும்’ என்றார்.
அந்த கிண்டலைப் புரிந்து கொண்ட ஜமீந்தார், புகைப் பழக்கத்தை விட்டார். உடல் நலத்தைப் பெற்றார்.