‘திராவிட’த்தை விட்டு விலகும் மக்கள்…!
காமராஜரை வீழ்த்திய போது அண்ணா தலைமையில் ஒரு கூட்டமே இருந்தது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன் போன்ற தலைகள் இருந்தன. இவர்களின் பொய் பிரச்சாரத்தை நம்பிய மக்கள் திராவிட ஆட்சிக்கு பெரும் வெற்றியை தேடித் தந்தனர். ‘வாய் இல்லை என்றால் நாய் சீண்டாது’ என்பதைப் போல் அண்ணா, கலைஞர் ஆகியோரது பேச்சு இருந்தது. தான் முதல்வராக வந்தவுடன் அண்ணா செய்த முதல் கெடுதல் தொழிற்சங்கத்திற்கு அமோக ஆதரவு தந்தார். இதனால், அவருடைய ஆட்சி காலத்தில் பல தொழில்கள் முடங்கின. பின் ‘திராவிட நாடு’ என முழங்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப பின்னர் அவரே ‘திராவிட நாடு’ என்ற கோரிக்கையை கைவிட்டார்.
இதன்பின் வந்த கருணாநிதியும் அண்ணாவின் பாதையை தொடர்ந்தார். ‘அண்டப் புளுகு. ஆகாசப் புளுகு’ என்பதற்கு உதாரணமாக கடைசி வரை இருந்தவர் கருணாநிதி. காமராஜருக்கு ‘சுவிஸ்’ வங்கியில் கணக்கு இருப்பதாக சொன்னார். இதையும் ஒரு கூட்டம் நம்பியது.
ஆனால், காமராஜர் மறைந்த போது அவரது சூட்கேசில் இருந்தது ரூ. 38. தவிர அவர் எம்.பி.,யாக இருந்த போது வந்த பணம் ரூ. 1300 காசோலையாக இருந்தது. காமராஜருக்குப் பின் நாம் தான் நிரந்தர முதல்வர் என கனவு கண்ட கருணாநிதிக்கு ‘ஆப்பு’ வைத்தார் எம்.ஜி.ஆர்..
கட்சி கணக்கு கேட்டு திமுகவால் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கிய போது திமுகவில் உள்ள தலைவர் ஒருவர் கூட எம்.ஜி.ஆர்., பின்னால் செல்லவில்லை. ஆனால், மக்கள் எம்.ஜி.ஆர்., பின் இருந்ததால் தொடர்ந்து பத்து ஆண்டுகள் எம்.ஜி.ஆர்., ஆட்சி நீடித்தது. எம்.ஜி.ஆர்., பற்றி கருணாநிதி நகைச்சுவையாக கூறுவாராம். ‘தலைவர்களை என்னிடம் கொடுத்துவிட்டு ஓட்டுப் போடும் மக்களை’ அவர் கொண்டு சென்று விட்டார் என்பாராம். இது உண்மைதான். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போதும் தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர்., ஆட்சியை மக்கள் விரும்பினர்.
எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் அதிமுகவை இரண்டாக உடைத்த கருணாநிதி, அதன் மூலம் ஆட்சியை கைப்பற்றினார். பின் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஓன்றாக இணைய கருணாநிதியின் முதல்வர் கனவு தகர்ந்தது. இருந்தும், கடந்த 50 வருடமாக தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகளே மாறி, மாறி வெற்றியை பெற்று வருகிறது. பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார் கருணாநிதி.
மதுரையில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மீது திமுக கொலை வெறி தாக்குதல் நடத்தியது. பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ‘நேரு மகளே வா. நிலையான ஆட்சியைத் தா’ என அந்தர் பல்டி அடித்தார் கருணாநிதி. ஒருமுறை இந்திரா காந்தியுடன் கைகோர்த்து எம்.ஜி.ஆர்., ஆட்சியை ‘டிஸ்மிஸ்’ செய்ய வைத்தார் கருணாநிதி. இதனால் கோபமடைந்த தமிழக மக்கள், கருணாநிதிக்கு தொடர்ந்து தோல்வியை பரிசாக கொடுத்து வந்தனர். மேலும், தனது தவறை உணர்ந்த இந்திரா காந்தி பின்னர் எம்.ஜி.ஆருடன் கூட்டணி அமைத்தார்.
கூவத்தில் தொடங்கி 2ஜி வரை கலைஞரின் ஊழல் தொடர்ந்தது. ஆனால், இவர்களின் ஊழல் அனைத்துமே கண்டு பிடிக்க முடியாத அளவு ‘விஞ்ஞான ரீதியில்’ இருக்கும். இதற்கு உதாரணம் சர்க்காரிய கமிஷன் அறிக்கையில், கருணாநிதி விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரம், ‘தான் என்ற அகந்தை’யால் ஜெயலலிதா ஊழலில் சிக்கி கொண்டார். இந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் திமுகவிடம் டியூஷன் படிக்க வேண்டும்.
என்னதான் திராவிட கட்சிகள் ஊழல் செய்த போதும், கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்ததை யாராலும் மறக்க முடியாது. இருகட்சிகளும் ஊழல் பெருச்சாளிகள் என்ற போதும் இருவரின் ஆளுமை திறன் திராவிட கட்சிகளை தொடர்ந்து வெற்றி பெறச் செய்து வந்தது.
கச்சத்தீவை தாரை வார்த்தது, ஜல்லிக்கட்டுக்கு தடை, மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி, இலங்கையில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொன்று குவித்தது என எல்லாமே மத்தியில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக இருந்த போது நடந்தவை. அதே நேரம் முல்லைப் பெரியார், காவிரி போன்ற பிரச்னையில் ஜெயலலிதாவின் துணிச்சலான நடவடிக்கை மக்கள் மத்தியில் அவர்மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்தது.
எதிர்பாராத விதமாக ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியால் செயல்பட முடியாத நிலை என இரண்டும் ஒரே நேரத்தில் வந்ததால் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அது இன்றுவரை வெற்றிடமாகவே உள்ளது. தனது மகன் என்ற ஒரே காரணத்தினால் திமுகவின் செயல்தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின், அரசியலில் 2வது பப்பு (ராகுல் காந்தி) என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
இவருக்கு இ.பி.எஸ்.,-ஓ.பிஎஸ்., இருவரை எதிர்த்து அரசியல் செய்ய முடியவில்லை, ‘சட்டையை கிழித்துக் கொண்டு’ வெளியே வந்து நாடகமாடுகிறார். இந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்து விடும் என தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால், அது நடக்க வாய்ப்பே இல்லை. காரணம் ஸ்டாலினுக்கு அரசியல் என்ன என்பதே தெரிவில்லை. பிரதமராக மோடி வந்த பிறகு இந்திய அரசியலில் ஒருமிகப் பெரிய மாற்றம் வந்துவிட்டது.
இப்போதெல்லாம் அரசியல் 24×7 ஆக மாறி விட்டது. இது தெரியாமல் பழைய ‘பல்லவி’யை பாடி வருவதால் ஸ்டாலினால் கட்சியை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து செல்ல முடியவில்லை. தவிர, தற்போது தமிழகத்தின் கடன் சுமை ரூ.3.5 லட்சம் கோடி. இதற்கு தினமும் ரூ. 1.15 கோடி வட்டி கட்டப்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் விரைவில் தமிழகம் ‘திவால்’ நிலையை அடையும்.
என்னதான் கருணாநிதியை குறை சொன்னாலும் அவரது எதுகை, மோனை பேச்சுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். எந்த ஒரு இணக்கமான சூழ்நிலையை கூட தனது பேச்சால் மாற்றக்கூடிய சக்தி பெற்றிருந்தார் கருணாநிதி. தவிர ‘பச்சோந்தி’ என்ற வார்த்தைக்கு பொறுத்தமானவர் கருணாநிதி.
‘பண்டாரம், பரதேசி’ என பா.ஜ.,வை விமர்சித்துவிட்டு பிரதமராக வாஜ்பாய் வந்த பிறகு அவருடன் இணைந்து அமைச்சர் பதவியை பெற்றார். பின்னர் மாறன் இறந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு சென்னை விமான நிலைத்திற்கு வாஜ்பாய் சென்ற நிலையில், காங்கிரசுடன் திமுக கூட்டு என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப்புலிகளுக்கு துவக்கத்திலிருந்தே தனது முழு ஆதரவை கொடுத்த வந்த போதிலும் பின்னர் பதவி சுகத்திற்காக இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த காங்கிரசுக்கு கருணாநிதி துணை போனார்.
ஆனால், ஸ்டாலினுக்கோ அரசியல் அனுபவம் எதுவுமே தெரியவில்லை. ஜெயலலிதா இல்லாத நிலையில், அடுத்த முறை தங்கள் கட்சி எளிதாக வெற்றி பெறும் என ‘கனவு’ காண்கிறார். ஆனால், அப்படி நடக்க இன்றைய சூழ்நிலையில், வாய்ப்பே இல்லை. இரண்டு திராவிட கட்சிகள் மீதும் மக்கள் வெறுப்பாக இருக்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.
இதனால்தான் ஆர்.கே.நகர்., இடைத் தேர்தலில் திமுக 3வது இடத்தைப் பிடித்து படுதோல்வி அடைந்தது. தினகரன் வெற்றிக்கு பணம்தான் காரணம் என சொன்னால் 3 கட்சிகளுமே பணம் கொடுத்தது. அப்படி இருந்தும் திமுகவுக்கு ‘டெபாசிட்’ போன போது மக்கள் மனநிலையை ஸ்டாலின் புரிந்திருக்க வேண்டும். தவிர 17 கட்சி கூட்டணியுடன் திமுக போட்டியிட்டதை மறக்க கூடாது.
சட்டசபையிலோ அல்லது மக்கள் மன்றத்திலோ எதிர்கட்சி தலைவர் பேசுகிறார் என்றால் அது ஆளும்கட்சிக்கு ‘கிலி’யை ஏற்படுத்த வேண்டும். ஆனால், ஸ்டாலின் பேசினால், வடிவேலு ‘காமெடி’தான் நினைவுக்கு வருகிறது. சுதந்திரதினம், குடியரசுதினம் இரண்டு தேதியில் குழப்பம், இறந்த அனிதா போன்ற பெயர்களில் குழப்பம், தற்போது பழமொழியில் குழப்பம் போன்றவை ஸ்டாலினை மக்கள் மத்தியில் காமெடியனாக பார்க்க வைத்துள்ளது. தவிர, ‘கூடா நட்பு கேடில் முடியும்’ என்பதைப் போல வை.கோ., திருமா உள்ளிட்ட பலரது நட்பு ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்திறகு ‘ஆப்பு’ வைத்துள்ளது.
தவிர ‘ராமரதம்’ பிரச்னையில் தேவை இல்லாமல் ஸ்டாலின் உணர்ச்சி வசப்பட்டு அசிங்கப்பட்டார். மொத்தம் 50 பேர்தான் அந்த ரதத்துடன் சென்றனர். உ.பி.,யில் தொடங்கி கர்நாடகா (காங்கிரஸ் ஆட்சி), கேரளா (கம்யூனிஸ்ட் ஆட்சி) மாநிலங்களில் இந்த ரதத்தை கண்டு கொள்ளாத நிலையில், தமிழகத்தில் சிறுபான்மையினர் ஓட்டுக்காக ஒரு நாடகத்தை ஸ்டாலின் நடத்த, அது இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால், நெல்லையில் மாவட்ட ஆட்சியர் 144 தடை விதித்த போதும் ‘ராமரதத்தின்’ முன்பு ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்தனர். தவிர இந்த ‘ராமரதத்திற்கு’ தமிழகத்தில் மட்டுமே மக்களின் அமோக ஆதரவு இருந்ததாக சொல்லப்படுகிறது.
கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வந்தது, தமிழகத்தில் இந்து அமைப்புகளின் வளர்ச்சி, திராவிட கட்சிகள் மீது மக்களிடையே ஏற்பட்ட கோபம் ஆகியவை வரும் தமிழக சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என உறுதியாக சொல்லலாம்.
கட்டுரை: – தமிழ்செல்வி