எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்’ -2 ; மத்திய முதலீட்டு திட்டங்களை தமிழகம் ஏன் ஈர்க்கவில்லை?

கடந்த 60 ஆண்டு கால ஆட்சிகளில் ஏன் மத்திய முதலீடுகளை தமிழகம் ஈர்க்கவில்லை என்பது குறித்து சில தகவல்களை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். தமிழகத்துக்கு வரவேண்டிய பொதுத்துறை நிறுவனங்களின் பல திட்டங்கள், தமிழகத்தில் அமையாமல், மற்ற மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டன. இப்படி,மற்ற சில மாநிலங்களில் அண்மைக்காலத்தில் அறிவிக்கப்பட்ட முதலீட்டு அளவுகளைப் பாருங்கள்...

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை சேலம்-சென்னை விமான சேவையைத் துவக்கி வைத்தார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும். இது மத்திய அரசின் ‘உடான்’ திட்டத்தின் கீழ் நகர்ப்புற வளர்ச்சிக்காக செயல்படுத்தப் படுவது.

இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தமிழகத்திற்கு பல்வேறு நலன்களை நிச்சயம் செயல்படுத்தும். மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றினால்தான் மக்களுக்குத் தேவையான திட்டங்களை எளிதில் செயல்படுத்த முடியும். அந்த வகையில், தமிழகம் இணக்கமாக இருப்பதால்தான் எதைக் கேட்டாலும் அதை நிறைவேற்றித் தர பிரதமர் மோடி தயாராக இருக்கிறார்.- என்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய இந்த உண்மைச் சூழலின் பின்னணியைப் பார்த்து வருகிறோம்.

அதில், கடந்த 60 ஆண்டு கால ஆட்சிகளில் ஏன் மத்திய முதலீடுகளை தமிழகம் ஈர்க்கவில்லை என்பது குறித்து சில தகவல்களை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். தமிழகத்துக்கு வரவேண்டிய பொதுத்துறை நிறுவனங்களின் பல திட்டங்கள், தமிழகத்தில் அமையாமல், மற்ற மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டன.

இப்படி,மற்ற சில மாநிலங்களில் அண்மைக்காலத்தில் அறிவிக்கப்பட்ட முதலீட்டு அளவுகளைப் பாருங்கள்… இவை அண்மையில் இண்டஸ்டிரியல் எகனாமிஸ்ட் இதழில் வெளிவந்த புள்ளியியல் விவரங்கள்.

* மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி, பிபிசிஎல், ஹெச்பிசி ஆகியவை, உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. அதன்படி, 60 MMTPA சுத்திகரிப்பு திறன் கொண்ட பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளெக்ஸினை மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரியில் நிறுவ, ரூ 260,000 கோடி அளவுக்கு கையொப்பமிட்டுள்ளன. இது எதிர்கால எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், நாட்டின் ஏற்றுமதி அளவையும் சாத்தியப்படுத்தும்.

• 2017 மார்ச் 7 ஆம் தேதி, குஜராத்தில் உள்ள தாஹேஜில் ஓஎன்.ஜி.சி பெட்ரோ அடிஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் என்ற பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது, ரூ. 30,000 கோடி மதிப்பிலான திட்டம். இது ONGC, GAIL, GSPC ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் விளைந்த நிறுவனம். இந்த பெட்ரோகெமிக்கல் ஆலையினால், ஆண்டுதோறும் 14 லட்சம் டன் பாலிமர்களை உற்பத்தி செய்ய இயலும்.

• அகமதாபாத் மற்றும் மும்பைக்கு இடையிலான அதிவேக ரயில் பாதைக்கு ரயில்வே துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது, ரூ. 98,000 கோடி மதிப்பிலான திட்டம் ஆகும். மேலும் மும்பை புறநகர் ரயில் சேவையில், மிகப் பெரும் திட்டமாக, தற்போது இருக்கும் பாதையில் இருந்து மேலாக, உயர்த்தப்பட்ட புறநகர் ரயில்வே பாதைகளின் கட்டுமானத்துக்கு ரூ.54,000 கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. மேலும், தில்லி- மும்பையை இணைக்கும் வகையிலும், அமிர்தசரஸ்- கோல்கத்தாவை இணைக்கும் வகையிலுமான பிரத்யேக சரக்குப் போக்குவரத்துப் பாதைக்கு ரூ.100,000 கோடி அளவுக்கு ரயில்வேத்துறை அனுமதி அளித்துள்ளது.

* உ.பி., பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களைக் கடந்து செல்லும் வகையில், கெயில் நிறுவனத்தால் ’உர்ஜா கங்கா’ எனும் 2539 கி.மீ. தொலைவுக்கான எரிவாயுக் குழாய் திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது. இது ரூ.12,940 கோடி மதிப்பிலான திட்டம் ஆகும். இது இம்மாநிலங்களில் உள்ள 40 மாவட்டங்களுக்கு பயன் தரக்கூடிய குழாய் வாயு திட்டம். இந்த திட்டத்தின் மூலம், ரூ.51,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் மூன்று உரத் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு எரிவாயு விநியோகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* நலிந்த உரத்தொழிற்சாலைகளை புதுப்பிப்பதற்காக, இந்திய நிலக்கரி நிறுவனம்(சிஐஎல்), கெயில், எஃப்சிஐல் ஆகியவற்றுடன், ஆர்சிஎஃப் ஒரு கொள்கை அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, தால்சேரில் நிலக்கரி அடிப்படையுடன் கூடிய உரத்தொழிற்சாலை அமையவுள்ளது. 3850 எம்டிபிடி யூரியா, 2200 எம்டிபிடி அமோனியா ஆலை ஆகியன ரூ.7700 கோடி அளவில் இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

* தனது ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ. 60,000 கோடி செலவழித்துள்ளது. மற்றொரு ரூ .126,000 கோடி, ஒரு பெட்ரோ-ரசாயன காம்ப்ளக்ஸில் முதலீடு செய்யப்படுகிறது.

• ஆந்திரக் கடற்கரையோரத்தில் அமைந்த கேஜி பேசின் பகுதியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பிபி பிஎல்சி-யுடன் இணைந்து, $ 6 பில்லியன் (ரூ. 40,000 கோடி) முதலீடில், தங்கள் எரிவாயு வயல்களை அபிவிருத்தி செய்கிறது. இதே கேஜி பேசின் பகுதியில், ரிலையன்ஸ் ஏற்கெனவே 9 பில்லியன் டாலர் அளவுக்கு, நடுக் கடல் எரிவாயு உற்பத்தியை மேம்படுத்த முதலீடு செய்துள்ளது.

இவை எல்லாம், மின் திட்டம் மற்றும் தொலைத்தொடர்புத் திட்டங்கள் மட்டுமல்லாது மிகப் பெரிய அளவில் தனியார் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் முதலீட்டுத் திட்டங்களாகும்.

இவற்றுக்கு மாறாக, ரஷ்யாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட கூடங்குளம் அணு மின் உற்பத்தித் திட்டத்தைத் தவிர, தமிழகத்தில் கணிசமான அளவிலான முதலீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

கூடங்குளம் விஷயத்தில் கூட, இதன் கட்டுமானத்துக்கு கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஆகியிருக்கின்றன. மாநில அரசால், இந்தத் திட்டத்துக்கு மிகக் குறைந்த அளவிலேயே ஆதரவும் உதவியும் கிடைத்தது. உறுதி அளிக்கப்பட்ட படி, தாமிரபரணி நதியில் இருந்து இந்தத் திட்டத்துக்கான தண்ணீர் வழங்கப்படவில்லை. அணு உலையில் ஏதேனும் பேரழிவு அபாயம் நேரும் போது, முழுவதும் உப்பு அடர்த்தி கொண்ட நீரை மட்டுமே சார்ந்திருப்பது, அபாய மீட்பில் தோல்வியையே தரும் என்கிறார் அணு நிபுணர் டாக்டர் எம்.ஆர்.ஐயர். மேலும், வெளிநாடுகளின் தூண்டுதலில் உதவி பெறும் அரசு சாரா அமைப்புகளான என்.ஜி.ஓக்கள் மற்றும் உதயகுமார் உள்ளிட்டவர்கள், அணு உலைக்கு எதிராக போராட்டங்களை நடத்திய போது, அதிமுக அரசு அதை தடுக்கவோ சரியான முறையில் கையாளவோ முயற்சி செய்யவே இல்லை.

மிகப் பெரும் முதலீட்டில் துவங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்குத்தான் எத்தனை தடைகள்! எத்தனை இன்னல்களை இந்தத் திட்டம் சந்தித்தது. கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்கள் விநியோகிப்பதில் ஏற்பட்ட கால தாமதங்கள், மிக நீண்ட கட்டுமானத்தில் கருவிகள் சேமிப்பதில் ஏற்பட்ட குறைபாடு, மாநில அரசின் அக்கறையின்மை என எத்தனையோ இடப்பாடுகள். பின்னர் 2012ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு நாளுக்கு 14 மணி நேரத்துக்கும் மேல் மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கிக் கிடந்தபோது, ஜெயலலிதா விழித்துக் கொண்டார். இப்படி ஒரு சீரழிவைச் சந்தித்த பின்னரே ஜெயலலிதா இந்தத் திட்டத்தில் உறுதியாக செயல்பட்டார்.

இத்தகைய சூழலில், திமுக., அதிமுக., என மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர்கள், மத்திய அரசின் பொதுத்துறையை ஏன் அன்னியர்களாகப் பார்த்தார்கள் என்பதன் அரசியல் காரணத்தை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...