தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து தகவல்கள் பகிரப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராட்டங்கள் துவங்கியுள்ளன. தூத்துக்குடி மக்களுக்கு இதற்கான செய்திகள் பரப்பப் பட்டு, கடையடைப்பு போராட்டம் உள்ளிட்டவை நடைபெற்றுள்ளன. இந்தப் போராட்டங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுக்க நடத்தப் படும் சதி வேலை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இத்தகைய பின்னணியில், உண்மையில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகள் எத்தகையது, அவற்றின் உண்மைத் தன்மை என்ன என்பது குறித்து எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளவை!
1. தாமிரத்தை சுவாசித்தால் புற்று நோய் ஏற்படும் என்று எந்த ஆராய்ச்சியும் கூறவில்லை. விகடன் முட்டாள்கள் நடத்திய ஆராய்ச்சியில் மட்டும் அது கூறப் படுகிறது.
2. தாமிரத்தை பிரிக்கும் போது காற்றில் வெளியாகும் சல்ஃபர் டை ஆக்ஸைடும் புற்று நோயை ஏற்படுத்தும் வாயு அல்ல.
3. ஸ்டெர்லைட் தொழிற்சாலை SIPCOT வளாகத்தில் இருக்கும் ஒரு தொழிற்சாலை. அவ்வளவுதான். தமிழகத்தின் சுற்றுச்சூழல் பயங்கரவாதிகள் வளாகத்தையே மூட வேண்டும் என்று சொல்கிறார்கள். லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதரத்தைப் பறிக்க இவர்கள் சொல்கிறார்கள் என்பது தமிழக மக்களுக்குப் புரிய வேண்டும்.
4. ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எல்லா மாசுகட்டுப்பாட்டு வாரியங்களும் பச்சைக் கொடி காட்டியிருக்கின்றன. அவை அனைத்தும் சேர்ந்து பொய் சொல்கின்றன என்று புலம்பினால் போதாது. நிரூபிக்க வேண்டும்.
5. தாமிரத்தைப் பிரிக்கும் போது வெளியாகும் சல்ஃபர் டை ஆக்ஸைட்டில் 99.5% சல்ஃப்யூரிக் அமிலம் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகிறது என்று நிறுவனம் சொல்கிறது. இதை யாரும் மறுத்ததாகத் தெரியவில்லை.
6. தூத்துக்குடியின் காற்று மாசு பட்டிருக்கிறது என்பது தில்லியின் காற்று மாசுபட்டிருக்கிறது என்பது போன்ற உண்மை. ஆனால் அதற்கு இந்தத் தொழிற்சாலை மட்டும் காரணம் என்று சொல்வது சரியாக ஆகாது. தூத்துகுடியில் கணக்கற்ற தொழிற்சாலைகள், குறிப்பாக ரசாயனத் தொழிற்சாலைகள், இயங்குகின்றன. கில்பர்ன் ரசாயனத் தொழிற்சாலை ஸ்பிக், Heavy water plant கனநீர்த் தொழிற்சாலைகள், மெஜுரா கோட்ஸ் போன்ற தொழிற்சாலைகளும் தூத்துக்குடியில்தான் இருக்கின்றன.
7. இவை அனைத்தையும், அல்லது இவற்றில் பெரும்பாலானவற்றை மூடினால் தான் சுத்தமான காற்று கிடைக்கும். தொழில் முன்னேற்றம் வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள்தாம் தீர்மானிக்க வேண்டும். உலகெங்கிலும் இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த வேலைக்கும் வழி இல்லாமல் பத்திரிகைத் தொழிலுக்கு வந்து இறங்கி இருக்கும் அரைகுறைகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டோ அல்லது சுற்றுச்சூழல் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களைக் கேட்டுக் கொண்டோ அல்ல. அறிவியல் அறிஞர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு. நாங்கள் அறிவியல் அறிஞர்கள் சொல்வதையும் கேட்கமாட்டோம் என்ற முடிவையும் தூத்துக்குடி மக்கள் எடுக்கலாம். ஆனால் அவர்களிடம் இவற்றைப் பற்றிய தெளிவான தகவல்கள் போய்ச் சேர வேண்டும். பெரும்பாலான தமிழகப் பத்திரிகைகளும் ஊடகங்களும் உண்மையான தகவல்கள் மக்களிடம் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் என்ற நம்பிக்கை எனக்கு இதுவரை வரவில்லை.
8. வேதாந்தாவின் தொழிற்சாலை அதனால் மூடப்பட வேண்டும் என்று சில முழு மடையர்கள் கூறி வருகிறார்கள். இந்தியா இன்றும் முதலாளித்துவ நாடுதான். ஒரு வேதாந்தா போனால் இன்னொரு போதாந்தா வருவார். மக்களுக்கு வாழ்வாதாரம் வேண்டுமென்றால் முதலீடு நமக்கு அவசியம். அது காற்றில் கிடைப்பது அல்ல. ஒன்று அரசு முதலீடு செய்ய வேண்டும். அல்லது தனியார் முதலீடு செய்ய வேண்டும். அரசிடம் முதலீடு செய்ய பணம் இல்லை. தனியாரைத்தான் நாட வேண்டும். சுற்றுச்சூழல் பயங்கரவாதிகள் பச்சைக் கொடி காட்டிய பிறகுதான் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றால் அது இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் நடக்காது.
9. நமக்கு வேலைகள் வேண்டும் என்றால் உற்பத்தித் தொழிற்சாலைகள் அவசியம். உற்பத்தித் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு நாம் குறைந்தபட்ச விலையாவது கொடுத்தாக வேண்டும். எதுவும் கொடுக்க மாட்டேன் எனக்கு வேலையும் வேண்டும் என்று சொன்னால் ஏதும் நடக்காது. தமிழ்நாட்டில் முதலீடு குறைந்து கொண்டே வருகிறது என்பது உண்மை. 2015ல் 20000 கோடி இருந்தது 2017ல் சுமார் 3100 கோடியாகக் குறைந்து விட்டது என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. கர்நாடகத்தில் 1.5 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு நடந்திருக்கிறது. தமிழகத்தை விட 50 மடங்கு அதிகம்.
10. இதே நிலைமை நீடித்தால் கல்தோன்றி மண் தோன்றாக் காலமாக எதிர்காலம் நிச்சயம் அமையும்
கருத்து : பி.ஏ.கிருஷ்ணன்