January 26, 2025, 4:57 PM
28.9 C
Chennai

தமிழன்டா..! என்ன மாதிரியான சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்..! இப்படியே போனால்…?

அட… என்ன மாதிரியான சமூகத்தை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்! இப்படியே போனால் எதிர்காலத்தில் என்ன மாதிரியான நிலைக்குப் போய் விடுவோம்! இந்த பயம் நல்ல உள்ளங்கள் பலரையும் போல் எனக்கும் தோன்றியது!

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் – ன்னு வசனம் பேசுவோம். ஆனா, ஹைட்ரோ கார்பன் எடுக்க விட மாட்டோம், இங்கு உற்பத்தி செய்தால் ஆகும் செலவை விட பல மடங்கு விலையில் இறக்குமதி செய்வோம்.

தமிழன்டா, தமிழனுக்கு அறிவு ஜாஸ்தி, அந்தகாலத்திலிருந்தே, தமிழனுக்கு மட்டும்தான் அறிவு ஜாஸ்தி. அதனாலதான் நாசாவுல, கூகுளல்ல, மைக்ரோசாப்ட்ல, உலகத்துல எங்கெங்கு அறிவு திறன் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் தமிழர்கள்தான் இருக்கிறார்கள்ன்னு மேடையேறி பேசுவோம், ஆனால், நீட்-ன்னு ஒரு பரிட்சை வைத்தால் காததூரம் ஓடுவோம், அகில இந்திய அளவில் போட்டி தேர்வுகளில், IAS, IIT, IISER, எதிலும் தேர்ச்சிஅடைய மாட்டோம், கேட்டால், வந்தேறி, ஆரிய சதின்னு கம்பு சுத்துவோம்.

பொதுவா, நம்ம எதிர்பார்ப்பு என்னவென்றால், அப்ளை பண்ணவுடனேயே ஸ்கூல், காலேஜ், பல்கலைக்கழகத்துல படிக்க சீட் கிடைக்கணும், அதுக்கு நுழைவு தேர்வு கூடாது, அப்படியே இருந்தாலும், அது தமிழ்ல தான் இருக்கணும்; அதுவும், பத்தாம், பதினொன்றாம் வகுப்பு, அதுவும் மாநில அரசு பாடத்திட்டத்திலிருந்தே கேள்விகள் கேக்கணும்.

பாடப் புத்தகத்தில் எப்படி இருக்கோ, அப்படியே நேரடியாகத்தான் கேள்விகள் இருக்கணும். கொஞ்சம் கூட சுற்றி வளைத்தோ, வேறு வார்த்தைகளைக் கொண்டோ கேள்வி கேட்கக் கூடாது. மனப் பாடம் பண்ணினதை அப்படியே எழுதுற மாதிரி தான் கேள்விகள் இருக்கணும். கொஞ்சம்கூட அறிவுத்திறனை சோதிக்கிற மாதிரி கேள்விகள் இருக்கவே கூடாது. கஷ்டமா கேள்விகள் கேட்டிருந்தால், அந்தக் கேள்விக்கு முழு மதிப்பெண் தரணும். எது கஷ்டமான கேள்வி என்பதை, மீடியாதான் முடிவு பண்ணனும்.

ஸ்கூல், காலேஜ், பல்கலைக்கழகத்துலே சேர்ந்தவுடன், வருகைப்பதிவு இருக்கக் கூடாது,உயர் கல்வியில் சேர்ந்தவுடன், வகுப்புக்குப் போவதைவிட, சமூகத்துக்காக போராடுவது, சிரியா, பாலஸ்தீனம், அமெரிக்க ஏகாதிபத்தியம், தமிழ், தமிழர், தமிழ் இனமானம், படிப்பு வட்டம், சதுரம், முக்கோணம்ன்னு, படிக்கிறதத் தவிர எல்லா வேலைகளும் செய்ய சுதந்திரம் இருக்கணும், யாரும் கேள்வி கேட்கக்கூடாது.

இலவச புத்தகம், பஸ் பாஸ் வேணும், ஸ்காலர்ஷிப் வேணும், கல்வி கடன் வேணும், தேர்வு மிக ஈஸியா இருக்கணும், முடிச்சவுடனே வேலை வேணும், ஆனா கல்விக் கடனை திரும்பிக் கேட்கக் கூடாது.

ALSO READ:  திருவண்ணாமலை: மகா தீப நெய் காணிக்கைக்கு சிறப்புப் பிரிவு தொடக்கம்!

அரசு வேலை வேணும், மல்டிநேஷனல் கம்பனியில் வேலை வேணும். ஆனா தமிழ்நாட்டுல ஏதும் தொழிற்சாலை ஆரம்பிக்கக்கூடாது, துறைமுகம், விமான நிலையம், மின்னுற்பத்தி நிலையம், எதுவும் ஆரம்பிக்கக் கூடாது.

தமிழ்நாட்டுலயே வேலை வேணும்… ஆனால், ஸ்டெர்லைட்டுலருந்து, வோல்க்ஸ்வேகன் வரை எந்த கம்பனியும் தமிழ்நாட்டுல இருக்கக் கூடாது. இருக்கறதையும், புதுசா ஆரம்பிக்க வர்றவனையும், அடுத்த மாநிலத்துக்கு விரட்டி விட்டுடுவோம்.

என்ன சொன்னாலும், அடுத்த மாநிலத்துல போய் செம்மரம் வெட்டுவோம், அடுத்த நாட்டுக்குள்ள போய் தடை செய்யப்பட்ட வலையால மீன் புடிப்போம், அவன் சுட்டா, தமிழர் உரிமை, எளிய பிள்ளைகள் தெரியாம, தூக்கம் வராம மரம் வெட்டிட்டாங்க, மீன் புடிச்சுட்டாங்க, அவங்களுக்கு அடுத்தநாட்டுல மீன் புடிக்கவும், தடை செய்யப்பட்ட மரத்தை அடுத்த மாநிலத்துல வெட்டவும் உரிமை வேண்டும், சுடப்பட்டு இறந்தவங்களுடைய குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாயும், குடும்பத்துல ஒருத்தருக்கு அரசு வேலையும் வேணும்ன்னு கொடி பிடிப்போம், ரோட்டை மறிப்போம். வாங்குனதுல தசம பாகத்தை கொண்டு புதிய போராளிகளை உருவாக்குவோம்.

நம்மள்லயே எவரேனும் நல்லா படிச்சி, அரசு செலவுல டாக்டராவோ, என்ஜினியராவோ, ஆய்வு படிப்பு முடிச்சாலோ, கொஞ்சம் கூட நன்றி இல்லாது, கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவோம். அங்கிருந்து கொண்டு இந்தியாவை எவ்ளோ கேவலப்படுத்த முடியுமோ, அவ்ளோ பண்ணுவோம், ஆனா, நீ நாட்டுக்கு, நாட்டு மக்களை முன்னேற்ற என்ன செய்தாய் என்று கேட்டால், பதிலே சொல்லாமல் தலைதெறிக்க ஓடுவோம்.

பளிங்குதரை மாதிரி ரோடு வசதி வேணும், ஆனா எது வாங்கினாலும் பில் போட்டு வாங்க மாட்டேன், சொத்துவரி, கார்ப்பரேஷன் தண்ணி வரி கட்டமாட்டேன், வரி விகிதத்தை மாற்றக்கூடாது, GST கூடாது, ஆனா, மானியத்துலருந்து, இலவச அரிசி, வேஷ்டி, சேலை வரை எல்லாம் வேணும்.

ஹைட்ரொகார்பன் எடுக்கக்கூடாது, ஆனால், பெட்ரோல் வேணும், டீசல் வேணும், நாப்தாவுலருந்து, உரம், மருந்துப்பொருட்கள் வரை ஹைடிரோகார்பனிலிருந்து தயாரிக்கிற எல்லாம் மலிவு விலையிலோ, இலவசமாகவோ வேணும். போன் பண்ணினவுடன் காஸ் மானிய விலையில் வேணும். காஸ் குழாய் மாநிலத்தில் எங்கும் இருக்கக்கூடாது, ஆனால், எனது தேவைக்கு கேட்டவுடன் வீட்டு வாசலில் இருக்கணும்.

ஆறு, ஏரி, குளம், கண்மாய் எதையும் பராமரிக்க மாட்டோம். புறம்போக்கு நிலத்திலிருந்து, நீர்ப் பிடிப்புப் பகுதி, நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்தோ, நிலப் பயன்பாட்டை மாற்றியோ, பிளாட் போட்டு கட்டிடம் காட்டுவோம். இயற்கையாய் அமைந்துள்ள வெள்ளக் கால்வாய்களை அழித்து விடுவோம். இருக்கும் அனைத்து மரங்களையும், மழைக்காடுகளையும் அழித்து ரிசார்ட் காட்டுவோம். திடீர் நகர்களாக மாற்றுவோம். அடியாழம் வரை மணலை சுரண்டி எடுத்துவிடுவோம். ஆனால், மழை வந்தால் சேமிக்க இடம் இல்லாமல் நேரடியாக கடலுக்கு அனுப்புவோம்.

ALSO READ:  கோமியம்... கோமூத்ரா... இன்னா மேட்டரு பா!

குடிநீர் பஞ்சம், பஞ்ச நிவாரண நடவடிக்கை வேண்டும் என்று வீதியில் போராடுவோம். சமூக வலைதளத்தில் மீம்ஸ் போடுவோம். வெள்ளம் வந்து முன்பு வெள்ளக் கால்வாயாக இருந்த இடங்களை, ஏரி, குளமாக இருந்த இடங்களை மூழ்கடிக்கும்போது, அரசாங்கம் சரியில்லை, எங்களை மீட்க வரவேயில்லை என்று கூப்பாடு போடுவோம்.

ஒழுங்கான தேவைகளுக்கு மட்டுமல்லாது, பிற மாநிலங்களுக்குமான தேவைகளுக்கும் சேர்த்து ஆறுகளை சுரண்டி மணலை எடுத்துவிட்டு, விவசாயம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளுக்குக்கூட அடுத்த மாநிலங்களை எதிர்பார்த்து கையேந்துவோம்.

ஒவ்வொரு வருடமும் இப்படி பஞ்சமும், வெள்ளமும் மாறி மாறி வந்தாலும், அடுத்த வருடமும் கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சியே இல்லாமல் கூச்சல் போடுவோம். அணை கட்ட மாட்டோம், ஆனா கர்நாடகக் காரன, கேரளாக் காரன திட்டுவோம்.

உலகெங்கும் நீர்பாசன முறைகள் எவ்வளவோ முன்னேறிய நிலையிலும், நமது பக்கத்து மாநிலங்களில் எவ்வளவோ நீர்பாசன முறைகள் மாற்றத்துக்குட்பட்ட, மேம்படுத்தப்பட்ட நிலையிலும், நாம் இன்னும் அரத பழைய ஐம்பதாண்டுக்கு முன்னுள்ள நிலையிலேயே இருக்கிறோம். அதிலும் முக்கியமாக, காவிரி டெல்டா பகுதிகளில்.

தமிழகத்தில் ஆற்றுப் பாசன விவசாயம் நடக்கும் பகுதிகளில் 26% காவிரி டெல்டா பகுதிதான். கிட்டத்தட்ட மத்த 74% பகுதிகளில் இப்படியா கத்திக்கிட்டு இருக்காங்கன்னு யோசிக்கவே மாட்டோம்? அவனவன் கிடைக்கிற தண்ணியில சிறப்பா விவசாயம் பண்ணலையான்னு கேக்கவே மாட்டோம்? தண்ணியே இல்லைன்னு படம் போட்டு உலகத்துக்கு அழ அழ வீங்கிய மூஞ்சியக் காட்டுவோமே தவிர, தமிழகத்துக்கு மிக அதிகமான விவசாய உற்பத்திக்கு விருது கிடைச்சதையும், டெல்டா பகுதிக்கு பக்கத்துல இருக்கற நிலத்துல மிக அதிக உற்பத்தி செய்ததற்கு ஒரு பெண்மணி விருது வாங்கியதையும் வெளில சொல்லவே மாட்டோம்…! அது எப்படின்னும் யோசிக்க விடவும் மாட்டோம்!

என்ன நிலத்துல, என்ன மண் வகைக்கு, எப்படி நீர்ப் பாசனம் செய்யணும், என்ன விதமான பயிர் பயிரிடனும்ன்னு கரடியா கத்தி சொன்னாலும் கேக்க மாட்டோம், பணப்பயிர் மட்டும் தான் செய்வோம்; அதுக்கும்  இலவச மின்சாரம், மானிய விலையில் விதை, உரம், தண்ணி ஆத்துலேருந்து நேரா வயலுக்கு பாயணும். சிறு, குறு விவசாயிகளுக்கான திட்டப் பயன்களெல்லாம், போர்ஜரி பண்ணி மிராசுதாரர்களும், பினாமிகளும் அனுபவிக்கனும்; விளைச்சலை எல்லாம் அரசே அதிக விலை கொடுத்து வாங்கணும். ஆனா உணவுப் பொருட்கள் விலை உயர்ந்து விட்டதுன்னு கூச்சலும் போட வைப்போம்!

ALSO READ:  பிரபல பின்னணிப் பாடகர் பி. ஜெயசந்திரன் காலமானார்!

எந்த திட்டங்கள் வந்தாலும், அதை ஒத்துக்க மாட்டோம். அரசோ, விஞ்ஞானிகளோ, அறிவாளர்களோ சொல்வதை ஏற்றுக் கொள்ளமாட்டோம். அது அப்துல் கலாம் அய்யாவா இருந்தாலும்கூட. ஆனால், வரும் திட்டத்துக்கு ஏத்த மாதிரி ஒரு வக்கீலாவோ, புவியியல் அறிஞராவோ, நியூட்ரினோ தெரிஞ்ச பௌதீகவியலாளராகவோ, நீர் மேலாண்மை எஞ்சினீராகவோ, கல்வியாளராகவோ, அணுக்கதிர் விஞ்ஞானியாகவோ, பன்னாட்டு எகனாமிக்ஸ் தெரிஞ்ச நோபல் பரிசு பெற்றவராகவோ மாறும் திறன் கொண்ட மய்ய நடிகரோ, காமெடி டைம் மயில்சாமியோ, அந்தப் பக்கம் போயி சிரிச்சிட்டு வர்ற மாதிரி காமெடி பண்ற சதீஸோ, காதிலேயே கேட்க முடியாது மாதிரி இசையமைக்கிற, நடிக்கிற, தமிழக ஸ்டிபான் ஹாக்கிங்ஸ் ஜி வி பிரகாசோ, மக்கள் உணர்ச்சியை தூண்டி, தேசத்தை துண்டாடுவது மட்டுமே கொள்கையாகக் கொண்ட சொந்தப் பெயரை கூட வெளியில் சொல்ல முடியாத, ஆனால் இந்துப் பெயர்களில் வலம் வரும் வியாதிகள் சொல்வதை எல்லாம் நம்புவோம்.

யாராவது ஏதாவது ஒரு போராட்டத்துலயோ, அல்லது வேற சமயத்துலயோ, இயற்கையாகவோ, சுயமாகவோ, அல்லது இயற்கைக்கு மாறாகவோ, இறந்தோ அல்லது கொல்லப்பட்டாலோ, காயம்பட்டாலோ, முதல்ல சம்பவம் நடந்த மாநிலத்துல எந்தக்கட்சி ஆட்சியில இருக்குன்னு பாப்போம், அடுத்து, செத்தது, கொல்லப்பட்டது, என்ன மதம், ஜாதின்னு பாப்போம். அடுத்து, கொல்லப்பட்டது அல்லது தாக்கப்பட்டது எந்த மாநிலத்தில், யாரால், எந்த மதம், ஜாதியால்னு பார்ப்போம். அதன் அடிப்படையில் தான் ஏதுமே நடக்காத மாதிரி இருப்பதுவோ, பொங்கி எழுவதுவோ இருக்கும். எதுவுமே இல்லேன்னா, இந்த சம்பவத்துக்கு குரல் கொடுப்பது யார், எங்கு என்று பார்ப்போம், அதன் அடிப்படையில் தான் நமது ரெஸ்பான்ஸ்ஸும் இருக்கும்.

ஆக நாங்கதான் தமிழர்கள். இந்த கேரக்டர்கள் எல்லாம் இருந்தால், தமிழன்னு சர்ட்டிபிகேட் வாங்கிட்டு, தமிழ்நாட்ல இருக்கலாம்… என்று சொல்லுவோம்.

அடச் சே…! இப்படியே போய்கிட்டு இருந்தா, இந்த நாடும், இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்ன்னு யாரும் சொல்லாமலேயே அத்தனையும் நடக்கும். அதுக்கு முன்னாடி நாம… அட்லீஸ்ட், கொஞ்சமாவது படிப்பறிவு மண்டையில ஏறுகிற, சின்னப் பசங்களையாவது அறிவூட்டுகிற வேலையில நாம இறங்கலேன்னா… தமிழ்நாடை தமிழகமா பாக்க முடியாது.. வருங்காலத்தில்!

கட்டுரை: மு.ராம்குமார்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week