Homeகட்டுரைகள்பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமியின் ஹிந்து தர்ம சேவைகளும் சாதனைகளும்!

பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமியின் ஹிந்து தர்ம சேவைகளும் சாதனைகளும்!

ஆர்ஷ வித்யா பீடத்தின் ஸ்தாபகரும் வேதாந்த ஆச்சாரியருமான பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் கடந்த புதன் கிழமை செப்டம்பர் 23ம் தேதி (2015) இரவு தன்னுடைய 85வது வயதில் முக்தி அடைந்தார். 
 
Pujya Swami Dayananda Saraswati
 
 திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குடி கிராமத்தில் கோபால ஐயருக்கும் வாலாம்பாள் அம்மாளுக்கும் மூத்த மகனாக 1930ம் வருடம் ஆகஸ்டு 15ம் தேதியன்று பிறந்தார். நடராஜன் என்று பெற்றோர்களால் நாமகரணம் சூட்டப்பட்டு, குடவாசல் மாவட்ட மன்றப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். தன்னுடைய 8வது வயதில் தன் தந்தையாரை இழந்தபோதும், தன்னுடைய கல்வியை  முடித்த நடராஜன், டி.கே.ஜகன்னாதாச்சார்யா அவர்கள் நடத்தி வந்த ”தார்மீக ஹிந்து” என்கிற பத்திரிகையில் நிருபராகவும் கட்டுரையாளராகவும் சேர்ந்தார். பின்னர் வோல்கார்ட் பிரதர்ஸ்நிறுவனத்திலும், அதைத் தொடர்ந்து இந்திய விமானப் படையிலும் சில மாதங்கள் பணிபுரிந்தார். &nbsp
 
வேதாந்தத்தின் பால் ஈடுபாடு கொண்டிருந்த நடராஜன், ஸ்வாமி சின்மயானந்தரின் சொற்பொழிவுகளைக் கேட்டு மேலும் ஈடுபாடு கொண்டார்.1950களில் ஸ்வாமி சின்மயானந்தரின் பால் மிகுந்த ஈடுபாடும் பக்தியும் கொண்டு, ஸ்வாமிஜியின் சின்மயா மிஷன் நிறுவனத்தின் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். முதல் ஆண்டிலேயே அந்நிறுவனத்தின் செயலாளராகப் பதவி பெற்றார். ஆங்கிலப் பேராசிரியர் பி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் அவர்களிடம் சம்ஸ்க்ருதம் கற்றுத் தேர்ந்தார். 1955ல் ஸ்வாமி சின்மயனந்தருடன் உத்தர காசி சென்று அங்கே பகவத் கீதை நூல் தயாரிப்பில் அவருக்குப் பெரிதும் உதவினார். அவ்வமயம் ஸ்வாமி சின்மயானந்தரின் குரு ஸ்வாமி தபோவனம் மஹராஜ் அவர்களின் ஆசிகளையும் அனுக்கிரகத்தையும் பெற்றார். 1956ல் ஸ்வாமி சின்மயானந்தரின் ஆலோசனைப்படி, சின்மயா மிஷனின் “தியாகி” பத்திரிகையின் ஆசிரியராகச் சென்னையிலும், பின்னர் பெங்களூருவிலும் பணிபுரிந்தார். பெங்களூருவில் இருந்த சமயம் சாம்ராஜ்பேட்டை சம்ஸ்க்ருத கல்லூரியில் பட்டம் பெற்றார். 
 
Swami Chinmayananda
 
 
1961ல் ஸ்வாமி சின்மயானந்தரின் அனுமதியுடன் விஜயவாடா அருகில் உள்ள குடிவடா என்கிற ஊரில் ஸ்வாமி பிரணவானந்தா அவர்களிடம் வேதாந்தமும் சங்கரபாஷ்யமும் கற்றுத் தேர்ந்தார். 1962ல் ஸ்வாமி சின்மயானந்தா நடராஜனுக்கு சன்யாச தீக்ஷை அளித்து தயானந்த சரஸ்வதி என்கிற பெயரையும் அளித்தார். 
 
>1963ல் மும்பையில் சின்மயா மிஷனுக்குச் சொந்தமான சாந்தீபனி சாதனாலயா சென்று ’தபோவன் பிரசாத்’ என்கிற பத்திரிகையை நடத்தி வந்தார். அப்போது, சாதனாலயாவில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு பகவத் கீதையும் உபநிடதங்களும் கற்றுத்தந்தார். பிறகு கல்விப்பயணமாக ரிஷிகேஷ் சென்று கைலாஷ் ஆஸ்ரமத்தில் ஸ்வாமி தாரானந்த கிரி அவர்களிடம் பிரம்ம சூத்ரங்களைக் கற்றுத் தேர்ந்தார். 1967ல் ஸ்வாமி சின்மயானந்தாவின் உடல் நலம் குன்றத் தொடங்கியதால், அவருக்குப் பதிலாக ஸ்வாமி தயானந்த சரஸ்வதி சொற்பொழிவுப் பயணங்கள் மேற்கொண்டார். சாந்தீபனி சாதனாலயாவில் வேதாந்தக் கல்விக்கான குருகுல திட்டத்தைத் தயாரித்தார். அதே போல 1979ல் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள சாந்தீபனி சாதனாலயா மாணவர்களுக்காக மூன்று ஆண்டு குருகுல கல்வித்திட்டத்தைத் தயாரித்துக் கொடுத்தார். 1982ல் இந்தியா திரும்பிய பின்னர் தன்னுடைய சொற்பொழிவுப் பயணங்களைத் தொடர்ந்தார். பிறகு 1986ல் பென்சில்வேனியா சேய்லர்ஸ்பர்கில் ஆர்ஷ வித்யா குருகுலத்தை ஸ்தாபித்தார். அங்கே மூன்று ஆண்டுகள் வேதாந்தக் கல்வித்திட்டத்தையும் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 1990ல் கோயமுத்தூர் மாவட்டம் ஆனைகட்டியிலும் ஆர்ஷ வித்யா குருகுலத்தை ஸ்தாபித்தார். இதனிடையே அவர் 1960களில் ரிஷிகேஷில் ஸ்தாபித்த ஸ்வாமி தயானந்தா ஆஸ்ரமம் வேகமாக வளர்ந்து இன்று ஆர்ஷ வித்யா குருகுலங்களின் தலைமைப் பீடமாக விளங்குகின்றது. 
 
Arsha Vidya Gurukulam
 
 2001ம் வருடம் ஜூலை மாதம் ஸ்வாமிஜியின் வழிகாட்டுதலிலும் ஆலோசனையின் பேரிலும்,நாக்பூரில்  டாக்டர் ஸ்ரீகாந்த் ஜிச்கார் நாக்பூரில் ஆர்ஷ விஞ்ஞான குருகுலத்தை ஆரம்பித்தார். ஸ்வாமிஜியின் சிஷ்யர்களில் ஒருவரான ஸ்வாமினி பிரம்மபிரகாசானந்தா இந்த குருகுலத்தின் தலைமை ஆச்சாரியராக இருந்து வருகிறார். வேதாந்த உபநிடதங்களையும், பகவத் கீதையையும், பிரம்ம சூத்திரங்களையும் ஏராளமான மாணாக்கர்களுக்கும் சீடர்களுக்கும் உலகெங்கும் கற்றுக்கொடுத்து, இன்று அவருடைய பிரதான சீடர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆச்சாரியர்களாக உலகெங்கும் சென்று வேதாந்தக் கல்வி பயின்று வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் ஆர்ஷ வித்யா குருகுலங்களில் யோகா, ஆயுர்வேதம், இந்திய பாரம்பரிய இசை (ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை) ஜோதிடம் ஆகியவற்றைக் கற்றுத் தருவதற்கான முகாம்களும் நடத்தப்படுகின்றன. 
 
இவ்வாறு ஹிந்து ஆன்மீகக் கலாச்சாரப் பெருமையை உலகெங்கும் பரப்பி பல்வேறு நாடுகளிலிருந்து மக்களை ஹிந்து தர்மத்தின்பால் ஈர்த்தவரான பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சாதனையானது ஒவ்வொரு ஹிந்துவும் பெருமையுடனும் நன்றியுடனும் போற்ற வேண்டியதாகும். போலி மதச்சார்பின்மை கொடிகட்டிப் பறக்கும் காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஹிந்துவும் தான் ஹிந்துவாகப் பிறந்தததைப் பெருமையாக நினைக்குமாறு ஹிந்து தர்மத்தை மக்களிடையே கொண்டு சென்ற பூஜ்ய ஸ்வாமிஜியின் இழப்பு ஹிந்து தர்மத்துக்கும், ஹிந்து சமூகத்துக்கும் பேரிழப்பாகும். இறைவனடி எய்திய பூஜ்ய ஸ்வாமிஜிக்கு நமஸ்கரித்து அஞ்சலி செலுத்துகின்ற இந்நேரத்தில், அவருடைய சாதனைகளையும் சேவைகளையும் நினைவு கூர்ந்து, அவர் காட்டிய வழியில் பயணித்து ஹிந்து தர்மத்தை நிலைநாட்டுவோம் என்று பிரதிக்ஞை செய்துகொள்வது நம் அனைவருடைய கடமையாகும். 
 
பூஜ்ய ஸ்வாமிஜியின் குறிப்பிடத்தக்க பணிகள்
 
ஹிந்து தர்மத்தை நிலைநாட்டும் விதத்தில் பூஜ்ய ஸ்வாமிஜி செய்த பணிகள் ஏராளம். அவற்றில் குறிப்பிடத்தக்க பணிகளை நினைவுகூர்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். 
 
 ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா
 
 
Hindu Dharma Acharya Saba
 
 இந்தியாவில் உள்ள அனைத்துப் பாரம்பரிய மடங்களையும், பீடங்களையும், அனைத்து விதமான சம்பிரதாயங்களையும் இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் விதமாக ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா என்கிற அமைப்பைத் தோற்றுவித்தார் பூஜ்ய ஸ்வாமிஜி. அதைத் தோற்றுவிப்பதற்கு முன்பாக இந்தியா முழுவதும் பயணம் செய்து ஒவ்வொரு மடாதிபதியையும், பீடாதிபதியையும், அதீனகர்த்தர்களையும், மஹாமண்டலேஷ்வர்களையும், பலதரப்பட்ட சம்பிரதாயத் தலைவர்களையும் நேரில் சந்தித்து, ஹிந்து தர்மத்தின் பாதுகாப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைவரும் ஒரு குடையின் கீழ் வரவேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி, இந்திய ஆன்மீக வரலாற்றிலேயே முதன் முறையாக அனைத்துச் சம்பிரதாயங்களையும் இணைக்கும் விதமாக 2004ம் ஆண்டு “ஹிந்து தர்ம ஆச்சாரிய சபா” என்கிற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்தி, ஹிந்து தர்மப் பாதுகாப்புக்குத் தேவையான விஷயங்களை விவாதித்து ஆலோசனைகள் செய்து, தீர்மானங்களை நிறைவேற்றி, அவற்றைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியும், பொது மக்களிடையே அவற்றைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியும் வந்தார் பூஜ்ய ஸ்வாமிஜி. இது ஒரு மகத்தான சாதனையாகும். 
 
மதநல்லிணக்கப் பேச்சுவார்த்தைகள்
 
 இந்தியா பல மதங்களைப் பின்பற்றும் மக்கள் தொகையைக் கொண்ட நாடு. இங்கே வாக்கு வங்கி மற்றும் போலி மதச்சார்பின்மை அரசியலில் ஈடுபடும் அரசியல் கட்சிகளினாலும், தங்கள் மதங்களைப் பரப்பியும் மதமாற்றத்திலும் ஈடுபடும் அன்னிய சக்திகளினாலும் பொதுமக்களிடையே நிலவி வரும் அமைதி பெரிதும் பாதிக்கப்பட்டு, ஆங்காங்கே வன்முறைகளும் பயங்கரவாதச் சம்பவங்களும் நடைபெறுவது பெருகி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில், மாற்று மதத் தலைமை நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, அம்மதத் தலைவர்களைச் சந்தித்து, மத நல்லிணக்கப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு, ஹிந்து தர்மத்தின் நலன் காக்கும் விதமாகச் செயல்பட்டவர் பூஜ்ய ஸ்வாமிஜி.
 
ஒவ்வொரு மதமும் மற்ற மதங்களை மதித்து நடந்துகொள்ள வேண்டும்; ஒரு மதம் மற்ற மதங்களைத் தரக்குறைவாகவோ அவமானப்படுத்தும் விதமாகவோ பேசக்கூடாது; மற்ற மதங்களை விடத் தம் மதம் தான் சிறந்தது என்று தற்பெருமை பேசக்கூடாது; மற்ற மதத்தவரைத் தம் மதத்திற்கு மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது; என்பன போன்ற மத நல்லிணக்கக் கருத்துக்களை ஒவ்வொரு மத நல்லிணக்கக் கூட்டங்களிலும் வலியுறுத்தினார். இதன் உச்சக்கட்டமாக 10 டிசம்பர் 2008ல் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தீர்மான மாநாட்டின் 60வது ஆண்டு விழாவில், “ஒவ்வொரு மதமும் மற்ற மதத்தை மதித்து நடந்துகொள்ள வேண்டும்; மற்ற மதங்களைக் அவமானப் படுத்தக்கூடாது; மற்ற மதங்களின் சின்னங்களை அவமதிக்கக் கூடாது; தான் பிறந்த மதத்திலேயே தொடர்வதற்கு ஒரு மனிதனுக்கு உள்ள உரிமையை மதித்து அங்கீகரிக்க வேண்டும்; மற்ற மதத்தவரைக் கட்டாயப்படுத்தியோ தூண்டுதலாலோ தம் மதத்திற்கு மாற்றக்கூடாது” என்கிற தீர்மானத்தை முன்னிறுத்தி அனைத்து மதத் தலைவர்களும் அதை ஏற்றுக் கையெழுத்திடுமாறு செய்தார்.  
 
 தர்ம ரக்ஷண சமிதி
 
நமது தர்மத்திற்கும் அதன் ஆன்மீகப் பாரம்பரியத்திற்கும், கலாச்சாரச் சிறப்புக்கும் ஆபத்து வருகிற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நன்கு உணர்ந்த பூஜ்ய ஸ்வாமிஜி, 1999ல் தர்ம ரக்ஷண சமிதி என்கிற அமைப்பைத் தொடங்கினார். ஹிந்து பண்பாட்டைப் போற்றிப் பாதுகாத்தல், ஹிந்து மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல், மதமாற்றங்களிலிருந்து ஹிந்து சமூகத்தைப் பாதுகாத்தல், ஹிந்துக்களை ஹிந்து கலாச்சாரப் பழக்க வழக்கங்களையும் சாஸ்த்திர சம்பிரதாயங்களையும் கடைப்பிடிக்க வைத்தல் ஆகிய உன்னத நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்பட்டதே தர்ம ரக்ஷண சமிதியாகும். 
 
 
Dharma Rakshana Samithi
 
 இளைஞர்கள், குழந்தைகள், மகளிர், குடும்பங்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் வகையில் தர்ம ரக்ஷண சமிதியின் பணிகளின் திட்டத்தை வகுத்தார் பூஜ்ய ஸ்வாமிஜி. ”ஸ்ரீ அம்மன் யாத்திரை” என்கிற திட்டத்தைத் தொடங்கி, அம்மன் விக்கிரகங்களை கிராமங்கள் தோறும் எடுத்துச் சென்று மக்கள் தங்கள் கரங்களாலேயே பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் செய்யுமாறு செய்தார். அந்த ஸ்ரீ அம்மன் யாத்திரை தற்போது மிகப் பெரிய மக்கள் இயக்கமாக உருவாகியுள்ளது. லக்ஷக்கணக்கான மகளிர் இந்தத் திட்டத்தினால் அம்மன் அருளைப் பெற்று வருகின்றனர். 
 
அடுத்ததாகப் “பூர்ண வித்யா குருகுலம்” என்கிற திட்டத்தைத் தொடங்கினார். நம்முடைய புனிதமான வாழ்க்கை முறை மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றிய அறிவை சிறுவர் சிறுமியருக்கு ஊட்டும் விதமாக இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் லக்ஷக்கணக்கான சிறார்கள் பயனடைந்து வருகிறார்கள்.  
 
நவராத்திரி விழா சமயத்தில், மாணாக்கர்களின் மனதில் கல்வியைப் பற்றிய தெய்வீக உணர்வை ஏற்படுத்தும் விதமாக “சரஸ்வதி நாமஜப யக்ஞம்” நடத்த ஏற்பாடு செய்தவர் ஸ்வாமிஜி. இது மடுமல்லாமல், மாணாக்கர்களின் மனதிலிருந்து பொதுத் தேர்வுகள் பற்றிய பயத்தைப் போக்குமாறு “வல்லமை தாராயோ” என்கிற பயிற்சியைக் கொடுத்து அதன் மூலம் அவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுமாறு செய்தவர் ஸ்வாமிஜி.
 
 வருடா வருடம் லக்ஷக்கணக்கில் அதிகரித்து வரும் ஐயப்ப பக்தர்களிடம் ஐயப்ப விரதத்தின் முக்கியத்துவத்தையும் பெருமைகளையும் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும், அவர்களிடையே ஒற்றுமை உணர்வை உண்டாக்கும் விதமாகவும், ஒவ்வொரு ஆண்டும் “ஐயப்ப சங்கமம்” என்கிற நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வரும்படி செய்தவர் பூஜ்ய ஸ்வாமிஜி. 
 
ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று மக்கள் இல்லங்களுக்குச் சென்று கடவுள் படங்களையும், கடவுள் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்ட டாலர்களையும், பிரசாதங்களையும் கொடுத்து, கிராம தெய்வம், குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் ஆகியவற்றை வழிபடுவதன் முக்கியத்துவத்தையும், அதனால் விளையும் பயன்களையும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது தர்ம ரக்ஷண சமிதி. 
 
மாநிலம் முழுவதும் “ராமாயண ஞான யக்ஞம்” ஒன்றையும் தொடர்ந்து நடத்தி வருகிறது சமிதி. ராமாயண சொற்பொழிவுகள், ஸ்ரீ ராம பூஜைகள், ஸ்ரீ ராமநாம ஜபம் ஆகியவை மூலம் பொதுமக்கள் பயனடையுமாறு செய்து வருகிறது சமிதி. கோவில்கள் இல்லாத கிராம தெய்வங்களுக்குக் கோவில் கட்டும் பணியும் செய்கிறது. 
 
( தர்ம ரக்ஷண சமிதியின் பணிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள….{* YouTube}v=ye-8ZrHKmas{* /YouTube}
 
 
 

மதமாற்றம் ஒழிப்பு

மதங்களுக்கிடையே ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என்று தொடர்ந்து கூறிவந்து, அதற்காக உழைக்கவும் செய்த பூஜ்ய ஸ்வாமிஜி, அன்னிய மதத்தவரின் மதமாற்ற நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிக்கவும் விமரிசனம் செய்யவும் தயங்கியதில்லை. ”மதமாற்றம் ஒரு வன்முறை” என்று தேசமெங்கும் பயணம் செய்து முழங்கினார். மதமாற்றம் எவ்வாறு சமூகத்தில் அமைதியைக் கெடுக்கின்றது என்றும், எவ்வாறு அதன் மூலம் இந்தியா சின்னாபின்னமாக உடையும் என்றும், அது எவ்வாறு தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து விளைவிக்கும் என்றும் மக்களிடையே பெரிதும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். பூஜ்ய ஸ்வாமிஜியின் மதமாற்றம் ஒரு வன்முறை என்கிற புத்தகமும், அவருடைய சொற்பொழிவு அடங்கிய காணொளியும் உலகெங்கும் மிகவும் பிரபலாமானதாகும். 
 
Conversion is Vioelnce
 
ஓதுவார்கள் நலன்
 
 
தமிழகத்தின் ஆலயங்களில் தெய்வத் திருமுறைகளைப் பாடி வரும் ஓதுவார் சமூகத்தினர் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்தார் பூஜ்ய ஸ்வாமிஜி.
 
பொருளாதாரத்தில் மிகவும் பின்னடைந்த நிலையில் இருக்கும் அவர்கள் நலன் காக்க, மாநாடுகள் நடத்தி, நிரந்தர நிதியுதவியும் மற்றும் பல நலன்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தார். 
 
 
 
 
திருவிடைமருதூர் தேர் திருப்பணி 
 Thiruvidaimarudur Chariot Festival
 
1200 ஆண்டுகள் பழமையான பெருமைமிகு திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பஞ்சகுரோசதலம் எனப் போற்றப்படும் அருள்மிகு பிருகத்சுந்தர குஜாம்பிகை உடனாய அருள்மிகு மகாலிங்க ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. தைப்பூசத் திருவிழாவில் இந்தக் கோயிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். அவ்விழாவில் ஸ்வாமி, அம்பாள், விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியாகத் தேரோட்டம் நடைபெறும்.
 
இந்தத் தேரோட்டமானது தேர்கள் பழுதடைந்ததாலும், தேர் மண்டபங்கள் சிதிலம் அடைந்ததாலும், கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாகத் தேரோட்டம் நடக்காமல் இருந்தது. அந்நிலையில் பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி திருவாவடுதுறை ஆதீனத்துடன் தொடர்பு கொண்டு, தேர் மண்டபங்களைக் கட்டுவதற்கும், தேர்களை உருவாக்குவதற்குமான பணிகளைத் தொடங்கலாம் என ஆலோசனைகள் கூறி, தேர் திருப்பணி குழு ஒன்றையும் அமைத்தார். 
 
 பின்னர் பூஜ்ய ஸ்வாமிஜியின் பங்காக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டு மஹாலிங்க ஸ்வாமியின் தேர் தயாரானது. ஆர்ஷ வித்யா குருகுலமும் திருவாவடுதுறை ஆதீனமும் சேர்ந்து ஐந்து தேர் மண்டபங்களையும் புதுப்பித்துக் கட்டினர். மஹாலிங்க ஸ்வாமியின் தேரோட்டம் 2011ம் ஆண்டு நடந்தது. அதனைத் தொடர்ந்து காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் ஏற்பாட்டில் ரூ.1 கோடியில் அம்பாள் தேர் வடிவமைக்கப்பட்டு 2012ம் ஆண்டு தேரோட்டம் நடந்தது. பின்னர் மறைந்த தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் குடும்பத்தினர் அளித்த  நிதியுதவியின் பேரில் ரூ.1 கோடியில் முருகன் தேர் திருப்பணி முடிந்து வெள்ளோட்டமும் நடந்துள்ளது. மேலும் இரண்டு தேர் திருப்பணிகளும் இன்னும் சில மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று திருவாவடுதுறை ஆதீனத்தில் அறிவித்துள்ளனர். இவ்வாறாக ஒரு மகத்தான தெய்வீகப் பணி மூலம் ஒரு பழம்பெருமையான ஆன்மீகப் பாரம்பரியம் தொடர்வதற்கு முனைந்து செயல்பட்டவர் பூஜ்ய ஸ்வாமிஜி. 
 
 பசு மற்றும் கால்நடைப் பாதுகாப்பு
 
 பூஜ்ய ஸ்வாமிஜி பசு மற்றும் கால்நடைப் பாதுகாப்பிலும் சிறந்த பணிகள் ஆற்றியுள்ளார். ஆர்ஷ வித்யா குருகுலங்களில் கோசாலைகள் உள்ளன. அவற்றில் பசுக்களும் கால்நடைகளும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. பூஜ்ய ஸ்வாமிஜி எங்கே எப்போது தன்னுடைய தர்மப் பாதுகாப்புச் சொற்பொழிவுகளை ஆற்றினாலும் அப்போது பசு மற்றும் கால்நடைகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவார். 
 
 ஆலய வழிபடுவோர் சங்கத்தினர் வெளியிட்ட ”கால்நடைச் செல்வங்களின் இறுதிப்பயணம்” என்கிற ஆவணப்படத்தில் தோன்றியுள்ள ஸ்வாமிஜி, “வேளாண்மை என்று வரும்போது, உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல நாம் “கால்நடைப் பண்ணை” என்று சொல்வதில்லை. ”கோ ரக்ஷணம்” அல்லது “பசுப் பாதுகாப்பு” என்று தான் சொல்கிறோம். கோ அல்லது பசு என்பது உபலக்ஷணம். உபலக்ஷணம் என்பது அனைத்து மிருகங்களுக்கும் பொருந்தும். ஆகவே கால்நடைப் பாதுகாப்பும் தர்ம ரக்ஷணத்தில் சேர்ந்தது தான். நமது நாட்டின் அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டும் கோட்பாடுகளில் ஒன்றாக பசுவதைத் தடை சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, மத்திய அரசும் சரி, ஒவ்வொரு மாநில அரசும் சரி, பசுவதைத் தடைச் சட்டத்தை அரசியல் சாஸனத்தின் படி இயற்றலாம்”என்று பேசியிருக்கிறார். 
 
 இதர சேவைகள்
 
தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத்தின் அங்கமான சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் தமிழக கிராமங்களில்ஓராசிரியர் பள்ளிகள் தொடங்குவதற்கும், ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டினார். 
 
 
Single Teacher Schools
 
 
கடந்த உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக அரசு சமய இலக்கியங்களைச் சேர்க்க மறுத்தபோது, திராவிட சான்றோர் பேரவை நடத்திய மாநாட்டில் அருளாசி வழங்கிய பூஜ்ய ஸ்வாமிஜி, தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியில் சமய இலக்கியங்கள் ஆற்றிய மகத்தான பங்கைப் பற்றி விளக்கிக் கூறினார். தமிழ் மொழி மற்றும் இலக்கியம் சம்பந்தமாக நடத்தப்படும் எந்தவிதமான மாநாட்டிலும், சமய இலகியங்களைச் சேர்க்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார். 
 
 ஆலய வழிபடுவோர் சங்கம் அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஹிந்து ஆலயங்களை விடுவிக்கப் போராடி வருகின்றது. இந்தச் சங்கம் ஆரம்பிக்கப்படுவதற்கும் பூஜ்ய ஸ்வாமிஜி ஆலோசனைகளும், ஆசிகளும் வழங்கியுள்ளார். இந்தச் சங்கத்துடன் இணைந்து பணியாற்றும் விதமாக உச்ச நீதிமன்றத்தில், தமிழக, ஆந்திர மற்றும் புதுவை மாநில அரசுகளின் இந்து அறநிலையத்துறைகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஹிந்து ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி வழக்கு பதிவு செய்துள்ளார். 
 
 
Hindu Temples and Government Control
 
 சென்னையில் கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வரும் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி பூஜ்ய ஸ்வாமிஜி அவர்களின் ஆசிகளுடனும் ஆலோசனைகளுடனும் தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் வெற்றிக்கு ஸ்வாமிஜி அளித்த பங்கு அபரிமிதமானது. 
 
  
அஞ்சலி
 
ஹிந்து தர்மத்தின் ஆன்மீகப் பாரம்பரியம், கலாச்சாரப் பெருமை, பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், சாஸ்த்திர சம்பிரதாயங்கள், ஆகியவை அனைத்தையும் பாதுகாக்கும் பணியிலும், அவற்றைப் பரப்பும் சேவையிலும், மற்றும் ஆலயப்பாதுகாப்பு, ஆவினங்களின் பாதுகாப்பு, ஆகிய பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் பூஜ்ய ஸ்வாமிஜி. அதோடு மட்டுமல்லாமல், அன்னிய மத நிறுவனங்களால் நமது நாட்டில் நடத்தப்படும் மதமாற்றங்களைக் கடுமையாக எதிர்த்தவர். இந்தியாவின் அமைதி, ஒருமைப்பாடு, வளர்ச்சி ஆகியவை பற்றி மிகுந்த அக்கறை கொண்ட தேசபக்தர் ஸ்வாமிஜி. உலக அளவில் சிறந்த வேதாந்த ஆச்சாரியராக அறியப்பட்ட பூஜ்ய ஸ்வாமிஜி உலகமே மெச்சும் அறிவு ஜீவியாகத் திகழ்ந்தார். 
 
சிறந்த நகைச்சுவை உணர்வும் கொண்டவர். மிகவும் எளிமையாக அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடனும் வாஞ்சையுடனும், அன்புடனும் பழகியவர். 
 
  
Pujya Swamiji
 
  
பூஜ்ய ஸ்வாமிஜி முக்தி அடைந்தது நமது தேசத்திற்கும் தர்மத்திற்கும் பேரிழப்பாகும். அவர் காட்டிய வழியில் நடந்து நம் தர்மத்தைக் காப்பதே நாம் அவருக்குச் செய்யும் சிறந்த அஞ்சலியாகும்.       
 
 
கட்டுரை: பி.ஆர்.ஹரன்
 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,159FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,504FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

Latest News : Read Now...