30-05-2023 3:05 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeஉரத்த சிந்தனைஇந்திரா காந்தி; இடைத்தேர்தல்; இன்றைய தேர்தல்! 40 ஆண்டைத் தொடும் சிக்மகளூர் சிந்தனைகள்
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    இந்திரா காந்தி; இடைத்தேர்தல்; இன்றைய தேர்தல்! 40 ஆண்டைத் தொடும் சிக்மகளூர் சிந்தனைகள்


    1. இந்திரா காந்தி சிக்மகளூர் இடைத்தேர்தல்
    2. இன்றைய கர்நாடகத் தேர்தல்.
    3. 40 ஆண்டுகளைத் தொடும் நினைவுகள்.

    அவசர நிலை (Emergency) காலத்திற்கு பின், இந்திரா காந்தி உத்திர பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் தோல்வி கண்டார்.மத்தியில் இருந்த ஜனதா ஆட்சி ஷா கமிசன் மற்றும் வழக்குகளை போட்டு நீதிமன்றத்தின் படிகளை ஏறவைத்தது. இந்த நிலையில் தான் எப்படியும் நாடாளுமன்றத்திற்கு திரும்பவும் செல்ல வேண்டுமென்று உறுதியான நிலைப்பாட்டில் இந்திரா காந்தி இருந்தார்.

    அந்த சமயத்தில் தஞ்சாவூர் தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.டி. சோமசுந்தரம் (எஸ்.டி.எஸ்) தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தின் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சரானார். ஆகவே தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி காலியாக இருந்தது. எம்.ஜி.ஆர் அந்த தொகுதியில் இந்திரா காந்தியை போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்திராவும் ஒத்துக் கொண்டார்.

    இந்த செய்தியை கேட்டவுடன் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்டு இந்திரா காந்தியை தஞ்சாவூரில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று கடுமையாக வலியுறுத்தியதால் எம்.ஜி.ஆர் பின்வாங்கினார். எனவே எம்.ஜி.ஆரும் இந்திராவிற்கு ஆதரவான நிலையை மாற்றி தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் போட்டியிட எம்.ஜி.ஆர் எந்த வழிவகையும் செய்யாமல் மௌனமாகிவிட்டார்.

    இதனால் எரிச்சலடைந்த இந்திரா காந்தி அவர்கள் அப்போது கர்நாடகாவில் சிக்மகளூர் நாடாளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவிருந்தது. அதில் போட்டியிடலாம் என்ற முடிவிற்கு வந்தார். ஆனால்,கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த முதல்வர் தேவராஜ அர்ஸ் காங்கிரசிலிருந்து விலகி காங்கிரஸ் (யூ) என்ற பெயரில் தொடங்கி கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது.

    எமர்ஜென்சிக்குப் பின் இந்திரா தலைமையில் இருந்த காங்கிரஸ் பிரம்மானந்த ரெட்டி தலைமையில் ஒரு காங்கிரசும், கர்நாடகத்தில் தேவராஜ அர்ஸ் தலைமையில் காங்கிரஸ் (யூ) என்றும், காங்கிரஸ் (எஸ்) என்று ஏ.கே.அந்தோணி, கே.பி. உன்னிகிருஷ்ணன், சரத் பவார், அஸ்ஸாமைச் சேர்ந்த சரத் சந்திர சின்கா ஆகியோருடன் காங்கிரஸ் சோசலிஸ்ட் என்ற கட்சிகளாக பிரிந்து சென்றுவிட்டன.

    இந்நிலையில் சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்த நிலையில் தேவராஜ அர்சிடம் நேரடியாக பேசுவதற்கு இந்திராவின் ஆளுமை ஒப்பவில்லை. தேவராஜ அர்சிடம் பேச வேண்டுமென்றால் அவருக்கு பழ. நெடுமாறன் தான் நெருக்கமானவர். கவிஞர் கண்ணதாசன் கூட தேவராஜ அர்சிற்கு மிகவும் தொடர்பில் இருந்தவர். இந்திரா அவர்கள் நெடுமாறனை தில்லிக்கு அழைத்து, தேவராஜ அர்சிடம் இதுகுறித்து பேச சொன்னார்.

    தேவராஜ அர்சிடம் பழ.நெடுமாறன் பேசியபோது அவர் ஒன்றே ஒன்று சொன்னார். இப்போதைய தருணத்தில் இதுதான் சரியான முடிவு. எனவே கர்நாடகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு இந்திரா காந்தி அவர்களை பாதுகாத்து தேர்தலில் வெற்றி பெறவைக்க வேண்டும். ஆனால் ஜார்ஜ் பெர்னான்டசும், வீரேந்திர படேலும் கடுமையாக எதிர்க்கிறார்கள். இதையெல்லாம் மீறி நாம் கடமைகள் ஆற்றவேண்டுமென்று நெடுமாறனிடம் சொன்னார்.

    இந்த சம்பவம் நடக்கும் போதெல்லாம் நேரடிச் சாட்சியாக இருந்தவன் அடியேன். என் கண்முன்னே நடந்த பல சம்பவங்களை விரிவான பதிவுகளாக எனது நினைவுகள் புத்தகத்தில் சேர்த்துள்ளேன். என்னைக் குறித்து இங்கு விரிவாக எழுதினால் அது தற்புகழ்ச்சியாகிவிடும். இந்த தகவலை கேட்டவுடன் இந்திரா காந்திக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

    பின்னர் இந்த தொகுதியில் இந்திராவும் 1978ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.இந்த தேர்தல் நடந்து 40 ஆண்டுகள் தொடுகின்றது.

    சிக்மகளூர் தொகுதி காபி தோட்டங்களில் வேலைசெய்யும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. தமிழகத்தில் இருந்து பழ. நெடுமாறன் தலைமையில், ஐ.என்.டி.யு.சி. இராமானுஜம், ஏ.பி.சி. வீரபாகு, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.டி.கோசல்ராம், சிவகாசி. வி. ஜெயலட்சுமி, கிருஷ்ணகிரி தீர்த்தகிரி கவுண்டர், அரக்கோணம் ஜீவரத்தின முதலியார், வாழப்பாடி இராமமூர்த்தி, எஸ்.கே.டி. இராமச்சந்திரன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், தஞ்சை இராமமூர்த்தி, ஆத்தூர் எம்.பி. சுப்பிரமணியம் (எம்.பி.எஸ்), திண்டுக்கல் அழகிரிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான ஏ.எஸ்.பொன்னம்மாள் மற்றும் க. பாரமலை, மற்றும் தி.சு. கிள்ளிவளவன், எம்.கே.டி.சுப்பிரமணியம், திருச்சி சாமிக்கண்ணு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீலகிரி கரிச்சா கவுடர், தாராபுரம் எஸ்.ஆர். வேலுச்சாமி, தஞ்சை முருகேசன், நாகர்கோவில் முத்துக்கருப்பன், வேடசந்தூர் வீரப்பன், சாமி, மதுரை எம்.ஆர். மாணிக்கம், நாமக்கல் சித்திக், திருவல்லிக்கேணி திருநாவுக்கரசு போன்ற பலருடன் அடியேனும் இணைந்து ஒரு குழுவாக அங்கு 10 நாட்கள் தங்கியிருந்து இந்திரா காந்திக்கு தேர்தல் பணிகளை மேற்கொண்ட நினைவுகள் வருகின்றன.

    குடியரசுத் முன்னாள் தலைவர் ஆர். வெங்கட்ராமன் (அப்போது அவர் காங்கிரசில் இருந்து சில காலம் விலகியிருந்தார்) இரண்டு நாட்கள் அங்கு இருந்தார்.

    இன்றைக்கு கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடக்கும் இதே காலக்கட்டத்தில் தான் 40 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த தொகுதியில் இந்திரா காந்தி வீதிவீதியாக பிரச்சாரம் செய்தார். இந்திரா காந்திக்கு எதிராக அன்றைய அரசியலில் முக்கிய தலைவர் களான, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம் வீரேந்திர படேல், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இருப்பினும் இந்திரா காந்தி அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்.

    இன்றைக்கு கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல். அந்த தேர்தல் நடந்து 40 ஆண்டுகளைத் தொடுகின்றது. காலச்சக்கரம் வேகமாக சுழன்றுவிட்டது. அந்த சம்பவங்கள் பசுமையாக நினைவில் இருக்கின்றன.

    இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் தற்போது நினைவுக்கு வருகிறது. தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் எங்கள் பணிகள் நிலைத்து நிற்கும். எங்களைப் போன்றவர்கள் பதவிக்காக அரசியலில் இல்லை.

    களப்பணிகளுக்காகவும் இருக்கிறோம். வரலாற்றில் என்றும் பதவிகள் நிரந்தர மில்லை என்பது எங்களுக்கு தெரியும். சமூகத்தில் எனது களப்பணிகளையும் அதனால் மக்களுக்கு கிடைத்த பலன்களையுமே மாபெரும் பெருமையாக கருது கிறேன். அரசியலில் பலரால் புறக்கணிக்கப்பட்டாலும் எனக்கென்று ஒரு முகவரி இருக்கின்றது என்ற ஒன்றே போதும்.

    அரசியல், பொதுத்தளத்தில் இருந்து 48 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியதற்கு இம்மாதிரியான நினைவுகள் மனநிறைவைத் தருகின்றது. பதவி, பவுசுகளைவிட இவைகளே வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறும். ஆனால் வரலாற்றில் நாம் செய்த பணிகள் செய்து நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது காலத்தின் அருட்கொடை ஆகும்.

    #சிக்மகளூர்_இடைத்தேர்தல்
    #இந்திரா_காந்தி
    #எமர்ஜென்சி
    #Chikmagalur_by_poll
    #Indira_Gandhi
    #Emergency
    #chikmagalur
    #KSRadhakrishnanpostings
    #KSRPostings

    – கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
    (கட்டுரையாளர், திமுக., செய்தித் தொடர்பாளர்)

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    five + 1 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Follow us on Social Media

    19,024FansLike
    389FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,749FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஆன்மிக