தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம், செவ்வாய்க்கிழமை நேற்று ரத்தக்கறை படிந்த நாளாக மாறியது. போராட்டம் கலவரமாகி, கலவரத்தால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, அதில் 10 பேர் உயிரிழந்தனர்.
போராட்டக்காரர்களிடையே, நக்சல் வன்முறையாளர்கள் புகுந்ததால், கலவரம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்தும், ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்தும், தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். செய்தியைச் சேகரித்து வழங்கிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் மீதும் கடும் தாக்குதல் நடத்தப் பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பலரும் தங்கள் அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் கூறுவதாக, வாட்ஸ் அப்களில் உலாவரும் செய்தி இது…
***
22.5.2018 அன்று காலை வழக்கம் போல காலை 08.30 மணிக்கு அலுவலக பணிக்கு வீட்டில் இருந்து குழந்தைகளுக்கு காலை மற்றும் மதியம் உணவு தயார் செய்து வைத்து விட்டு கிளம்பினேன். 09.45 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நுழைவு வாயிலில் நுழைந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் சுமார் இருநூறு போலீசார் இருந்தனர்.
அதில் ஒரு பெண் போலீஸ் ஒருவர் என்னை தடுத்து நிறுத்தி என்னுடைய அடையாள அட்டையை வாங்கி பரிசோதித்து விட்டு உள்ளே அனுப்பினார். என்னை மட்டும் அல்ல எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் தீவிர விசாரணை நடத்தி தான் உள்ளே அனுமதித்தனர்.
ஸ்டெர்லைட் பிரச்சினை காரணமாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த போவதாக தூத்துக்குடி சுற்று வட்டார பகுதி மக்கள் அறிவித்து இருந்தனர். அதன் காரணமாக தான் இந்த பாதுகாப்பு கெடுபிடி என தெரிந்தது
பின்னர் வழக்கம் போல் அலுவலகத்தில் பணியில் இருந்து காலை நேர டீ சாப்பிட 11.10 அளவில் எங்கள் அலுவலக கேண்டினுக்கு சென்றோம். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்திற்க்குள காவலர்கள் பலர் தலைதெறிக்க உயிர் பயத்துடன் ஓடி வந்தனர். அவர்களை நோக்கி பல்லாயிர கணக்கான எண்ணிக்கையில் மழை பொழிவை போன்று கற்கள் சரமாரியாக விழுந்தது. நாங்கள் செய்வதறியாது உடனே எங்கள் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே சென்று விட்டோம்.
பின்னர் கலவரகாரர்கள் சுமார் இருபதாயிரம் பேர் இருக்கும். அவர்கள் அனைவரும் கையில் கொடூரமான ஆயுதங்கள், உருட்டு கட்டைகள், கூல்ட்ரிங்ஸ் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பிய பெட்ரோல் குண்டு, இவை அனைத்தையும் எடுத்து கொண்டு மிகுந்த ஆவேசத்துடன் எங்கள் அலுவலகத்தின் முன் பகுதியில் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தி இருந்த காவல வாகனங்கள், கலெக்டர் அலுவலக வாகனங்கள், ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் (என்னோடது உட்பட) அடித்து நொறுக்கினர்,
அவர்களுடன் சுமார் இளம் வயதுடைய நூறு காவலர்கள் சரிக்கு சமமாக போராடினர்.
இருந்தாலும் போராட்ட காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தால் காவலர்கள் அவர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க இயலாமல் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அனைத்து வாகனங்களையும் தீயிட்டு கொளுத்தினர்.
ஒரே புகை மண்டலத்துடன் கூடிய போர்களமாக எங்கள் கலெக்டர் அலுவலகம் காணப்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலக கதவை உருட்டு கட்டை மற்றும் கல்லால் தாக்க தொடங்கி அலுவலகத்தின் உள்ளே புகுந்தனர். அங்கு நான் உட்பட அனைத்து ஊழியர்களும் உயிர் பயத்தில் அலறினோம்.
உள்ளே புகுந்த கலவர காரர்கள் அலுவலகத்தை தீயிடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தான் சுமார் நூறு காவலர்கள் கடவுள் போல அதிரடியாக அலுவலகம் முன்பு காவல் அதிகாரி ஒருவரின் தலைமையில் வந்தனர். வந்தவுடனே மரகட்டை போன்ற துப்பாக்கி மூலம் வானத்தை நோக்கி நான்கு தடவை சுட்டனர். அந்த சத்தம் தீபாவளி அணுகுண்டை போல சத்தம் கேட்டது.
இந்த சத்தம் கேட்டவுடனே கலவரகாரர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர். வெளியே ஓடிய வேகத்தில் மறுபடியும் காவலர்களை தாக்குதல் நடத்த தொடங்கினர். அப்போது வேறுவழியின்றி கலவரகாரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கி சூடு நடந்த பின்னர் தான் கலவரகாரர்கள் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள நான்கு வழிச்சாலையை நோக்கி ஓடினர்.
பின்னர் மற்றும் இரண்டு குழுவினர் கலெக்டர் அலுவலக பின் பாதையில் இருந்து கல்லெறிந்து தாக்குதல் நடத்த தொடங்கினர். இதில் சுமார் பத்து காவலர்களின் மண்டை உடைந்து இரத்தம் வழிய தொடங்கியது. காவலர்களும் இந்த கொரில்லா தாக்குதலை சமாளிக்க முடியாமல் மறுபடியும் ஓட முயற்சி செய்தனர்.
ஆனால் மூன்று புறமும் கலெக்டர் அலுவலக கட்டிடங்கள் இருந்ததால் அவர்கள் தப்பிக்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இதன் பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், கலெக்டர் அலுவலக ஊழியர்களாகிய பொதுமக்கள் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் தற்காப்பிற்க்காவும் கலவரகாரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் தான் கலவரகாரர்களில் சிலர் பலியாக நேரிட்டது.
இவர்கள் மட்டும் தக்க சமயத்தில் வந்து இந்த துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்றால் நான் உட்பட எனது சக ஊழியர்கள் மற்றும் காவலர்கள் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருந்திருக்க நேர்ந்து இருக்கும். இன்று தூத்துக்குடியில் நடந்த கலவரகாரர்கள் நிஜ தீவிரவாதிகளை போல இருந்தது. காவலர்களின் போராட்டம் இராணுவத்தை போல இருந்தது.
இந்த கலவரத்தில் எனது உயிர் இன்றுடன் முடியபோகுது என்று தான் எண்ணினேன். ஆனால் கடவுள் போல வந்து காப்பாற்றிய காவலர்களுக்கு பாதம் பணிந்து எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.