பாவ மன்னிப்பு என்ற பெயரில் பாதிரியார்கள் அடித்த கூத்தை கடந்த ஒரு வாரத்தில் இந்தியா பார்த்துவிட்டது. தாங்கள் செய்தது தவறு என்று மனம் வருந்தி, வெம்பிப் புகையும் மனத்துக்கு ஆறுதலாக, தங்கள் மன பாரத்தை இறக்கி வைக்கும் இடமாக இறைவனின் சந்நிதி திகழும் போது, அந்த ஒருவரின் உள்ளார்ந்த ரகசியங்களை ரகசியங்களாகவே பாதுகாக்க வேண்டிய பாதிரிகள், முறைகேடாக பிளாக்மெயில் செய்யும் திருடர்கள், கொள்ளைக்காரர்களைப் போல் மாறிய கேவலத்தைப் பார்த்து நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது.
கேரளா மலங்காரம் தேவாலயம். திருமணமாகும் முன் பாதிரி ஒருவருடன் உடல் உறவு வைத்திருந்தது, தனது கணவனுக்கு தான் செய்த துரோகம் என மனம் உறுத்த, அது பற்றிச் சொல்லி, ஒரு பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஒரு பெண்.
பாவ மன்னிப்பு கோருபவர்களின் முகத்தைப் பார்க்கவோ, ரகசியங்களை வெளியே கசிய விடவோ கூடாது என்ற மதக் கோட்பாட்டையும் மீறி, அந்த பாதிரியார், பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணிடம், உன் ரகசியங்களை உன் கணவனிடம் சொல்லிவிடுவேன் என்று பிளாக்மெயில் செய்து அடிக்கடி கட்டாய உடலுறவு வைத்துக் கொண்டிருக்கிறார்..
அத்துடன் நில்லாமல், தான் செய்த பாவத்தை பங்குத் தந்தைகளிடம் பங்கு பிரிப்பதைப் போல் சக பாதிரியார்களிடம் இந்த பிளாக்மெயில் பாதிரியார் பங்கு வைக்க, அவர்களும் அதே பிளாக் மெயில் உத்தியைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணை உடல் ரீதியாக தேவைப்பட்ட நேரத்துக்கு அழைத்து பங்கு போட்டிருக்கிறார்கள்.
இடையில், கேரள பாதிரியார்களின் இந்த லீலைகள் தில்லியில் இருந்த பாதிரியாருக்குத் தெரியவர, அவரும் அவர்களுடன் இந்த விவகாரத்தைப் பங்கு போடுவதற்காக, தில்லியில் இருந்து கேரளத்துக்கு வந்து, சொகுசு விடுதியில் அறை எடுத்துத் தங்கி, அந்தப் பெண்ணை வரவழைத்துள்ளார். அந்தப் பெண்ணும், பாதிரியார் சொன்னபடியெல்லாம் சேவகம் செய்த பின்னர், அந்த விடுதிக்கான கட்டணத்தைக் கட்ட அந்தப் பெண்ணையே வற்புறுத்தியிருக்கிறார் தில்லியில் இருந்து வந்த பாதிரி. அந்தப் பெண்ணும் வங்கி அட்டை மூலம் அந்தப் பணத்தைச் செலுத்த, வங்கியில் இருந்து பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி, அவரது கணவனின் மொபைல் போனுக்குச் சென்றிருக்கிறது.
வெளிநாட்டில் வேலை செய்து வரும் அந்த நபர், திடீரென வந்த இந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்து அதிர்ந்து, மனைவியை பிடித்து உலுக்கியபோதுதான், தான் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டதை அந்தப் பெண் சொல்லியிருக்கிறார். இதை அடுத்து கணவன், கடந்த மே மாதம் 7 ஆம் தேதி சர்ச் நிர்வாகத்திடம் ஒரு புகார்க் கடிதத்தை அளித்திருக்கிறார். அதை வெகு சாதாரணமாகப் பெற்றுக் கொண்ட சர்ச் நிர்வாகம், ஒரு குழு அமைத்து கணவன் உள்ளிட்டோரிடம் விசாரித்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் தங்கள் சர்ச்சுக்குக் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுக்கும் என்பதால், அதை அப்படியே விட்டுவிடும்படி அந்த நபரை மிரட்டியிருக்கிறது.
ஆனால் இது குறித்த ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் கசிந்து, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைஅடுத்து, நிரானம், தும்பமோன், தில்லி ஆகிய மூன்று டயோசிஸ்களை சேர்ந்த ஐந்து பாதிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் அடுத்த நாளே, இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்த பேட்டியளித்த சர்ச் வொர்க்கிங் கமிட்டி உறுப்பினர் பாதர் எம்.ஓ.ஜான், “ஐந்து பாதிரியார்களும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. சர்ச் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்” என்று கூறியிருக்கிறார்.
”தன் மனைவியை ஒரு பாதிரியார் மட்டும் 380 தடவை மிரட்டி பலாத்காரம் செய்ததாகச் சொல்கிறார் ஒருவர். இத்தனை எண்ணிக்கை வரும்வரை ஏன் அந்தக் கணவன் காத்திருந்தார். அப்போதே போலீசுக்கு போயிருக்கலாமே?” என்று அந்த பாதர் ஜான் கேட்கிறார்.
இருப்பினும் இந்த விவகாரத்தை அந்த நபர் போலீஸிடம் புகார் செய்யாமல், சர்ச் நிர்வாகத்திடமே புகார் செய்திருந்தார். அவர் ஏன் இந்த நேரத்திலும் போலீஸிடம் புகார் அளிக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் இந்த விவகாரத்தில் சமூக அரசியல் நெருக்குதல் காரணமாக, போலீஸார் வேறு வகையில் புகார் பெற்று, பதிவு செய்து, சட்ட நடவடிக்கை தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம், நடந்திருப்பதாக சொல்லப்படுவது, மிக பயங்கரமான கூட்டு பாலியல் பலாத்கார விவகாரம்.
அதிலும் தாங்கள் புனிதமானவர்கள் என்றும், மக்களைக் காக்க வந்த ரட்சகர்கள் என்றும், தாங்கள் மதக் காவலர்கள் என்றும் கூறிக் கொண்டிருக்கிற பாதிரியார்கள் மேல்தான் இத்தகைய கேவலமான குற்றச்சாட்டுக்கள் என்பதால், இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை வைத்தே, மக்களிடம் ஆட்சியாளர்களின் மீதான நம்பிக்கை வெளிப்படும். இல்லாவிட்டால், சிறுபான்மை இனத்தவருக்கு சொம்பு தூக்கும் அரசாங்கங்கள் என்ற மனப் பதிவுகள் மேலும் மேலும் மக்களிடம் ஆழப் பதிந்துவிடும்.
பாவ மன்னிப்பு அளிப்பதாகக் கூறி, ஒருவரின் ரகசியத்தை அறிந்து கொண்டு, நம்பிக்கை துரோகிகளாக வலம் வரும் பாதிரியார்கள் மீது சட்டத்தின் கரங்கள் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. உண்மையை வெளிக் கொண்டு வந்தே ஆகவேண்டும். மத நம்பிக்கையில் சரணாகதி அடையும் பெண்ணை வேட்டையாடும் மத பிரசாரகர்களுக்கு, மதக் காவலர்களுக்கு பாவமன்னிப்பே கிடையாது.
ஆனால், ஒருவர் செய்த பாவங்களை எல்லாம் தாங்கள் காது கொண்டு கேட்டாலேயே, தேவன் மன்னித்து விடுவார் என்ற மனப் பதிவை மதத்தின் பெயரால் ஆழப் பதிந்துள்ள கிறிஸ்துவக் கோட்பாடுகள், ஒருவரை மேலும் மேலும் பாவம் செய்யத் தூண்டுகின்றன என்பதற்கு இது உதாரணம். பாவத்தின் சம்பளம் மரணம் என்று சுவர்களில் எழுதிப் போட்டு மதப் பிரசாரம் செய்தால் மட்டும் போதாது, அந்தப் பாவத்தின் சம்பளத்தை வழங்கவும் சர்ச்சுகள் தயாராக இருக்க வேண்டும். ஆனால், நடப்பதோ… பாவ மன்னிப்பை இந்தப் பாவிகளுக்கு வழங்க சர்ச் நிர்வாகம் தயாராக இருப்பதையே அவற்றின் செயல்பாடுகள் காட்டுகிறது.
பாவிகளை ரட்சித்து, இந்தப் பாவத்தைச் செய்த பாதிரிகளுக்கு பாவ மன்னிப்பை வழங்க சர்ச்சுகள் முயற்சி செய்வதால், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுக்கு ஆட்படாமல் மதத்தின் பெயரால் தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மோசமான சட்டச் சிக்கல்களை சர்ச்சுகள் உருவாக்குகின்றன என்றுதான் தோன்றுகிறது.