February 14, 2025, 11:22 AM
26.3 C
Chennai

கேள்வி – பதில்: தமிழகத்தில் பாஜக மலர என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் பாஜக மலர என்ன செய்யவேண்டும்?

பாஜக ஆட்சி என்பதன் மூலம் சொல்லவருவது வளமான தமிழகம், வலிமையான பாரதம், இந்துப் பாரம்பரிய மறுமலர்ச்சி, தேச பக்தி இவற்றைத்தான் என்றால் அது தமிழகத்தில் அரசியல் ரீதியாக இன்னும் வலுவாகக் கால் ஊன்றத்தான் வேண்டும்.

தமிழகத்தில் பாஜக தரப்பிலும் இந்துத்துவத் தரப்பிலும் பல நேர்மையான, நல்ல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். இப்போதும் திராவிடக் கட்சிகளையும் காங்கிரஸ் கட்சியையும் பிற உதிரிக் கட்சிகளையும்விட பாஜகவில் இருக்கும் தலைவர்கள் நேர்மையும் திறமையும் மிகுந்தவர்களே. மக்களைக் கவரும் திறன் குறைவாக இருக்கிறதே தவிர மற்றபடி அவர்கள் மேல் வேறு எந்தக் குறையும் கிடையாது. ஆனால், தமிழக அரசியலுக்கு அதுதான் மிகவும் தேவையும்படுகிறது. சுதந்தரம் கிடைத்ததைத் தொடர்ந்து வந்த நான்கு தேர்தல்களில் அது தேவைப்பட்டிருக்கவில்லை. 1967-ல் இருந்து அப்படி ஆக்கிவிட்டிருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் சினிமா கவர்ச்சியே முக்கியமான காரணம். திராவிட இயக்கத்தின் துருவேறிய போர்வாளான கருணாநிதி எம்.ஜி.ஆரிடம் முழுமையாகத் தோற்றுக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரின் பிரபல திரையுலக ஜோடி என்ற ஒரே காரணத்தால் அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவிடமும் அந்த இயக்கம் தொடர்ந்து தோற்றது.  இவையெல்லாம் எம்.ஜி.ஆரின் கரிஸ்மா – கதாநாயக பிம்பமே திராவிட இயக்கத்தின் 1967 வெற்றிக்கும் காரணமாக அமைந்தது என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள்.

திராவிடர் கழக ஈ.வெ.ராவும் திராவிட முன்னேற்றக் கழக அண்ணாத்துரை அன்கோவினரும் 1950களில் போட்ட குழாயடிச் சண்டையானது அவர்களை முற்றாக ஓரங்கட்டித்தான் வைத்திருந்தது. 1965-ல் மத்திய அரசு இந்திக்குக் கொடுத்த முக்கியத்துவம் தமிழக மக்களை திராவிட முன்னேற்றக் கட்சியின் பக்கம் சாயவைத்தது என்றாலும் எம்.ஜி.ஆரே அந்த அணி திரளலுக்கும் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார். அவரிடம் இருந்தது கவர்ச்சிகரமான முகம் மட்டுமே.

தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் இன்னொரு முக்கியமான அம்சம் திராவிட அரசியல். அதாவது, திராவிட அரசியலுக்கு எதிராக எது இருக்கிறதோ அதைத் தமிழக மக்கள் ஆதரிப்பார்கள். இந்துக் கடவுளர் எதிர்ப்பு, பிராமண துவேஷம், வடவர் எதிர்ப்பு என்ற திராவிட அரசியலை முற்றாக எதிர்ப்பவர்களாகவே எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தங்களை முன்னிறுத்தியதனால்தான் (அவர்களுடைய கரிஸ்மாவோடு சேர்ந்து) அவர்களைக் கடைசிவரை மக்கள் ஆதரித்து வந்திருக்கிறார்கள்.

பாஜக வின் அரசியல் கொள்கை திராவிட அரசியலுக்கு எதிரானதுதான். எனவே, மக்கள் மத்தியில் அவர்களுக்கு இயல்பாகவே வரவேற்பு கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், தமிழக பாஜகவுக்கு கரிஸ்மா மிகுந்த தலைவர் இல்லை. பாஜக என்னதான் தனக்கு கொள்கையே பிரதானம். தலைவர்களோ கதாநாயக பிம்பங்களோ தேவையில்லை என்று சொன்னாலும் வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோதி என உருவாகி வந்திருக்கும் தலைவர்கள் ஒருவகையான கரிஸ்மா வளையத்துக்குள் வருபவர்களே. தமிழகத்தில் அப்படியான ஆளுமை மிகுந்த தலைவர் யாரும் பாஜகவில் இல்லை. காங்கிரஸ் கட்சி போலவே பிராந்திய அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர் உருவாவதை பாஜகவும் விரும்புவதில்லை. எனவே, பாஜகவுக்கு திராவிட அரசியலைத் தீவிரமாக எதிர்ப்பதுதான் ஒரே அடையாளமாக இருக்கவேண்டும். ஆனால், காலம் மாறிவிட்டிருக்கும் சூழலில் திராவிட அரசியலானது தமிழகத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருந்து பின்னகர்ந்துவிட்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கட்சி இப்படி வலுவிழந்து போய்விட்டிருப்பதால் யாரை முதல்வராக்க வேண்டும் என்று தமிழக மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டிருக்கிறார்கள். கருணாநிதி மட்டும் தமிழகத்தில் தாமரை மலரக்கூடாது என்று கிறுக்கிக் கிறுக்கித் தன் நடுங்கும் கையால் எழுதிக் காட்டினால் போதும். தாமரை மலர்ந்துவிடும்.

திராவிட அரசியலின் அடுத்தகட்ட சீரழிவான தமிழ்த் தேசியம் இப்போது தமிழகத்தில் பெரும் வீச்சில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. காங்கிரஸ், இடதுசாரி, இஸ்லாமிய-கிறிஸ்தவ அடிப்படைவாதிகள், தலித்களின் நலனுக்கு எதிரான தலித்திய அமைப்புகள் ஆகியவை அனைத்தும் தமது இலக்குகளை ஓரங்கட்டிவிட்டு இந்து – இந்திய விரோத அரசியலை முன்னெடுக்க ஓரணியில் திரண்டிருக்கிறார்கள். யாரை தமிழக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற புரிதலை இவர்கள் தரக்கூடும். ஆனால், பாஜக அந்த நல்லெண்ணத்தை வென்றெடுக்கும் நிலையில் இருக்கிறதா? எம்.ஜி.ஆர்.போல் ஒரு காந்தம் அவர்களிடம் இருக்கிறதா?

இதற்கு முன்னால் தமிழக மக்களிடம் பாஜகவுக்கு ஆதரவு இரண்டே பகுதிகளில் கிடைத்திருக்கின்றன. ஒன்று வெளிப்படையான இஸ்லாமிய அடிப்படைவாதம் கோர முகத்தைக் காட்டிய கோவை மண்டலம். இன்னொன்று கிறிஸ்தவ தந்திர அடிப்படைவாதம் கோர முகத்தைக் காட்டும் கன்யாகுமரி தக்கலை மண்டலம்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவானது காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தியாலும் இந்துத்துவச் சார்பினாலும் கிடைத்தது. ராமர் கோவில் ரதயாத்திரை மூலம் வட மாநிலங்களில் செல்வாக்கு பெற்ற பாஜக தென்னிந்தியாவில் அந்த அளவுக்குக் கால் ஊன்ற முடிந்திருக்கவில்லை. இத்தனைக்கும் இந்து ஆன்மிக, மத, கலாசார அம்சங்களில் வடக்குக்கு இணையாக தெற்கும் வலுவான பாரம்பரியத்தைக் கொண்டதுதான். எனினும் அந்த உணர்வை அரசியல் உணர்வாக மாற்ற முடிந்திருக்கவில்லை.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கும் தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கும் கிடைத்த ஆதரவு என்பது இந்துக்களுக்கு நெருக்கமானவர்கள் என்ற பிம்பத்தினால் கிடைத்ததுதான். கர்நாடகாவில் பாஜக நேரடியாக அந்த இந்து ஆதரவைத் தன் பக்கம் திருப்பிக் கொள்வதில் கணிசமான வெற்றி பெற்றுவிட்டிருக்கிறது.

கேரளாவில் இந்து ஆன்மிக, மத அம்சங்கள் வலுவாக இருந்த போதிலும் பாஜகவால் அரசியல்ரீதியாகக் கால் ஊன்ற முடியவில்லை. இடதுசாரிகள் ஓணம், சபரிமலை என கேரள இந்து அடையாளங்களை எதிர்த்து எதுவும் பெரிதாகப் பேசவோ செய்யவோ முற்படவில்லையென்பதால் கேரள இந்து அலை இடதுசாரிகளை ஆள அனுமதித்துவந்திருக்கிறது. இந்துத்துவர்களின் படுகொலைகள், சபரி மலை ஐதீகங்கள் மீதான சீண்டல்கள் என இடதுசாரிகள் மெள்ள கோர முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கும்போது இந்துத்துவ மறுமலர்ச்சியும் வீறுகொண்டு எழ ஆரம்பித்திருக்கிறது. இது ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல. ஆனால், நடைமுறை அதுவாகவே இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கருணாநிதி அரசியலில் இருந்து ஒருவழியாக விடைபெற்று,  ஜெயலலிதாவும் இறந்துவிட்ட நிலையில் பாஜகவின் இந்து – இந்திய தேசியம் எளிதில் அழகாகக் காலூன்றியிருக்கலாம். ஆனால், அந்த நல்ல வாய்ப்பைத் தமிழ் பிரிவினைவாத சக்திகள் பயன்படுத்திக்கொள்ள மத்திய பாஜக அனுமதித்துவிட்டது. ஒருவேளை எதிரி தீவிரமாக களமாடினால் மக்கள் நம் பக்கம் திரும்புவார்கள் என்ற மெத்தனம் காரணமா தெரியவில்லை. தேர்தல் எதுவும் நடந்திராதநிலையில் (தினகரன் வென்ற இடைத்தேர்தலை வைத்து மக்களின் மனப்போக்கு எதையும் தீர்மானிக்க முடியாது) தமிழக பாஜகவின் இந்த மூன்று ஆண்டுகாலச் செயல்பாடுகள் சரியா தவறா என்று எதுவும் சொல்லமுடியாது.

பொதுவாகவே இந்து ஆன்மிக, மத உணர்வுகள் தமிழகத்தில் மிக மிக அதிகம். அரசாங்க முத்திரையில் கோபுரத்தைக் கொண்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழகமே. கிராமங்கள் நகரங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அம்மன் வழிபாடு, அறுபடைவீடுகள், சிவராத்திரி – பிரதோஷங்கள், தெருவுக்குத் தெரு விநாயகர் கோவிலகள், அனுமன் கோவில்கள், பெருமாள் கோவில்கள், நாட்டார் தெய்வங்கள், குல தெய்வங்கள் என தமிழகம் இந்துத்தன்மையால் நிறைந்து இருக்கும் மாநிலம்.

ஐரோப்பியரோ அமெரிக்கரோ அராபியரோ மரியாதை நிமித்தமாக அல்லது உலகில் இழைத்த கொடுமைகளுக்குப் பிராயச்சித்தமாகத் தென்படும் கோவில்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிடுவது என்று முடிவுசெய்தார் என்றால் தமிழகம் முழுவதும் அவர்கள் கூப்பிய கரங்களுடன் தான் பயணித்தாகவேண்டியிருக்கும். அவர்கள் செய்த கொடுமைகள் அவ்வளவு அதிகமானவை என்பதனால் மட்டுமல்ல… தமிழகத்தில் கோவில்களின் எண்ணிக்கையும் அவ்வளவு அதிகம். தமிழகத்தின் மறுபெயர் கோவில் நகரம் என்று சொல்லத் தகுந்த அளவுக்கு இந்து மண்ணாக இது இருந்துவருகிறது. ஆனால், அரசியல் செல்வாக்காக அல்லது இந்துத்துவத்தை வெளிப்படையாக முன்வைக்கும் கட்சிக்கு ஆதரவாக மாறியிருக்கவில்லை. வெளிப்படையான இந்து விரோதம் என்பது இந்து சக்திகளையே பலப்படுத்தும் என்பது தெரிந்ததால்தான் தமிழ் பிரிவினைவாதக் குழுக்களும் முப்பாட்டன் முருகன், மாயோன் என வேடமணிந்து வருகின்றன.

ராஜராஜ சோழன் போன்றோரின் கடல் கடந்த வாணிபம், தெலுங்கு மன்னர்களின் உள்கட்டமைப்புப் பணிகள், பிரிட்டிஷ் காலகட்ட பெருந்தொழில் முனைவுகள் என தமிழகத்தின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் இந்தியாவின் வேறு எந்தமாநிலத்துக்கும் இல்லாத அளவுக்கு இருந்திருக்கிறது. அதிலும் அரச நிர்வாகம் தனியாகவும் வணிகம் தனியாகவும் எனப் பிரித்திருந்த இந்து சமூகக் கட்டமைப்பு ஆட்சியில் யார் இருந்தாலும் வணிகம் தடையின்றி வெற்றிகரமாக நடக்க வழிவகுத்திருக்கிறது.  திராவிட, நாத்திக சக்திகளுடைய செய் நேர்த்தியின்மையையும் ஊழலையும் மீறி தமிழகம் இன்று ஒப்பீட்டளவில் இந்தியாவில் முன்னணியில் இருக்கிறதென்றால் அதற்கு கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட இந்த வலுவான அடித்தளமே காரணம்.

*

இப்போது தமிழகத்தில் தாமரை மலர வேண்டுமானால் இரண்டு விஷயங்கள் நடந்தாகவேண்டும்.

இந்து அரசியல் உணர்வு அதிகரித்தாகவேண்டும்.

கரிஸ்மா மிகுந்த தலைவர் கிடைத்தாகவேண்டும்.

முதலாவது நடக்க தமிழக வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால் கோவை, நாஞ்சில் பகுதியைப் போல் அந்நிய மத அடிப்படைவாதம் தமிழகத்தில் பெருகினால் இந்து உணர்வு தானாகவே வளரும். ஆனால், இது எதிர்மறையான வளர்ச்சி. இது தேவையே இல்லை. வெள்ளம் வந்து கரை பலப்படவேண்டாம். அது இயல்பாக நேர்மறையாக ஆக்கபூர்வமான செயல்களின் மூலம் அதிகரிக்கவேண்டும்.  தமிழகம் தேடும் பாஜக தலைவர் கரிஸ்மாவும் ஆக்கபூர்வ இந்து ஆன்மிக வளர்ச்சியில் அக்கறையும் கொண்டவராக இருக்கவேண்டும்.

அப்துல்கலாம் அப்படியான ஒருவராக இருந்தார். ஜனாதிபதியாகியிராவிட்டால் அவரை  தமிழகத்தின் முதல்வராக பாஜக முன்னிறுத்தியிருக்கலாம். ஆனால், ஜனாதிபதியாக்கப்பட்டதால்தான் அவருக்குப் பிரபல்யமே கிடைத்தது. அவர் தன்னுடைய வாரிசாக யாரையும் அறிவித்திருக்காத நிலையில் இனி அதுபற்றி யோசிக்க எதுவும் இல்லை. ஆனால், அவரைப்போல் அனைவரையும் அரவணைக்கும் ஆளுமை கொண்ட பிரபலமானவரே தமிழக பாஜகவுக்கு இன்று தேவை.

ரஜினிகாந்த் ஆன்மிகம் என்ற பெயரில் அவருக்குத் தெரிந்ததைச் சற்றும் மனம் தளராமல் பின்பற்றிவருகிறார். இந்து உணர்வும் தேசபக்தியும் மிகுந்தவராகவே இதுவரையிலும் இருந்திருக்கிறார். ஆனால், அவரைப் போன்ற வணிக சாமர்த்தியம் கொண்ட திரை மறைவு பிளாக்மெயில்களுக்கு எளிதில் ஆளாக முடிந்த ஒருவரை நம்பிப் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது. அவரும் பாஜக மீது சுமத்தப்படும் எதிர்மறை விமர்சனங்களை தனது பிரபல்யத்தைப் பயன்படுத்திப் போக்க முன்வரும் துணிச்சல் இல்லாதவராக இருக்கிறார். தனிக் கட்சி தொடங்கி வெற்றி பெறுகிறேன். அதன் பிறகு முடிந்தவரை பாஜகவுக்கு சாதகமாக நடக்கிறேன் என்று சொல்பவர் போலவே செயல்படுகிறார். பாஜக அதை ஒரு தற்காலிக முடிவாக மட்டுமே மிகுந்த தயக்கத்துடன் ஏற்கலாம்.

சமூக விரோதிகள் மீதான ரஜினியின் வெளிப்படையான கண்டனம், எதற்கெடுத்தாலும் போராடுவது தவறு என்ற விமர்சனம் எல்லாம் அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. ஆனால்,  ஈ.வெ.ரா.சிலை உடைப்பை காட்டுமிராண்டித்தனம் என்று கண்டித்தது ஆண்டாள் தாயாரை அவமதித்த விவகாரத்தில் மவுனம் காத்தது, காலா திரைப்படம், இதுவரையிலும் ஊருக்குத் தெரியாமல் உதவி வந்ததாகச் சொல்லப்பட்டவர் இஸ்லாமிய சிறுவனின் நன்னடத்தையை கேமராக்களுக்கு முன்னால் பாராட்டியது, வாடகை விவகாரம் என அவர் செய்யும் செயல்கள் அவருடைய அரசியல் இப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகத்தையும் அச்சத்தையுமே ஏற்படுத்துகின்றன. வேட்டி கட்டிய ஜெயலலிதா நமக்குத் தேவையில்லை.

திரையுலகப் பிரபலம் தான் மக்களிடையே எளிதில் இடம் பிடிக்க முடியும் என்பதால் அதே திரையுலகில் பிரபலமாகவும் இந்து சார்பு உடையவராகவும் இருக்கும் வேறொரு நபரையே தேர்ந்தெடுக்கவேண்டும். அந்தவகையில் இளையராஜா மிகவும் பொருத்தமானவராக இருப்பார். அவர் இதுவரை அரசியல் சார்ந்து தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதில்லை. ரஜினி, கமல் போன்று ரிட்டயர்டு பிரபலங்கள் வெளிப்படுத்திவரும் ஆசைபோல் இளையராஜா வெளிப்படுத்தவில்லை என்பது அரசியலில் ஈடுபடுவதற்கான அவருடைய தகுதியாகவே பார்க்கப்படவேண்டும். கங்கை அமரனை வெகு அழகாக பாஜக தலைமை தமது கட்சியில் சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த ஆப்பரேஷன் பண்ணைப்புரம் முழுமையடைந்தால் நல்லது.

அடுத்ததாக, உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் மூலம் அருமையான வெற்றியைக் குவித்திருக்கிறார்கள். ஜெயேந்திரர் மீதான பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்காவிட்டால் நிச்சயம் அவரால் பாஜகவின் வளர்ச்சிக்கு தேவையான பங்களிப்பைச் செய்திருக்க முடியும். அவர் மீதான அவதூறு வழக்குக்கான காரணங்களில் அதுவும் ஒன்று. நாம் தான் மழை வந்து ஒழுக ஆரம்பித்தபிறகுதான் கூரைகளின் ஓட்டையை அடைக்கப் புறப்படுவோம். நம்  எதிரிகள் அடுத்த பத்து வருடங்களுக்கு மட்டுமல்ல அடுத்த 100 ஆண்டுகளுக்கும் சேர்ந்து சிந்திப்பவர்கள்.

நம்மிடம் இருக்கும் ஆன்மிக நம்பிக்கை நட்சத்திரம் ஜக்கி வாசுதேவ். ஒரு மாபெரும் ஆன்மிக அமைப்பை உருவாக்கித் திறம்பட நிர்வகித்துவரும் அவரால் ஒரு மாநிலத்தை ஆளவும் முடியும். ஏற்கெனவே தனது யோக மையத்தை பிரபலப்படுத்தும் நோக்கிலும் செயல்பாட்டு எல்லையை விரிவுபடுத்தும் நோக்கிலும் திரையுலக, அரசியல் பிரபலங்களுடனான உரையாடலை அவர் தொடங்கியுமிருக்கிறார்.

*

கரிஸ்மா மிகுந்த தலைவர் உதவுவது போலவே வலிமையான கூட்டணியும் வெற்றிக்குப் பெரிதும் உதவும். அந்தவகையில் பார்த்தால்,அர்ஜுன் சம்பத் கட்சி,  பாமக, புரட்சி பாரதம், சிவகாமி ஐ.ஏ.ஸ். தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சி,  புதிய தமிழகம், மீனாட்சி மிஷன் டாக்டர் சேதுராமன் தலைமையிலான கட்சி, மாஃபா பாண்டியராஜன் தலைமையிலான அதிமுக., மீனவர்களிடையே செல்வாக்கு கொண்ட ஒருவரின் கட்சி, ஆர்.எஸ்.எஸின் இஸ்லாமியர் – கிறிஸ்தவர் பிரிவு சார்பாக தமிழகத்தில் சிலர்,புலிகள் மீதான வெளிப்படையான விமர்சனமும் ஈழத் தமிழர் மீதான உண்மையான அக்கறையும் கொண்ட தமிழ் ஆர்வலர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டணியை அமைக்க முயற்சி செய்யவேண்டும். கோவை மண்டலத்திலும் நாஞ்சில் மண்டலத்திலும் பாஜகவுக்கு இருக்கும் செல்வாக்குடன் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கான தெளிவான வியூகம் வகுக்கப்படவேண்டும். தற்போதைய பாஜக இதில் பல விஷயங்களை ஏற்கெனவே செய்துகொண்டுதான் வருகிறது.

பா.ஜ.க.வுக்கு மதவாத முத்திரை குத்தப்பட்டிருப்பது போலவே பாமகவுக்கு ஜாதிய முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் அதை மாற்றும் வலுவான முயற்சிகளை முன்னெடுத்தாகவேண்டும். பாகிஸ்தானுடனான நல்லுறவுக்காக நல்லெண்ணப் பேருந்து பயணம் ஆரம்பித்ததுபோல் சில விஷயங்களை செய்யவேண்டும். திருமலைக் கவுண்டன் பாளையத்தில் டாக்டர் ராமதாஸ்  அகோபிலமட ஜீயர் ஆகியோர் பாப்பம்மாள் மற்றும் நரிக்க்குறவர் என்று சொல்லப்படும் ஜாதியைச் சேர்ந்தவர்கள் (ராமானுஜர் வழியில் வைணவ சம்பிரதாயத்துக்குள் ஐக்கியமாகி) சமைக்கும் உணவை உண்டு தெளிவான செய்தி ஒன்றை உலகுக்கு உணர்த்த வேண்டும்.

முதலமைச்சர் என்ற தனி நபருக்கு பதிலாக ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற குழுவை அமைத்து அதன் வழிகாட்டுதலின் படி ஆட்சி செய்யலாம். , ,

இப்போதைய பாஜக தலைவர்கள் நேர்மையானவர்கள். முதலமைச்சராவதற்கான தகுதி உடையவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மக்கள் மத்தியில் அவர்களுக்குச் செல்வாக்கு இல்லை. இந்த சாபத்தையே வரமாக்கிக்கொள்ளும்வகையில் அனைத்து தரப்பினருடைய பிரதிநிதிகளுக்கும் ஆட்சியில் பங்கு என்ற உண்மையான மக்களாட்சியைக் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். இளையராஜா, ஜக்கி வாசுதேவ் போன்றவர்களை முன்னிலைப்படுத்தித் தேர்தலைச் சந்தித்தாலும் இப்படியான குழுவை வைத்தே ஆட்சியை நடத்தவேண்டும்.

தேச நலனைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில பாஜக தலைமைகள் ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும்.

*

தேர்தல் பிரசாரத்தைப் பொறுத்தவரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டாக வேண்டும். மார்க்கெட் இல்லாத நடிகர்களைத் தேடி ஓடும் பிற கட்சிகளைப் போல் இருக்காமல் பாஜகவின் கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட பிரபலங்களைத் தேடிக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும்.

இந்திய உதவிகளை மனமாரப் போற்றும் ஈழத்து தமிழ் தலைவர்கள் (தமிழக புலி ஆதரவாளர்கள் கொஞ்சம் ஒதுங்கிக்கொண்டால் எங்கள் வாழ்க்கை நலமாக இருக்கும்), ஷியா வகப் வாரியத் தலைவர் (அயோத்தியில் ராமர் கோவில், சரயு நதிக்கரையில் மசூதி), தாலிபன் கொடுமையை உணர்ந்த ஆஃப்கன் தலைவர், ஐ.எஸ்.ஐ.எஸ் கொடுமைகளின் நேரடி சாட்சியான அப்பாவிகள் சிலர் (இனி அது உலகில் எங்கும் நடக்கக்கூடாது என்ற இறைஞ்சலுடன்), இந்தியப் பெருந்தொழில் முனைவுகளை ஆதரிக்கும் சீன வர்த்தக-அரசாங்கத் தலைவர்கள் சிலர், உலக கிறிஸ்தவ வல்லாதிக்கத்தை எதிர்க்கும் அமெரிக்க ஐரோப்பிய கிறிஸ்தவ- நாத்திகப் பிரபலங்கள் என எதை யார் சொன்னால் நன்றோ அதை அவர்களைக் கொண்டு சொல்ல வைக்கவேண்டும். இந்தப் பிரபலங்களின் வருகை ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பெறவும் வழிவகுக்கும். மக்களுக்கு பாஜகவின் கொள்கைகள் நல்ல முறையில் சென்று சேரவும் வழிவகுக்கும்.

பிரிவினை கோஷங்கள், போலி சூழலியல்-விவசாய அக்கறைகள், உலக வல்லாதிக்க மதவாதம், ஊழல், மலின அரசியல், இந்து-இந்திய விரோதம் பெருந்தொழில் விரோதம் என ஏராளமான கழிவுகள் கலந்த சேறாகவே தமிழகத் தடாகம் தற்போது இருக்கிறது. இந்தக் கழிவுகளை எல்லாம் உணவாக, உரமாக மாற்றிக்கொண்டு அழகிய மலரை மலரச் செய்ய தாமரையால் முடியும். தாமரையால் மட்டுமே அது முடியும்.

  • கட்டுரையாளர்: பி.ஆர். மகாதேவன் (பத்திரிகையாளர் / எழுத்தாளர்)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories