சமாதிக்கு எதிரான பொது நலவழக்கு… நீதிமன்றம் ஏன் அபராதம் விதிக்கவில்லை!?

மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்று கோரி ஒரு போராட்டம். சட்டப் போராட்டம். நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இரவு இரவாக எழுப்பி, நீதிபதிகள் அதை அவசர வழக்காக கருதி.. என அனைத்து விதமான நாடகங்களும் ஒரே நாளில் அரங்கேறின.

இதை நாடகம் என்று சொல்வதற்கு முக்கியக் காரணம், ஜெயலலிதா சமாதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் தங்கள் மனுவை ஒரே நேரத்தில் சொல்லி வைத்தபடி திரும்பப் பெற்றதும், டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி செய்யப் பட்டதும்தான்!

இதன் பின்னணியில் பல்வேறு கதைகள் கூறப்பட்டாலும், அரசியல் காரணங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, நீதிமன்றத்தின் நடவடிக்கை குறித்து யோசிக்க வேண்டியுள்ளது.

பொதுவாக, நியாயமான காரணங்களுக்காக ஒரு சமானிய மனிதன் பொதுநல வழக்கு போட்டால், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகக் கூறி லட்சங்களில் அபராதம் விதிக்கும் நீதியரசர்கள், ஒரே நேரத்தில் நான்கு பேரையும் ஒரு வழக்கை திரும்பப் பெற எப்படி… ஏன் சம்மதித்தனர்?

பா.ம.க.,வைச் சேர்ந்த பாலு, துரைசாமி, ராமசாமிக்கு அபராதம் விதிக்காதது ஏன்? குறைந்த பட்சம் ஒரு கண்டனத்தைக் கூட பதிவு செய்யாதது ஏன்? இனிவரும் அனைத்து பொதுநல வழக்குகளிலும் இதே நிலையைத் தான் நீதிமன்றம் பின்பற்றுமா?

கருணாநிதியை மெரினாவில் புதைப்பதற்கு தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்று இவர்கள் சொல்வதை எதன் அடிப்படையில் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது? மெரினா என்ன இவர்களின் வீட்டுச் சொத்தா அல்லது இவர்களின் மூதாதையர் பட்டா போட்டு எழுதிக் கொடுத்திருக்கிறார்களா?

இந்த மனுவை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, இத்தனை நாட்கள் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது, இத்தனை நாட்கள் நீதிமன்ற நேரத்தை வீணடித்து, தேவையற்ற வழக்குச் செலவுகளை அரசுக்கும் இழுத்துவிட்டு, இப்படி எத்தனையோ பின்னடைவுகள் இருந்தபோதும், ஒட்டுமொத்தமாக நாங்கள் ஏதோ வழக்கு போட்டோம்.. இப்போது திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று வேறு ஏதாவது ஒரு பொதுநலன் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் வேறு யாரேனும் இப்படி சொல்லிச் செயல்பட்டிருப்பார்களேயானால், நீதிமன்றம் அதே விதமான அணுகுமுறையைக் கையாளுமா?

எதை நோக்கிய பயணத்தில் நீதித்துறை செல்கிறது?  என்பதுதான் பொதுமக்களிடையே இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் தொக்கு நிற்கும் கேள்வி!