திமுக என்பது திருக்குவளை மு. கருணாநிதி என்றாகி 50 வருடங்கள் ஆகி விட்டன. ஒற்றைத்தூணாக இருந்து திமுகவை தாங்கினார் கருணாநிதி. அவருடைய அயராத உழைப்பும், பேச்சாற்றாலும், எழுத்தாற்றலும், அரசியல் யுக்திகளும் அடுத்தகட்ட தலைவர்களுக்கு இல்லாததானால் எவரும் தலைமைக்கு சவால் விடவில்லை. கடைசிக்காலத்தில் கருணாநிதி அரசியல்களத்தில் துடிப்புடன் இருந்திருந்தால் இன்றைய தரகர் ஆட்சி என்றோ அகன்றிருக்கும். எவர் தலைமையில் இயங்கினாலும் சரி, திமுக இனி புதிய பரிமாணங்களைப் பெற வேண்டியது அவசியம்.
ஆளும்கட்சிக்கு அடுத்தத் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதைத் தேர்ந்தெடுத்த அந்தந்த தொகுதி மக்களே வெறுத்துப்போய் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி காணாமல் போய் 50 வருடங்களுக்கு மேலாகி விட்டது. பாஜக களத்திலேயே இல்லை. இந்த நிலையில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசம். கட்சி முழுமையாக, வலிமையாக இருந்தால்.
இன்றைய நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் 1971ல் இருந்த வலியுமையுடன் நின்று ஏற்கனவே உள்ள வாக்குவங்கியுடன் கூடுதல் வாக்காளர்களைப் பெற முயல வேண்டும். அந்த வாக்காளர்கள் அஇஅதிமுக வாக்கு வங்கியில் இருந்தும், இளைய தலைமுறையில் இருந்தும் வர வேண்டியவர்கள். அவர்களிடம் கருணாநிதி காலத்திய மொழி, இன, வீர வசனம் எடுபடாது. இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு பொருளாதார வளம் பற்றியது. முதிய தலைறையின் சந்தேகம் திமுக மத விஷயங்களில் தலையிடுமோ என்பது. இந்த இரண்டு அம்சங்களையும் புரிந்து கொண்டு இனி திமுக செயல்பட்டாக வேண்டும். எனவே மதம், ஆலய வழிபாடு, சடங்குகள் ஆகியவற்றில் கட்சி தலையிடாது. அவை தனி மனிதர்கள், சமுதாயம் சம்பந்தப்பட்டது என்பதால் ஆட்சியும் அதில் தலையிடாது என்று தி.மு.க. பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
இனி திமுகவின் வளர்ச்சிக்கு கட்சியைத் தொடர்ந்து பல துறைகளில் உள்ளவர்களின் ஆதரவு தேவை. அதைப் பெறுவதற்கு மாநிலங்களவைக்கு தொழில், வர்த்தக, சமூக சேவைப் பிரிவுகளில் உள்ள பிரமுகர்களைத் தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் பிற மாநில முதல்வருடனும், மத்திய அரசாங்கத்துடனும் நல்லுறவு கொண்டு மாநிலம், கூடுதலாகச் சில வசதிகளைப் பெற உதவுவார்கள். அது கட்சிக்கும் நல்லதுதானே. கட்சிக்காரர்களை மக்கள் பிரதிநிதிகளாக்க சட்டமன்றமும், மக்களவையும் போதும். அடுத்து திமுக கவனிக்க வேண்டியது, பொருளாதார வளர்ச்சி. நம் மாநிலத்திலோ, பிற மாநிலங்களிலோ உள்ள பொருளாதார நிபுணர்கள் உதவியுடன் வளர்ச்சித் திட்டங்களை தீட்டி அவற்றை ஒழுங்காக நடைமுறைப்படுத்த வேண்டும். வரிப்பணம் இலவசங்களில் பாழாகாமல் மறுமுதலீடாக வேண்டும். லஞ்சம், கொஞ்சமும் இராது என்ற அறிவிப்பை துணிவுடன் செய்ய வேண்டும். வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. அது நடைமுறையாக வேண்டும். கட்சிக்காரர்களை அரசாங்க அலுவலங்களிலோ, அமைச்சர்கள் வீடுகளிலோ அனுமதிக்கக்கூடாது. அவர்கள் கட்சி அலுவலகத்துடன் நிறுத்தப்பட வேண்டும். எம்எல்ஏக்கள் தரகு வேலை பார்க்கக்கூடாது.
ஒளிவுமறைவற்ற லஞ்சம் இல்லாத, ஊழல் இல்லாத ஆட்சிக்கான ஒரே வழி முதல்வர் அலுவலக வாயிலும், அமைச்சர்கள், உயர் அலுவலர்களும் வாயிலும் கம்ப்யூட்டர் மானிட்டர் அல்லது தகவல் பலகை வைக்கப்பட வேண்டும். அவற்றில் தினசரி யார், யார் சந்திக்க வருகிறார்கள் என்ற குறிப்பு வைக்கப்பட வேண்டும். அதிகாரிகள் அலுவலக வாயில்களில் எந்தக் கோப்புகள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு சடங்கு. இந்த யோசனை உருப்படியானது. இதனால் ஒளிவுமறைவில்லாத நிர்வாகம் உறுதிப்படும்..
திமுகவின் புதிய தலைமை, கட்சியின் மூத்த பிரமுகர்களோடு ஆலோசித்து கட்சியின் நோக்கங்கள் இவை என்று அறிக்கை வெளியிட்டால், அதன்படி நடந்து கொண்டால் தேர்தலில் வெற்றி நிச்சயம். முறையாக ஆட்சி செய்தால் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்படலாம். அடுத்த சில வருடங்களில் ஒரு திமுக பிரமுகர் பிரதமராகலாம். ஆனால் இதெல்லாம் திமுக தன்னை எப்படி சுத்தப்படுத்திக் கொள்கிறது என்பதைப் பொறுத்தது. கட்சி அதற்கு தயாரா?
– ஆர்.நடராஜன்
நன்றி: துக்ளக்