தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாகத் திகழும் திமுக.,வில் அதிகாரத்தைக் கைப்பற்ற இப்போது செயலும் புயலும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்! திமுக.,வின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின், தன் தந்தையார் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி இருந்த போதே, தனக்கான இடத்தை மிக அழுத்தமாக பிடித்துக் கொண்டார். கட்சித் தலைவரால் முன்னிறுத்தப் பட்ட அடுத்த தலைவராக கட்சியின் மூத்த நிர்வாகிகள், தலைவர்களிடம் பெயரெடுத்தவர் ஸ்டாலின்!
ஒரு காலத்தில் தென் தமிழகத்தின் அதிகார மையமாகத் திகழ்ந்தவர் மு.க.அழகிரி. அவர் கைகாட்டிய நபர்களே கட்சியில் பதவிகளுக்கு வந்தார்கள். அமைச்சர்களும் ஆனார்கள். ஆனால் அழகிரியின் அதிரடி நடவடிக்கைகளால் அவரை ஓரங்கட்டிய கருணாநிதி, அழகிரி ஆதரவாளர்களை ஒதுக்க ஆரம்பித்தார். அதனால் தீவிர அரசியலில் இருந்து அழகிரி ஆதரவாளர்கள் ஒதுங்கினர். தொடர்ந்து அழகியும் கட்சியில் இருந்து கழற்றிவிடப்பட்டு, என் மகனே இல்லை என்று கருணாநிதி சொல்லும் அளவுக்கு சூழ்நிலை மாறிப் போனது.
இப்போது கருணாநிதி உயிருடன் இல்லை. ஆனால் அழகிரியால் ஏற்பட்ட கொந்தளிப்பு மட்டும் உயிருடன் உள்ளது. இப்போது ஆகஸ்ட் 28-ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.
அதே நேரம், செப்டம்பர் 5ஆம் தேதி, கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதிப் பேரணியை நடத்தப் போவதாக மு.க. அழகிரி அறிவித்துள்ளார். இது இன்னொரு மதுரை மாநாடுகளைப் போலவும் இருக்கலாம். அல்லது கலைஞர் திமுக.,வின் உதயமாகவும் இருக்கலாம். ஆனால், திமுக.,வைக் கைப்பற்றுவதே லட்சியம் என்று அழகிரி ஆதரவாளர்கள் கூறுவதால், கலைஞர் திமுக., உதயம் பின்னுக்குத் தள்ளப் பட்டிருக்கிறது.
பேரணி குறித்து மு.க.அழகிரி அளித்த பேட்டியில், “சென்னையில் செப்டம்பர் 5-ம் தேதி நடத்தும் அமைதிப் பேரணியில் கட்சித் தொண்டர்கள், யார் பக்கம் உள்ளார்கள் என்பதை நிரூபிப்பேன்” என்று கூறினார். இப்படி ஒருபுறம் அழகிரி அரசியல் நகர்வுகளை மேற்கொண்டாலும் கட்சியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டார் மு.க.ஸ்டாலின்.
சென்னை அமைதிப் பேரணிக்கு தனது ஆதரவாளர்களைத் திரட்டும் வேலைகளில் அழகிரி இறங்கியுள்ளார். அதே நேரம், இந்தப் பேரணியில் கலந்து கொள்பவர்களை கட்டம் கட்டும் வேலையில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர்.
`நீயா.. நானா..?’ என்று செயலும் புயலுமாக இருவரும் களம் இறங்கியிருக்கும் சூழலை, ஆளும் அதிமுக., உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான், தன் பங்குக்கு ஒரு திரியைப் பற்ற வைத்திருக்கிறார், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
முகவரி இல்லாமல் இருக்கும் அழகிரி முதலில் முகவரியை தேடிக் கொள்ளட்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்திருப்பது, அழகிரியைத் தூண்டும் விதமாகத்தான்!
அழகிரி முகவரியை தேடிக் கொண்டு திருப்பரங்குன்றம் தேர்தலை சந்திக்கட்டும் என்று தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் ஆர்.பி. உதயகுமார்.
ஆக, அழகிரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வியூகத்தை உடைத்தெறிந்து அவர் வெளிவருவாரா என்பதை இந்த இரு தேதிகளின் நிகழ்வுகளும் தமிழகத்துக்குச் சொல்லும்!