செப்டம்பர் 11 – மகாகவி பாரதியார் நினைவு தினம். பாரதியின் ‘பாஞ்சாலி சபதத்தை’ துக்ளக் சோ.ராமசாமி அவர்கள் தன் உணர்ச்சிகரமான குரலில் பதிவு செய்திருப்பதை அவரது அலுவலகத்தில், அவர் முன்னிலையில் கேட்டிருக்கிறேன். அவர் ஒரு பாரதி பக்தர். காலவரிசையில் பாரதி படைப்புகளை சீனி விஸ்வநாதன் வெளியிட்டபோது முதல் தொகுதியை வரவேற்றுப் பாராட்டி எழுதினார் சோ. பதிப்பகத்தின் அரைபக்க விளம்பரத்துக்கும் அவர் கட்டணம் வாங்கவில்லை என்று நினைக்கிறேன். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பதிப்பகப் பணியை சீனி.விஸ்வநாதன் தனி ஒருவராகச் செய்தார் என்பது பாராட்டுக்குரியது.
முதல் தொகுதியை 800 பக்கங்களாக அவர் திட்டமிட்டபோது எந்த நண்பர், தேவையான காகிதத்தை காகித ஆலையில் இருந்து நன்கொடையாகப் பெற்றுத் தந்தாரோ, அவரே புத்தகம் வெளிவந்ததும் இந்து ஆங்கிலப் பத்திரிகையில் புத்தகத்தைப் பாராட்டி கட்டுரையும் எழுதினார். ஒரு வள்ளல் அச்சகச் செலவை ஏற்றார். அதன்பிறகு 13 தொகுதிகளுக்குமான மொத்தச் செலவையும் பாரதி பக்தரான அந்த வள்ளலே ஏற்றார். தம் உழைப்புக்கான வரவையும், உயர்வையும்
சீனி.விஸ்வநாதன் பெற்றார். பின்னர் எல்லாத் தொகுதிகளையும் ஒரு பிரபல பதிப்பகத்துக்கு நல்ல விலைக்கு விற்று விட்டார். வறுமையில் வாடிய பாரதி தன் பாடல்களைப் பதிப்பித்தவர்களை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறார், சீனி.விஸ்வநாதன் உள்பட. ஆனால், இதே காலவரிசைப் பதிப்பாளர் தன் புத்தகத்தில் இருந்து சில வரிகளை எடுத்தாண்டதற்காக இன்று பிற பதிப்பகங்கள் மீது வழக்கு தொடருவேன் என்று மிரட்டுகிறார். தங்கள் புத்தகத்தில் சீனி. விஸ்வநாதனை மேற்கோள் காட்டியிருப்பதாகவும் அவரைப் புறக்கணிக்கவில்லை என்றும் ஒரு பிரபல பதிப்பாளர் சொல்கிறார். சீனி.விஸ்வநாதன் எந்த மூலத்திலிருந்து எடுத்தாரோ அதே மூலத்திலிருந்து பிற தகவல்களையும் கட்டுரைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள் பிற பதிப்பாளர்கள்.
தன் தொகுப்பில் பாரதியாரின் தம்பி சி. விஸ்வநாதன் தந்த தகவல்களையும், படைப்புகளையும் சேர்த்துக் கொண்டதனால், தானே பாரதியாரின் எல்லாப் படைப்புகளுக்கும் ஒட்டுமொத்த சொந்தக்காரர் என்று சீனி விஸ்வநாதன் உரிமை கொண்டாடுவது முன்னோடி பதிப்பாளர்களான சக்தி. வை. கோவிந்தன், எஸ்.ஆர்.சுப்ரமணிய பிள்ளை போன்றவர்களை அவமதிப்பதாகும் என்று அவரால் சீண்டப்பட்ட பதிப்பாளர்கள் சொல்கிறார்கள். சுதேசமித்ரன், இந்தியா மற்றும் பிற இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளை நகல் எடுத்துப் பதிப்பித்த ஒருவர் அவை தமக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியாது. அதே மூலத்தில் இருந்து வேறு சிலர் தகவல்கள் திரட்டி எழுதுவதையும் இவர் சட்டப்படியோ, நியாயப்படியோ தடுக்க முடியாது. இருந்தாலும் மூத்த பதிப்பாளர், விருதுகள் பெற்றவர் என்ற காரணத்தினால் தம் பத்திரிகைத் தொடர்புகள் மூலம் பிற பதிப்பாளர்களை இவர் சாடுவது சங்கடமாக இருக்கிறது. முதுமை முதிர்ச்சி அல்ல (We grow older, never wiser) என்பது வாழ்க்கையின் சோகம்.
ஊர் ஊராக அலைந்து திரிந்து சங்கப் பாடல்களைத் திரட்டிய தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் நினைத்திருந்தால் சங்கப்பாடல் பதிப்புகள் ஒவ்வொன்றிலும் தன் பெயர் இடம்பெற வேண்டும் என்று அடம்பிடித்திருக்கலாமே. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. தாத்தாவின் பெருந்தன்மை பேரன்களுக்கு வருவதில்லை. காப்பிரைட் பெற்ற புத்தகத்தில் இருந்து சில வரிகளை மேற்கோள் காட்டுவதற்கும் ஆராய்ச்சிக்காகச் சில பத்திகளை எடுத்தாள்வதற்கும் மூல நூலாசிரியரின் பெயரைக் குறிப்பிட்டால் போதும். அவரது முன் அனுமதி தேவையில்லை என்பது நடைமுறை.
ஒரு பதிப்பாளர் பாரதியை நேசிப்பது உண்மையென்றால் அந்தப் படைப்புகள் எல்லோரிடமும் சேர வேண்டும் என்பதில்தான் அவர் கவனம் இருக்க வேண்டும். Ôநான், நான்Õ என்று சொல்லித் தன்னை முன்னிறுத்துவது பாரதியைப் பின்னுக்குத் தள்ளுவதாகும்..
இலக்கியத்தைப் படிப்பதன் நோக்கம் வாழ்க்கையில் முன்னேற உதவும் பாடங்களைப் பெறுவதே. இன்றைய சமுதாயத்துக்கு நாம் வழங்க வேண்டியது பாரதியாரின் படைப்புகளில் உள்ள வீரம், தன்மானம், மொழி உணர்வு, தேசப்பற்று, தெய்வபக்தி போன்ற அம்சங்களே, பதிப்புச் சர்ச்சை அல்ல.
கட்டுரை : ஆர். நடராஜன்