டெல்லி, மதக் கலவரத்தின் உதாரணமாக அல்ல… கேந்திரமாகவே மாறியது. நகரத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலிருந்த வெல்லிங்டன் விமான நிலையத்தில் கொடூரமாகச் சித்திரவதைச் செய்து கொலைகள் நிகழ்ந்தன.
மவுண்ட்பேட்டனின் மாளிகையின் பின்புறம் அமைந்திருந்த அரசினர் இல்லத்தில் சுற்றுச் சுவர்களுக்கு உள்ளேயே ,கடும் கோபத்திலிருந்த சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்களால்,முஸ்லீம் வேலைக்காரர்கள் தாக்கப்பட்டனர்.
மவுண்ட்பேட்டன் நடுங்கிப் போனார். ‘’ டெல்லியில் வெளியே வந்தால் நமக்கும் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் நம்மையும் கொன்று விடுவார்கள்’’ என தன் சகா ஒருவரிடம் மவுண்ட்பேட்டன் அச்சத்துடன் தெரிவித்தார்.
தன்னைச் சந்திக்க வந்த சிலரிடம் காந்தியும் கூட, மவுண்ட்பேட்டனின் அச்சத்தை ஆமோதித்தார்.
‘’ டெல்லி வீழ்ந்தால் இந்தியாவும் விழுந்து விடும், அத்துடன் உலக அமைதிக்கான கடைசி நம்பிக்கையும் விழுந்து விடும் ‘’ என்றார் காந்தி.
வன்முறைக்கு எதிரான தீர்வு எட்டப்பட வேண்டிய இடம் டெல்லிதான் என மவுண்ட்பேட்டனும்,காந்தியும் நம்பினர்.
இந்திய ராணுவமும், விமானப் படையும் காஷ்மீர் யுத்தத்தில் முழுவதுமாக ஈடுபட்டிருந்ததால் கலவரங்களை ஒடுக்க பலப் பிரயோகம் செய்வது மவுண்ட்பேட்ட்டனுக்கு சாத்தியமில்லாது போயிற்று.
கலவரங்களை முடிவுக்கு கொண்டு வர காந்தியும்,நேருவும் வேறு ஏதாவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென மவுண்ட்பேட்டன் வற்புறுத்தினார்.
அந்தக் காலத்தில், டெல்லியில் இருந்த பிரபல பத்திரிகையாளர் ஜெ.என்.சஹ்னியின் கூற்றுப்படி ..’’ முஸ்லீம்களின் பாதுகாப்பை உறுதி செய்தால்தான் அவர்கள் பாரதத்தில் தங்க முடியும்; பரஸ்பர நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஹிந்துக்களும் பாகிஸ்தானில் பாதுகாப்பாக தங்குவதற்கு பாகிஸ்தானும் முயலும். ஆகவே காந்தியும் நேருவும் ஏதாவது வித்தியாசமாகச் செய்தே ஆக வேண்டுமென மவுண்ட்பேட்டன் வற்புறுத்தினார் “.
பாரதத்தின் அன்றைய மனோநிலையை முழுவதுமாக மவுண்ட்பேட்டன் கிரகித்திருந்தார். கிழக்கு வங்கத்தில், நவகாளி கலவரங்களின் போது, காந்தி கலவரங்களை முடிவிற்கு கொண்டு வர முயன்றது போல இப்போதும் முயல வேண்டும் என வற்புறுத்தினார்.
காந்தியும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
(தொடரும்…)
எழுத்து: யா.சு.கண்ணன்