காந்தி கொலையும் பின்னணியும்(பகுதி 18): அந்த 55 கோடி ரூபாய்…!

’’ பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயை கொடுத்தே ஆக வேண்டும் ‘’ காந்தி உண்ணாவிரதம் மேற்கொள்ள இதுவும் ஒரு காரணம்!

காஷ்மீர் போர் ஒரு மாதத்திற்கு மேலாக நடந்துக் கொண்டிருந்த நிலையில்.. மவுண்ட்பேட்டன் ஜின்னாவை தொடர்பு கொண்டு பேசினார்.

‘’ நீங்கள் என்னதான் காஷ்மீரில் நடப்பதற்கும் உங்களுக்கும் தொடர்பு இல்லை என்றுக் கூறினாலும்,அங்கு பழங்குடியினர் என்ற பெயரில் தாக்குதல் நடத்துவது உங்கள் ஏற்பாடுதான் என்று வெளிப்படையாகவே தெரிகிறது.

தாக்குதலை முன் நின்று நடத்தும் அந்த மர்மமான தலைவன் ‘ஜெபல் டாரிக்‘ உங்கள் முன்னணி தளபதி அக்பர் கான் தான் என்பதும் இந்தியாவிற்கு தெரியும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் தன் நிலையை பலப்படுத்திக் கொண்டு விட்டது. ஆகவே உங்கள் ‘ பழங்குடியினரால் ‘ காஷ்மீரை கைப்பற்ற இயலாது ’’ என ஜின்னாவிடம் தெளிவு படுத்தினார் மவுண்ட்பேட்டன்.

தாக்குதல் நடத்துவது தாங்கள்தான் என்று மவுண்ட்பேட்டனிடம் ஒப்புக் கொண்ட ஜின்னா, சமரசத்திற்கு தான் தயாராக இருப்பதாகவும், இரு நாட்டின் படைகளும் காஷ்மீரை விட்டு வெளியேற ஆவன செய்யும்படியும் கூறினார்.

‘’உங்களுடைய ஒரு வாய் மொழி உத்தரவால், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற செய்ய முடியுமென நான் நம்பவில்லை ‘’ என்றார் மவுண்ட்பேட்டன்.

‘அதைப் பற்றி உங்களுக்கென்ன கவலை அதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார் ஜின்னா.

‘இந்திய ராணுவம் அங்கிருந்து வெளியேறுவதை நீங்கள் உறுதி செயதால், பாகிஸ்தான் ராணுவத்தை நான் திரும்பப் பெறுகிறேன்’ என்றார் ஜின்னா.

பாரதம் எக்கேடு கெட்டால் என்ன என்பதுதான் மவுண்ட்பேட்டன் மனோ நிலை. எப்படியாவது பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு பாரதத்தை விட்டு வெளியேறினால் போதுமென்பதாக எண்ணினார். ஆனால் இந்த ஏற்பாட்டிற்கு அன்றைய துணை பிரதமர் வல்லபாய் படேல் ஒப்புக் கொள்ளவில்லை.

நவம்பர் 28,1947 ஆம் வருடம், பாகிஸ்தானின் பிரதிநிதியிடம் காஷ்மீர் பிரச்னை முடிவிற்கு வரும் வரை அவர்களுக்கு தருவதாக ஒப்புக் கொண்ட 55 கோடி ரூபாயை கொடுக்க முடியாது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி விட்டார்.

அன்றைய பிரதமர் நேருவும் அரை மனதுடன் படேல் கூறியதை ஆமோதித்தார்.  படேலின் இந்த நிலைப்பாட்டை எந்த சாதாரண இந்தியனும் புரிந்துக் கொள்வான், ஒப்புக் கொள்வான்.

உங்களுடன் போர் புரிந்துக் கொண்டிருக்கும் நாட்டிற்கு இப்படி ஒரு பெரும் தொகையை எப்படி கொடுக்க முடியும் ? ஆனால் மவுண்ட்பேட்டன், படேலின் வாதத்தை ஏற்கவில்லை.

தன் உதவியாளர் கேம்பல் ஜான்சனிடம் மவுண்ட்பேட்டன் கூறினார் ; ‘’ படேலின் முடிவு அரசியல் சாதுர்யமற்றது, முட்டாள்தனமானது ‘’

இதே விஷயத்தை காந்தியிடமும் கூறினார் மவுண்ட்பேட்டன். மவுண்ட்பேட்டன் கூறியதை காந்தி ஆமோதித்தார்.

‘’ அதெப்படி கொடுப்பதாக ஒப்புக் கொண்டு விட்ட பணத்தை கொடுக்க மாட்டேன் என்று சொல்வது. இது தர்மப்படி தவறான ஒன்று. ஒரு பாகப் பிரிவினையின் போது அண்ணன் தம்பிக்கு கொடுப்பதாகச் சொன்னதை பேச்சு மாறி கொடுக்க மாட்டேன் என்று சொல்வது போல அல்லவா இது இருக்கிறது; இது போன்றதொரு கீழ் நிலைக்கு தன்னை ஒரு அரசாங்கம் இறக்கிக் கொள்ளலாமா ?

எவ்வளவோ பிரச்சனைகளுக்கிடையே நாடு சுதந்திரம் அடைந்து இருக்கிறது, இப்போது இத்தகைய கீழத்தரமான சூழ்ச்சியைச் செய்யலாமா ? ‘’ என்றார் காந்தி.

நேருவிடமும், படேலிடமும் இது குறித்து தான் பேசுவதாக காந்தி உறுதி அளித்தார்.

55 கோடி ரூபாயை கொடுக்காது நிறுத்தி வைப்பது தொடர்பாக மவுண்ட்பேட்டனிடம் தான் தான் கருத்து கேட்டதாக, நேரு மற்றும் படேலிடமும் கூறுவதாகவும் காந்தி தெரிவித்தார்.

’’ பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயை கொடுத்தே ஆக வேண்டும் ‘’ காந்தி உண்ணாவிரதம் மேற்கொள்ள இதுவும் ஒரு காரணம்!

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...