நாதுராம் கோட்ஸேக்கு பெரும் வேட்கையுடன் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தது.
ஆனால் அவருக்கு ஈர்ப்பு இருக்கும் விஷயங்கள் தொடர்பான புத்தகங்கள் மட்டுமே படிப்பார்.
வேதங்கள்,புராணங்கள்,சரித்திரம் தொடர்பான புத்தகங்களே அவரை மிகவும் ஈர்த்தவை.அதுவும் மராத்தி மொழியில் இருந்த புத்தகங்களை மட்டுமே படிப்பார்.
ஆனால் பள்ளி சம்பந்தமான விஷயங்களை புறக்கணித்தார்.ஆங்கிலம் அவருக்கு மிகவும் கடினமான மொழியாக இருந்தது.விளைவு மெட்ரிக் பரிட்சையில் தேறத் தவறினார்.
அந்தக் காலத்தில்,அரசு பணிகளில் அடிப்படை நிலையிலான அரசு குமாஸ்தா பணிகளில் சேர்வது என்றாலும் கூட அடிப்படைக் கல்வித் தகுதி மெட்ரிக் என்றிருந்தது.
நாதுராமின் தந்தை பணியிலிருந்து ஓய்வுப் பெறும் வயதை எட்டிக் கொண்டிருந்ததால்,மகன் நாதுராம் தான் பணியாற்றிக் கொண்டிருந்த தபால் துறையிலேயே வேலைக்கு சேர வேண்டும் என எண்ணினார்.
ஆகவே நாதுராம் மறுபடியும் மெட்ரிக் பரிட்சை எழுத வேண்டுமென விரும்பினார்.
ஆனால் நாதுராம் கோட்ஸேயின் சிந்தனையோ வேறு விதமாக இருந்தது.
ஆங்கில அரசுக்கு எதிரான,காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் நாதுராமை வெகுவாக கவர்ந்தது.
அதில் பங்கேற்று தேச விடுதலைக்காக போராட வேண்டுமென எண்ணினார்.அதற்கு அரசு வேலை ஒரு தடையாக இருக்குமென கருதினார்.
அவருக்கு பள்ளிப்படிப்பு எட்டிக்காயாய் கசந்தது.ஆகவே சொந்தமாக ஒரு வேலைத் தேடிக் கொள்ள விரும்பினார்.
அதனால் பூனாவை விட்டு வெளியேறி,தந்தை அப்போது வசித்து வந்த கர்ஜத் எனும் ஊருக்கே வந்துச் சேர்ந்தார்.
அங்கு ஓரிரு ஆண்டுகளுக்கு மரத்தச்சுப் பணி கற்றுக் கொண்டார்.ஆனால் அதில் ஓரளவிற்கு திறமைப் பெறும் முன்னரே தந்தைக்கு மறுபடியும் மாற்றலாகியது.குடும்பம் வேறு ஊருக்குச் செல்ல வேண்டியதானது.
அது 1929 ஆம் ஆண்டு,நாதுராமிற்கு 19 வயது.
இந்த முறை அவர்களின் புது இருப்பிடம் ரத்தினகிரி.
மேற்குக் கரையிலிருந்த,ஒரு மந்தமான,முக்கியத்துவம் ஏதுமில்லாத ஊர்.
அந்த ஊரின் சரித்திர முக்கியத்துவம் என்று ஏதாவது கூற வேண்டுமானால் ஒன்றைக்கூறலாம்.
பர்மாவின் கடைசி அரசரான திபாவ் ( THIBAW ) ஆங்கிலேயரால் வீட்டுச் சிறையில் அங்குதான் வைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் திபாவ் காலமாகி 13 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில்,மறுபடியும் பழைய நிலையை அடைந்தது ரத்தினகிரி.
அரசு ஊழியர்கள், ஓய்வுப் பெறும் காலத்தில் மாற்றலாகும் ஊர் எனும் பெருமையை மீண்டும் பெற்றது.
ஆனால் நாதுராமிற்கு அங்குச் செல்வது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
ஆங்கிலேய அரசால் ஐம்பது வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு ,1911 ஆம் வருடம் ஜூலை மாதம் 4ந்தேதி முதல் 1921 ஆம் ஆண்டு வரை அந்தமான் சிறையிலே சொல்லொணா சித்திரவதைகளையும்,துயரங்களையும் அனுபவித்த வீர சாவர்க்கர்,
அங்கிருந்து விடுதலைச் செய்யப்பட்டு,ஐம்பது வருடங்களில் மீதமுள்ள காலத்தை ரத்தினகிரி மாவட்டத்திற்குள் கழித்து வர வேண்டுமென உத்தரவிடப்பட்டு வந்து சேர்ந்த இடம்தான் ரத்தினகிரி.
சாவர்க்கர் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததுதான் நாதுராமின் மகிச்சிக்குக் காரணம்.
ரத்தினகிரியில்,சாவர்க்கர் வசிப்பதற்கு ,ஆங்கிலேய அரசு ஒரு பங்களாவை அளித்திருந்தது.மாவட்டத்திற்குள் அவர் எங்கு வேண்டுமானால் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அவர் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது,விருந்தினர்களை வேண்டுமானால் சந்தித்து பேசலாம் என அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ரத்தினகிரிக்கு வந்த மூன்று நாட்களிலேயே சாவர்க்கரை சந்திக்கச் சென்றார் நாதுராம்.
அவர் வாழ்க்கை அதற்குரிய திசையைப் பெறத் துவங்கியது.
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்