’ ஸ்காட்லந்து யார்ட் ‘ போலீசாரின் கழுகுப் பார்வை,சாவர்க்கரை தொடர்ந்து கொண்டிருந்த போது, பாரதத்தில் அகமதாபாத்திற்கு, நவம்பர் 14, 1909 அன்று வருகை தந்த வைஸ்ராய் மிண்டோ மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
வெடிகுண்டு வீசிய நபரைக் கண்டு பிடிக்க போலீசார் முயன்று கொண்டிருக்கும் போதே வேறு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சாவர்க்கரின் சொந்த ஊரான நாஸிக்கில்,கன்ஹரே என்பவன் பிரிட்டிஷ் கலெக்டர் A.M.T. ஜாக்ஸனை சுட்டுக் கொன்றான்.
’’ சாவர்க்கரின் அண்ணன் பாபுராவிற்கு ஆயுள் தண்டனை கொடுத்து நாடு கடத்திய தற்கு பழிவாங்க ….’’ எனக் காரணம் கூறப்பட்டது’
ஜாக்ஸனை கொல்ல கன்ஹரே பயன்படுத்திய கைத்துப்பாக்கி, சாவர்க்கர் லண்டனிலிருந்து அனுப்பியது என போலீசார் சந்தேகித்தனர்.
ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சில பத்திரிகைகள், ‘இது போன்ற தீவிரவாதச் செயல்களுக்கு பின்னணியாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும், காரணகர்த்தாவான சாவர்க்கரை’ கைது செய்து தண்டிக்க வேண்டும் என தலையங்கங்கள் எழுதின.
சாவர்க்கர் கைது செய்யப்படுவது உறுதி என்று உணர்ந்த அவருடைய நண்பர்கள், பாரீஸில் தங்கியிருக்கும்படியாக அவருக்கு அறிவுறுத்தி அங்கு அனுப்பி வைத்தனர்.
பாரீஸில் சில வாரங்கள் தங்கியிருந்த சாவர்க்கர், அங்கிருந்த செல்வாக்குமிக்க இந்தியர்களிடையே தேசிய உணர்வை ஊட்டிக் கொண்டிருந்தார். ஆனால் பாரிஸ் வாழ்க்கையில் சாவர்க்கருக்கு அலுப்பு தட்டியது.
பாரதத்திற்கு திரும்பி,தன் போராட்டத்தை, தன் சொந்த பூமியிலேயே தொடர வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் பாரதத்திற்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப் பட்டிருந்ததால், நாட்டிற்குள் நுழைந்தவுடனேயே தான் கைது செய்யப் படுவோம் என்று அவர் உணர்ந்தே இருந்தார்.
திடீரென லண்டனுக்கு திரும்பிச் செல்ல அவர் முடிவு செய்தார். தன்னுடைய காதலியான மார்க்ரெட் லாரன்ஸை சந்திக்கவே லண்டன் திரும்பினார் என பலரும் கருதினர்.
உண்மையில் மார்க்ரெட் லாரன்ஸை அவர் தன் வாழ்க்கையில் மீண்டும் சந்திக்கவே இல்லை ! அவருடைய ரயில் விக்டோரியா ரயில் நிலையத்தை அடைந்தவுடனேயே அவர் கைது செய்யப்பட்டார்.
பிரிக்ஸ்டன் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டிருந்த அவரிடம், பாரதத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கான வாரண்ட் வழங்கப்பட்டது. ஆங்கிலேயே அரசு அவர் மீதான அரசிற்கு எதிரான நடவடிக்கைகள் வழக்கை பாரதத்தில் நடத்த முடிவு செய்தது.
பம்பாய் போலிஸ் துணைக் கண்காணிப்பாளர் C.L.POWER தலைமையில் ஒரு படை அவரை கைது செய்து அழைத்து வர லண்டன் விரைந்தது. ஸ்காட்லண்ட் யார்ட் போலிசார்,துப்பறியும் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ஜோச் பார்க்கரை உடன் அனுப்பினர்.
பாரதத்தை நோக்கி… ஒரு கைதியாக சாவர்க்கரின் பயணம் தொடங்கியது
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்