தேச விடுதலைக்காக மக்களிடையே ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு மற்றும் அவர்களை தான் விரும்பும் விதத்தில் செயலுக்குத் தயார் செய்யும் பணி அவ்வளவு எளிதானது அல்ல என்று இத்தருணத்தில் உணர்ந்த சாவர்க்கர்,
அவர்களுக்குத் தலைமை ஏற்று வழிகாட்டத், தானே இன்னும் சில தகுதிகளைப் பெற வேண்டியிருப்பதாகக் கருதினார்.
அதற்காக இங்கிலாந்து சென்று மேலும் சில வருடங்கள் படித்து பாரிஸ்டர் பட்டம் பெறவும், அங்கு தங்கியிருக்கும் காலத்தில் பாரதம் பற்றிய ஆங்கிலேய அரசின் நோக்கு எப்படி இருக்கிறது என்று ஆய்ந்தறிந்து கொள்ளவும் விரும்பினார்.
ஆகவே இங்கிலாந்து செல்லப் போவதாக அறிவித்தார்.
அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டி,அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்யத் தயாராக இருந்த அரசாங்கம்,சாவர்க்கரின் இந்த திடீர் முடிவுக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டது.
‘ அரசுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சாவர்க்கரை பற்றி இனி கவலைக் கொள்ளத் தேவையில்லை; இங்கிலாந்து,அவரை மேற்கத்திய நாகரீகங்களை ஏற்றுக் கொண்ட விட்ட இந்திய கனவானாகத் தயார் செய்து விடுமென நம்பினார்கள்.
அந்தக் காலக்கட்டத்தில்,அதுதான் நடைபெறும் நிகழ்வாக இருந்தது.
இந்திய மாணவர்கள் இங்கிலாந்தின் முக்கிய கல்லூரிகளில் படிக்கச் செல்வது,மேற்கத்திய உலகை பிரம்மிப்புடன் பார்த்து அந்த சூழ்நிலையின் தாக்கத்தால் பழுப்பு நிற தேகம் கொண்ட ஆங்கிலேயர்களாகவே மாறி விடுவது,
பலர் ஆங்கிலேய பெண்களிடம் காதலில் விழுவது,சிலர் வெள்ளைக்கார மனைவிகளுடன் நாடு திரும்புவது… என்பது ஒரு சர்வ சாதாரண நிகழ்வாகவே இருந்தது.
அந்த பாணிப்படியே சாவர்க்கரும் மார்கரெட் லாரன்ஸ் எனும் ஆங்கிலேய பெண்மணியிடம் காதலில் விழுந்தார். ஆனால் இதைத் தவிர்த்து பார்த்தால் அவர் ஒரு முரட்டுத்தனம் கொண்ட இந்தியராகவே இருந்தார்.
‘ GRAY’S INN ‘ல் சேர்ந்து படித்து,பயிற்சிப் பெற்று நான்கு வருடங்களில் பாரிஸ்டர் பட்டம் பெற்று,வக்கீலாகப் பணிபுரிவதற்கானத் தகுதியை பெற்றார்.
இங்கிலாந்திலிருந்த காலம் முழுவதும் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை விடாது தொடர்ந்தார். ‘ FREE INDIA SOCIETY ‘ எனும் அமைப்பினை தொடங்கி அதனுடைய வாராந்திர கூடுதல்களை வெளிப்படையாகவே நடத்தினார்.
அந்த அமைப்பின் அங்கத்தினர்கள் சிலரை மட்டும் தேர்வு செய்து ஒரு உள் வட்டத்தை உருவாக்கினார். இந்த உள்வட்டத்தினரிடம் அவர் எதிர்பார்த்த ஒரே தகுதி,அவர்களுக்கும் தன்னைப் போலவே புரட்சியில்.. ஆயுதப் புரட்சியில் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பது தான்..
( தொடரும் )
– எழுத்து: யா.சு.கண்ணன்