முதலாம் உலகப் போர் 1914 ஆம் வருடம் ஜூலை மாதம் 28ந் தேதி தொடங்கி 1918ஆம் வருடம் நவம்பர் மாதம் 11ந் தேதி வரை நீடித்தது. இந்தப் போரின் போது, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை காந்தி எடுத்தார்.
இந்தியர்கள், பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து போரிட வேண்டும் என்று வலியுறுத்தி பலரையும் ராணுவத்தில் பங்கேற்கச் செய்தார். ஆங்கிலேயர்கள், KAISER-I-HIND எனும் பதக்கத்தை காந்திக்கு அளித்து கெளரவித்தனர். ‘ இந்தியாவின் தலைவர் ‘ என்று இதற்கு பொருள் கொள்ளலாம்.
ஆங்கிலேய அரசிற்கு விசுவாசமாக,ஆதரவாகச் செயல்படுபவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பதக்கம் இது. அதன் பிறகு, சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி நாயகரானார் காந்தி.
ஆனால் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது, போரை புறக்கணிக்கும் படியாக மக்களைக் கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து தேசம் முழுவதும் ‘ ஒத்துழையாமை இயக்கத்தை ‘ துவங்கி,’வெள்ளையனே வெளியேறு ‘ கோஷத்தை முன்னிறுத்தினார்.
’ ஆங்கிலேயர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை ‘ தெரிவிக்க வேண்டும் என்று தொடக்கத்தில் வலியுறுத்திய நேரு பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு காந்தியின் பிரச்சாரத்தோடு சேர்ந்துக் கொண்டார்.
ஆங்கிலேய அரசிற்கு நெருக்குதலை ஏற்படுத்திய இந்த நிகழ்வுகளால், காந்தி, நேரு மற்றும், இதர முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.
முதலாம் உலகப்போரின் போது,அந்தமான் சிறையில் வாடிக் கொண்டிருந்த சாவர்க்கர், அப்போது ஜெர்மனியின் வெற்றியை விரும்பினார்.
ஆனால் இப்போது இரண்டாம் உலகப் போரின் போது, ஆங்கிலேய அரசிற்கு முழு ஆதரவைத் தெரிவித்து, பிரிட்டிஷ் ராணுவத்தில் பெருமளவில் சேரும்படியாக தன் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஏன் இந்த நிலைப்பாடு என்பது குறித்து பகிரங்கமாகத் தெரிவித்தார். ஹிந்துக்கள் ஆயுதங்களை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.வெகு விரைவில் அதற்கான தேவையும் எழக் கூடும் என்றார்.
என்னே காலத்தின் கோலம் !
எந்த ஆயுதங்களை வைத்திருந்ததை, இந்தியர்கள் பயன்படுத்த முயன்றதை, குற்றம் எனக் கூறி கடும் தண்டனையை விதித்ததோ, அதே ஆங்கிலேய அரசு நவீன ஆயுதங்களை பயன்படுத்த இந்தியர்களுக்கு கற்றுக் கொடுக்க முன் வந்தது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாவிட்டால் அது முட்டாள்தனம் என சாவர்க்கர் கருதினார். அவருடைய பார்வை, இரண்டாம் உலகப் போரையும் கடந்து இருந்தது.
ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, இங்கு ஹிந்துக்களையும், முஸ்லீம்களையும் விட்டுச் சென்ற பிறகு, ஹிந்துக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த ஆயுதப் பயிற்சி உதவும் என சாவர்க்கர் பகிரங்கமாக அறிவித்தார்.
காரணம் எதுவாயினும் சரி, சாவர்க்கரின் ஆதரவு நிலைப்பாட்டை ஆங்கிலேய அரசு வரவேற்று ஏற்றுக் கொண்டது. தங்களுக்கு நண்பனாக இல்லாது போனாலும், அப்போதைக்கு எதிரி இல்லை எனும் கோணத்தில் சாவர்க்கரை பார்த்தது ஆங்கிலேய அரசு.
அவரை சுதந்திரமாக நடமாட விட்டது. அதே சமயம் ரகசியமாகக் கண்காணித்தது.
( தொடரும் )
- எழுத்து: யா.சு.கண்ணன்