கோட்ஸேயும்,ஆப்தேயும் தாங்கள் வசித்து வந்த பகுதிகளில் பயிற்சி முகாம்களை நடத்தினர். புலனாய்வுத் துறையினர்,தகவல் சேகரிக்க இந்த முகாம்களுக்கு ஒற்றர்களை அனுப்பினார்கள்.
அங்கே பாரதிய பாரம்பரிய விளையாட்டுக்கள்,உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல், சாவர்க்கரின் கொள்கைகள் குறித்த வகுப்புகள் மட்டுமே நடைப்பெற்றதைக் கண்டு தகவல் தெரிவித்தனர். இந்த ‘ தள் ‘ ளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 150க்கு மேல் இல்லை எனும் ஆச்சரியமூட்டும் தகவலைத் தெரிவித்தனர்.
இதற்கிடையே,ஆப்தே,ராணுவத்தில் ஆட்களைச் சேர்க்கும் பணிக்கு (Recruiting Officer) விண்ணப்பித்தார். வேலையும் கிடைத்து 1943ல், இந்திய விமானப் படை ( அப்போது ராயல் இந்திய விமானப் படை ) யில் உதவி தொழிற்நுட்ப பணி நியமன அதிகாரியாக ( Assistant Technical Recruiting Officer ) வேலையில் சேர்ந்தார்.
அரசிதழ் பதிவுப் பெற்ற ( Gazetted ) ஃப்ளைட் லெஃப்டினண்ட் ஆக அவருக்கு பதவி வழங்கப்பட்டது. பணிப்புரிய வேண்டிய இடம் அவர் விரும்பிய பூனா.
பணி தற்காலிகமானதுதான்,இரண்டாம் உலகப் போர் நீடிக்கும் காலம் வரைதான் என்று கூறப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் ராணுவ முத்திரையுடன் கூடிய சீருடை வழங்கப்பட்டது,ராணுவப் பணிக்கான உரிமைகள் மற்றும் சலுகைகளும் கிடைத்தது.
ஆக,இப்போது அஹமத் நகரும் இல்லை,ஆசிரியர் பணியும் இல்லை. அஹமத் பள்ளியிலிருந்து பிரியா விடை பெற்ற போது,அந்த உயர்நிலைப் பள்ளியின் மாணவ மாணவிகள் அவருக்கு கண்ணீர் மல்க விடைக் கொடுத்தனர்.
அவர் மிகச் சிறந்த ஆசிரியராக விளங்கி,அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சிறு உரையாற்றினார்.
தான் எங்கோ வெகு தூரம் போய் விடப் போவது இல்லை,பக்கத்தில் பூனாவில்தான் இருக்கப் போவதாகவும்,எப்போது வேண்டுமானாலும் தன்னைக் காண வரலாம் என்றும் தெரிவித்தார். சில மாணவ,மாணவிகள் அவருடைய விலாசத்தை கேட்டுப் பெற்றனர்.
அப்படி விலாசத்தை கேட்டுப் பெற்ற மாணவிகளில் ஒருவர் மனோரமா சால்வி. (பின்னாளில் காந்தி கொலை வழக்கில் ஒரு முக்கிய சாட்சி ஆனவர் ) சால்விக்கு அப்போது வயது 17.
இந்திய கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சார கிறிஸ்துவ குடும்பங்களுக்கே உரிய தினசரி பாடல்கள்,மத சம்பிரதாயங்கள்படி வளர்க்கப்பட்டவர்.
படிப்பில் கெட்டிக்காரி,கூச்ச சுபாவம் கொண்டவர். சற்றே கருமை நிறம், எளிமையானத் தோற்றம்.
மனோரமா சால்வி ஆப்தேயின் விலாசத்தை பத்திரமாகக் குறித்து வைத்திருந்து, ஒரு வருடத்திற்குப் பிறகு,பம்பாயில் கல்லூரி மாணவியாக இருந்த போது, அவருக்கு கடிதம் எழுதினார்.
அதன் பிறகு அவர்கள் பல முறைச் சந்தித்து காலப்போக்கில் காதலர்கள் ஆகி விட்டனர்.
( தொடரும் )