ஒரு இரண்டு வருட காலத்திற்கு,’அக்ரனி’ தினசரி, மரணப் படுக்கையில் இருந்தது. உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.திணறித் திணறி மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. கோட்ஸே மற்றும் ஆப்தேயின் மனோதிடம் மட்டுமே பத்திரிகை வெளிவருவதை உறுதி செய்துக் கொண்டிருந்தது.
நாதுராம், மாதம் ஒரு முறையாவது ‘ அக்ரனி ‘ யின் செயல்பாடுகள் குறித்து சாவர்க்கருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். இடையிடையே, ஆப்தேயும், கோட்ஸேயும், ’அக்ரனி‘ க்காக ஏதாவது கட்டுரைகள் எழுதும்படியாக சாவர்க்கரை கேட்டுக் கொண்டிருந்தனர்.
அதன் மூலம், பத்திரிகையின் கெளரவம் அதிகரிக்கும், விற்பனையும் அதிகரிக்கும் என உறுதியாக நம்பினர். ஆனால் தொடக்கத்தில், பணம் கொடுத்து உதவியதோடு சரி, அதன் பின் அந்த தினசரியின் எந்த விஷயங்களிலும் அவர் தலையிடவில்லை..
ஆப்தே, கோட்ஸேயுடனான தொடர்பு குறித்து, இந்த தினசரியை சுட்டிக் காட்டி, காந்தி கொலை வழக்கின் போது கேள்வி எழுப்பபட்ட போது, அந்த தினசரிக்கு, ஒரு சிறு குறிப்பு கூட தான் கொடுத்ததில்லையென சாவர்க்கர் வாதாடினார்.
இதற்கிடையே, இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்து விட்டது. அதனோடு, ஆப்தேயின் போர் கால வேலையும் போனது. ஆங்கிலேயர்கள் பாரதத்தை விட்டு வெளியேற அவசரம் காட்டத் தொடங்கினர்.
ஆனால் ஜின்னாவும், முஸ்லீம் லீக்கும் நாட்டை முதலில் துண்டாடிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என ஆங்கிலேயர்களை வற்புறுத்தினர். ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கிடையேயான பதற்றம், பரஸ்பர வெறுப்புணர்வாக மாறியது.
ஹிந்துக்களின் கண்ணோட்டத்தை பிரதிபலித்து வந்த ‘ அக்ரனி ‘ யின் சர்குலேஷன் அதிகரித்தது, விளம்பரங்களும் வரத் துவங்கின. தினசரியின் மாத நஷ்டம் குறையத் தொடங்கி, பத்திரிகையின் விரிவாக்கம் பற்றியும் யோசனை வரத் தொடங்கியது.
சொந்தமாக ஒரு பிரிண்டிங் ப்ரஸ்,ஒரு டெலிப்ரிண்டர் வாங்கினார்கள். பத்திரிகைக்காக சொந்த கட்டிடமும் தேடத் தொடங்கினார்கள்.
பூனாவில் 495, ஷான்வார் பத் எனும் இடத்தில் நிலம் கிடைத்தது. அதில் அச்சகத்தையும், அலுவலகத்தையும் அமைக்க, ஒரு ஷெட் போடுவதற்காகவும் திட்டமிட்டனர்.
1946 ஆம் வருடம்…. பத்திரிகையை பொறுத்த வரை நல்ல தொடக்கமாக அமைந்தது.
ஆனால்… அந்த வருடம்தான், சுதந்திரத்திற்கும், தேசப் பிரிவினைக்கும் முந்தைய வருடமும் கூட.. அந்த வருடம் தான் பெரிய அளவில் ஹிந்து-முஸ்லீம் கலவரங்கள் மூண்டு, படுகொலைகள் நிகழ்ந்தன…!
(தொடரும்)
– எழுத்து: யா.சு.கண்ணன்