கேரளப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபடுகிற சில நண்பர்கள் தந்த தகவலின்படி:
சபரிமலைக்கான இந்தப் போராட்டங்கள் பொதுமக்களாலேயே முன்னெடுக்கப்பட்டு நடத்தப் படுகின்றன. அமைப்புகளின் பணி இடத்தையும், நேரத்தையும் அறிவிப்பதாகவே இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் எனப்தை மக்களே அங்கு முடிவு செய்துகொள்கிறார்கள்.
மக்கள் அதிகம் திரள்வது “ஐயப்ப தர்ம ஸம்ரக்ஷண ஸமிதி” அமைப்பின் பின்னர். இது அரசியல் பேசாத இந்து அமைப்பு.
அரசியல் இந்துத்துவ அமைப்புகளை எடுத்துக் கொண்டால் “ஹிந்து ஐக்ய வேதி” மற்றும் “அந்தராஷ்ட்ரிய ஹிந்து பரிஷத்” போன்ற அமைப்புகள் மக்களைத் திரட்டுவதில் நான்காம், ஐந்தாம் இடங்களில் இருக்கின்றன.
இவற்றில் “ஹிந்து ஐக்ய வேதி” அமைப்பானது கேரளாவில் உள்ள பல ஜாதி அமைப்புகளை, ஹிந்து தர்மத்தின் நோக்கத்திற்காக, ஒருங்கிணைக்க முயலும் அமைப்பு. முன்னாள் கேரள பாஜக தலைவராக அற்புதமான பணிகளைச் செய்த கும்மண்ணன் ராஜசேகரன் ஜி போன்ற பெரியோர்களின் முயற்சி இது.
சபரிமலை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது, கும்மண்ணன் ராஜசேகரன் ஜி கேரளாவில் இருந்தால் சபரிமலை விஷயத்தில் மிகப் பெரிய எதிர்ப்பாளராக அவர் இருப்பார். அதனால், தீர்ப்பு வருவதற்கு முன்னரே, அவர் கேரளாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவரது பணியை சசிகலா டீச்சர் எடுத்துச் செய்கிறார்கள்.
”அந்தராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத்” எனும் அமைப்பானது ப்ரவீண் தொகடியா ஜியினால் நடத்தப்படும் அமைப்பு.
மோதி ஜி மேல் என்ன காரணத்தாலோ ப்ரவீண் தொகடியா ஜிக்கு கடும் அதிருப்தி கொண்டிருந்தார். அதன் காரணமாக அவருக்குத் தரப்பட்ட அழுத்தங்களின் காரணமாக, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசியத் தலைவராக இருந்த அவர் அதில் இருந்து விலகி தனியாக ஆரம்பித்த அமைப்பு “அந்தராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத்”. (ஒப்பீட்டில், ஸ்டாலின் திமுகவில் இருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பிப்பதற்கு ஒப்பானது இது. திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர். புதுக்கட்சி ஆரம்பித்தது மிகப் பொருத்தமான ஒப்பீடாக இருக்கும்.)
ப்ரவீண் தொகாடியா ஜியின் இந்த அரசியல் இந்துத்துவ அமைப்புக்கே அதிகச் செல்வாக்குக் கேரளாவில் இருக்கிறது. (கர்நாடகாவிலும்.)
இது போன்ற கோயில் விஷயங்களில் ஈடுபட, ஆர்.எஸ்.எஸினால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு ”கேரள க்ஷேத்ர ஸம்ரக்ஷண ஸமிதி”. இவ்வமைப்பின் பின்னர் அதிகப் பொதுமக்கள் திரளவில்லை.
இவ்வமைப்பானது, ஸ்ரீஜனங்களை புரோகிதராக்கும் திட்டத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வரும் அமைப்பு. பாராட்டத் தக்க பணி.
அனைத்து இந்துக்களுக்கும் இந்த வாய்ப்பை இந்த அமைப்பு தந்திருந்தால், இந்த அமைப்பின் பின்னரும் பொதுமக்கள் திரண்டிருப்பார்கள். ஸ்ரீஜனங்களை மட்டுமே இது அதிகக் கவனம் செலுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸினர் அதிகம் உள்ள அமைப்பான “ஹிந்து ஐக்ய வேதி”யின் பின்னரும் அதிகக் கூட்டம் இல்லாதது அதிர்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது. அனைத்துப் பொதுமக்களையும் ஒன்றும் திரட்டுவதில் இந்த அமைப்பும் பெரும் தோல்வியையே சந்தித்துள்ளது. காரணம், கேரளாவின் ஆதிக்க ஜாதிகளில் ஒன்றான ஈழவர்கள்.
கேரளாவை ஆளும் பிணநாயி விஜயன் ஒரு ஈழவர் என்பதால், ஈழவர்களின் அமைப்பான SNDP சபரிமலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது மட்டுமின்றி, இந்தப் போராட்டத்தை எதிர்க்கவும் செய்கிறது.
அரசியல் இந்துத்துவ அமைப்புகளில் இந்த ஜாதியைச் சேர்ந்தவர்களே அதிகம் என்பதால் இந்தப் போராட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்களையோ, தொண்டர்களையோ அரசியல் இந்துத்துவ அமைப்புகளால் திரட்ட இயலவில்லை என்பதே நிதர்சனம். “ஹிந்து ஐக்ய வேதி”யும் இந்தப் பிரச்சினையைச் சந்திக்கிறது. மற்ற ஜாதி அமைப்புகளை இவ்வமைப்பு ஒன்று திரட்ட முடிகிறது.
சபரிமலைப் போராட்டங்களில், SNDP யின் பங்களிப்பு எதிர்மறையாக இருக்கிறது. டுமீலர்களான உங்களுக்குப் புரியும்படி சொன்னால், இந்த சபரிமலை கோவில் விஷயத்தை பிராமண எதேச்சதிகாரத்தின் போராட்டம் என்று SNDP வர்ணிக்கிறது !
இவ்வெறுப்பு முற்கால வரலாறு சார்ந்த மனச்சாய்வின் விளைவு. தற்கால உண்மைக்கு மாறானது.
கேரளாவில் ஸ்ரீஜனங்களுக்கு பூணூல் போட்டு, புரோகிதப் பயிற்சி கொடுத்து, சமீபத்தில் ஒரு ஆகமக் கோயிலில் யதுகிருஷ்ணன் எனும் ஒரு ஸ்ரீஜனரை அர்ச்சகராகவும் ஆக்கிய “ஸ்ரீ குருதேவ வைதீக தந்த்ர வித்யாபீடம்” அநிருத்தன் எனும் ஒரு பிராமணரால் நடத்தப்படும் அமைப்பு.
யதுகிருஷ்ணன் மிகச் சிறப்பாகப் படித்திருப்பதாகச் சொல்லி அவரை அர்ச்சகர் தேர்வில் வெற்றிபெற்றதாகச் சொன்ன தேவஸ்வம் போர்டின் புரோகித நியமன அமைப்பு பிராமணர்கள் அதிகம் கொண்ட அமைப்பு.
தந்த்ர வித்யா பீடம் எனும் அமைப்பை ஆர்.எஸ்.எஸின். பிரச்சாகரான பரமேஸ்வரன் ஜி பிராமணர்களோடு சேர்ந்து ஆரம்பித்தார். அங்கு ஜாதி வேறுபாடு இன்றி புரோகிதக் கல்வி கற்றுத் தருபவர்கள் பிராமணர்களே.
இந்த அமைப்பை 1972ல் ஆரம்பித்தது தமிழகத்தில் பிராமணீயத்தின் தலைமையாக வசைபாடப்படும் ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்தான்.
இந்த அமைப்பை ஆரம்பித்தவர்களில் 99 % பிராமணர்களே.
உதாரணமாக, குருவாயூர் கோவிலின் தந்த்ரியான புழக்கர சென்னஸ் பரமேஸ்வரன் நம்பூத்ரிபாட், ஆண்டாளடி வலிய திவாகரன் நம்பூதிரிபாட், புதுமன தாமோதரன் நம்பூதிரிபாட், புல்லாம்வழி தேவன் நாராயணன் நம்பூதிரி, சாலக்குடி சென்னஸ் நாராயணன் நம்பூதிரிபாட் போன்றோர்.
மற்ற உயர்த்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் ஸ்தாபகர்களில் உண்டு என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இவ்வளவு ஏன் ? ஈழவர்களால் நடத்தப்படும் ஸ்ரீநாராயண தாந்த்ரிக வித்யாலயத்தை ஆரம்பித்த பரவூர் ஸ்ரீதரன் தந்த்ரிக்குப் பாடம் நடத்தி, முழுமையான பயிற்சிகள் கொடுத்து, சிறப்பாகத் தேர்ந்தெடுக்க வைத்ததும் பிராமணர்களே.
இந்த அமைப்பும் அனைத்து ஜாதியாருக்கும் புரோகித மற்றும் பூஜாரிகளாகும் கல்வியைத் தந்துவருகிறது. இதனை போதிப்பவர்களில் பெரும்பான்மையும் பிராமணர்களே.
பரவூர் ஸ்ரீதரன் தந்த்ரியின் அறிவைப் போற்றிப் பாராட்டியவர் ஜெயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளே. அனைவருக்கும் பூஜாரி ஆகும் கல்வியைத் தரும் அவரது பணிக்குத் தேவையான உதவிகள் அக்காலத்தில் காஞ்சி மடத்தினால் செய்யப்பட்டன.
தங்களின் ஜாதியால் நடத்தப்படும் அமைப்பில் பிராமணர்கள்தான் தந்த்ர ஆகமக் கல்வியை போதித்து வருகிறார்கள் என்பது SNDPக்குத் தெரியாதா ?
தெரியும். இருப்பினும், ஈழவர்களின் SNDP அமைப்பானது பிராமணர்களுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து பேசி வருகிறது.
காரணம், நாராயண குரு தர்மத்தை மீட்டபோது அவருக்கு மிகப் பெரிய எதிர்ப்பு பிராமணர்களிடம் இருந்து வந்தது. மற்ற உயர்த்தப்பட்ட ஜாதியினரும் அவரை எதிர்த்தார்கள் என்றாலும், அவர்களின் முகமாக இருந்தது கேரளத்து பிராமணர்களே.
அந்த வரலாற்றுப் பதிவில் இருந்து எந்த அமைப்பும் மீள்வது மிகக் கடினம்.
இந்தியா பாகிஸ்த்தான் பிரிவினையை வைத்துத் தன் கொள்கை முடிவுகளை ஆர்.எஸ்.எஸ். எடுத்து வருவதும் இதுபோன்ற வரலாற்றுப் பதிவின் காரணமாகவே.
எனவே, SNDPயின் வெறுப்புக்குப் பின்னால் இந்த வரலாற்றுப் பதிவு மிக ஆழமாக இருக்கிறது. நிகழ்கால உண்மைகளை ஏற்க அது அனுமதிப்பதில்லை.
இந்த வரலாற்றுப் பதிவின் காரணமாக நாராயண குரு சொன்ன தர்ம பரிபாலனத்தை முன்வைப்பதைவிட பிராமணரைத் திட்டுவதே போதும் என்கிற நிலைப்பாட்டுக்கு SNDP வந்துள்ளது.
இந்த அமைப்புக்கு ஈழவர்களிடையே மிகப் பெரிய ஆதரவு இல்லை என்பது ஒரு சிறிய ஆறுதல்.
பெரும்பாலான ஈழவர்கள் பாஜக ஆதரவாளர்கள். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள். அவர்களும் இந்த சபரிமலை விஷயத்தில் ஈடுபாடு காட்டவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நாராயண குரு என்ன சொன்னாரோ அதற்கு எதிர்மாறான செயல்பாடு இது.
பூஜையின் போது பூனைகட்டுவது ஒரு சடங்காகிப் போன நிலை மாறி, பூனையைக் கட்டுவதே பூஜை என்றாகிவிட்டது. எப்படியோ பூஜை என்கிற பெயர் தொடர்கிறதே என திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
இப்படி ஈழவர்கள் மட்டும் அதிக அளவில் பூஜாரிகள், தந்த்ரிகள் ஆவதைக் கண்டு ஈழவர்கள் மேல் கடும் கெஸ்டிஸ வெறுப்பில் இருக்கும் நாயர்களின் அமைப்பான நாயர் ஸெர்வீஸ் ஸொஸைட்டி (NSS)ம் தந்த்ரி கல்விக்கான பாடசாலைகளை ஏற்படுத்தப் போவதாகச் சொல்லி வருகிறது. செய்தால் நல்லது. இதற்கான குழுவில் தலைமைப் பொறுப்பேற்றிருப்பவரும் பிராமணரே.
ஆங்கிலேயர்களின் கீழ் பணி செய்ததால் நாயர்களுக்கும் பிராமணர்கள்மேல் கடும் வெறுப்பு உண்டு. ஈழவர்கள் மேலான நாயர்களின் கேஸ்ட் வெறுப்போடு ஒப்பிடுகையில் நாயர்களின் பிராமண வெறுப்பு மிக மிகக் குறைவு. எனவே, பிராமணர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் !
இந்த வெறுப்புகளையும் மீறி, இந்த அமைப்புகளின் தர்ம காரியங்களுக்குத் துணை நிற்கிறார்கள் பிராமணர்கள். இவர்களது பிரிட்டிஷ் கால முன்னோர்கள் செய்த பாவங்களுக்கு இவை சரியான ப்ராயச்சித்தம்.
இந்தக் கேஸ்ட் சண்டைகளால் சபரிமலையில் பொதுமக்களின் கூட்டம் குறைந்துவிடவில்லை.
அனைத்து இந்து அமைப்புகளையும், தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் அமைப்புகளையும், ஒன்று சேர்க்கும் அமைப்பாக “ஸநாதன ஸம்ரக்ஷண ஸமிதி” இருக்கிறது. இதில் அனைத்து ஜாதியார்களும் இருந்துகொண்டு சபரிமலைக்காக அனைவரையும் ஒன்று திரட்டுகிறார்கள்.
பொதுமக்கள் பெரும்பாலும் அவர்கள் ஊரில் எந்த அமைப்பு சபரிமலைக்காகப் போராட்டம் நடத்துகிறதோ, அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். இவர்களுக்கு எந்த அமைப்பு பற்றியும் கவலை இல்லை.
போராட்டத்தின் முன் நிற்பதும் அமைப்பு சாராத பொதுமக்கள்தான்.
அரசியல் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர் ஒருவர்கூட போலீஸாரின் தடியடிக்கு உள்ளாகவில்லை.
இதுவரை தடியடி பெற்றவர் அனைவரும் அமைப்பு-சாரா பொதுமக்களே.
அவர்களைத் தூண்டி திரட்டுவது, ஐயப்பனே.
சாமி சரணம் !