படேல் பிரதமராகும் வாய்ப்பு இருந்ததா? படேல் பிரதமராகியிருந்தால்…..? என்று மோடி சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். வல்லபாய் படேலுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பிருந்ததா? வரலாற்றைப் புரட்டியபோது….
இந்தியர்கள கையில் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறுவதற்கான வேலைகளை 1946லேயேஆங்கிலேயர்கள் திட்டமிட ஆரம்பித்தார்கள். இந்தியா தனது புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் வரை ஓர் இடைக்கால அரசை காங்கிரஸ் தலைமையில் நிறுவுவது என முடிவாயிற்று. அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக யார் இருக்கிறார்களோ அவர்கள் பிரதமர் பதவியை ஏற்பார்கள் என்பது ஏற்பாடு.
அப்போது மெளலானா அபுல் கலாம் ஆசாத் கட்சியின் தலைவராக இருந்தார். ஆறுவருடங்களாக அவர்தான் இருந்து வந்தார். ஏனெனில் 1940ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பலதலைவர்கள் கைதாகி சிறையில் இருந்ததால் கட்சியில் தேர்தல் ஏதும் நடைபெற்றிருக்கவில்லை. ஆசாத் அவரே பொறுப்பில் தொடர விரும்பினார்.
ஆனால் காந்தி விரும்பவில்லை. ஆறாண்டுகள் தொடர்ந்த் பதவியில் இருந்ததால் புதிதாக ஒருவர் தேர்வு செய்யப்படுவதே முறை என்றார் காந்தி. நேரு தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது அவர் நம்பிக்கை. 1946ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி வேட்பு மனுக்கள் (Nomination) பெறுவதற்கான இறுதித் தேதியாக முடிவு செய்யப்பட்டது. மாநிலக் காங்கிரஸ் கமிட்டிகள்தான் முன்மொழிய வேண்டும்
அப்போது 15 மாநிலக் கமிட்டிகள் இருந்தன. 12 கமிட்டிகள் வல்லபாய் பட்டேலின் பெயரை முன்மொழிந்தன. 3 கமிட்டிகள் யார் பெயரையும் முன் மொழியவில்லை. அதாவது எந்த ஒரு கமிட்டியும் நேருவின் பெயரை முன் மொழியவில்லை! காந்திக்கு அதிர்ச்சி நேருவைக் கூப்பிட்டு நிலைமையைச் சொன்னார்.
நேரு திகைத்துப் போனார். ஆனால் அவர் யாருக்கும் இரண்டாம் நிலையில் இருந்து நான் பணியாற்ற மாட்டேன் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார். கட்சி உடைந்துவிடுமோ எனப் பயந்தார் காந்தி. அதைவிட நேரு இல்லை என்றால் வெள்ளைக்காரர்க்ள் ஏதாவது சாக்கு சொல்லி அதிகார மாற்றத்தைத் தட்டிக் கழிப்பார்களோ, அல்லது தள்ளிப் போடுவார்களோ என்ற கவலை ஏற்பட்டது.
கிருபளானியைக் கூப்பிட்டு காங்கிரஸ் செயற்குழு (காரிய கமிட்டி)வை நேருவின் பெயரை முன் மொழியச் சொல்லுமாறு சொன்னார். படேலைக் கூப்பிட்டு வாபஸ் வாங்கச் சொன்னார். மாநிலக் காங்கிரஸ் கமிட்டிகள் முன்மொழியாமலே நேரு ”போட்டியின்றி” பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
படேல் விலகியதைக் கேள்விப்பட்ட ராஜேந்திர பிரசாத் ‘ஒரு கவர்ச்சிகரமான பிரதமருக்காக ஓர் உண்மைத் தொண்டனை பலி கொடுத்துவிட்டீர்கள்” என்று காந்தியிடம் சண்டை போட்டதாகச் சொல்வார்கள்
படேலுக்கும் நேருவிற்கும் எப்போதும் ஒத்துப் போனதில்லை. நேரு ராஜாஜியை இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக்க விரும்பினார், வேட்பு மனுவை விலக்கிக் கொள்ளுமாறு ராஜேந்திரப் பிரசாத்திடம் சொன்னார். பிரசாத் மறுத்துவிட்டார். தேரு தனது விருப்பங்களைத் திணிப்பதாக கட்சியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
கட்சிக்காரர்களை சமாதனப்படுத்துமாறு படேலிடம் கேட்டுக் கொண்டார். படேல் மறுத்துவிட்டார். இறுதியில் பிரசாத் ஜனாதிபதியானார். பிரதமருக்கு ஜனாதிபதி மூலம் படேல் செக் வைத்துவிட்டார்
அதன் பின் நேரு படேலை மறைமுகமாகப் புறக்கணித்தார். அவரது பொறுப்பில் இருந்த உள்துறையைக் கலந்து கொள்ளாமலே பல முடிவுகள் எடுத்தார்.
படேல் பிரதமராக வந்திருந்தால் ? இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது சிரமம். படேல் பல விஷயங்களில் உறுதியாக முடிவெடுத்தவர். அதனால் பல விமர்சனங்களுக்கு உள்ளானவர்.
பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுக்கும் யோசனையை முதலில் வரவேற்றவர் அவர்தான் என்பதாலும், சோம்நாத் கோயிலை மீண்டும் புதுப்பித்துக் கட்டியவர் என்பதாலும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்று ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது.
ஹிந்து மகா சபாவை தடை செய்ததால் ஹிந்துத்வாவாதிகளால் விமர்சிக்கப்பட்டவர். பிர்லா, சாராபாய் போன்ற முதலாளிகள் அவரது நண்பர்கள் என்பதால் சோஷலிஸ்ட்களால் வெறுக்கப்பட்டவர்.
இரும்புக்கரம் கொண்டு சமஸ்தானங்களை இணைத்ததால் சுயநிர்ணய உரிமையை நசுக்கியவர் என சிலர் அவரை விமர்சிப்பதுண்டு. ஆனால் மக்களின் அபிமானத்தைப் பெற்ற தலைவராக இருந்தார். அவர் இறந்த போது 3 லட்சம் பேர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்கள்.
அவர் பிரதமராக ஆகியிருந்தால் ஒன்று மட்டும் நடந்திருக்காது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தலைமுறை தலைமுறையாக பிரதமர்கள் ஆகும் வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்தில் இருந்திருக்காது!
- பத்திரிகையாளர் மாலன்