தில்லியில் இருந்த அகதிகளை விட அஹமத்நகர் அகதிகளின் கோபம் இன்னும் அதிகமாக இருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது. அஹமத்நகர் மாவட்டத்தை ஒட்டியிருந்த ஹைதராபாத்தில்,ஹிந்துக்கள் 85 சதவிகிதம் இருந்தாலும்,
அதை ஆண்டு வந்த முஸ்லீமான நிஜாம் உஸ்மான் அலி கான் அஸிப் ஜா VII முஸ்லீம் மத தீவிரவாதிகளுடன் சேர்ந்துக் கொண்டு ஹிந்துக்களை ஒடுக்கி வந்தான். 85 % ஹிந்துக்கள் வாழ்ந்து வந்த இடத்தில்,அரசுப் பணிகளில் 80 சதவிகிதம் முஸ்லீம்கள் இருந்தார்கள்.
நிஜாமிற்கு,பாரதத்துடன் இணைய விருப்பம் இல்லை. சுதந்திரம் பற்றிப் பேச்சு வார்த்தைகள் நடந்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய ஐரோப்பிய ஏஜெண்டுகள் மூலம் ஆயுதங்கள் வாங்கிக் கொண்டிருந்தான்.
‘ரஸாக்கர்கள்’ ( RAZAKARS ) என்றழைக்கப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பிடம் ஆயுதங்களைக் கொடுத்து,’மக்கள் கிளர்ச்சி ‘ என்ற பெயரில்,ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி, பாரதத்துடன் இணைய மக்கள் மறுக்கிறார்கள் எனும் தோற்றத்தை ஏற்படுத்த அவன் திட்டமிட்டு வந்தான்.
‘ ரஸாக்கர்கள்’ என்றால் தொண்டர்கள் என்று பொருள். ரஸாக்கர்கள் உடனடியாக களத்தில் இறங்கி ஹிந்துக்களை அச்சுறுத்தத் தொடங்கினார்கள். அது மட்டுமல்லாது அண்டைய மாவட்டங்களிலும் அவர்கள் தங்கள் அச்சுறுத்தல்களை தொடங்கி னார்கள்.
இந்த ‘ ரஸாக்கர்கள் ‘ கும்பலின் தலைவன் கஸிம் ரிஸ்வி ஒரு மதவெறி பிடித்த கிறுக்கன். ‘ ஹைதராபாத் ஒரு முஸ்லீம் நாடு ‘ என்றும்,’ ரஸாக்கர் ‘ கள் துணையுடன் டெல்லியையே கைப்பற்றப் போவதாகவும் செருக்குடன் பேசித் திரிந்துக் கொண்டிருந்தான்.
இதை அறிந்த விஸாப்பூர் முகாமிலிருந்த ஹிந்துக்கள் பதில் தாக்குதல் நடத்த தீர்மானித்தனர். அவர்களுடைய இலக்கு அஹமத்நகர் மாவட்டம் வாழ் முஸ்லீம்கள். அஹமத்நகர் வாழ் முஸ்லீம்களிடம் வேலைகள் இருந்தன,வீடுகள் இருந்தன,கடைகள் இருந்தன. இவையெல்லாம்,அகதிகளாகி விட்ட தங்களுக்கு பங்களிக்கப்பட வேண்டியவை என்று முடிவு செய்தனர்.
மதத்தின் பெயரால் ஒரு நாடு கேட்டு,அதைப் பெற்ற பின்னும்,இங்கிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லாமல், முஸ்லீம்கள் இங்கு ராஜவாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்தது அவர்களுக்கு அவர்களுக்கு எரிச்சலூட்டியது.
அவர்கள் தெருக்கள் தெருக்களாக திரியத் தொடங்கினார்கள்,கோஷங்கள் எழுப்பினார்கள்,அச்சுறுத்தல்கள் விடுத்தார்கள்,ஊர்வலம் ஊர்வலமாகச் சென்று தங்கள் கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்தார்கள்.
அவர்களுடைய மனநிலையைக் கண்ட அரசு அதிகாரிகள் அச்சம் அடைந்தார்கள். அஹமத்நகர் மாவட்டத்திற்குள் யாரும் ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்று தடை விதித்தார்கள். இந்த தடை உத்தரவு முறையற்றது என்று கார்கரே கருதினார் ;
இந்த உத்தரவின் மூலம் ஹிந்துக்கள் நிராயுதபாணிகள் ஆகிவிடுவார்கள். ரஸாக்கர்கள் என்ற பெயரில் உலவி வந்த முஸ்லீம் குண்டர்களின் தாக்குதல்களுக்கு ஆளாவார்கள்,ஹிந்துக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளக்கூட முடியாது போய் விடும் என்று கருதினார். ஆகவே,அரசு அதிகாரிகளின் உத்தரவை ஏற்கும் மனநிலையில் கார்கரே இல்லை.
மாறாக,ஆப்தே திட்டமிட்டிருந்த ஹைதரபாத்‘ சுங்கச்சாவடி தாக்குதலை ‘ நடத்த ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார். அஹமத்நகரை மையமாக வைத்துக் கொண்டு தாக்குதல்களை தொடங்க வேண்டும் என்று முடிவுச் செய்தார்.
அதற்காக யாராவது ‘ கையெறி குண்டுகளை ‘ மலிவு விலையில் கொடுப்பார்களா என்று விசாரிக்கத் தொடங்கினார். திகம்பர் பாட்கே அதற்கு கூறிய விலை மிகவும் அதிகமாக இருந்தது.
ஒரு கையெறி குண்டிற்கு பாட்கே 200 ரூபாய் கேட்டார். பம்பாயில் இந்த குண்டுகள் மலிவு விலையில் கிடைப்பதாகவும்,பலர் ’ கையெறி குண்டுகள்’ தயாரித்து வருவதாகவும் கேள்விப்பட்ட கார்கரே .இதைப்பற்றி கண்டறிய பம்பாய் புறப்பட்டுச் சென்றார்.
அங்கே, செம்பூரில் அமைந்திருந்த அகதிகள் முகாமில்,இந்த கையெறி குண்டுகளை தயாரித்து வந்த ஒருவரை கண்டு பிடித்தார். அந்த நபர் பெயர் மதன்லால் பஹ்வா.
ஒரு அகதியாக,இவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றி ஏற்கெனவே விவரித்து இருந்தோம். பின்னாளில் காந்தி கொலை வழக்கில் ACCUSED NO.4 .அந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
இதைப் பற்றியும் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்