Home கட்டுரைகள் காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 88): துப்பாக்கி கொடுக்க மறுத்த தீக்ஷித்!

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 88): துப்பாக்கி கொடுக்க மறுத்த தீக்ஷித்!

அந்த 36 ரக கையெறி குண்டை ( GRENADE ) பயன்படுத்துவதில் அவர்களுக்கு கிடைத்த பயிற்சி அவ்வளவே; அந்த குண்டின் பின்னை வாயால் கவ்வி இழுக்க வேண்டும் என்று மனனம் செய்வது போல ஒருவருக்கு ஒருவர் கூறிக்கொண்டு இருந்தனர்.அதுவே அவர்களது நம்பிக்கையும் ஆனது.

அங்கு வந்தவர்களிடம் தன்னுடைய மேதாவிலாசத்தை பறைச்சாற்றிய பின் ,திக்ஷித் மஹராஜ் தன்னுடைய உடல் உபாதைக்கான ’மருந்து குளியலுக்காக ‘ அறையை விட்டு வெளியே சென்றார்;ஆனால் அவரது கோபம் குறைந்தபாடில்லை.ஏனென்றால்,குளித்து விட்டு மீண்டும் அறைக்கு வந்த அவர்,அவர்களோடு ஒத்துழைக்கும் மனநிலையில் இல்லை.

இதற்கிடையே,திக்ஷித் ஜி குளிக்கச் சென்றறிருந்த போது விருந்தினர்களாக வந்த ஐவரும் தனியே இருந்தனர். கார்கரே,மதன்லால் பஹ்வாவை தனியே அழைத்துச் சென்று ,காந்தியை கொல்ல தாங்கள் முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

மதன்லால் பஹ்வா எப்போதுமே முடிவுகளை சட்டென்று எடுப்பவர் ; உடனே செயலில் இறங்க வேண்டும் என்று எண்ணுபவர்; காந்தியை கொல்வது எனும் முடிவு மிகச் சிறந்த ஒன்று என்று கூறி விட்டு, திகம்பர் பாட்கேயின் வெடிகுண்டுகள் பையை தன் வசம் எடுத்து வைத்துக் கொண்டார் பஹ்வா.

பின்னர், அந்தப் பையை,நுழைவு ஹாலில் வைத்திருந்த தன் ‘ ஹோல்டாலுக்குள் ‘ வெளியே தெரியாதபடி செருகி வைத்து விட்டார். மதன்லால் பஹ்வா டெல்லி புறப்படுவதிலேயே குறியாக இருந்தார். அங்கே அவரது தந்தையும் சொந்தக்காரர்களும் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு புறம் காந்தியை கொல்லும், திட்டம், மறுபுறம் திருமணம்; இது எப்படி சாத்தியமாகும் என்று பஹ்வா யோசித்ததாகவே தெரியவில்லை. பஹ்வாவின் நலன் விரும்பியும், வழிகாட்டியுமான கார்கரே, டெல்லிக்குச் செல்லும் அடுத்த ரயிலில் பம்பாயை விட்டு புறப்பட வேண்டும் என்று கூறினார்.

டெல்லியில், ஹிந்து மஹா சபா பவனில், ஒரு அறையில் தங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆப்தேயும்,நாதுராமும் ஜனவரி மாதம் 18ந் தேதி காலையில் அவர்களை சந்திப்பது என்றும் முடிவானது.

ஆப்தேயும் நாதுராமும்,மூன்று நாட்களாக தங்கள் திட்டத்தைப் பற்றிய விவரங்களை மீண்டும் மீண்டும் ஆய்வு செய்திருந்தனர். காந்தியை கொல்லும் தங்கள் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற தங்களுக்கு இன்னும் இரண்டு ரிவால்வர்கள் தேவை என அவர்களுக்குத் தோன்றியது.

ஹைதராபாத்திலிருந்த தன் ஊழியர்களுக்கு திக்ஷித் மஹராஜ் ஏராளமான ரிவால்வர்களும் துப்பாக்கிகளும் கொடுத்திருந்தது அவர்களுக்குத் தெரியும்.

திகம்பர் பாட்கேயிடமிருந்தும் திக்ஷித் மஹராஜ் மூன்று ரிவால்வர்கள் வாங்கியிருந்தார். அவரிடமிருந்து எப்படியாவது ஒரு ரிவால்வராவது கேட்டு பெற்று விட வேண்டும் என்று தீர்மானித்த ஆப்தே,நாதுராம்,கார்கரே,மதன்லால் ஆகியோரை அறையை விட்டு வெளியேறுமாறு சைகைக் காட்டினார்.

அவரும் பாட்கேயும்,திக்ஷித் மஹராஜ் குளித்து விட்டு வருவதற்காக காத்திருந்தனர். திக்ஷித் ஜி அறைக்குள் வந்தவுடன் ஆப்தே அவரிடம் பேச்சு கொடுத்தார். ‘தாங்கள் காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்ப தாகவும்,டெல்லிக்கு அப்பால் பயணம் செய்வது சற்றே அபாயகரமானது என்பதால், தங்கள் பாதுகாப்பிற்காக ஒரு ரிவால்வர் தேவைப்படுவதாகவும் ‘ அவரிடம் கூறினார் ஆப்தே.

இதுகாறும் ஆப்தேயின் பேச்சுக்களில் கவரப்பட்டு அவரிடம் ஒரு மென்மையான அணுகுமுறையிலிருந்த திக்ஷித் ஜி மாறிப் போயிருந்தார். ஆப்தே மீது நம்பிக்கை இழந்து போயிருந்த திக்ஷித் மஹராஜின் அண்ணன் தாதா மஹராஜ் ஆப்தேயை ஊக்குவிக்க வேண்டாம், எந்த விதத்திலும் உதவ வேண்டாம் என்று கூறியிருந்தது போல் தெரிந்தது.

அவர் ரிவால்வர் கொடுக்க மறுத்து விட்டார். குறைந்தபட்சம் ஒரு ரிவால்வர் வாங்குவதற்கு பணம் கொடுங்கள் என்று கேட்டும், அதற்கும் மறுத்து விட்டார்.

ஆப்தேயும்,பாட்கேயும் அங்கிருந்து வெளியேறினர். பின்னாளில்,காந்தி கொலை வழக்கின் போது,அப்ரூவராக மாறி சாட்சியம் அளித்த திகம்பர் பாட்கே, ’தாங்கள் அறையை விட்டு வெளியேறி மற்ற நண்பர்களை நோக்கிச் செல்லும் போது,அந்த புலேஸ்வரர் கோயில் வளாகத்தில்,ஆப்தே திக்ஷித் மஹராஜை திரும்பிப் பார்த்து தங்களுடன் டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தாக தெரிவித்தார் ‘.

அந்த அறையில் நடந்த உரையாடல்களின் போதெல்லாம் அங்கிருந்த திகம்பர் பாட்கேவிற்கு, ஆப்தே,நாதுராம் உள்ளிட்ட நண்பர்களின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்று பின்னாளில்  போலீஸ் விசாரணையின் போது கூறியது நம்பக்கூடியதாக இல்லை.

ஆனால், வழக்கு விசாரணையின் போது கூறுகிறார்: ‘ ஆப்தேயிடம், ஏன் டெல்லிக்கு செல்கிறோம் என்று தான் கேட்டதாகவும் ,காந்தியையும்,நேருவையும் கொன்று விடும்படி அவருக்கும் (ஆப்தேயிற்கும்), நாதுராமிற்கும் சாவர்க்கர் கட்டளை இட்டிருப்பதாக தன்னிடம் ஆப்தே தெரிவித்தாக வாக்குமூலம் அளித்தார் ‘.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version