மதன்லால் பஹ்வா தன்னிடம் கூறியதாக Dr.ஜெயின்,போலீஸிடம் கூறிய தெல்லாம், ஜனவரி 20ந் தேதி காந்தியை கொலைசெய்ய நடந்த முயற்சி தொடர்பான சம்பவங்களின் தாக்கம் காரணமாக இருக்கக் கூடும்.
சதித்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களின் எல்லா விவரங்களும் தனக்கு ஜனவரி மாதம் 10ந் தேதியே தெரியுமென காந்தி கொலை வழக்கின் போது நீதிமன்றத்தில் Dr.ஜெயின் வாக்குமூலம் அளித்தார். ஆனால் இதைக் கடுமையாக மறுத்த மதன்லால் பஹ்வா, தனக்கே ஜனவரி 15 ந் தேதி வரை இது பற்றி தெரியாது என்று கூறினார்.
சம்பவங்களின் வரிசைக் கிரமம் பஹ்வாவின் இந்த கூற்றை ஆதரிக்கின்றன. கார்கரேயும், மதன்லால் பஹ்வா கூறியதை ஆதரித்தார்.
அதே போன்று, தன்னை பஹ்வா சந்தித்தபோது அஹமத் நகரில் தன்னுடைய பராக்கிரமங்களை கேள்விப்பட்ட சாவர்க்கர் அவரை அழைத்து இரண்டு மணி நேரம் பேசியதாகவும் அவருடைய முதுகில் தட்டிக் கொடுத்து ‘’ தொடர்ந்து செயல்படு ‘’ என்று கூறியதாகவும் தெரிவித்ததாக Dr.ஜெயின் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
ஆனால் முதன் முதலில் மாஜிஸ்திரேட் முன்பு Dr.ஜெயின் வாக்குமூலம் அளித்தபோது சாவர்க்கர் பெயரை அவர் குறிப்பிடவே இல்லை. ஆனால் ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது.
ஜனவரி மாதம் 15ந் தேதி மாலையில் மதன்லால் பஹ்வா,காந்தியை கொல்வதற்கோ அல்லது அதில் வேறு விதத்தில் பங்கேற்கவோ களம் இறங்கியிருக்கிறார் என்பது Dr.ஜெயினுக்கு தெரிந்திருக்கிறது. அதைத் தவிர வேறு விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்க சந்தர்ப்பமே இல்லை.
கார்கரே சேத் என கார்கரேயைப் பற்றி சில முறை தன்னிடம் கூறியிருந்ததால்,கார்கரே சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவராக இருக்க முடியும் என அவர் யூகிப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கலாம். ஆனால் சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரெல்லாம் என்று தனக்குத் தெரியும் என பின்னாளில் அவர் வாக்குமூலத்தில் கூறியதெல்லாம் நிச்சயம் உண்மையாக இருக்க முடியாது.
மதன்லால் தன்னிடம் பேசிய போதும் கூட,மற்றவர்களின் பெயர்களை கூறும்படி அவரிடம் வற்புறுத்தியதாகவும் கூடத் தெரியவில்லை.
இப்போது பின்னூட்டமாக…
மதன்லால் தன்னை சந்தித்தபின் Dr.ஜெயின் என்ன செய்தார் என்று பார்க்கலாம்.
தன்னை தந்தையாகக் கருதியதாகக் கூறிய மதன்லால் பஹ்வா, தன் அறிவுரையை ஏற்றிருப்பார் என்று நம்பி Dr.ஜெயின் வேறெதுவும் செய்யாது வாளாதிருந்து விட்டார். பஹ்வா Dr.ஜெயினை சந்தித்த இரண்டு நாட்கள் கழித்து தன் குடும்ப நண்பரும்,தன் வீட்டிற்கு அடிக்கடி வரும் அங்கத்சிங்கிடம் பஹ்வா தன்னிடம் கூறியதை Dr.ஜெயின் தெரிவித்தார்.
இந்த அங்கத்சிங்கை Dr.ஜெயின் பஹ்வாவிற்கு அறிமுகம் செய்து வைத்ததைப் பற்றி நாம் ஏற்கெனவே இந்தத் தொடரின் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.
‘ஒரு அகதியின் பீற்றல்களையெல்லாம் ‘ பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கூறிய அங்கத்சிங் எதற்கும் Dr.ஜெயின் இது குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவிப்பது நல்லது என்று ஆலோசனை கூறினார். ஆனால் Dr.ஜெயின் அப்படி எந்த அதிகாரியையும் சந்திக்கவில்லை.
Dr.ஜெயினின் வீட்டிலிருந்து விடைப்பெற்ற பஹ்வா,ஒரு பஸ்ஸை பிடித்து, விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே,கார்கரே ரயிலில் டெல்லிக்கு பயணிப்பதற்கான டிக்கெட்டுகளுடன் தயாராக இருந்தார்.
‘ பெஷாவர் எக்ஸ்பிரஸ் ‘ ரயிலில்,மூன்றாம் வகுப்பில்,எப்படியோ முட்டி மோதி இடம் பிடித்து விட்டனர் பஹ்வாவும்,கார்கரேயும். பெஷாவர் அப்போது,பாகிஸ்தானின் ஒரு பகுதி ஆகிவிட்டிருந்த போதிலும் ரயில் இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படாமலேயே இருந்தது.
அந்த பெஷாவர் எக்ஸ்பிரஸ் இரவு 9.30 மணிக்கு டெல்லியை நோக்கி,பம்பாய் விக்டோரியா டெர்மினஸிலிருந்து புறப்பட்டது.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்