சபரிமலை… அந்த 51 பேர்..! பதிவு செய்தவர்கள் எல்லாம் தரிசனம் செய்ததாக நினைத்துக் கொண்டார்களாம்!

சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை நேரத்தில் 51 பெண்கள் தரிசனம் செய்ததாக, கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. உண்மையை ஊடகங்கள் வெளிப்படுத்தியதும், மிகப் பெரிய சமாளிப்பாக, கேரள அமைச்சர், பதிவு செய்திருந்தார்கள், தரிசனம் செய்திருப்பார்கள் என்று நினைத்தோம் என கூறியதுதான் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

இது கேரளத்தில் மட்டுமல்ல, நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஹான்சாரியா, இதுவரை 51 பெண்கள் கோவிலுக்குள் சென்றுள்ளனர் என்ற தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அந்தத் தகவலில்,

சபரிமலை செல்ல 16 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 7,500 பேர் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள். இதில், ஆன்லைனில் பதிவு செய்யாமல் நேரடியாகச் சென்றவர்கள் தகவல் இடம்பெறவில்லை. நவம்பர் 16 முதல் தற்போது வரை 44 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர்.

50 வயதிற்கு உட்பட்ட 7,564 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இது அவர்களின் ஆதார் விவரம் மூலம் உறுதியாக தெரிகிறது. இவர்களில் 51 பெண்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். எங்களிடம் சபரிமலை வரும் பக்தர்களின் வயது குறித்து தெரிந்து கொள்ள வேறு வழிகள் இல்லை!

இப்படி, கேரள அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு பாஜக, காங்கிரஸ், சபரிமலை கர்ம சமிதி, பந்தளம் அரண்மனை என பல தரப்பும் கண்டனம் தெரிவித்தன!

தொடர்ந்து, சபரிமலைக்குச் சென்ற பெண் பக்தர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டனர். இந்தப் பட்டியலில், அவர்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்களும் இடம்பெற்றிருந்தது. எனவே, சம்பந்தப் பட்ட நபர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஊடகங்கள் உறுதி செய்யத் தொடங்கின. அப்போதுதான் கேரள அரசின் குட்டு வெளிப்பட்டது. இந்தப் பட்டியலில் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறானவை என்பது தெரியவந்தது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண்களில் ஒருவர் கூட கேரளத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை! எல்லா பெண்களும் 41-49 வயதில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் எவரும் பெண்கள் இல்லை. பெரும்பாலான எண்களையும் எடுத்துப் பேசியவர்கள் ஆண்களே! குறிப்பாக, தமிழகம் ஆந்திரத்தைச் சேர்ந்த ஏதோ எண்களை பட்டியலில் கொடுத்திருப்பது தெரியவந்தது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பெண்களுக்கு எங்களுக்கும் சம்பந்தமில்லை என அவர்கள் பதில் கூறினர். சிலர், பட்டியலில் குறிப்பிடப் பட்டுள்ள வயது தவறு; நாங்கள் 50 வயதைக் கடந்தவர்கள் என்று கூறினர்.

இருவர் மட்டும், தங்களது ஆன்லைன் பதிவின் போது வயது தவறாக பதியப்பட்டதாகக் கூறினர்.

இந்தப் பட்டியலில், அரசின் சார்பில் வலுக்கட்டாயமாக சபரிமலையில் தரிசனம் செய்ததாக பரபரப்பை ஏற்படுத்திய கேரளத்தைச் சேர்ந்த கனதுர்கா, பிந்து ஆகிய 2 பெண்களின் பெயர்களும் இடம்பெறவில்லை.

மேலும், பட்டியலில் கனதுர்கா என்ற பெண் பெயர் இருந்தாலும், அவர் தமிழகத்தில் இருந்து வந்ததாகக் குறிப்பிடப் பட்டது. அதில் தொடர்பு எண் எதுவும் இல்லை.

இந்நிலையில், ஊடகங்களின் கேள்விக்கணைகளால் திக்குமுக்காடிய கேரள அரசு, சபரிமலை தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மூலம் ஒரு தகவலை வெளிப்படுத்தியது.

ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த கடகம்பள்ளி சுரேந்திரன், “இதுவரை 7,564 பெண்கள் சபரிமலை கோயிலுக்கு செல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் வரிசைப்படி 51 பெண்கள் கோயிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் சன்னிதானத்தை அடைந்தார்களா? வழிபட்டார்களா? இல்லையா? எங்களுக்குத் தெரியாது” எனக் கூறினார்.

அதாவது, பதிவு செய்தவர்கள் எல்லாம் தரிசனம் செய்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவர்கள் தரிசனத்துக்காகச் சென்றார்கள் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை இது குறித்துக் குறிப்பிட்ட போது, “இது, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய். உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பொய்த் தகவலை கூறியதுடன், மக்களை முட்டாளாக நினைக்கிறது” என்றார்.

உச்ச நீதிமன்றம் ஏன் இப்படி ஒரு வலுக்கட்டாய திணிப்பை விரும்பியது, கேரள அரசு ஏன் இந்தத் தீர்ப்பை மட்டும் வலுக்கட்டாயமாக மக்களின் விருப்பத்தையும் மீறி செயல்படுத்த முயன்றது என்பதற்கெல்லாம் காலம் நிச்சயம் பதில் சொல்லும்!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...