spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தேசம் காக்கப் பட வேண்டும்! ஆனால் யாரிடமிருந்து..?

தேசம் காக்கப் பட வேண்டும்! ஆனால் யாரிடமிருந்து..?

- Advertisement -

“ மொத்த மார்க்கெட்டும் புயலால் தாக்கப்பட்டதைப் போலிருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் பணத்தைப் பறி கொடுத்த ஒரு முதலீட்டாளர் இருந்தனர். ஒரு காத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் இப்போது எதிரிகளாகிவிட்டனர். சந்தோஷமாக இருந்த குடும்பங்கள் துயரத்தில் மூழ்கின. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. வணிகர்கள் கடைகளைத் திறக்கவில்லை. ஒரு காலத்தில் அன்பு பரவிக் கிடந்த இடத்தில் இப்போது துரோகம் வியாபித்திருக்கிறது “ (டைம்ஸ் ஆப் இந்தியா 23 ஏப்ரல் 2013)
சுமார் 210 பேர் – ஏஜெண்ட்கள், முதலீட்டாளர்கள், அதிகாரிகள், கம்பெனிகளின் இயக்குநர்கள்- தற்கொலை செய்து கொண்டார்கள் (ஹிந்துஸ்தான் டைம்ஸ் 13 மே 2014)

இவற்றுக்கெல்லாம் காரணம் சாரதா நிதி மோசடி

சாரதா நிதி மோசடி என்றால் என்ன?

சாரதா குரூப் என்பது 200 தனியார் நிறுவனங்கள் சேர்ந்த ஒரு குழுமம். அவர்கள் ஒரு நிதித் திட்டத்தை நடத்தி வந்தார்கள். அதில் சேருகிறவர்களுக்கு சேர்ந்த சில காலத்திற்குப் பிறகு அவர்கள் முதலீடு செய்த தொகையைப் போல பல மடங்கு லாபமாகத் திருப்பிக் கொடுக்கப்பட்டது. அந்தக் குழுமத்தில் உள்ள நிறுவனங்கள் ஈட்டிய லாபத்திலிருந்து இது கொடுக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. இதன் மீது நம்பகத்தன்மையை உருவாக்க, வங்கமொழித் திரைப்படத் துறை, ஊடகங்கள், டூரிசம், மோட்டர் சைக்கிள் தயாரிப்பு, தேக்கு மர வளர்ப்பு, கால்பந்து குழுக்கள் போன்ற மக்கள் கண்களுக்குத் தெரியும் துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

ஆனால் நிறுவனங்களின் லாபத்திலிருந்து அல்ல, புதிதாக சேருகிறவர்களின் முதலீட்டிலிருந்து பணம் எடுத்து முன்பு முதலீடு செய்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது அதாவது உங்கள் பையிலிருந்த பணத்தை எடுத்து இன்னொருவருக்குக் கொடுப்பது. இன்னொருவர் பையில் உள்ளதை எடுத்து மற்றவர்ருக்குக் கொடுப்பது. மற்றவர் பையிலிருந்து உங்களுக்கு இப்படி ஆட்டைத் தூக்கி குட்டியில் போடும் கோல்மால் வேலை. குறுகிய காலத்தில் நிறைய பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பொது மக்கள் திமுதிமுவென போய் விழுந்தார்கள். அவர்கள் கனவுகள் ஒருநாள் முறிந்தன. தற்கொலை செய்து கொண்டார்கள்

சாரதா என்பது யார்?
ராமகிருஷ்ண பரமஹம்சரின் துணைவியார். அவர் பெயரை நிறுவனத்திற்கு வைத்தால் யோக்கியர்கள் என மக்கள், குறிப்பாகப் பெண்கள், எளிதாக நம்பிவிடுவார்கள் என்பதால் அந்தப் பெயரை கம்பெனி வைத்துக் கொண்டது,.

இது எவ்வளவு பெரிய ஊழல்?

17 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து சாரதா குழுமம் திரட்டிய தொகை 30 ஆயிரம் கோடி

இப்போதுதான் இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டதா?

இல்லை 2013லேயே ஊழல் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இந்த விவாகரத்தை முதலில் கையில் எடுத்தது செபி. பிராஸ்பெக்டஸ் என்னும் செயல் திட்டமில்லாமல் ஒரு நிறுவனம் 50 பேர் வரை பங்கிற்கான முதலீடுகளைப் பெறலாம். சாரதா இந்த ஓட்டையைப் பயன்படுத்தி பல நிறுவனங்களைப் போலியாகத் தொடங்கியது. விஷயம் அறிந்ததும் செபி விசாரணையைத் தொடங்கியது. செபி விசாரணையைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் மாநில அரசின் கவனத்திற்கு விஷயத்தைக் கொண்டு சென்று எச்சரிக்கை செய்தார்.

இதற்கிடையில் 2013 ஜனவரியில், நிறுவனம் கொடுக்க வேண்டிய பணம் நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்த பணத்தை விட அதிகமாக இருந்ததால் இந்த சீட்டுக் கட்டு கோபுரம் சாய்ந்தது
2013 ஏப்ரல் 6ஆம் தேதி சாரதா குழுமத்தின் தலைவர் சுதீப்தோ சென், சிபிஐக்கு 18 பக்க கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் பல அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்ட விவரத்தை எழுதியிருந்தார்.

அவர்கள் திருணாமூல் கட்சியினரா?

திருணாமூல் கட்சியின் எம்பிகள் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். குணால் கோஷ் என்ற திருணாமூல் மாநிலங்களவை உறுப்பினர்தான் சாரதா ஊடகக் குழுமத்தின் செயல் தலைவர் (CEO) அவருக்கு மாதத்திற்கு பதினாறு லட்சம் ரூபாய் சம்பளம். இன்னொரு எம்.பி. ஸ்ரீநிஜ்ஞாய்யும் சாரதா நிறுவனத்திடம் ஊதியம் பெற்று வந்தார். திருணாமூல் எம்பியும் நடிகருமான மிதுன் சக்ரவர்த்தி, திருணாமூல் எம்பியும் வங்க திரைப்பட நடிகையுமான சதாப்தி ராய் ஆகியோர் பிராண்ட் அம்பாசிடர்களாக இருந்தார்கள். மதன் மித்ரா என்ற போக்குவரத்து துறை அமைச்சர் கால்பந்து குழுக்களின் நிர்வாகத்தில் பங்கு பெற்றிருந்தார். ஜவுளித்துறை அமைச்சர் ஷ்யாமபாதா முகர்ஜி யின் குடும்பத்திற்குச் சொந்தமான லேண்ட்மார்க் சிமிண்ட்ஸ் என்ற ஆலையை சாரதா நிறுவனம் வாங்கிக் கொண்டிருந்தது

வங்கத்திற்கு வெளியில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளுக்கும் அரசியல் குடும்பங்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டிருந்தது

எல்லாவற்றிற்கும் மேலாக மம்தா பானர்ஜியின் ஓவியங்களை 1.8 கோடி கொடுத்து சாரதா நிறுவன தலைவர் சென் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது

அதிர்ச்சியாக இருக்கிறதே?

இதை விட திகைப்புக்குரிய செய்திகள் உண்டு. 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆனந்தபஜார் பத்திரிகா அயல்நாட்டு உளவுத்துறை அறிக்கைகளை ஆதாரமாகக் கொண்டு ஒரு தொடர் வெளியிட்டது. அதில் சாரதா குழுமம், திருணாமூல் எம்பியும், சிமி அமைப்பின் நிறுவன உறுப்பினருமான அஹமது ஹசன் இம்ரான் மூலமாக ஜமாத் ஏ இஸ்லாமி என்ற வங்கதேச தீவிரவாத அமைப்பை பணத்தை அயல்நாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது என்று அந்தத் தொடரில் எழுதியது. ஜமாத் ஏ இஸ்லாமி இதன் மூலம் கிடைத்த கமிஷன் பணத்தை அங்கிருந்த அரசுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்றப் பயன்படுத்தியது. வங்கதேச மனித உரிமை ஆர்வலர் ஷாரியார் கபீர் அல்கய்தாவிற்கும் பணம் போயிருக்கிறது எனக் குற்றம் சாட்டுகிறார்

தனது கட்சிக்காரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் மம்தா சிபிஐ விசாரணையை எதிர்க்கிறாரா?

சாரதா ஊழல் பற்றிய விசாரணைகளை அவர் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வருகிறார். வங்க தேச விவகாரம் வெளியானதும் ஷேக ஹசீனா அரசு அதைக் குறித்து ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்தது. மம்தா வங்கதேச தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவித்தார்

சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அமலாக்கத்துறை மூலம் விசாரணைக்கு உத்திரவிட்டார். 2014 மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு சிதம்பரம் இந்த நடவடிக்கை எடுக்கிறார் என்று மம்தா ஆவேசமாக குற்றம் சாட்டினார் அவரது மனைவி அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் தெரியுமா? என மேடைகளில் பேசினார். வங்க சட்ட அமைச்சர் சந்திரிமா பட்டாச்சாரியா தலைமையில் திரூணாமூல் கட்சியின் மகளிர் அணியினர் சிபிஐ அலுவலகம் முன்பு தர்ணாவில் அமர்ந்தனர்

இன்று சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய வேளையில் அதை விட்டுவிட்டு சாலையில் அமர்ந்திருக்கிறார் மமதா

வங்கத்தில் பல கட்சிக் கூட்டம் நடத்தியதால்தான் பாஜக இந்த நடவடிக்கை எடுத்தது என்கிறார்களே?

விசாரணையை சிபிஐ மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது உச்ச நீதி மன்றம். மே 9 2014 அன்று நீதிபதிகள் தாக்கூர், நாகப்பன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த ஆணையைப் பிறப்பித்தது. அப்போது பாஜக அரசு பதவியேற்றிருக்கவில்லை. 2014 தேர்தல் முடிவுகள் மே 16 அன்றுதான் வெளியாகின.

இந்த ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திரிபுரா அரசும் எனக் கோரியிருந்தது.

தேசம் காப்போம் என எதிர்கட்சிகள் முழங்குகின்றனவே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தங்களுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் தேசம் காப்போம், அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம் என்று எதிர்கட்சிகள் சீறி எழுகிறார்கள். இவர்களில் சிலர் அரசமைப்புச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட எமர்ஜென்சியின் போது எந்தத் தரப்பில் இருந்தார்கள் என்பதை நாடறியும்

தேசம் காக்கப்படத்தான் வேண்டும். யாரிடமிருந்து என்பதுதான் கேள்வி.

  • மூத்த பத்திரிகையாளர் மாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe