― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்#Exclusive காஞ்சியில் அதிர்ச்சி! வரதர் கோயிலில் திருட்டு முயற்சி! மூடிமறைக்கும் அதிகாரிகள்!

#Exclusive காஞ்சியில் அதிர்ச்சி! வரதர் கோயிலில் திருட்டு முயற்சி! மூடிமறைக்கும் அதிகாரிகள்!

- Advertisement -

காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராசப் பெருமாள் திருக்கோயிலில் பெரும் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளதாகவும், அதை அலட்சியப் படுத்தி, அறநிலையத்துறை அதிகாரிகள் மூடி மறைத்துள்ளதாகவும், இது மிகப் பெரும் கொள்ளைக்கு அடித்தளமிட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் பக்தர்கள்.

108 வைணவத் திருப்பதிகளில் மிகவும் புகழ்பெற்றது காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில். இங்கே கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி ஒரு மிகப் பெரும் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளதாகக் கூறப் படுகிறது. ஆனால், அது தோல்வியில் முடிந்துள்ளதாகவும், திருட்டு எதுவும் நடைபெறவில்லை என்பதால் அறநிலையத்துறை அதிகாரிகள் தடயங்களை மறைத்து இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று காட்டிக் கொண்டுள்ளதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விஷ்ணு காஞ்சிபுரத்தை கடந்த சில நாட்களாகக் கலக்கியடிக்கும் செய்தி இதுதான். கடந்த 7ஆம் தேதி காஞ்சி வரதர் கோயில் தாயார் சந்நிதி மேட்டின் மீது மின் ஒயர் கட்டர், கற்களை வெட்டும் கல்கட்டர், இரும்பைவெட்டப் பயன்படும் மெட்டல்கட்டர் உள்ளிட்ட சில வித்தியாசமான பொருள்களை, கோயில் ஊழியர்கள் கண்டனர். இது குறித்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் மேலும் ஊன்றிப் பார்த்த போது, தாயார் சந்நிதி மதில் சுவர் மீது நீளமான கயிறு ஒன்று தொங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், இது நிச்சயம் திருட்டு முயற்சிதான் என்று கூறி உடனே தங்கள் அளவில் ஏதேனும் திருடு போயிருக்கிறதா என்று சோதித்துள்ளனர். ஆனால் பொருள்கள் எதுவும் திருடு போகவில்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில், மதில் சுவரில் கயிறு, ஒயர் கட்டர், கல் கட்டர், மெட்டல் கட்டர் என வித்தியாசமான பொருள்கள் ஏன் அங்கே இருக்க வேண்டும் என்று சோதித்த போது, திருடர்களின் முயற்சிதான் இது என்பது தெரியவந்தது.

காஞ்சி வரதர் கோயிலில், பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக அலாரம் நிறுவப் பட்டுள்ளது. திருட வந்தவர்கள், தாயார் சந்நிதிக்கு அருகே உள்ள மேட்டிற்கு சென்று அலாரம் ஒயரை கட் செய்ய முயன்றுள்ளனர். அப்போது அலாரம் அடித்தவுடன் பயந்து போய், மதில் சுவரில் கட்டப் பட்டிருந்த கயறு வழியாக விறுவிறுவென இறங்கி தப்பியிருக்கிறார்கள்! செல்லும் அவசரத்தில், தாயார் சன்னதி மேட்டின் மீது ஓயர் கட்டர், கல் கட்டர், மெட்டல் கட்டர் போன்றவற்றை அப்படியே விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

இதை அடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து, உடனே மதில் சுவரில் கட்டப்பட்டிருந்த கயிறு, மெட்டல் கட்டர், வயர் கட்டர் போன்ற பொருள்களை அங்கிருந்து அப்புறப் படுத்தியுள்ளனர். தொடர்ந்து இது குறித்து தகவல் வெளியிட்ட அதிகாரிகள், இது கோயில் எலக்ட்ரீசியன் கட்டிய கயிறுதான் என்றும், கோயிலில் மின் சீரமைப்புப் பணிக்காக அவர் செய்திருக்கிறார் என்றும் கூறிவிட்டனர்.

காஞ்சி ஸ்ரீ தேவப் பெருமாள் சந்நிதி பெருமாள் தாயார் படம் பக்திசாரன்

ஆனால், இது எலக்ட்ரீஷியன் கட்டியிருந்த கயிறுதான் என்று சொல்லப்படும் செய்தியை பக்தர்கள் நம்ப மறுக்கின்றனர். எந்த எலக்ட்ரீசியனும் கயிறு கட்டி உள்ளே இறங்க மாட்டார் என்றும், கயிறு கட்டி அதில் இறங்கும் எலக்ட்ரீசியனைக் காட்டி விட்டால் தாங்கள் அதை நம்புகிறோம் என்றும் கோபத்துடன் கூறுகின்றனர் பக்தர்கள். இப்படி ஒரு சம்பவத்தை ஏன் அறநிலையத்துறை அதிகாரிகள் மூடி மறைக்க வேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர்.

இயல்புக்கு மாறாக, சந்தேகப் படும் விதத்தில் பொருள்கள் கிடைத்தால், கொள்ளை முயற்சி நடந்தது போல் ஒரு சந்தேகம் ஏற்பட்டாலே, அதிகாரிகள் உடனே போலீஸாருக்கு தகவல் அளித்து, அவர்கள் வந்து பார்த்துவிட்டு, பொருள்களைக் கைப்பற்றி, தடயங்களை சோதித்து, இது கொள்ளை முயற்சியா, வந்தவர்கள் யார் என்றெல்லாம் பதிவு செய்து கொள்வார்கள்! இதுதான் இயல்பு. ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகளோ போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமலேயே, தாங்களே அவற்றை அப்புறப் படுத்தி, தடங்களை அழித்து விட்டார்கள்.

அறநிலையத்துறை அதிகாரிகள் சொல்வது போல், இது எலக்ட்ரீஷியன் கட்டிய கயிறுதான் என்றால், இந்தச் சம்பவம் நடைபெற்று அடுத்த இரு நாட்களுக்கு ஏன் அந்தப் பகுதியில் போலீஸார் பாதுகாப்புக்கு சுற்றிச் சுற்றி வரவேண்டும். ஏன் அங்கே போலீஸ் பேட்ரால் இரண்டு தினங்களாக கோயிலைச் சுற்றி நடந்தது என்று பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்!

இதுகுறித்து காஞ்சி வரதர் கோயில் குறித்த வழக்குகளைக் கையாண்டவரும் கோயில் நடைமுறைகளை நன்கு அறிந்த அன்பருமான டி.சி.ஸ்ரீனிவாசனிடம் விசாரித்தோம். அன்று நடந்த சம்பவம் குறித்தும், இதற்கு முன்னர் இதே போன்று நடந்த சம்பவங்கள் குறித்தும் நம்மிடம் தெரிவித்த டி.சி.ஸ்ரீனிவாசன், நிச்சயமாக முதல்வரும், அறநிலையத்துறை அமைச்சரும் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், அன்பர்கள் பலரும் முதல்வர், அமைச்சர், அறநிலையத்துறை ஆணையர் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மின்னஞ்சல் வழியே தங்கள் புகார்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

டி.சி.ஸ்ரீனிவாசன் இது குறித்து எழுப்பும் கேள்விகள்… (ஒலிப்பதிவு)

https://dhinasari.com/wp-content/uploads/2019/02/tcsrinivasan-audio.mp3

மேலும் அவர் கூறியவை..: 1986ல் இதே போன்று ஒரு பெரிய கொள்ளைச் சம்பவம் நடந்தது. அப்போது, பெருமாளுக்கு சாற்றியிருந்த தங்க கவசம் மற்றும் தாயார் நகைகள் அனைத்தையும் கொள்ளை அடித்து, அவற்றை வெகு சாதாரணமாக தனது தலையில் மூட்டையாகக் கட்டி சுமந்து கொண்டு, கோயிலின் கிழக்கு கோபுர வாசல் வழியாகத்தான் அவனும் தப்பிச் சென்றான் என்று அப்போது நடைபெற்ற விசாரணையில் தெரியவந்தது.

கோயில் கிழக்கு கோபுரம் வாசல் பக்தர்களால் அதிகம் புழங்கப்படாத, பயன்படுத்தப் படத பகுதி. இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய எஸ்.பி., சரவணப் பெருமாள், அப்போது ஒரு யோசனை தெரிவித்தார். பக்தர்கள் அதிகம் புழங்காத இந்த கிழக்குக் கோபுர வாசலை நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று கூறினார். ஆனால் அவரது இந்த யோசனைக்கு, கிழக்குக் கோபுரத்தை ஒட்டி வசிக்கும் சில பெரியவர்கள், தாங்கள் கோயிலை வெகு தொலைவு நடந்து சுற்றிக் கொண்டு வர முடியாது என்று ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

இருப்பினும், இப்போதும் பயன்படுத்தப் படாத கிழக்கு கோபுர வாசலை நிரந்தரமாக மூடி வைக்கவேண்டும் என்று அப்போது விசாரணை மேற்கொண்ட அதிகாரி எஸ்.பி சரவணப் பெருமாள் சொன்னதை நிர்வாகத்துக்கு பலரும் நினைவுபடுத்தி வருகிறார்கள்.

பக்தர்கள் அதிகம் செல்லாத பொற்றாமரை குளத்துப் பக்கம் குடிகாரர்களின் கூடாரமாகத்தான் உள்ளது என்றும் புகார் கூறுகிறார்கள். இதே கோயிலில் இரண்டு வருடம் முன்பு நம்மாழ்வார் சந்நிதியில் ஒரு திருட்டு முயற்சி நடந்தது. ஆனால் ஏதும் திருட்டு போகவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், நம்மாழ்வார் சந்நிதியில் என்ன உள்ளது என்பதற்கு எந்தக் கணக்கும் ஆவணங்களும் இல்லை. என்ன இருந்தது என்பதற்குக் கணக்கு இருந்தால் தானே, என்ன திருடு போனது என்பது நமக்குத் தெரியும்?! இதைத்தான் அன்பர்கள் அன்றும் கோயில் நிர்வாகத்திடம் கேட்டனர்… என்று முன்பிருந்த பிரச்னைகளை நினைவு கூர்ந்த டி.சி. ஸ்ரீனிவாசன், தற்போது கோயிலுக்கு வரும் பக்தர்களின் சிரமங்களையும் அடிக் கோடிட்டார்.

கோயிலில் எந்த சந்நிதிக்குப் போனாலும் வலம் வருதல் மரபு. வலம் வந்து வணங்கினால்தான் இறையருள் பூரணமாகக் கிடைக்கும். ஆனால் அப்படி பிரதட்சிணமாகப் போக இங்கே வழியில்லை. கச்சிவாய்த்தான் மண்டபத்தை பிரதட்சிணமாக வருவது மரபு. இது, திருக்கச்சி நம்பிகளுக்கு பெருமாள் வார்த்தை சொன்ன மிக முக்கியத்துவம் வாய்ந்த மண்டபம். ஆனால் பக்தர்களை தங்கப்பல்லி தரிசனத்துக்கு அனுப்பி வைப்பவதற்காக, இந்த மண்டபத்தை பிரதட்சிணம் செய்ய முடியாத படிக்கு வழி தடை செய்யபட்டது.

அன்பர்கள் தங்களது வாழ்க்கையில் படும் சிரமங்களையும் பாவங்களையும் போக்கிக் கொள்வதற்காகத்தான் பெருமாள் கோயிலுக்கு வருகின்றனர். ஆனால் அவர்களை அப்பிரதட்சிணமாக, அதாவது தலைகீழாக வரச் செய்து, அவர்களுக்கு மேலும் பாபத்தையும் சோகத்தையும் சேர்க்கிறது கோயில் நிர்வாகம். இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டால், கூட்டம் அதிகம் வருகிறது, தங்கப்பல்லி தரிசனத்துக்கு தான் பலரும் வருகிறார்கள். அவர்களை முறைப்படுத்த வேறு வழியில்லை என்று கூறி, நிர்வாகம் பக்தர்களை வலம் வர இயலாமல் செய்து விடுகிறது.

கோயில் வெளி கோபுரத்தில் வெளிச்சம் இல்லை! கோயில் உள்ளேயும் வெளிச்சம் இல்லை. துவாரபாலகர்கள் மேல் படிந்திருந்த ஒட்டடைகளைக்கூட சுத்தப்படுத்துவதில்லை. நிர்வாகத்தில் நாத்திகர்களே பெருகியுள்ளனர். அவர்களுக்கு பக்தி சிரத்தை இல்லாவிட்டாலும், தாங்கள் வாங்கும் சம்பளத்துக்காவது விசுவாசமாக இருக்க வேண்டாமா? அறநிலையத் துறையில் இருப்பவர்கள் அறம் தவறி நடக்கலாமா என்று அன்பர்கள் உள்ளம் குமுறித்தான் சொல்கின்றனர்.

இந்த முறை நடந்த இந்தச் சம்பவத்தை அவ்வளவு எளிதில் கடந்து போய் விட முடியாது. ஏற்கெனவே பல்வேறு கோயில்களிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. விக்ரகங்களையே முழுதாகத் தூக்கிச் சென்று விடுகிறார்கள். சிலவற்றில் அறநிலையத்துறை அதிகாரிகளே உடந்தை என்று விசாரணை நடத்தும் காவலர்கள் கூறுகின்றார்கள். எனவே இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடந்தால்தான் திருட்டு முயற்சி குறித்த உண்மைகள் வெளியே வரும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version