கர்நாடக காங்கிரஸுக்காக பிரசாரம் செய்ய அங்கே ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட குஷ்பு ஓர் இளைஞரை கை நீட்டி அடித்திருக்கிறார். காரணம் தெளிவாகத் தெரியாது. இருப்பினும், அது என்ன காரணத்துக்காக வேண்டுமானாலும் இருக்கட்டும்; தேர்தல் பிரசார நேரத்தில் பொதுவாக அரசியல்வாதிகளுக்கு கடுமையான பொறுமையும் சகிப்புத்தன்மையும் இருக்கும். அதையும் மீறி ஒரு பொது இடத்தில் குஷ்பு அப்படி கோபப்பட்டு அடித்திருக்கிறார் என்றால், நிச்சயமாக தவறான எண்ணத்துடன் பின் தொடர்ந்த அந்த இளைஞரின் செயல் கீழ்த்தரமாகத்தான் இருந்திருக்கும்.
நடிகைகள் சினிமாவில் ஒரு கதாபாத்திரமாக நடிக்கிறார்கள், அது வெறும் கற்பனைக் காட்சிகள்தான் என்ற எண்ணம், திரைப்படத்தைப் பார்த்து ரசித்துவிட்டுச் செல்லும் ரசிகனுக்கு இருப்பதில்லை! அந்த சினிமாவில் கதாநாயகனுக்காக ஏங்கும் அல்லது காதலிக்கவும் கட்டியணைக்கவும் நடிக்கும் நிழலைப் போல் நிஜத்திலும் இருப்பார்கள் என்ற எண்ணத்தை ரசிகன் மட்டுமல்ல, சாதாரணமாகவே ஆண்கள் கொண்டிருப்பது மிகக் கொடுமையானது. எனவே நடிகைகளை யார் வேண்டுமானாலும் படுக்கைக்கு அழைக்கலாம்; நடிகையைத் தொட்டாலோ சீண்டினாலோ அவர்கள் ரசித்து இடம் கொடுப்பார்கள் என்ற கீழ்த்தரமான வக்கிர புத்தி நம் இடங்களில் இன்னும் இருக்கிறது என்பதைத்தான் அவ்வப்போதைய சீண்டல்களும், அவர்களைப் பார்ப்பதற்காகக் குவியும் கூட்டமும் காட்டுகிறது!
நடிகை குஷ்பு கற்பு குறித்துப் பேசியது ஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் மக்களுக்கு கடும் எரிச்சலை ஊட்டியது உண்மை. அதற்காக ஒரு பெண்ணை ஒழுக்கம் கெட்டு, ஒருவர் பொது இடத்தில் சீண்டுவதை எவரும் ஏற்க மாட்டார்கள்!
இது இப்படியே இருக்கட்டும்… நாம் நம் நாட்டை தாய் நாடு என்றே வர்ணித்துப் போற்றுகிறோம். தாய் ஒருவருக்கு பிறப்பைக் கொடுக்கிறார். உணவுக்கு வழி செய்கிறார். வயிற்றை நிரப்புகிறார். உடலுக்கு உரம் தருகிறார். அது போன்றதே நாடும்! உண்ண உணவு, இருக்க இடம், உடலுக்கு உரம், மண்ணில் விளையும் பயிராக, நீராக, சத்தாக என அனைத்தையும் கொடுத்து அரவணைப்பதால் தாய்நாடு ஆகிறது. அதையே, நம்மவர்கள் பாரத மாதா என்று அன்னையாக உருவகப் படுத்தினார்கள்! தாய் மொழி, தாய் நாடு என்பவை, மேற்கு உலகிலும் உள்ள சொற்றொடர்கள்தான்!
பிற பெண்களை தாயாக உருவகப் படுத்தி பார்க்கச் சொல்வதும் இந்த பாரதீய கலாசாரம்தான்! ஆனால் அந்த எண்ணத்தில் இருந்து வெளிவந்து, பெண்களிடம் அத்துமீறும்போது இயல்பாகவே இந்த சமூகத்துக்கு கோபம் ஏற்பட்டுவிடுகிறது.
நடிகை குஷ்புவும், என்னதால் கற்பு பற்றியும், சுதந்திரம் பற்றியும் பேசினாலும், தான் விரும்பாத நிலையில் ஓர் ஆண் தன்னை உடல் ரீதியாக சீண்டினால் தன் சுதந்திரத்தை முன்னிறுத்தி, கோபப் படுவதும், உடனடியாக எதிர்வினை ஆற்றுவதும் நியாயமானது. அதில் எந்தக் குற்றமும் நாம் காண இயலாது. சொல்லப் போனால், அவரது எதிர்வினைக்கு ஒவ்வொரு ஆண்மகனும் ஆதரவு கொடுக்க வேண்டும். கொடுப்பார்கள்.
ஆனால், குஷ்பு இங்கே ஒன்றைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இதைத்தான் மோடி செய்தார் என்பதையும், அதை குஷ்பு எப்படி அரசியலுக்காக விமர்சித்தார் என்பதையும் அவர் உணரத் தலைப்படவேண்டும். அதை உணர்ந்துதான், அப்படி ஒரு எதிர்வினையை குஷ்பு செய்திருக்கிறார் என்றே நாம் எடுத்துக் கொள்வோம்.
காஷ்மீர் இந்தியாவின் நிலம். நம் தாய்நாட்டின் பகுதி. இங்கே அன்னியர் வந்து தாக்குவதையும், ஆக்கிரமிப்பதையும், ஒரு தாயாகிய குஷ்புவை அன்னியன் ஒருவன் வந்து சீண்டுவதைப் போல்தான் எடுத்துக் கொள்கிறோம்.
ஆனால் #புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களையும்… #அபிநந்தன் விவகாரத்தில் இம்ரான்கானிடம் மோடி அரசியல் கற்க வேண்டும் என்றும் குஷ்பு சொன்ன போது, மற்றவர்களோ, குஷ்பு செய்த செயலை இப்போது நாமும் நியாயப் படுத்துவது போல், மோடியின் செயலை அனைவரும் ஆதரித்தோம். ஆனால், குஷ்புவை சீண்டிய காங்கிரஸ் கட்சியின் அந்த இளைஞனைப் போல், ஒட்டுமொத்த காங்கிரஸும் அத்தகைய மனநிலையைப் பெற்றிருந்தது என்பதுதான் உண்மை!
பாகிஸ்தான் மேற்கொண்ட புலவாமா தாக்குதலுக்கு பாலாகோட் தாக்குதல் மூலம் இந்தியா பதிலடி கொடுத்ததை விமர்சிப்பவர்கள்… உடனடியாக தாக்காமல், ஐ.நா சபையில் புகார் கொடுக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என்றும், புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று என்ன அத்தாட்சி இருக்கிறது என்றும், பாலாகோட் பதிலடி நடக்கவேயில்லை, என்ன சாட்சி என்றும் காங்கிரஸ்காரர்கள் சொல்வதுபோல்…
பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. என்று கூறிக்கொண்டிருக்கும் போதே… காங்கிரஸின் இளவல் ஒருவன் ஆவல் மிகுதியில்.. குஷ்புவை பாலியல் சீண்டல் செய்த உடனே… ஓங்கி கன்னத்தில் அறைந்தார் குஷ்பு! காங்கிரஸின் கொள்கைப்படி… இது எந்த விதத்தில் நியாயம்?! கர்நாடகாவை ஆட்சி செய்வது காங்கிரஸ் கூட்டணி… முறைப்படி போலிஸ் ஸ்டேஷன் சென்று சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் அளிப்பதுதானே நியாயம்..? அல்லது சமாதானமடைந்து… இம்ரான்கான் போல மன்னித்து விட்டிருக்க வேண்டும் அல்லவா…?!
மோடியைப் போல பதிலுக்கு பதிலாக தாக்குவது… பழிவாங்கும் செயலை செய்வது, உடனடி தண்டனை கொடுப்பது, #காங்கிரஸ் செய்து பழக்கமில்லையே.!? எப்படி காங்கிரஸின் கொள்கையை குஷ்பு மீறினார் என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!
இப்போது தெரிகிறதா? வலி என்றால் என்ன வென்று?! உங்களை ஒருவன் தொடுவதையே உங்களால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியவில்லையோ… அதுபோல், இந்தியா என்கிற எங்கள் தாய் மண்ணின் உடம்பில் இருந்து காஷ்மீரை அத்துமீறி தடவினால்… தேசப்பற்று உள்ள ஒவ்வொருவருக்கும் வலிக்கும்…
மோடி மட்டும்வேடிக்கை பார்ப்பாரா?
இப்போது தெரிகிறதா யார் யாரிடம் பாடம் கற்க வேண்டும் என்று..?!
நாம் எதைக் கையில் எடுக்க வேண்டும் என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்கிறான்.. அது அஹிம்சையா ? அல்லது ஆயுதமா ? என்று!