இரு நாட்களாக டிவிட்டர் பதிவுகளில் #நேசமணி #Nesamani #Pray_for_Nesamani என்றெல்லாம் ஹேஷ்டேக் போட்டு அவை சமூகத் தளத்தில் பதிவு செய்யப்பட்டன.

நேசமணி என்றதும் பலருக்கும் நினவுக்கு வருவது வடிவேலு நடித்த கேரக்டர் என்றால் அது இந்தக் கால இளசுகளுக்குத்தான். ஆனால், உண்மையில் மார்ஷல் நேசமணி என்ற பெயரில் இருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த தலைவர்தான் மொழி வாரி மாகாணப் பிரிவினையின் போது முன்னணியில் களத்தில் இருந்தவர் என்று வயதானவர்கள் மார்தட்டிச் சொல்வார்கள்.

அதே நேரம், சினிமா காமெடியில் நேசமணி பொன்னையா தெரு என்பதை, நாசமா நீ போனியா என்று ஜனகராஜ் காமெடியின் வாசித்த காட்சி தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இப்போது, இளையதலைமுறை ரசிகர்களால், வடிவேலு அந்த முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டு, நேசமணியாக நிற்கிறார்.

இந்திய அளவில் டிவிட்டரில் தற்போது டிரெண்டிங்கில் இருப்பது #Pray_for_Neasamani இந்த ஹேஸ் டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கானதற்கு ஒரு நகைச்சுவையான பதிவே காரணமாக அமைந்துள்ளது.

சிவில் இன்ஜினியரிங்க் லேனர்ஸ் என்ற பக்கத்தில் சுத்தியல் படத்தை போட்டு இதை உங்கள் ஊரில் என்னவென்று அழைப்பார்கள் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். அதில் நம்ம ஊரு குசும்புக்கார நெட்டிசன் ஒருவர் ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு சுத்தியலால் அடிபட்ட காட்சிகளை எடுத்து சொல்லி உள்ளார். அதனையடுத்து, ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி என்பதால் #Pray_for_neasmani என்ற ஹேஸ்டேகை நெட்டீசன்ஸ் டிரெண்ட் செய்துள்ளனர். அதனால், #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக் சுமார் 5 மணி நேரத்துக்கும் கூடுதலாக ட்ரெண்டில் இருந்தது.

விளையாட்டாக ஒருவர் சுத்தியல் படம் போட்டு பதிவு செய்ய, ஒருவர் இந்த சுத்தியல் தான் நேசமணியின் மண்டையை பதம் பார்த்தது என்று கருத்திட்டு பதிவு செய்ய… தொடர்ந்து டிவிட்டர் பதிவுகளில் இது ட்ரெண்ட் ஆக்கப் பட்டது.

இதைப் பார்த்த பலரும் சிரித்தார்கள். வெறும் ஒரு சினிமா கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு, அதை இந்த அளவுக்கு ட்ரெண்ட் ஆக்கப் படுகிறது என்பது நகைப்புக்கு உரியது.. அந்த அளவுக்கு வேலை வெட்டி இல்லாமலா தமிழர்கள் இணையத்தை மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்?!

2001ல் வெளியான படம் பிரெண்ட்ஸ், அதில் வரும் காமெடியை இன்றைய 25 வயதுக்குள் இருக்கும் இளைய தலைமுறை அதிகம் நினைவு வைத்திருக்க வாய்ப்பில்லை. டிவிட்டரில் அதிகம் பழகுவது இளைய தலைமுறைதான். தங்களுக்கு அதிகம் பழக்கம் இல்லாத ஒரு சினிமா காட்சியைக் கொண்டு இந்த அளவுக்கு டிரெண்ட் ஆக்கக் கூடிய அளவில் அவர்களுக்கு என்ன பைத்தியமா? என்று கேள்விகளை எழுப்புகிறார்கள்.

இதில்தான் பல சந்தேகங்கள் எழுப்பப் படுகின்றன. டிவிட்டர் ட்ரெண்ட் என்பது அரசியல் ரீதியாக ஆக்கப் படுவது என்பது தமிழகத்தைப் பொருத்தவரை தெளிவு. கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக் பிரபலம் ஆன போது, இது குறித்த ஆய்வுகள், அவை பாகிஸ்தானில் இருந்து ட்ரெண்ட் ஆக்கப் பட்டு, பாகிஸ்தானின் ஏஜெண்டுகளாக இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அனுதாபிகளால் மீண்டும் மீண்டும் பரப்பப் பட்டது என்று உறுதி செய்யப் பட்டது.

அது போல், தமிழகத்தில் திமுக.,வின் சமூக ஊடகக் குழுவால் ட்ரெண்டிங் செய்வதற்கு என்று சில ஹேஷ்டேக்குகள் எடுத்துக் கொள்வார்கள் என்று கூறப் படுகிறது.

இந்நிலையில், வடிவேலு காமெடியை வைத்து, அர்த்தமே இல்லாத ஒரு நேசமணி கதாபாத்திரம் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது போன்ற மடத்தனமானவற்றை மூளையுள்ளவர்கள் செய்வார்களா என்று கேள்வி எழுப்பும் பலர், இதன் பின்னணியில் சதி உள்ளதாகக் கூறுகின்றனர்.

அப்படி எனில் ஏன் நேசமணி பாப்புலர் ஆனார்?! சிலர், எஸ்.ஆர்.எம். தற்கொலைகளை மறைக்க… என்று கூறுகின்றனர். தமிழகத்தில் உள்ள ஆண்மையற்ற ஊடகங்கள் செய்யும் கீழ்த்தரமான வேலை இது எஸ் ஆர் எம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நான்கு மாணவர்கள் தற்கொலையைப் பற்றி விவாதிக்க வக்கற்ற ஊடகங்களின் கையாலாகாத தனம் தான் இவை.. என்று கருத்திடுகிறார்கள் சிலர்..

ஆனால் வேறு சிலர் கூறுவது, தேசிய அளவில் மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாஜக.,வின் வெற்றி குறித்து பேசப் படுகிறது. பல நாட்டுத் தலைவர்கள் பதவி ஏற்பில் பங்கேற்கின்றனர். இது போன்ற தேசியத்தின் முக்கிய நிகழ்வை திசை திருப்ப வேண்டுமென்றே சமூக ஊடகத்தின் பெயரைச் சொல்லி, திமுக., சார்புள்ள தமிழ் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் இதை செய்தியாக்கி, செயற்கையாக ட்ரெண்டிங் செய்ய வைத்தன என்கிறார்கள்.இந்தக் கருத்தோட்டத்தில் எஸ்.வி.சேகர் பதிவு செய்த கருத்து…

பொய் பிம்ப நேசமணிக்கு தமாசாக கவலைப்பட்ட அப்பாவி நெட்டிசன்களுக்காக பரிதாபப்படுவதா,இல்லை இந்த மீம்ஸை வைத்து இன்றய இந்தியாவின் மாபெரும் நிகழ்வை திசை திருப்பிவிடலாம் என நினைத்த அறிவிலிகளுக்காக பரிதாபப்படுவதா என யோசிக்கிறேன். வித்தியாச மண்.

இந்நிலையில், நேசமணி ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் ஒரு கலக்கு கலக்குவது குறித்துக் கூறி, வடிவேலுவின் கருத்தை அறிய முற்பட்டிருக்கிறார்கள் செய்தியாளர்கள். பலரும் வடிவேலுவுக்கு போன் செய்து, அவர் இது குறித்து என்ன நினைக்கிறார் என்று கேட்டு வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த வடிவேலு, “இந்த நேசமணிக்குக் கிடைத்த புகழ் எல்லாமே ஃப்ரண்ட்ஸ்' டைரக்டர் சித்திக்கையே சேரும். ஏன்னா, நேசமணின்னு ஒரு கேரக்டரை உருவாக்குனதே அவர்தான். ஷூட்டிங் ஸ்பாட்ல காமெடியில எனக்குத் தோணுற சின்னச் சின்ன ஐடியாக்களை அவர்கிட்ட சொல்வேன். ஒருமுறைகூட மறுப்பே சொன்னதில்லை.ஓகே வடிவேலு’னு ஏத்துக்கிட்டு சுதந்திரம் கொடுத்தார். அப்படியொரு பெருந்தன்மைகொண்ட டைரக்டர் சித்திக். கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி, சுராஜ்… வி.சேகர் இவங்க ஒவ்வொருத்தரும் வெவ்வேறு விதமான திறமைசாலிகள். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற நகைச்சுவை மன்னர்கள்.” என்றார்!

தொடர்ந்து… நீங்க நேசமணி டிரெண்ட்ல இருக்குன்னு சொல்றீங்களே, டைரக்டர் என் இஷ்டத்துக்கு நடிக்கவிட்டதுதான் அதுக்குக் காரணம். நான் நேசமணி டிரெண்டிங்ல இருக்கிறதை இன்னும் பார்க்கல! மோடி பதவியேற்கிறாரே… அந்த நியூஸ்தான் எனக்குத் தெரியும். இந்த நேசமணியை நான் இன்னும் பார்க்கல!” என்றார்.

இப்படி, இந்த நிகழ்வின் உள்நோக்கம் நடிகர் வடிவேலுவுக்கு தெரிந்திருக்கிறது. ஊடகங்களின் உள்நோக்கமும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், முட்டாள்களுக்குத்தான் தெரியவில்லை என்கிறார்கள் சமூக வலைத்தள அறிவுஜீவிகள்!

சொல்லப் போனால்… அண்ணாமலை படத்தில் வருவது போல்… ஜனகராஜ் சொல்லும் காமெடிதான் தமிழ்நாட்டில் பலருக்கும் பொருந்தி வந்திருக்கிறது. குஷ்பு முகவரி கேட்கும் போது, Nesamani Ponnaiya -என்பதை  Nasama ni poniya என்று படிக்கும் ஜனகராஜைப் போல்… அறிவார்ந்த தமிழர்களும் இத்தகைய திராவிட ஊடக மாயையில் இப்போது “நாசமா நீ போனியா” என்று ஒருவருக்கு ஒருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...