spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஊடகங்களின் கேடுகெட்ட நிலை: குழந்தைகள் மீதான வன்முறையை காதல் என்று அழைக்கலாமா?

ஊடகங்களின் கேடுகெட்ட நிலை: குழந்தைகள் மீதான வன்முறையை காதல் என்று அழைக்கலாமா?

- Advertisement -

dyfi sfi girl

ஒரு 16 வயது குழந்தை “சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்” பின்னர் “சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்” என்று செய்தி வெளியிடுகிறது கலைஞர் செய்திகள். இதையே அறிக்கையாக வெளியிடுகிறார் சிபிஎம் ஜி. ராமகிருஷணன். தமிழ்நாட்டின் பல ஊடகங்களும் பல அரசியல் அமைப்புகளும் இதனை ‘காதல்’ என்றும், ‘சாதிமறுப்பு திருமணம்’ என்றும் வர்ணிக்கின்றன. இதனை விசிக திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசுகிறார்!

பதினாறு வயது குழந்தை எப்படி கடந்த ‘சில ஆண்டுகளாக காதலிக்க முடியும்’? பதினாறு வயது குழந்தை எப்படி ‘சாதிமறுப்பு திருமணம்’ செய்ய முடியும்? இந்தக் கேள்வியை யாருமே கேட்கவில்லை. சாதியை ஒழிக்கிறேன் என்று அறிவித்துவிட்டால் இங்கே எல்லா அநியாயங்களையும் நியாயம் ஆக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு இதுவாகும்.

18 வயதுக்கு கீழான குழந்தை, தானே விரும்பினாலும் கூட திருமணம் செய்துகொள்ள முடியாது; தானே விரும்பி பாலியல் உறவு வைத்துக்கொள்ள முடியாது. அப்படியான நிகழ்வுகளில் தொடர்புடைய வயது வந்த நபர் தான் குற்றவாளி என்பதை இந்திய சட்டங்கள் தெளிவாக குறிப்பிடுகின்றன. அதாவது, குழந்தைகள் விரும்பினாலும் கூட, அது அவர்களை வயது வந்த நபர்கள் ஏமாற்றி சீரழிக்கும் குற்றமாகவே கருதப்படுகிறது.

ஆனால், சர்வ சாதாரணமாக 16 வயது குழந்தை ‘சில ஆண்டுகளாக காதலித்தார்’, பின்னர் ‘திருமணம் செய்துகொண்டார்’ என்று வெட்கம் கெட்டத்தனமாக ஊடகங்களும் அரசியல் அமைப்பினரும் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றனர்! ‘சாதிஒழிப்பு வெறி’ இவர்களின் கண்ணை மறைத்துவிட்டது!

ஒரு கொடும் குற்றத்தை கண்டிப்பதாகக் கூறி இன்னொரு கொடும் குற்றத்தை நியாயப்படுத்தக் கூடாது என்கிற மிக அடிப்படையான நேர்மை கூட இவர்களிடம் இல்லை! இங்கு எல்லா நியாயங்களையும் சாதிதான் தீர்மானிக்கிறது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உறுதி செய்கிறது.

நடந்தது என்ன?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வலையர் சமுதாய இளைஞர் கனகராஜ் (வயது 22) என்பவர், அதே பகுதியை சேர்ந்த அருந்ததியர் சமுதாய சிறுமி ஒருவரை (வயது 16) சட்ட விரோதமாக திருமணம் செய்துள்ளார். இவர்களை கனகராஜின் சகோதரன் வினோத் என்பவர் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

இந்த நிகழ்வை “கனகராஜ் என்பவரும் வர்ஷினி பிரியா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கனகராஜ் வலையர் சாதியை சேர்ந்தவர். வர்ஷினி பிரியா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரும் கடந்த ஜூன் 25ஆம் தேதி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட அன்றே, கனகராஜின் சகோதரன், புதுமண தம்பதியினரைச் சரமாரியாக வெட்டியுள்ளார்” – என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“வர்ஷினி பிரியா என்ற இளம் பெண்ணையும், அவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கனகராஜ் என்ற இளைஞரையும், கனகராஜின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் படுகொலை செய்துள்ளார்கள்” என்று திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

(ஆனால், கனகராஜுக்கும் அவரது அண்ணன் வினோத்துக்கும் இடையே இருந்த சகோதர சண்டை தான் படுகொலைக்கு காரணம் என காவல் துறையினர் கூறுகின்றனர். சாதி ஒழிப்பு விவாகாரமெல்லாம் இதில் இல்லை என்று காவல்துறை மறுக்கிறது. Claiming that the murder was not an act of honour killing, Inspector General of Police (West Zone) K. Periaiah said Vinothkumar murdered his brother due to personal issues between them. The Hindu, 27.6.2019)

குழந்தைகள் மீதான வன்முறை

கனகராஜையும் அவர் அழைத்துச் சென்ற சிறுமியையும் படுகொலை செய்திருப்பது மிகக் கொடூரமான குற்றம். இந்தக் குற்றத்தை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மிகவும் நியாயமான கோரிக்கை. அதே நேரத்தில் குழந்தைகள் மீதான வன்முறை நிகழ்வு ஒன்றினை – அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் காதல், திருமணம் என்கிற பெயரில் அழைப்பது மிக மோசமான அருவருக்கத்தக்க செயல் ஆகும்.

மேலும், பாலியல் குற்றத்துடன் தொடர்புடைய ஒரு நிகழ்வில் 16 வயது குழந்தையின் பெயரையும் அடையாளத்தையும் வெளிப்படையாக ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் வெளியிடுவது குற்றம். இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான செயல் ஆகும்.

குழந்தை திருமணமும் பாலியல் வன்கொடுமையும்

மேட்டுப்பாளையம் நிகழ்வில் – படுகொலை செய்த விநோத் மட்டுமே குற்றவாளி இல்லை. கொலை செய்யப்பட்ட கனகராஜும் ஒரு குற்றவாளிதான். கொலை செய்யப்பட்ட சிறுமி மட்டும் தான் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்பட்ட அப்பாவி.

‘காதல்’ என்றும் ‘திருமணம்’ என்றும் கம்யூனிஸ்ட் ஜி. ராமகிருஷ்ணனும் திருமாவளவனும் ஊடகங்களும் குறிப்பிட்டுள்ள நிகழ்வு இந்திய சட்டத்தின் படி காதலும் இல்லை; திருமணமும் இல்லை. உண்மையில் அது ஒரு சட்டவிரோத பாலியல் வன்கொடுமை ஆகும். இக்குற்றத்துக்கு குறைந்தபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறையில் தள்ள வேண்டும் என்கிறது இந்தியாவின் போஸ்கோ சட்டம் (அதிக பட்சமாக ஆயுள் தண்டனை).

18 வயதுக்கு கீழான பெண் ஒருவர் – வயது வந்த ஆணுடன் தானாக விரும்பி சென்றாலும், அல்லது தானாக விரும்பி பாலியல் உறவு வைத்துக் கொண்டாலும், அது சட்டப்படி குற்றம். இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வயது வந்த ஆண் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர். இது இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளது (Independent Thought Vs Union of India 11.10.2017)

எனவே, சட்டத்தின் பார்வையிலும், நீதிமன்றத்தின் பார்வையிலும் 18 வயதுக்கு கீழான குழந்தைகளுடனான பெரியவர்களின் காதல், திருமணம் என்பதற்கெல்லாம் வேலையே இல்லை. இவை அனைத்தும் இந்தியாவில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளன.

ஊடகங்களின் அட்டூழியம்

மேட்டுப்பாளையம் நிகழ்வு குறித்து – “கனகராஜூம், வர்சினி பிரியாவும் பெற்றோர் மற்றும் உறவினர்களின் அரட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சாது நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர்” என்கிறது கீற்று எனும் இணைய தளம்.

இதே போன்று “நீண்டநாள் காதல்” என்கிறது நக்கீரன்.
“காதல் ஜோடி” என்கிறது தினகரன்.
“பட்டியலின பெண்ணுடன் காதல்” என்கிறது ஆனந்த விகடன்.
“காதல் ஜோடி கொலை வழக்கு” என்கிறது தினமணி.
“வேறு சமூக பெண்ணுடன் காதல்” என்கிறது பாலிமர் நியூஸ்.
“கோவை காதல் ஜோடி” என்கிறது தந்தி டிவி.
“காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்” என்கிறது புதியதலைமுறை டிவி.
“காதலியின் கண்முன்னே வெட்டப்பட்ட காதலன்” என்கிறது கலைஞர் செய்திகள்.

இவ்வாறாக, ஒரு குழந்தை ஏமாற்றப் பட்டதையும், அதே குழந்தை மீண்டும் கொலை செய்யப்பட்டதையும் – மீண்டும் மீண்டும் “காதல்” என்று வர்ணித்து வருகின்றன தமிழ்நாட்டின் ஊடகங்கள்.

அரசியல் அமைப்புகளும் இதையே செய்கின்றன. இப்படியாக ஒரு சட்டவிரோத குற்றச்செயலை இவர்கள் அப்பட்டமாக மேன்மை படுத்தி பேசுகின்றனர்.

என்ன செய்ய வேண்டும்?

படுகொலையை கண்டிக்க வேண்டும், நீதிக்காக போராட வேண்டும். ஆனால், ‘படுகொலை’ என்கிற குற்றத்தை கண்டிக்கும் அதே வேளையில், ஒரு ‘குழந்தையை ஏமாற்றி அதன் வாழ்க்கையை சீரழிக்கும் படுபாதக செயலை’ புனிதப்படுத்தக் கூடாது!

சாதி ஒழிப்பு என்பது பெண் குழந்தைகளின் வாழ்வை சீரழிக்கும் ஆயுதமாக மாறுவதை இனியும் அனுமதிக்கக் கூடாது.

குழந்தைகள் உரிமைக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுவரும் ஊடகங்களையும், அரசியல் அமைப்புகளையும் இனியாவது கண்டிக்க நீதியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் முன்வர வேண்டும்.

குறிப்பு: தமிழ்நாட்டில் குழந்தைகள் உரிமைக்காக பாடுபடும் ஏராளமான அமைப்புகள் உள்ளன. அதில் ஒன்று கூட மேட்டுப்பாளையம் நிகழ்வில் குழந்தைகள் உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை. ஏனெனில், குழந்தைகள் உரிமைக்காக இயங்கும் அமைப்புகளை ஒரு சில சாதியினர் ஆக்கிரமித்து இருப்பது தான் இந்த இழிநிலைக்கு காரணம் ஆகும்.

கட்டுரை: – இர. அருள் ([email protected])

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe