என்ன..?! ஒரே நாள்ல தேரு நிலை சேர்ந்துடுமா?! ‘நெல்லை’ ஆச்சரியத்தை நிறைவேற்றிக் காட்டிய இந்துமுன்னணி!

அதான் சாயங்காலம் நிலையத்துக்கு வந்துருமே பின்ன என்ன இன்றே நிலையம் சேர்ப்போம்னு சொல்லுறாரு என இன்றைய தலைமுறையினர் கேட்கின்றனர். அவர்களுக்கு இதன் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

சுவாமி நெல்லையப்பர் ஆனித் தேர்த் திருவிழா கடந்த ஜூலை 14, ஞாயிறு அன்று கோலாகலமாக நடந்தேறியது. குவிந்த மக்கள் கூட்டம், நெல்லையப்பரின் பக்தர் கூட்டம்! எத்தனை எத்தனை ஊர்களில் இருந்து நெல்லைக்குக் குவிந்தார்கள்! இத்தனை பாரம்பரிய விழா மற்ற மாவட்டங்களில் இத்தனை உளப் பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் நடக்குமா என்பது தெரியாது! இந்த நேரத்தில்… நெல்லையப்பர் தேருக்கும் இந்துமுன்னணி க்கும் உள்ள வரலாற்று தொடர்பு தெரிந்து கொள்வோம்!

இன்றும் நெல்லையப்பர் தேரின் மேல் மைக் குழாயில் தேர் இழுப்பவர்களை உற்சாகப்பபடுத்தி பேசும் பெரியவர் செல்லும் வார்த்தை ஓரங்களில் நிற்கும் அன்பர்கள் பெரியவர்கள் முதலாளிகள் இளைஞர்கள் எல்லோரும் தேர் வடம் பிடித்து இழுப்போம் அம்மையப்பன் தேரை இன்றே நிலையம் சேர்ப்போம் வாரீர் என்பார்.

அதான் சாயங்காலம் நிலையத்துக்கு வந்துருமே பின்ன என்ன இன்றே நிலையம் சேர்ப்போம்னு சொல்லுறாரு என இன்றைய தலைமுறையினர் கேட்கின்றனர். அவர்களுக்கு இதன் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

இது காலங்காலமாக செல்லப்படும் வாசகம் அதை சொல்வதற்கு காரணமும் உண்டு! இறையருளால் மனித சக்தியால் மட்டுமே 516 வருடமாக இழுக்கப்படும் உலகின் மிகப்பெரிய தேர்! அருள்மிகு நெல்லையப்பர் திருத்தேர்!

இப்பொழுது எல்லாம் காலையில் கிளம்பும் தேர் மாலையில் நிலையம் வந்தடைகிறது. உயரம் 9 தட்டுகளிலிருந்து 5 ஆகவும் இரும்பு சக்கரங்கள் இருந்தும் கூட இப்போதே சுமார் 9 மணி நேரமாகிறது! ஆனால் சுமார் 33 வருடங்களுக்கு முன்பு வரை நெல்லையப்பர் தேர் ஒரு வாரம் பத்து நாள் ஏன் 28 நாட்களாக கூட இழுக்கப்படும்!

என்னது 28 நாள் தேரோட்டமா ஆச்சரியமா இருக்கா ? தெற்கு – மேலரதவீதி சந்திப்பில் உள்ள. சந்திப்பிள்ளையார் கோவிலை கடக்கவே 4 நாட்கள் ஆகுமாம்!

திருநெல்வேலிக்காரன் தேரை இழுத்து தெருவுல விட்ருவான்னு பழமொழி வந்ததே இதில் தான்! முதல் நாள் மட்டுமே முழுநாள் இழுப்பார்கள். அடுத்தடுத்த நாட்களில் மாலை 5 மணிக்கு மேல்தான் இழுப்பார்கள்!

நான் பள்ளியில் பயின்று கொண்டிருந்த காலம் … அந்த வாரம் முழுக்க டவுணில் உள்ள பள்ளிகள் 3.30க்கு முடிஞ்சிரும். அய்யய்யோ தேர் நிலையம் பக்கத்துல வந்துட்டாம்! நாளை முழு நேரம் ஸ்கூல் நடக்கும் என நானும் உடன் பயிலும் மாணவர்களை போல் வருத்தப்பட்ட காலம் உண்டு.

ரத வீதியில் பல பெரிய முதலாளிகள் சக்கை போடும் பணியாளர்களுக்கு காசு கொடுத்து தங்கள் கடை முன் தேரை ஒரு நாள் நிறுத்தி வைப்பர். கடைக்கு சுவாமி கடாட்சம் கிடைக்குமாம்..!

தேர் முன்பு ஆனந்தத்தில் பலர் செருப்பை மேலே தூக்கி பறக்கவிடுவர். சிலர் குறும்போடு நிரோத்தை பலூன் ஓதி பறக்க விடுவர். தகராறு நடக்கும்.. உடனே வடத்தை போட்டு விட்டு சென்று விடுவர். அடுத்து மறுநாள். இப்படியே போய் கொண்டிருக்கும்

பலர் மிட்டாய் கடை பொம்மை கடை வைத்து வியாரத்தை செய்து காசு பார்பதிலேயே குறியாக இருப்பர்! சிலர் மட்டுமே பக்தியோடு தேர் இழுப்பர்!

பொதுமக்கள் பலர் ஜாலியாக ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்து ரதவிதி சுற்றி இனிப்பு மிடாய் வாங்கி வீட்டுக்குச் செல்வர்…

ஆனால்… இதையெல்லாம் மாற்றி காட்டியது இந்து முன்னணி!

ஆம்.. 1980 ல் தமிழகத்தில் வீரத்துறவி இராம.கோபாலன் ஜி இந்துமுன்னணியை துவக்கினார். நெல்லை நகரில் 1982ல் துவக்கப்பட்டது நெல்லை நகர முதல் அமைப்பாளர் எனது தந்தை திரு.S.காந்திமதிநாதன். தற்போது இந்துமுன்னணி மாநில பேச்சாளராக உள்ளார்!

1984இல் வாகையடிமுனையில் காயல்பட்டினம் முஸ்லீம் வணிக வளாகம் கட்ட அங்கிருந்த சப்பானிமாடன் கோவிலை அகற்றிய போது இந்துமுன்னணி மிகப்பெரிய போராட்டம் செய்து சப்பானி மாடன் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது.

அந்த மாபெரும் வெற்றிக்கு பின் நெல்லை மாநகரில் இந்துமுன்னணி வேகமாக வளர துவங்கியது. P.S.மணிகண்டன் . G. கண்ணன் போன்ற பல இளைஞர்கள் இந்து முன்னணியில் இணைந்தனர்.

1986 ல் தேரை ஒரே நாளில் நிலையம் நிலையம் சேர்க்க இந்துமுன்னணி முடிவு செய்தது!

எனது தந்தையாரோடு, தென்காசி சுப்பிரமணிய ஐயர், பா.ரெங்கதுரை, மாருதி நாராயணன், சேதுராமலிங்கம், சுந்தரமகாலிங்கம்பிள்ளை, சிதம்பரம், கோமதிமுருகன், G.கண்ணன், P.S.மணிகன்டன் மற்றும் பலர் மாநகரில் களம் இறங்கி வேலை பார்த்தனர். RSS பொறுப்பாளர்கள் சுந்தரலெட்சுமணன்ஜி, பாஸ்கர்ராவ்ஜி ,பரமேஸ்வரன் ஜி, சுடலையாண்டி ஜி, இந்து முன்னணி மாநில பொறுப்பாளர்கள் டாக்டர் அரசுராஜா ஜி V.P.ஜெயக்குமார் ஜி வழிகாட்டினர்.

டவுண் குற்றால ரோட்டில் அப்போது இந்து முன்னணி நகர அலுவலகம். இரண்டு மாதத்திற்கு முன்பே வீரத்துறவி இராம. கோபாலன் ஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒரே நாளில் தேரை நிலையம் சேர்ப்போம் என இந்துமுன்னணி சார்பில் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

வியாபாரிகள் சங்கத்தில் பேசி அவர்களின் ஒத்துழைப்பு பெறப்பட்டது. கூலி தொழிலாளர் சங்கம், கை வண்டி இழுப்போர் சங்கம்,  ஆட்டோ ரிக்க்ஷா சங்கம் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து திருவிழா நோட்டீஸ் அடித்து கவர் போட்டு கொடுத்து இந்துமுன்னணி நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.

நகர் எங்கும் காவி பொடி கரைத்து ஒரே நாளில் தேரை நிலையம் சேர்ப்போம் என சுவர் விளம்பரம். எனது தந்தை காந்திமதிநாதன் ஒவியம், சுவர் விளம்பரம் எழுதுவார். அப்போது அவர் TVS டூவீலர் சர்வீஸ் ஒர்க்சாப்பில் வேலை.

அன்றைய பேட்டா காசில் மணிகண்டன் கண்ணன், கோமதிமுருகன், சிதம்பரம் எல்லோரும் சேர்ந்து காவிப் பொடி வாங்கி நைட் சாப்பிட்டு விடிய விடிய சுவர் விளம்பரம் எழுதுவர்! ஒரே நாளில் நிலையம் சேர்க்க வேண்டும் என ஊர் முழுவதும் பரப்பாக பேசப்பட்டது!

8 அடி நீளத்தில் இருந்த சிறிய தடி நன்கொடையாளர்களிடம் பேசி பெரிய தடி செய்யப்பட்டது! சங்கர் சிமென்ட் நிர்வாகத்திடம் பேசி இரும்பு பிளேட்டுகள் கொண்டு வரப்பட்டது!

Ex சேர்மன் வெங்காச்சி (எ) வெங்கடாச்சலம், வியாபாரி சங்கம் நாராயணன் போன்றவர்கள் ஒத்துழைப்பில் வெளியூர்காரர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது! அப்போதிருந்த திருக்கோவில் நிர்வாக அதிகாரி (திரு. ராமசந்திரன் என்பது நினைவு) நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.

பக்கத்து ஊர்களான வள்ளியூர், திருச்செந்தூர், தென்காசி, கோவில்பட்டி பகுதிகளில் இருந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் வந்தனர். தென்காசி சாஸ்தா ஜி, தலைமையில் இரு வேன்களில் வந்தனர். அம்பை சங்கரநாராயணன் என பல பொறுப்பாளர்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து வந்தனர்.

எல்லோருக்கும் சட்டை பேட்ஜ் வழங்கப்பட்டது. நகர் பொதுமக்களும் ஆர்வத்தில் பேட்ஜ் குத்தி இந்து முன்னணியாக மாறினர். இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யும் போதே பேட்ஜ் அடித்தால் மக்கள் ஆர்வத்தோடு வாங்கி குத்திக் கொள்வார்கள் என காந்திமதிநாதன் கூறினார். எதிர்பார்த்தபடியே நடந்தது!

இளைஞர்கள் தலையில் காவி ரிப்பன் கட்ட மணிகண்டன் ஆலோசனை கூறினார். ஆனால் ரிப்பன் காசு அதிகம். எனவே வாங்க வழியில்லை! காவி வேட்டியை வாங்கி கிழித்து ரிப்பனாக நூற்றுக்கணக்கில் தயாரிக்கப்பட்டது. இளைஞர்கள் ஆர்வத்தோடு தலையில் காவி ரிப்பனாக கட்டிக் கொண்டனர்.

அப்போதெல்லாம் இந்தளவு போலீஸ் பாதுகாப்பு கிடையாது. ஏதாவது பிரச்னை என்றால் மக்கள் வடத்தைப் போட்டு விட்டு சென்று விடுவார்கள் என்ற நிலையில்… பொறுக்கிகளுக்கு காவல்துறை நெருக்கடி கொடுப்பதில்லை!

இந்நிலையில் செருப்பு, நிரோத் பலூன் பறக்கவிட்டவர்களை காவல்துறை உதவியோடு வெளியூர் காவிப்படை கவனித்தது. தேர் இழுக்காமல் கடை திறந்து வியாபாரம் செய்த சிலருக்கு தனி கவனிப்பு.

இதையெல்லாம் விட மாவட்டம் முழுவதும் தெருமுனைப் பிரசாரம் நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தேரை வேடிக்கை பார்க்கும் உள்ளூர் வெளியூர் மக்களை தேர் இழுக்க வைத்து… அந்த வருடம் தேரில் ஏறி மைக்கில் பேசி வந்தவர் P.S.மணிகண்டன். தற்போது BJP பிரச்சார அணி மாவட்ட தலைவராக உள்ளார்.

தென்காசியில் இருந்து வந்த இருநூறு பேர் மத்தி வடத்துக்கு வரவும். நாகர்கோவில் நிர்வாகிகள் தடி போடும் இடத்துக்கு வரவும் என… ஆயிரக்கணக்கில் இந்துமுன்னணி தொண்டர்கள் ஆங்காங்கே நிற்பது போல் பில்டப் கொடுத்து சூழ்நிலை உருவாக்கப் பட்டது!

அதை மக்கள் நம்பியதற்கு காரணமும் உண்டு. ஏனென்றால் அதற்கு முந்தைய வருடம் தான் குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட பாலசந்தர் MLAஆக வெற்றி பெற்றார். அந்த பலத்தின் தாக்கம் இந்துமுன்னணி மீது போக்கிரிகளுக்கு பயமும் பொதுமக்களுக்கு ஈர்ப்பும் இருந்தது!

தொன்று தொட்டு தேருக்கு தடிபோடும் மலையாளமேடு தென்பத்து ஊர் நாட்டாமைகளை சந்தித்து மரியாதை செய்து இந்துமுன்னணி நிர்வாகிகள் பேசி ஒரே நாளில் நிலையம் சேர்க்க, அவர்களும் ஒத்துழைப்பு வழங்கினர்.

இத்தனை மிகப்பெரிய முயற்சிக்கு பின் 1986ல் இரவு 9 மணிக்கு ஒரே நாளில் நிலையம் சேர்ந்தது தேர். இன்றைக்கும் என்னைப் பார்க்கும் எனது தந்தை காலத்து சக நண்பர்கள் என்னிடம் சொல்வது… “ஏய் உங்கப்பா காந்தி அண்ணே முயற்சியில் தான் முதல்முதலா தேர் ஒரே நாளில் நிலையம் சேர்ந்தது” என்பார்கள்.

ஆனால் எனது தந்தை இந்தக் கதைகளை எல்லாம் சொல்லி, அது அப்ப இருந்த இந்துமுன்னணி பொறுப்பாளர்களின் மிகப்பெரிய டீம் ஓர்க் என்பார்.

நெல்லை வரலாற்றில்… நெல்லையப்பர் தேரோட்ட வரலாற்றில்… இந்துமுன்னணி மிகப்பெரிய முத்திரை பதித்துள்ளது!

– கா.குற்றாலநாதன், நெல்லை

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...