spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர்: பெருமிதமும் மன வலியும்! (நீங்கள் அறியாத வரலாறு!)

ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர்: பெருமிதமும் மன வலியும்! (நீங்கள் அறியாத வரலாறு!)

- Advertisement -

ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் – இன்றைய மதிப்பில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பெரும் சொத்துகளை தானமாக அளித்தவர்! ஆனாலும், அந்த சொத்து எதற்கு பயன்பட வேண்டும் என்பதில் அவர் எடுத்த முடிவு விநோதமானது!

‘குருவி தலையில் பனங்காயா’ என்பார்கள். ஆனால், ‘குருவி தலையில் இமய மலையா’ என்று கேட்கும் அளவிற்கு – மிகமிக குறைந்த பணம் தேவைப்படும் ஒரு நோக்கத்திற்காக மாமல்லபுரம் – சென்னை இடையே கிழக்கு கடற்கரை சாலையில் 1550 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துச் சென்றுள்ளார் ஆளவந்தார் நாயகர்.

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள், திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆகிய மூன்று கோவில்களில் சுவாமியின் திருநட்சத்திர நாளில் சுவாமிக்கு தளிகை விட வேண்டும் (நெய்வேத்தியம்/நிவேதனம்) என்பது தான் இந்த மாபெரும் தானத்தின் நோக்கம் ஆகும்.

அதாவது, மாதத்தில் ஒரு நாள் “வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை” போன்றதொரு சாதத்தை சுவாமிக்கு நிவேதித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். இதன்படி மூன்று கோவில்களிலும் ஒரு ஆண்டில் 12 நாட்களுக்கு பொங்கலோ, புளியோதரையோ வைத்து படைக்க வேண்டும். இதற்காக மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை எழுதி வைத்துள்ளார் ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர்.

அவரது உறவினர்களுக்கோ, அவர் சார்ந்த சமூகத்திற்கோ, அல்லது பரந்துபட்ட பொது மக்களுக்கோ குறிப்பிடத்தக்க பயனை அளிக்கும் வகையிலான ஒரு தானமாக இது அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனை உச்சக்கட்ட பக்தி என்றோ, மிக உயர்வான சன்னியாச நிலை என்றோ எடுத்துக்கொள்ள முடியாமா என்று தெரியவில்லை. ஆனால், தற்காலத்தில் அவரது சொத்துக்கள் ஒருபக்கம் பயன்படாமலும், இன்னோரு பக்கம் தவறான தேவைகளுக்காக தாரை வார்க்கப்படும் நிலையும் இருக்கிறது.

கிழக்கு கடற்கரை சாலைக்காக அவரது நிலம் எடுக்கப்பட்டது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக அவரது நிலம் எடுக்கப்பட்டது. சிலருக்கு கூட்டுப்பட்டாவாக கொடுக்கப்பட்டது. சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன. எல்லாவற்றையும் விட மிக மோசமான செய்கையாக, ‘பரத முனிவர் பண்பாட்டு மையம்’ என்கிற பெயரில் நாட்டியக்கலைஞர் பத்மா சுப்பிரமணியத்துக்கு 5 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. இந்த இடத்தை 2010 ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி தானமாக கொடுத்து அடிக்கல் நாட்டினார். பரத முனிவர் கோவிலை 2018 ஆம் ஆண்டு ரகசியமாக திறந்தார் பத்மா சுப்பிரமணியம்.

(தற்போது தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் இங்கு 150 ஏக்கரில் காற்றாலை அமைக்கும் திட்டத்தில் உள்ளது)

ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் வரலாறு

நெம்மேலி கிராமத்தில் வன்னியகுல சத்திரிய மரபில் வெங்கடபதி நாயகருக்கும், அகிலாண்டம்மாளுக்கும் மகனான 1835-ல் பிறந்தவர் ஆளவந்தார் நாயகர். அவரது இயற்பெயர் தம்பிரான் நாயகர் ஆகும்.

கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து உப்பு, காய்கறிகள், விறகு, சவுக்கு கரி முதலியவற்றை பக்கிங்காம் கால்வாய் வழியாக சென்னை நகருக்கு கொண்டு செல்வதை தொழிலாக செய்துவந்தார். இதனால் ஆங்கிலேயர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தார்.

வைணவ மரபை பின்பற்றிய ஆளவந்தார், திருமணம் செய்து கொள்ள மறுத்து ஆன்மீக வாழ்வை மேற்கொண்டார். தினமும் புதிய மண்பாத்திரத்தில் தானே சமைத்து, நாளில் ஒருவேளை மட்டுமே உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆழ்வார்பேட்டை கூரத்தாழ்வார் ஏகாங்கி சுவாமிகளிடம் வைணவ நெறிப்படி திருவிலச்சினை பெற்று கொண்டார். அப்போதுதான் தம்பிரான் நாயகர் என்கிற இயற்பெயர் ஆளவந்தார் நாயகர் என மாற்றம் பெற்றது.

சம்பாதித்த பணத்தைக் கொண்டு1877 ஆம் ஆண்டில் பட்டிபுலம், நெம்மேலி, சூளேரிக்காடு, கோவளம், கிருஷ்ணன்காரணை, சாலவன்குப்பம், பேரூர், கடம்பாடி, மாமல்லபுரம் ஆகிய ஊர்களில் நிலங்களை வாங்கினார். இந்த நிலங்களை 22.6.1914 ஆம் நாள் தானமாக அளித்தார். மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள், திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆகிய மூன்று கோவில்களில் சுவாமியின் திருநட்சத்திர நாளில் சுவாமிக்கு தளிகை விட வேண்டும் என்று உயிலில் குறிப்பிட்டார்.

மேலும் தனக்கு பிறகு தனது தம்பி வீராசாமி நாயகரின் மகன் முத்துக் கிருஷ்ண நாயகர் தனது தரும காரியத்தை மேற்கொள்வார் என்றும், ‘அவருக்கு சொத்தில் எந்த பங்கும் இல்லை’ என்றும் குறிப்பிட்டார். அதாவது, தம்பி மகனுக்கு தனது தானத்தை மேற்பார்வை செய்யும் உரிமையை மட்டுமே கொடுத்தார். அதே ஆண்டு 8.8.1914 ஆம் நாள் ஆளவந்தார் நாயகர் இயற்கை எய்தினார்.

(ஆளவந்தார் நாயகர் தனது வாரிசாக நியமித்த வீராசாமி நாயகர் மகன் முத்துக்கிருஷ்ண நாயகர் 21.3.1997 ஆம் நாள் இயற்கை எய்தினார்).

விநோத வழக்கு

“சுவாமியின் நட்சத்திர நாளில் சுவாமிக்கு தளிகை விட” எவ்வளவு நிதி தேவையோ, அதை விடவும் மிக அதிக சொத்தினை ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் மூன்று கோவில்களுக்கு எழுதி வைத்ததால் நிறைய அளவு பணம் மீதம் ஆனது. எனவே, ஆளவந்தார் நாயகர் கூறிய படி தளிகை பணிகளுக்கு செலவிட்டது போக, மீதமுள்ள பணத்தை வேறு தர்ம காரியங்களுக்கு செலவிடுவது தொடர்பான வழக்கு 1914 டிசம்பர் மாதம் தொடரப்பட்டது. 25.4.1918 ஆம் நாள் மெட்ராஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகரின் உயிலில் உள்ள குறைபாடுகள் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மூன்று கோவில்களில் ஆண்டில் 12 நாட்களுக்கு ‘பொங்கலோ, புளியோதரையோ’ வைத்து சாமிக்கு நிவேதனம் செய்வதற்காக மட்டுமே இவ்வளவு பணத்தை செலவிட முடியுமா? அப்படியானால் இவ்வளவு சொத்தையும் வேறு என்னதான் செய்வது? – என்கிற விநோதமான நிலைமை நீதிமன்றத்துக்கு வந்தது. 1918 ஆம் ஆண்டிலேயே – 8000 ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால், ஒவ்வொரு கோவிலுக்கும் தளிகை விட அதிகபட்சமாக தலா 500 ரூபாய் போதும். ஆக மொத்தம் மூன்று கோவிலுக்கும் சேர்த்து 1500 ரூபாய் போக, மீதமுள்ள பணத்தை என்ன செய்வது என்று நீதிபதிகள் விவாதித்தனர்.

கோவிலுக்கு தளிகை விடுவதற்காக கொடுத்த தானத்தை கொண்டு – கல்வி பணிகளுக்கு செலவிடலாமா? அப்படி செய்தால் அது ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் தானம் செய்த ‘தளிகை’ நோக்கத்துக்கு எதிராக அமையாதா? என்கிற கேள்விகள் கேட்கப்பட்டன.

கடைசியில் – இந்து மதத்தில் சிறந்த தானம் என்பன ‘கோதானம் (பசுமாடு), பூதானம் (நிலம்), சிக்ஷா தானம் (கல்வி) ஆகியன தான். இந்த மூன்றிலும் உயர்வானது கல்வி (சிக்ஷா) தானம் தான்.

அறப்பணிகளில் ஒரு அங்கம் தான் மதச்சேவையே தவிர, அறப்பணியை விட மத நோக்கம் மேலானது அல்ல. மேலும், ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் கல்வியறிவு பெறாதவராக இருந்ததால் அவரால் சரியான உயிலை உருவாக்க இயலாமல் போயிருக்கலாம். தனது சொத்தில் இருந்து எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை சரியாக கணிக்காமல் அவர் உயிலை எழுதியிருக்கலாம். எனவே, அவரது தர்ம நோக்கத்தை விடவும் மிக அதிகமான வருமானம் வருவதால், அதனை என்ன செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கலாம் என நீதியரசர் சேஷாத்ரி ஐயர் தீர்ப்பளித்தார்.

ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகரின் தம்பி மகனுக்கு மாதம் 40 ரூபாய் ஊதியம் கொடுக்க வேண்டும். கூடுதலாக இரண்டு அரங்காவலர்களை நியமிக்க வேண்டும். அதில் ஒருவர் பிராமணர் அல்லாதவராக இருக்க வேண்டும். மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவில்களில் சுவாமியின் திருநட்சத்திர நாளில் தளிகை விடுவதற்காக ஆண்டுக்கு தலா 500 ரூபாய் செலவிட வேண்டும். திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோஸ்தவத்தின் போது பிராமணர் அல்லாத மக்களுக்கு பிரசாதம் அளிக்க ஆண்டுக்கு 500 ரூபாய் செலவிட வேண்டும் (1918 ஆம் ஆண்டில் இந்த தொகை மிகப்பெரிய பணம்).

மேற்படி செலவுகள் போக, மீதமுள்ள பணத்தை கொண்டு பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு தமிழ் பிரபந்தங்களை கற்பிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இன்றைய நிலை

ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை வசம் உள்ளது. 1914 ஆம் ஆண்டில் 1550 ஏக்கர் நிலம் இருந்த நிலையில், தற்போது சுமார் 1000 ஏக்கர் மீதம் இருக்கும் என கருதப்படுகிறது. ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் கோரிய படி மூன்று கோவில்களிலும் தளிகை விடும் பணியை இந்து சமய அறநிலையத் துறை மேற்கொள்கிறது. நெம்மேலியில் அவரது நினைவிடம் 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அங்கு ஆண்டுதோரும் குருபூசை விழா ஆடி மாதம் புராட்டாதி நாளில் நடக்கிறது.

நெம்மேலியில் செயல்படும் தமிழ்நாடு அரசின் கடல்நீரை குடிநீராக்கும் திட்ட நிலையத்திற்கு ‘ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர்’ பெயரை சூட்ட வேண்டும் என 2013 ஆம் ஆண்டு மாமல்லபுரம் வன்னியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட பாமகவினர் 2017 ஆம் ஆண்டில் போராட்டங்களை நடத்தினர்.

ஒரு பக்கம் – ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகரின் பக்தி நோக்கத்தின் படி கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று வைணவ கோவில்களிலும் ஆண்டுக்கு 12 நாட்கள் சுவாமிக்கு நிவேதனம் செய்யம் பணிகள் நடக்கின்றன. மறுபக்கம் – இன்றைய மதிப்பீட்டில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள், குறிப்பிடத்தக்க பொது நோக்கம் எதற்கும் பயன்படாமல் கிடக்கின்றன!

எனவே, ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் வரலாறு ஒருபக்கம் பெருமிதத்தையும் மறுபக்கம் மன வலியையும் அளிக்கிறது.

குறிப்பு:

*இந்த ஆண்டு 2019 ஆடி புராட்டாதி நாளான ஜூலை 21 மற்றும் 22 ஆம் நாட்களில் ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் 105 ஆம் ஆண்டு குருபூஜை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் நடைபெற்றது.

  • பரத முனிவர் என்பது ஒரு கட்டுக்கதை என்றும், அது தமிழர் பழமையை இருட்டடிப்பு செய்வதற்காக உருவாக்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது. ‘நாட்டியத்தின் மூலம் சிவபெருமானே, பரதமுனி அல்ல’ என்பதே தமிழர் நம்பிக்கை. நாட்டியத்தின் அதிபதியான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பரதமுனி இல்லை. ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர் நோக்கத்துக்கு புறம்பாக பரத முனி ஆலயம் அமைக்க அவரது நிலத்தை, கருணாநிதி, பத்மா சுப்பிரமணியத்துக்கு அளித்த செயல் நேர்மையில்லாத தமிழினத் துரோகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe