காஷ்மீர் 370 – என்ன நடந்தது? மோடி-ஷா-டோவல் எப்படி சதுரங்கத்திலே வேட்டையாடினார்கள்?

இதுவரை எந்த ஒரு நாடும் கண்டனம் தெரிவிக்கவில்லை. சவூதி, துருக்கி, மலேசியா போன்ற நாடுகளிடம் பாகிஸ்தான் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. அமெரிக்கா இன்றைக்கு இது இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என சொல்லிவிட்டது.

நேரு செய்த முட்டாள்தனமான 370 ஐ, 70 வருடங்களாக இருந்த ஒற்றைத் தலைவலியை, காலையிலே 11.30 க்கு நீக்குவோம் என அறிவித்து மாலை 4.30 க்கு நாடாளுமன்றத்திலே சட்டம் நிறைவேற்றி 5 மணிநேரத்திலே நீக்கியது மாபெரும் சாதனை.

இதிலே ஏகப்பட்ட வேலைகள் ஓடியிருக்கின்றன. பல வருடங்களாக உழைத்த உழைப்புக்கு பலன் கிட்டியிருக்கிறது.

முதலிலே சட்டத்தை பார்ப்போம். நாம் புரிந்து கொள்ளவேண்டியது பிரிவு 370 நீக்கப்படவில்லை. அது அரசியலமைப்பு சட்டத்திலே தான் இருக்கிறது. ஆனால் அது வேலை செய்யாதபடி ஆக்கப்பட்டது. ஏன் எப்படி என புரிந்து கொள்ள அது முதலிலே ஒரு இடியாப்ப சிக்கல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

370 வரும்போது காஷ்மீரிலே அரசியல் நிர்ணைய சபை என்ற ஒன்று இருக்கிறது. அது சட்டசபையாக மாற்றப்படவில்லை. கவனிக்கவும்… நமக்கு எப்படி நாடாளுமன்றத்திலே அரசியல் நிர்ணைய அவை கூடியதோ அதே போல அவர்களுக்கு.

இந்த 370 ஐ அந்த அரசியல்நிர்ணைய அவை தான் மாற்றமுடியும் என எழுதிவிடுகிறார் நேரு. அந்த அவை 1957வாக்கிலே கலைக்கப்பட்டு தேர்தல் வைக்கப்பட்டு சட்டசபை கூடிவிடுகிறது. அதனால் எப்போதும் 370ஐ நீக்க முடியாது என ஆகிவிடுகிறது. ஏனென்றால், அதான் அரசியல் நிர்ணைய அவை இல்லை; அது மாறிவிட்டது. சட்டப்படி அது தான் 370ஐ நீக்க ஒப்புக் கொள்ளவேண்டும் இப்போது அது இல்லை.

அடுத்து பிரிவு 35ஏ எப்படி வந்தது என்று பார்ப்போம். இந்த 370 வந்ததற்குப் பின்னர் ஷேக் அப்துல்லா வுடன் நேரு இன்னுமோர் வேலை செய்கிறார். 35ஏ பிரிவை குடியரசு தலைவர் போட்ட உத்தரவின் மூலம் அரசியலமைப்புக்கு உள்ளே நுழைக்கிறார். இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் குடியரசு தலைவர் ஆணையின் படி 35ஏ நம் அரசியல் சட்டத்திலே சொருகப்படுகிறது.

இப்படி குளிப்பாட்டி மஜாஜ் பண்ணியதால்தான் அங்கே ஷேக் அப்துல்லா வேறு ஒரு காரியம் செய்கிறார். பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையிலே இடம் கொடுக்கிறார். அந்த இடங்கள் இப்போதைக்கு காலியாக இருக்கும் பின்னால் நிரப்பிக் கொள்ளலாம் என … என்று நேருவிடம் சொல்லிவிட்டு அந்த மக்கள்தொகையைக் கணக்கு காட்டி, காஷ்மீருக்கு மட்டும் அதிகளவு இடங்களை வைத்துக்கொள்கிறார்.

ஜம்முவும் காஷ்மீரும் ஏறக்குறையை ஒரே மக்கள்தொகை என்றாலும் காஷ்மீருக்கு 9 இடங்கள் அதிகம். மொத்தம் 111 இடங்கள், அதிலே 24 பாக்., கையிலே இருக்கும் காஷ்மீருக்கு, 46 காஷ்மீருக்கு, 37 ஜம்முவுக்கு! பிறகு… போனாப்போகுது என்று 4 லடாக்குக்கு.

இப்போது 111 இடங்களிலே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும் என்றால் அது எப்போதும் வராது ஏனென்றால், அதுதான் 24 எப்போதுமே காலியாக இருக்குமே?

இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலை நேருவும் அவர் குளிப்பாட்டியதால் சொக்கிய ஷேக் அப்துல்லாவும் செய்துவிட்டுப் போனார்கள். இப்போது அதைத் தூக்க வேண்டும் என்றால் என்ன செய்வது?  சிக்கல் என்ன?

காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை இப்போது இல்லை. அதனால் 370 ஐ தூக்க முடியாது. நம் உச்ச நீதிமன்றம் 370ஐ தூக்கவே முடியாது என்று வேறு தீர்ப்பு அளித்திருக்கிறது. 24 இடங்கள் இல்லாததால் சட்டசபையில் வென்று எந்த நிலையிலும் அங்கே சட்டத்திருத்தமும் கொண்டுவரமுடியாது.

பெரும்பான்மையை கையிலே வைத்திருக்கும் தேசவிரோதிகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏதாவது செய்தாலும் உச்ச நீதிமன்றத்துக்கு போவார்கள். அதுவும் அவர்களுக்கு சாதகமாகவே நடந்துகொள்ளும் என்பது கடந்த கால நடவடிக்கைகளின் வெளிப்படை!

சரி என்ன செய்யலாம் என மூளையைக் கசக்கி யோசித்து ஓர் இடியாப்ப சிக்கலான வழியைக் கண்டுபிடித்தார்கள். அதுதான் பிரிவு 367 வழியாக 370ஐ 370 வைத்தே தூக்குவது.

பிரிவு 367 என்ன சொல்கிறது? சட்டங்களை யார் இயற்றினாலும் அது நாடாளுமன்றமாக இருந்தாலும் சட்டசபையாக இருந்தாலும் மாநில ஆளுநராக இருந்தாலும் குடியரசுத் தலைவராக இருந்தாலும் ஒருத்தரை சொன்னால் இன்னோருத்தரையும் சொல்ல வேண்டும் என்ற சட்டம்!

புரியும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால், நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கும் குடியரசுத் தலைவர் போடும் உத்தரவுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை எல்லாம் ஒன்றுதான் என சொல்வது!

அதிலும் மூன்று உப பிரிவுகள் உள்ளன.  இதில் என்ன செய்தார்கள்… புதிதாக ஒரு பிரிவை சேர்த்துவிட்டார்கள்.

அதில் கீழ்க்காணும்  உப பிரிவுகளை சேர்த்தார்கள்.

“(4) For the purposes of this Constitution as it applies in relation to the State of Jammu and Kashmir-

(a) references to this Constitution or to the provisions thereof shall be construed as references to the Constitution or the provisions thereof as applied in relation to the said State;

ஜம்மு காஷ்மீரை பத்தி சொல்வதெல்லாம் இந்த அரசியலமைப்பு சட்டத்தை பற்றி குறிப்பிடுகிறது.

b) references to the person for the time being recognized by the President on the recommendation of the Legislative Assembly of the State as the Sadar-i-Riyasat of Jammu and Kashmir, acting on the advice of the Council of Ministers of the State for the time being in office, shall be construed as references to the Governor of Jammu and Kashmir;

ஜம்மு காஷ்மீர் சட்டசபை, அதன் கவர்னர் அதன் மந்திரி சபையின் ஆலோசனை பேரில் நடப்பதை பற்றி சொல்வதெல்லாம் ஜம்மு காஷ்மீர் கவர்னரை பற்றி குறிப்பிடுகிறது.

(c) references to the Government of the said State shall be construed as including references to the Governor of Jammu and Kashmir acting on the advice of his Council of Ministers; and

ஜம்மு காஷ்மீர் அரசை பற்றி சொல்வதெல்லாம் அதை கவர்னரை பற்றி குறிப்பிடுகிறது

(d) in proviso to clause (3) of article 370 of this Constitution, the expression “Constituent Assembly of the State referred to in clause (2)” shall read “Legislative Assembly of the State”.”

370 ஆம் சட்டப்பிரிவு மூன்றாம் உப பிரிவிலே அரசியல்நிர்ணைய சபை என வருவது சட்டசபை என மாற்றப்படும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ஜம்மு காஷ்மீர் கவர்னருக்கே எல்லா அதிகாரமும் பின்னர் அரசியல் நிர்ணய சபை என்பதை சட்டசபை என 370 இல் மாற்றியாயிற்று. இப்போது சட்டசபை வந்துவிடும். சட்டசபை சொன்னால் 370 ஐ மாற்றிட முடியும்.

ஆனா சட்டசபை இல்லை, கலைக்கப் பட்டு விட்டது. அப்போ சட்டசபையா எது செயல்படும்? நாடாளுமன்றம் செயல்படும். சட்டப்படி ஒரு மாநிலத்திலே சட்டசபை இல்லாமல் நேரடி குடியரசுத் தலைவர் ஆட்சி இருந்தால் நாடாளுமன்றத்திலே அந்த மாநிலத்திற்கான சட்டங்களை நிறைவேற்றலாம்.

அப்போது நாடாளுமன்றம் சொன்னால்..? 370ஐ ஒன்றுமில்லாமல் செய்துவிடலாம்.

நாடாளுமன்றம் குடியரசுத் தலைவருக்கு நமது அரசியலமைப்பு சட்டம் முழுமையாக காஷ்மீருக்கு செயல்படுத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. அதை ஏற்று குடியரசுத் தலைவரும் நமது அரசியல் சட்டம் முழுமையாக காஷ்மீருக்கு செயல்படும் என உத்தரவு போட்டுவிட்டார் அதுவும் 370 பிரிவு 1 இன் படி.!

In exercise of the powers conferred by clause (1) of article 370 of the Constitution, the President, with the concurrence of the Government of State of Jammu and Kashmir, is pleased to make the following Order:-

  1. (1) This Order may be called the Constitution (Application to Jammu and Kashmir) Order, 2019.

(2) It shall come into force at once, and shall thereupon supersede the Constitution (Application to Jammu and Kashmir) Order, 1954 as amended from time to time.

  1. All the provisions of the Constitution, as amended from time to time, shall apply in relation to the State of

Jammu and Kashmir and the exceptions and modifications subject to which they shall so apply shall be as follows

அவ்வளவு தான்! கதை முடிந்தது. அடுத்து ஜம்மு காஷ்மீரை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக்குவது. இதற்கு  முறைப்படி சட்டசபை தான் அதற்கான வரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். குடியரசுத் தலைவர் அதை நாடாளுமன்றதுக்கு அனுப்புவார். அதை நாடாளுமன்றம் ஒப்புக்கொண்டால், உடனே கையெழுத்துபோட்டு நிறைவேற்றுவார்கள்.

இப்போது அங்கே சட்டசபை இல்லை. ஜனாதிபதி ஆட்சி. எனில், நாடாளுமன்றம் தான் அந்த மாநிலத்துக்கான சட்டசபை அதிகாரங்களை வைத்திருக்கிறது. நாடாளுமன்றத்திலே சட்டம் நிறைவேற்றினால் பிரித்துவிடலாமா? பிரித்துவிடலாம். பிரித்தாயிற்று! குடியரசு தலைவரும் கையெழுத்து போட்டாயிற்று.

சரி.. இப்போது பல கேள்விகள். உச்ச நீதிமன்றத்துக்கு போனால் என்ன ஆகும்? (இப்போது உச்ச நீதிமன்றத்தில் போயிருக்கிறார்கள்!) ஆனால், ஒன்றும் ஆகாது. ஏன்?

முதல் கேள்வி – இப்படி குடியரசு தலைவர் கையெழுத்து போட்டு அரசியலமைப்பு சட்டத்திலே ஒரு பிரிவை நுழைக்கமுடியுமா?

முடியும். 1956 இல் 35அ பிரிவே அப்படித்தான் நுழைந்தது. எனவே இதற்கு 70 வருட முன்னுதாரணங்கள் இருக்கிறது.

அது தப்பு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புசொன்னால் பாதி அரசியலமைப்பை மாற்ற வேண்டும். பிஜேபிக்கு அது சந்தோசம் தான் எனவே அப்படிச் சொல்லமாட்டார்கள்.

அடுத்த கேள்வி இப்படி ஜனாதிபதி ஆட்சியை வைத்துக் கொண்டு, மாநிலத்தை பிரிக்கமுடியுமா?

முடியும். நேரு பிரித்த மாநிலங்களில் பலதும் இப்படித்தான் பிரிக்கப்பட்டது. ஏன் தெலங்கானாவே இப்படித்தான் பிரிக்கப்பட்டது.

நம் அரசியலமைப்பு சட்டமே மத்திய அரசுக்கு மிக அதிக அளவிலான அதிகாரங்களை வழங்குவதாகத்தான் இருக்கிறது. உபயம் வேறு யாருமில்லை… நேரு தான்.

நம்முடைய அரசியல்முறை பாதி கூட்டு முறை தான். நேரு ஒன்றான ஆட்சி பிரான்ஸ் மாதிரி, சிங்கப்பூர் மாதிரி கேட்டார். அப்போது இருந்த தலைவர் களான காமராஜர், பட்டேல் போன்றோர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை! போனால் போகிறதென்று சில அதிகாரங்களை கிள்ளிப் போட்டார்.

கடைசியாக ஒரு கேள்வி… இதிலே சிக்கலே இல்லையா?

இல்லை. எல்லா சந்து பொந்துகளை, ஓட்டை உடைசல்களை கான்கிரீட் போட்டு அடைத்துவிட்டுத்தான் இந்த விஷயத்தை கையிலே எடுத்தார் மோடி.

ஹாரிஷ் சால்வே உட்பட எல்லா அரசியல் சாசன அறிஞர்கள் இதிலே சட்டரீதியாக, அரசியலமைப்பு ரீதியாக எந்த பிரச்னையும் இல்லை. எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியாது என சொல்லிவிட்டார்கள்.

யோசித்துப் பாருங்கள்.! யாக்கூப் மேனனுக்கு நடுஇரவு நீதிமன்றத்தைக் கூட்டியவர்களால் உடனடியாக நீதிமன்றத்தைக் கூட்டியிருக்க முடியாதா?

முடிந்திருந்தால் செய்திருப்பார்கள். ஆனால் முடியவில்லை? முடியாதே? என்ன செய்வது?  இது முழுக்க முழுக்க மோடி-ஷா-டோவல் திட்டம். கவர்னரை முழு பிரதிநிதியாக ஆக்கி, சட்டசபையைக் கலைத்து நேரடி ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்து அதன் மூலம் சட்டசபையில் அதிகாரங்களை நாடாளுமன்றதுக்கு மாற்றிச்  செய்தது மிகப்பெரும் திட்டம்!

இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஆகியோர் முக்கியமானவர்கள். அதிலும் வெங்கய்ய நாயுடு மிகச் சரியாக ஆப்படித்தார். அவரைக் குறித்து முன்வைத்த அனைத்து விமர்சனங்களையும் நேற்ற்ய் ஒரு நாளிலே தவிடுபொடியாக்கிவிட்டார்.

சரி உலக அரங்குக்கு வருவோம்.

ஏதாவது பிரச்னை நடக்குமா? நடக்காது. ஏன்? ஜப்பான் சந்திப்பிலேயே மோடி இதைப்பற்றி அமெரிக்க அதிபரிடம் சொல்லிவிட்டார். தோவல் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இடமும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க செயலாலர் மைக் பாம்பியோவிடமும் சொல்ல்விட்டார்.

இதுவரை எந்த ஒரு நாடும் கண்டனம் தெரிவிக்கவில்லை. சவூதி, துருக்கி, மலேசியா போன்ற நாடுகளிடம் பாகிஸ்தான் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. அமெரிக்கா இன்றைக்கு இது இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என சொல்லிவிட்டது.

– ராஜா சங்கர் (Raja Sankar)

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...