spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?கற்பு எனப்படுவது யாதெனின்...!

கற்பு எனப்படுவது யாதெனின்…!

- Advertisement -

 

வரதட்சணை, விவாகரத்து, விதவை திருமணம், ஜோதிட சிக்கல்கள், குடும்ப வன்முறை போன்றவை இன்றும் தொடர்கின்றன என்றாலும் அவையெல்லாம் கலைகளைப் பொறுத்தவரையில் பழங்காலப் பிரச்னைகள்.

நவீன சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னையைப் பேசினால்தான் நவீன மனிதராக மதிப்பார்கள் என்பது உண்மைதான்.

ஆனால், நவீன இந்திய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்று பார்த்தால் வேறு எத்தனையோ இருக்கின்றன.

காதலை ஏற்க மறுத்தாலே ஆசிட் அடிக்கிறார்கள்; அருவாளால் வெட்டிக் கொல்கிறார்கள். அதைவிட அப்படிக் கொன்றவன் பக்கம் இருக்கும் ’நியாயங்களை’ ஊரே கூடி உயர்வாகப் பேசுகிறது.

சாதி/மத கலப்புத் திருமணம் செய்துகொள்ள முடிவதில்லை.  சிறுமிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை.  உலகின் எல்லா இடங்களையும்போல் கலவரங்கள் நடந்தால் முதல் இலக்கு பெண்கள்தான்.

இரவு நேரப் பணிகள், மதுபான விடுதி, மாடலிங், திரைத்துறை, ஊடகம் போன்றவற்றில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என எத்தனையோ இருக்கின்றன.

இவற்றை எல்லாம் விட்டுவிட்டு நேரடியாக இயக்குநர் உடலுறவுக்கு நோ சொல்லும் உரிமையை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார்.

மனைவிக்கும் அப்படிச் சொல்ல உரிமை உண்டு. விபச்சாரிக்கும் அப்படிச் சொல்ல உரிமை உண்டு. என்பதால் இந்தப் படத்தின் நாயகியரை இரண்டும் கலந்த கலவையாக சித்திரித்திருக்கிறார்.

மனதுக்குப் பிடித்தவருடன் படுத்துக்கொள்வார்கள். ஆனால், மனைவிகள் அல்ல; காசு வாங்கிக் கொள்ளமாட்டார்கள் அதனால் விபச்சாரிகளும் அல்ல. இவர்கள் நவ நாகரிக பெண்கள். ஆணைப் போல் நடந்துகொள்வதே விடுதலை என்று நம்புபவர்கள். அவ்வளவுதான்.

ஒரு பெண் உடலுறவுக்கு நோ என்று சொன்னால் நோ என்றுதான் அர்த்தம். அந்தப் பெண் தன் பெற்றோருடன் தங்காமல் அதே ஊரில் தோழிகளுடன் தனியாக வீடெடுத்துத் தங்கியிருக்கலாம்; உங்களுடன் டேட்டிங்குக்கு வந்திருந்து உங்களுடன் சிரித்துச் சிரித்து தொட்டு தொட்டுப் பேசியிருக்கலாம்.

அந்தப் பெண் செக்ஸ் ஜோக்குகள் சொல்லியிருக்கலாம். உங்களுடன் சேர்ந்து மது அருந்தியிருக்கலாம். உங்களுடன் ஒரே ஹோட்டல் அறையில் தங்கியிருக்கலாம். அந்தப் பெண் தனக்குப் பிடித்த பலருடன் திருமணத்துக்கு முன்பே உடலுறவு வைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் உடலுறவுக்கு அழைக்கும்போது அவள் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் என்றுதான் அர்த்தம்.

அந்தப் பெண் அந்த நோ-வை ஆயிரம் எஸ்-களுக்கு பிறகு சொல்லியிருந்தாலும் அந்த ஆயிரம் எஸ்கள் வேறு வேறு விஷயங்களுக்கானவை என்பதால் உடலுறவுக்குச் சொல்லும் நோ-வை நீங்கள் மதித்துத்தான் ஆகவேண்டும்.

என்னே ஒரு அற்புதமான சுதந்தரப் பிரகடனம் இது.

நான் அந்த பையன்களை நம்பினேன். அவர்கள் ஜெண்டில்மேன்களாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன் ஏமாற்றிவிட்டார்கள். நாங்க பண்ணினது தப்பா அவங்க பண்ணினது தப்பா என்று அந்தப் பெண் கண்ணீர் மல்கக் கேட்கிறார்.

பெண்கள் செவ்வாய் கிரஹத்தில் இருந்து வந்தவர்கள் என்பது உண்மைதான் போலிருக்கிறது. சுதந்தரம் என்றால் என்ன என்ற புரிதல் இல்லாததால் வந்த குழப்பம் இது. வொய் ஷுட் பாய்ஸ் ஹேவ் ஆல் த ஃபன் என்ற முழக்கத்தின் அசட்டுத்தனமான வெளிப்பாடு இது.

சுதந்தரம் என்பது பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டது. சாலையில் வாகனம் ஓட்டிச் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், சாலை விதிகளை மதித்துத்தான் ஓட்டியாகவேண்டும். வெளியூருக்குச் செல்வதென்றால் வீடுகளைப் பூட்டிவிட்டுச் செல்லவேண்டும். இரவில் தூங்கும்போது வீடுகளைப் பூட்டிக்கொள்ளவேண்டும் என்பவையெல்லாம் சுதந்தரத்தைக் குறுக்கும் செயல் அல்ல. சுதந்தரத்தை சரியாகப் பயன்படுத்தும் செயல்.

.இளமை, முதுமை, மரணம் என்ற கட்டுப்பாடுகள் மனிதருக்கு உண்டு. அது இயற்கை விதித்த விதி. சமூக அளவில் வேறு பல விதிகள் உண்டு. அது சமூகத்துக்கு சமூகம் மாறுபடும். சமூகம் முன்வைத்திருக்கும் விதிகளை மீறிச் செல்கிறவர்கள் அதற்கான முன் தயாரிப்புகளை எடுத்துக்கொண்டாகவேண்டும். பின் விளைவுகளை முன் யூகித்திருக்க வேண்டும். அல்லது எது நடந்தாலும் எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்கவேண்டும். ஆணைப் போல் நடந்துகொள்வேன். ஆனால், பெண்ணாக என்னை மதிக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது.

உதாரணமாக ஒரு ஆண் நாலைந்து பெண்களால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தப்படுகிறார் என்றால் அவர் இப்படி என்னை வன்கலவி செய்துவிட்டீர்களே என்று கண்ணீர் விடமாட்டார். அவருடைய விருப்பத்தை மீறி நடந்துவிட்டால் உடம்பைத் துடைத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்.

ஒரு ஆண் பலாத்காரம் செய்துவிட்டால் கற்பு பறி போனால் கதறும் ’பிற்போக்கு’ பாரம்பரியப் பெண்களைப் போல் நவநாகரிக பெண்கள் ஏன் கண்ணீர் உகுக்கிறார்கள்.

ஆமாம்… என்ன என்னோட விருப்பம் இல்லாம ஒருத்தன் சோலி பாத்துட்டான். அதுக்கென்ன இப்போ என்று துணிந்து சொல்லவேண்டியதுதானே… நான் விர்ஜின் அல்ல என்று சொல்ல முடிந்த பெண்ணுக்கு என் விருப்பத்தை மீறியும் ஒருத்தன் என்னை உறவுக்கு கட்டாயப்படுத்தியிருக்கான் என்று கேஷுவலாகச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டியதுதானே.

நான் அவனை நம்பினேன். அவன் மோசம் செய்துவிட்டான் என்று ஏன் சொல்கிறார்கள். திருமணத்துக்கு முந்தைய மற்றும் கணவர் அல்லாத நபர்களுடனான உடலுறவை உரிமைகளாக வென்றெடுத்த நவ நாகரிகப் பெண் வலுக்கட்டாய உறவை ஒரு விபத்தாக, பிழையான கணிப்பாக, கெட்ட கனவாக நினைத்து வாழ்க்கையை பிற ஜெண்டில்மேன்களுடன் கொண்டாட வேண்டியதுதானே.

நவநாகரிகப் பெண் ஒருத்தியை ஒருவர் வல்லுறவு கொள்கிறார் என்றால் அல்லது அதற்கு முயற்சி செய்கிறார் என்றால் அங்கு நடப்பது கற்புப் பறிப்பு அல்ல. ஏனென்றால் கற்பு என்ற விஷயம் பற்றி அந்தப் பெண்ணுக்கு எந்தவொரு நல்ல அபிப்ராயமும் கிடையாது. அதை அவர் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை.

அங்கு நடப்பது அவருடைய சுய விருப்பத்தை மீறி நடக்கும் ஒரு செயல். அந்தப் பெண்ணின் ஆளுமையை மதிக்காமல் செய்யப்படும் ஒரு வன்முறை. இதை அவர் அப்படியான ஒரு கொடுமையாகவே எதிர்க்கவேண்டும்.

கற்பை உயர்வாக மதிக்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படும்போது எப்படி தார்மிகக் கோபத்தை வெளிப்படுத்துவாரோ அப்படியான கோபத்தை நவ நாகரிகப் பெண்கள் வெளிப்படுத்தக்கூடாது.

தங்க நகை அணிந்துகொண்டு பணம் எடுத்துக்கொண்டு வெளியில் செல்கிறோம். திருடு போய்விடுகிறது. நிச்சயம் ஐயோ ஐய்யோ என்று கத்தலாம் கதறலாம். வெறும் கவரிங் நகை அணிந்து சென்றபோது குழந்தைகள் வைத்திருக்கும் விளையாட்டுப் பணம் கொண்டு செல்லும்போது திருடப்பட்டால் ஊரைக் கூட்டி சீன் போடக்கூடாது.

இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தங்கம் போல் கற்பை மதிப்பவர் என்றால் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது மிகவும் அவசியம். கற்பை கவரிங் நகைபோல் துச்சமாக மதிப்பவரென்றால் அது பறிபோனால் கத்தி கூப்பாடு போடக்கூடாது.

புல் வெளியில் நான் பாட்டுக்கு மேய்ந்துகொண்டிருந்தேன். ஒரு சிங்கம் மறைவில் இருந்து பாய்ந்து வந்து என்னை அடித்துவிட்டது இது நியாயமா என்று கேட்கும் தார்மிக பலம் ஒரு குட்டி மான்குட்டிக்கு உண்டு.

ஆனால், அதே மான்குட்டி சிங்கத்தின் குகைக்குச் சென்று தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்பி துள்ளிக் குதித்து விளையாட வா விளையாட வா என்று மருளும் கண்களால் மயக்கிவிட்டு, சிங்கம் ஒரே அடி அடித்துப் போட்டதும்… உன்னை நான் எவ்வளவு நம்பினேன் இப்படி செய்துட்டியே… என்று கேட்டால் அதை சுதந்தர உரிமை முழக்கமாக அல்ல… அசட்டுத்தனமாகத்தான் பார்க்கவேண்டியிருக்கும்.

சிங்கம் அடித்தது தவறுதான். அதைவிட சிங்கம் அடிக்கும் என்பது தெரியாமல் குகைக்குள் போய் துள்ளிக் குதித்தது மானின் மிகப் பெரிய தவறு.

இப்படி பாதிக்கப்பட்ட பெண் மீது குறை சொல்லும்போது நேரத்துக்குத் தகுந்த நிறம் காட்டும் முற்போக்காளர்களில் ஆரம்பித்து ப்யூர் பெண்ணியவாதிகள் வரை பலரும் இந்து இந்திய எதிர்ப்பு நிறமாலையின் பல வண்ணங்களைக் காட்டுவார்கள்.

முற்போக்கு பச்சோந்திகளை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் இந்து/ இந்திய சமூகம் அதி சுதந்தர, அதி ஜனநாயக சமூகமாக மாறியே ஆகவேண்டும் என்ற உயர் எண்ணம் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இஸ்லாமில் பர்தா என்பது ஆணின் மனதில் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்தாமல் தடுக்கும் உயரிய நோக்கிலேயே பயன்படுத்தப்படுகிறது…

ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் ஆணின் மனதில் அந்த எண்ணத்தை உருவாக்கிய அந்தப் பெண்ணுக்கு 100 கசையடி தரவேண்டும் என்ற இஸ்லாமிய நீதிபற்றி ஒரு அட்சரம் பேசமாட்டார்கள். உங்க கேள்விகளுக்கு அப்பறம் பதில் சொல்லறேன்.. கொஞ்சம் வெளிய போய் உட்காருங்க என்று சொல்லி அவர்களை அனுப்பிவிடலாம்.

ஆனால், ப்யூர் பெண்ணியவாதிகளின் கேள்விகளை நிச்சயம் அப்படி புறமொதுக்கிவிடமுடியாது. அவர்கள் நோ சொல்லும் உரிமையைக் கோரும்போது நிச்சயம் அதை மதிக்கத்தான் வேண்டும். ஆனால், அந்த நோவைக் கொஞ்சம் முன்னதாகவே சொல்லிவிடுங்கள்… பேண்ட் ஸிப்பைக் கழட்டறதுவரை காத்திருக்கவேண்டாம் என்று மட்டுமே அவர்களிடம் சொல்ல முடியும்.

அடுத்ததாக அந்தப் பெண் இரவில் அங்கு போனது தவறு என்று சொன்னால், உடனே பெண்களைப் படிக்கவைக்கக்கூடாது, பெண்களை வேலைக்கு அனுப்பக்கூடாது, பெண்களை உடனே திருமணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லும் நிலவுடமை மனநிலை கொண்ட பிற்போக்குவாதி என்று ஒரேயடியாக ஏறி மிதித்துவிடுகிறார்கள்.

பெண்களுடைய உணர்வுகளை ஆண்கள் மதிக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அப்படியான மனநிலை மாற்றம் 100 சதவிகிதம் ஏற்பட்டிராத நிலையில் பெண்கள் தற்காலிகமாக கொஞ்சம் அனுசரித்துச் செல்லலாம் என்பதில் இருக்கும் நியாயத்தை எப்படிப் புரியவைப்பது?

ஒரு சாலை இருளடைந்திருந்தால் அங்கு நாய்கள், நாகங்கள் உலவ வாய்ப்புகள் உண்டென்றால், அந்த வழியைக் கொஞ்சம் தவிர்க்கச் சொல்வதில் உங்கள் மேல் அக்கறை மட்டும்தானே இருக்கிறது. உடனே, எங்களை வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது என்று ஏன் சொல்கிறீர்கள் என்று ஏன் கூக்குரலிடவேண்டும்.

ஒரு பெண் படிக்கலாம். இரவுகளில் நண்பர்களுடன் வெளியே செல்லலாம். ஆண் நண்பர்களைப் பொது இடங்களில் நான்கைந்து பேர் பார்வையில் படும்படியாக மட்டுமே சந்திக்கவேண்டும் என்பதுபோன்ற விஷயங்களை சுதந்தரத்தை கட்டுப்படுத்துவதாக ஏன் பார்க்கவேண்டும். ஆண்களுக்கும் கூட திருட்டு, கொள்ளை, கலவரங்கள் என பல விஷயங்கள் தொடர்பாக பல கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

நாம் ஆணாதிகம் உச்சத்தில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள்போல் இல்லை. அப்படி ஆகப்போவதும் இல்லை. வல்லாதிக்க கிறிஸ்தவ நாடுகள்போல அதீத உரிமை பேசுபவர்களும் இல்லை. அப்படி ஆகத் தேவையும் இல்லை.

  • பி.ஆர்.மகாதேவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe