
மத்திய அரசு, இந்தியா முழுவதும் பொருட்களுக்கான வரி ஒரே அளவில் கொண்டு வருவதற்காக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்தது.
ஜிஎஸ்டி வரி விதிக்கும் முறைக்கு பின்னர், ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்திருந்தது.
ஆனாலும், மத்திய அரசு செய்திருந்த வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் பொருட்களின் விலையைக் குறைக்காமல் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மக்களிடம் தொடர்ந்து அதிக பணம் பெற்று மோசடி செய்து வந்தது அம்பலமானது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் இந்த மோசடியால் தற்போது அந்நிறுவனத்திற்கு ரூ.230 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் குறையும் பட்சத்தில் அதற்கேற்றவாறு பொருட்களின் விலையை உடனடியாக மாற்ற வேண்டும்.
ஆனாலும் சில நிறுவனங்கள் பொருட்களின் விலையை மாற்றாமல் ஜிஎஸ்டி வரிக்குறைப்பை தாங்கள் மட்டுமே அனுபவித்துக் கொண்டு மக்களிடம் பழைய வரி விகிதங்களின் படி கட்டணங்களை வசூலித்து வருகின்றன.
2017 நவம்பரில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிகிதம் 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.
ஆனால் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பொருட்களின் விலையைக் குறைக்காமல் அதே 28% ஜிஎஸ்டியையே மக்களிடம் தொடர்ந்து வசூலித்து வந்தனர்.
இந்த ஜி.எஸ்.டி வரி குறைப்பின் பலனை நுகர்வோருக்குக் கடத்தாமல் மோசடி செய்ததை, என்.ஏ.ஏ (NAA – National Anti-profiteering Authority) அமைப்பு கண்டறிந்தது. எனவே அந்த நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி சட்டம் 171(3A) பிரிவின் படி ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதே போன்று ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்டதால் பிரபல சாக்லேட் நிறுவனமான நெஸ்லேவுக்கு ரூ.90 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரும் நிறுவனங்கள் இப்படி பொதுமக்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேர வேண்டிய வரி பலன்களை அபகரித்து, கோடிகளில் சம்பாதித்திருப்பது நுகர்வோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனி இந்த பொருட்களை வாங்கும் போது ஜிஎஸ்டி வரியை சரி பார்த்து, குறைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனித்து வாங்குங்கள். நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் உங்கள் உழைப்பினால் வந்தது.