― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeபொது தகவல்கள்தேசிய மருத்துவர்கள் தினம்!

தேசிய மருத்துவர்கள் தினம்!

- Advertisement -

மருத்துவர்கள் என்றாலே மதிப்பும் மரியாதையும் உண்டு ! உயிர் காக்கும் உத்தமர்கள் என்பதால், கடவுள் எனவே போற்றிப் புகழுகிறோம் !

அத்தகைய உன்னத மருத்துவப் பணியில் கடமையாற்றுகிற அவர்களைச் சிறப்பிக்கும் தினம் தான் மருத்துவர்கள் தினம் ! அவர்களது பணியை அங்கீகரித்தல், அனைவரின் கவனத்துக்குக் கொண்டு வருதல், அவர்களின் சேவையைப் பாராட்டுதல் போன்றவை இந்நாளின் சிறப்பு!

உலகின் பல நாடுகளிலும் மருத்துவர்கள் தினம் ஆண்டின் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை ஒன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது.

நமது தேசத்தின் தலைசிறந்த மருத்துவரான டாக்டர் பிதான் சந்த்ர ராய் அவர்களை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் ஜூலை ஒன்றாம் நாள் தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

டாக்டர் பிதான் சந்த்ர ராய்:

திறமை, கடின உழைப்பு, ஏழைகள் பால் அன்பு, தியாக உள்ளம் சேவை மனப்பான்மை கொண்ட, டாக்டர். பி.சி.ராய் என்று அழைக்கப்பட்ட, டாக்டர் பிதான் சந்த்ர ராய் இந்தியாவின் மருத்துவர்களில் முக்கியமானவர். பி.சி.ராய், 1882 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் நாள், பீகார் மாநிலம் பாரங்கிபுரில் பிறந்தார்.

கணிதத்தில் பட்டப்படிப்பு முடித்த பின், மருத்துவக் கல்வி பயின்றார் பி.சி.ராய். மருத்துவ மேல்படிப்புக்காக, லண்டன், பார்த்தலோமியோ மருத்துவமனைக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். நிறத்தின் இனத்தின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டது. விடாமுயற்சியுடன் மீண்டும் மீண்டும் விண்ணப்பித்துக் கொண்டிருந்தார். முப்பது முறை முயற்சித்தபின், அனுமதி கிடைத்தது.

மிகக் குறுகிய காலத்தில், இரண்டே வருடத்தில், எஃப்.ஆர்.சி.எஸ் மற்றும் எம்.ஆர்.சி.பி ( F.R.C.S and M.R.C.P ) என்ற இரண்டு தகுதிகளையும் பெற்று மகத்தான சாதனை படைத்தார்.

இங்கிலாந்திலிருந்து திரும்பிய பின் கல்கத்தாவில் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியபடி, தன் மருத்துவ சேவையைத் தொடர்ந்தார்.

தேச சேவையும் அரசியலும்

நாட்டு மக்கள் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் தான், சுதந்திரம் கிடைக்கப் போராடமுடியும், சுதந்திரம் பெற்ற பின் நாட்டைக் காக்க முடியும் என டாக்டர்.பி.சி.ராய் கருதினார்.

ஏழைகளின் உடல் நலத்தைப் பேண பல மருத்துவ சேவை மையங்களை நிறுவினார். ஜடவ்பூர் டி.பி. மருத்துவமனை, கமலா நேரு நினைவு மருத்துவமனை, விக்டோரியா கல்லூரி, சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சித்தரஞ்சன்  சேவாசதன் ஆகியவை டாக்டர்.பி.சி.ராய் அவர்களின் முயற்சியால் நிறுவப்பட்டவை ஆகும்.

டாக்டர்.பி.சி.ராய், அண்ணல் மகாத்மா காந்தியின் நண்பரும் மருத்துவரும் ஆவார். அவருடன் இணைந்து விடுதலைப் போராட்டங்களிலும் கலந்து கொண்டார். அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டியில் உறுப்பினராக இருந்தார்.

உப்பு சத்யாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டபோது கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். சுதந்திரத்துக்குப் பின், மகாத்மா காந்தியின் ஆலோசனையின் படி, காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்காளத்தின் முதல்வர் பதவிக்கு டாக்டர்.பி.சி.ராய் அவர்களை பரிந்துரை செய்தது.

1948ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் டாக்டர்.பி.சி.ராய் மேற்குவங்க முதல்வராகப் பணியாற்றினார். மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் டாக்டர்.பி.சி.ராய்.  அம்மாநிலத்தின் முதன்மை நகரங்களான துர்காபூர், பிதான் புறநகர் வளர்ச்சி அடையச் செய்தார்.

ஏழைகளின் மீது மிகவும் அன்பு கொண்டவர் அவர். தன் வீட்டை ஏழைகளுக்கான மருத்துவமனை கட்டுவதற்குக் கொடுத்தார். டாக்டர்.பி.சி.ராய்  அவரது பிறந்த நாளான ஜூலை ஒன்று அன்றே  1962 ஆம் ஆண்டு மரணமுற்றார் என்பது ஒரு துயரமான வியப்பான செய்தி. அன்றைய தினம் கூட அவர், தனது மருத்துவப் பணிகளையும், அரசுப்பணிகளையும் கவனித்து உள்ளார்.

பாரதரத்னா

டாக்டர்.பி.சி.ராய் அவர்களின் பல்முனை கொண்ட , மருத்துவம், சமூகத்தொண்டு, கல்வி, நிர்வாகத்திறன் போன்ற பல்முனைச் சேவையைப் பாராட்டி, இந்திய அரசு, அவருக்கு, பாரத ரத்னா விருதை 1961 ஆம் ஆண்டு வழங்கிக் கவுரவித்தது.

தேசிய மருத்துவர்கள் தினம்

டாக்டர்.பி.சி.ராய் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாகவும், நம் நாட்டின் மருத்துவர்களின் சேவையைப் பாராட்டும் விதமாகவும், டாக்டர்.பி.சி.ராய் அவர்களின் பிறந்த தினமாகிய ஜூலை ஒன்றாம் நாள் இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1976 ஆம் ஆண்டு முதல் சிறந்த மருத்துவ சேவைக்கான பி.சி.ராய் விருது கொடுக்கப்பட்டு வருகிறது. 

பெருந்தொற்றுக்காலத்தில் மருத்துவ சேவை

இன்றைய கொரோனா பெருந்தொற்றுச் சூழலில் ஒவ்வொரு மருத்துவரின் சேவையும் போற்றுதலுக்குரியது. கொரோனா உயிரிழப்புகளைக் குறைத்தல் என்ற சீரிய நோக்கத்துடன், கொரோனா நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சை அளித்தல் என்ற உயரிய நோக்கத்துடன், இரவு பகல் பாராது, ஓய்வு ஒழிவு இன்றி, தன் உடல் நலத்தையும்,சுகத்தையும் பின் தள்ளி, முன்கள கொரோனா போராளிகளாக போராடி வரும் ஒவ்வொரு மருத்துவருக்கும் நம் பாராட்டுகள் உரித்தாகட்டும்.

செம்மையாகப் பணியாற்றும் மருத்துவர்களின் பணி சார்ந்த தேவைகள், அவர்களின் ஓய்வு, உணவு மற்றும் உறக்கத்துக்கான அடிப்படை வசதிகளை அழகுற அமைத்து தருதல் இந்த தேசத்தின் கடமையாகும்.

அயராது உழைக்கும் மருத்துவர்களின் குடும்ப நலத்தைப் பேணுவதும் அரசின் கடமையாகும். கொரோனா போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த மருத்துவர்களின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்வதும் நம் கடமையாகும்.

மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணி, பாதுகாப்பு முறைகளைச் சரிவர பின்பற்றி நோய்த்தொற்று பரவாமல் கவனமாக இருப்பது நம் அனைவரின் கடமையாகும். மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள்!

  • கட்டுரை: கமலா முரளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version