அப்பாவின் டைப்ரைட்டர்… இன்று எத்தனையோ சோம்பேறிகளை நான் பார்க்கிறேன். கவியரசரின் சுறுசுறுப்பு ஓர் அதிசயம்தான்.
அதிகாலை ஆறு மணிக்கு எழுந்து அம்மாவின் கையால் ஒரு டீயை குடித்துவிட்டு பின்னர் குளித்துவிட்டு ஏழு மணிக்கெல்லாம் புறப்பட்டுவிடுவார். பத்து கார்களாவது வெளியில் காத்துக் கொண்டிருக்கும்.
பதினைந்து ஆண்டுகளில் நான்கு இடங்களில் அவரது சினிமா அலுவலகங்கள் இருந்தன. தியாகராய நகர் உஸ்மான் ரோடு… இதில் தான் பின்னாளில் மேஸ்ட்ரோ இளையராஜா குடிவந்தார்.
ஜெகதாம்பாள் தெரு , ராணி சின்னம்மாள் தெரு , ஆழ்வார்பேட்டை , லேடி மாதவன் நாயர் ரோடு, மஹாலிங்கபுரம். இத்தணை அலுவலகங்களுக்கும் இந்த டைப்ரைட்டர் பயணித்தது. கவிஞரின் உதவியாளர் திரு. நடராஜ ஐயர் ஆங்கிலம் தெரிந்த அந்தக் காலத்து இன்டெர் மீடியேட் படித்தவர். ஆகவே அவர்தான் கவிஞரின் மற்ற மாநிலங்களுக்கான கடிதங்களையும் மத்திய அமைச்சர்களுக்கான கடிதங்களையும் டைப் செய்வார்
அவருக்குப்பின் மானேஜராக இருந்த ராமநாதன் செட்டியார் டைப் செய்வார். அவசர கடிதம் எழுத வேண்டி இருக்கும் பொழுது இவர்கள் வரவில்லை என்றால் அப்பாவே இரண்டு விரல்களால் டைப் செய்வார்.
கவிஞர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்த பொழுது அதிகம் பயன்பட்டது. என்ன, அத்தனையும் சிபாரிசுக்கான கடிதங்கள். அன்றைய இந்த உறுப்பினருக்கு அதிக மரியாதை உண்டு. பழைய காங்கிரஸ்காரர்கள் அறிவார்கள். அருமையாக புதுப்பிக்கப்பட்டு என்றும் கவிஞரின் படத்தருகில் உள்ளது.
– காந்தி கண்ணதாசன் (கவியரசர் கண்ணதாசனின் புதல்வர்)