கிரிக்கெட் நேஷன், கிரிக்கெட் தோன்றிய நாடு, இங்க்லீஷ் விளையாட்டு என்றெல்லாம் பெயர் வாங்கி தனக்கேயான ஒரு வரலாறைக் கொண்டிருந்த இங்கிலாந்து, இப்போது ஒரு மோசமான சாதனையைப் படைத்து வரலாற்றில் இடம்பிடித்து விட்டது.
போல்ட், டிம் சௌதி இருவரும் ‘நாங்களே போதும்’ என இங்கிலாந்து அணியை சுருட்டி மோசமான சாதனையை இங்கிலாந்து படைக்கக் காரணமாகிவிட்டார்கள்!
இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான முதல் பகல் – இரவு டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 58 ரன்னில் சுருண்டது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரை இது மோசமான சாதனை தான். ஆனால், அதையும் விட மோசமான சாதனையும் இந்த அணி இன்று படைத்தது. அது என்னவென்றால்… டக் அவுட் சாதனைதான்!
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று இங்கிலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ‘நாங்களே முதலில் பேட் செய்ய வேண்டும் என்று தான் விரும்பினோம்’ என்று கூறினார். ஆனால், அது எவ்வளவு பெரிய அபத்தம் என்று சாதனைகளைப்படைத்த பின்னர்தான் அவருக்கே புரிந்தது.
இந்நிலையில், பேட்டிங் செய்ய தயாராக இருந்த இங்கிலாந்து அணி களமிறங்கியது… களம் இறங்கியது… களம் இறங்கியதுதான்! நியூஸிலாந்தின் ஆக்ரோஷ பந்துவீச்சில் நிலை குலைந்து போனது. இங்கிலாந்தின் 11 பேட்ஸ்மேன்களில் 2 பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். கேப்டன் ரூட் உட்பட ஐந்து பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
நியூஸியின் பிரதான ஃபேஸ் பவுலர்கள் போல்ட் மற்றும் டிம் சௌதி இருவரும், அட நாங்களே போதும் பாத்துக்கிறோம் என்று, இங்கிலாந்தை 58 ரன்னில் சுருட்டி விட்டனர். இதில் 6 விக்கெட்டுகள் போல்ட்டுக்கும், 4 விக்கெட்டுகள் சௌதிக்கும் கிடைத்தன. 6-1, 6-2, 16-3, 18-4, 18-5, 18-6, 23-7, 23-8, 27-9, 58- ஆல் அவுட்! இதுதான் விக்கெட் வீழ்ந்த வரலாறு!
தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி, 69 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்திருந்தது.
இங்கிலாந்து அணியின் 6-வது குறைந்தபட்ச ஸ்கோர் இது. முன்பு, 1887ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 45 ரன்னில் சுருண்டதே இதுவரையில் குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. 1955இல், 26 ரன்னில் நியூசிலாந்து அணி சுருண்டதே டெஸ்டில் அரங்கில் ஒரு அணியின் குறைந்தபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர்.
இன்றைய போட்டியின் போது, 27-9 என்ற நிலையில் இருந்தது இங்கிலாந்து. இறுதிக் கட்டத்தில் கிரெய்க் ஓவர்டன், 25 பந்தில் 33 ரன்கள் எடுத்ததால், இரண்டாவது மோசமான டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோரை படைக்கும் மோசமான பட்டியலில் இடம்பெறாமல் தப்பியது இங்கிலாந்து!
அடுத்த சாதனை… இதற்கு முன், இங்கிலாந்து பவுலிங் கூட்டணி படைத்த சாதனையை, நியூசி., பவுலிங் கூட்டணி தகர்த்ததுதான். கடந்த 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் 2 பவுலர்கள் சேர்ந்து எதிரணியை ஒருமுறை மட்டுமே ஆல் அவுட் செய்தனர். 2013ம் ஆண்டு, இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூட்டணி, லார்ட்ஸில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 22.3 ஓவரில் 68 ரன்களுக்கு எதிரணியை சுருட்டியது.
தற்போது ஐந்து வருடங்கள் கழித்து, போல்ட் மற்றும் சௌதி கூட்டணி, இங்கிலாந்து அணியை 20.4 ஓவரில் 58 ரன்களுக்கு சுருட்டியுள்ளது.