மூட நம்பிக்கையும் பகுத்தறிவும்! ஒப்பீட்டு ரகசியங்கள்!

நம்பிக்கை என்பதே மூடத்தனம் என்றார் கண்ணதாசன். அந்த மூடத்தனத்தைக் கைக் கொண்டிருப்பது பகுத்தறிவு ஆகாது என்றார் அவர். நம்பிக்கை வைப்பதாகவோ, நம்பிக்கை கொண்டிருப்பதாகவோ ஒன்றை நம்புவதே அறிவுக்கு அப்பாற்பட்டதாக, பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகக் கருதப் படும்.

இப்போது பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவு, கடவுள் நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை, இவற்றை வைத்துக் கொண்டு எது மூட நம்பிக்கை, எது பகுத்தறிவு என இருதரப்பினர் பார்வையில் சொல்லப்படும் கருத்துகள்..

கோவிலுக்குள் சிலை வைத்து வழிபட்டால் மூட நம்பிக்கை. தெருவுக்குத் தெரு சிலை வைத்து வணங்கினால் பகுத்தறிவு.

கடவுளுக்கு வேண்டிக் கொண்டு முடியிறக்கினால் மூட நம்பிக்கை தலைவனுக்காக சமாதியில் முடியிறக்கினால் பகுத்தறிவு.

இறைவன் உதித்த தினத்தில் வழிபட்டால் மூட நம்பிக்கை. தலைவன் பிறந்த நாளைக் கொண்டாடினால் பகுத்தறிவு.

உணர்ச்சி மிகுதியில் தீ மிதித்தால் மூட நம்பிக்கை. உணர்ச்சிக்கு உற்சாக பானம் ஏற்றிக் கொண்டு தீ வைத்தால் பகுத்தறிவு.

கிருஷ்ணா, ராமா, அல்லா, ஏசப்பா என்று உள்ளம் உருக அழைத்தால் மூட நம்பிக்கை. தலைவா என்று ஊர் கேட்க கூவினால் பகுத்தறிவு.

பிரசாதம் என்றால் மூட நம்பிக்கை. அன்னதானம் என்றால் பகுத்தறிவு..

மொத்தத்தில் இல்லாததை இருப்பதாக நினைத்து மதிப்பு தந்து வணங்கினால் மூட நம்பிக்கை. இருந்தது இல்லாததான பின் தன் மதிப்புக்காக வணங்கினால் பகுத்தறிவு.

இதுதான், இந்த அரை நூற்றாண்டு பகுத்தறிவு மார்க்கம் கற்றுக் கொடுத்துள்ள நுண்ணறிவு!