இந்த வெட்கக்கேட்டிற்கு முடிவே கிடையாதா? சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதற்கு உதவி செய்த 2 தலைமை சிறைக்காவலர்கள் உள்ளிட்ட 8 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பது செய்தி.
சிறையில் கைதிகளுக்கு சட்ட விரோதமாக உதவுவது குற்றச் சம்பவம் இல்லையா? அந்த உதவிகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பயங்கரங்கள் என்னென்ன? இது போன்ற விஷயங்களெல்லாம் ஐபிசி தண்டனைக்குள் வராதா?
அதாவது அரசு ஊழியர்கள் குற்றம் செய்தால், அவர் மீது நிர்வாக ரீதியாக மட்டுமே நடவடிக்கை.. சும்மா லுலுலாயி… ஆனால் பொதுமக்கள் தப்பு செய்தால் அவர்கள் மீது உடனே குற்றவியல் நடவடிக்கை..
அரசு ஊழியர் அவர் பணியை சரியாக செய்யாவிடில் குற்றமாகாது. அதே ஊழியரை ஏன் உங்கள் வேலையை சரியாக செய்ய மாட்டேன் என்று பொது மக்களில் யாராவது ஒருத்தன் கேட்டால் அவர் மீது உடனே, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தார் என ஐபிசி செக்சனில் வழக்கு பதிவு. கைது ரிமாண்ட்..
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் பச்சைப்பொய் அன்றி வேறென்ன?
கருத்து: – ஏழுமலை வேங்கடேசன் (ஊடகவியலாளர்)