கேப்டன் லட்சுமி எனப்படும் இலட்சுமி சாகல் அல்லது இலட்சுமி சேகல் என்பவர் 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். 20 சிங்கப்பூர் பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் பிற்பாடு 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சர்;இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். இவர் அக்காலத்தின் சென்னை மாகாணம் பகுதியைச் சேர்ந்தவர். அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர் இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்திய மேலவையில் உறுப்பினராகப் பணியாற்றினார். 2002 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் ஜூலை 23, 2012 அன்று மாரடைப்பால் இறந்தார்.
லட்சுமி 1914 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் சுவாமிநாதன்-அம்மு இணையருக்கு மகளாகப் பிறந்தார். இவரின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்தவர். மேலும் அமெரிக்காவில் வானியல்துறையில் முனைவர் பட்டமும், சிறந்த கணிதவியல் நிபுணர் என்ற தகுதியும் பெற்றவர். அத்துடன் குற்றவியல் வழக்கறிஞர் என்ற பெருமதிப்பும் பெற்றவர். இவரின் தாய் அம்மு சுவாமிநாதன் கேரளா மாநிலம், பாலக்காட்டில் சமூக சேவகராக இருந்தவர். குட்டி மாலு அம்மா என்ற இவரது மற்றொரு குடும்ப உறுப்பினரும் விடுதலைப் போராட்டத் தியாகியாக இருந்தவர். இளம் வயதிலேயே நாட்டு விடுதலை, சமுதாய சமத்துவம் ஆகிய இலட்சியங்கள் லட்சுமியின் மனதில் இடம்பெற்றன
லட்சுமி ஒன்பதாம் வகுப்பில் பயிலும்போதே மருத்துவம் பயில வேண்டும் என்று தீர்மானித்தார். ஆங்கில அறிவின் மேன்மை காரணமாக ஆங்கில மிசினரி பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு பெற்றும், அங்கு மருத்துவக் கல்விக்குத் தேவையான பாடங்கள் செம்மையாகப் போதிக்கப்படவில்லை என்று லேடி லிவிங்க்டன் ஆசிரியப் பயிற்சிக் கல்லுரியின் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். 1930-ல் இடைநிலைக் கல்வியை இராணி மேரி கல்லூரியில் தொடர்ந்தார். 1938 -ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எசு. பட்டம் பெற்றார்
1942ல் பிரித்தானிய-சப்பானியப் போரில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தார். 1943 -ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படையைத் தொடங்கினார். இப்படை ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படையாகக் கருதப்படுகிறது
லட்சுமியின் தாயாரும் தங்கையும் அமெரிக்காவில் இருந்தனர். தனது தந்தையையும் 1930-ல் இழக்க நேரிட்டது. சென்னையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் வாழ்வைக் கழித்துவந்த லட்சுமி தனது உறவினர் ஒருவருக்கு மருத்துவர் என்ற நிலையில் உதவி செய்ய, 1940ல் சிங்கப்பூர் சென்றார். எளிய தென்னிந்திய தொழிலாளப் பெண்கள் நிறைந்த அந்தச் சூழலில் நல்ல இந்தியப் பெண் மருத்துவர் இல்லை என்று கண்டார். அங்கேயே தங்கி தன் மருத்துவ சேவையில் ஈடுபடலானார். சிங்கப்பூரில் ஏழைகளுக்காக மருத்துவமனை தொடங்கினார். வெகு விரைவிலேயே ஒரு நல்ல மருத்துவர் எனப் புகழ்பெற்றார்
இந்திய சுதந்திர லீகின் அழைப்பின் பேரில் 1943-ல் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் வந்தார். அப்போது இந்திய சுதந்திர லீகின் சிங்கப்பூர் கிளைக்கு எல்லப்பா என்பவர் தலைவராக இருந்தார். அவரிடம் லட்சுமி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தான் ஒரு முக்கிய பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதே நேரம் நேதாஜியும் ஜான்சிராணி படை என்ற பெயரில் பெண்களும் ஆயுதப் போராட்டத்தில் சமமாகப் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். மறுநாள் நேதாஜியுடன் இரவு உணவு உண்ண லட்சுமிக்கு அழைப்பு வந்தது. இப்படைக்குத் தலைமையேற்கும் தனது இசைவைத் தெரிவித்ததும் அடுத்துச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும் சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்தார். உங்கள் சேலை உடையும், நீண்ட கூந்தலையும் வைத்துக் கொள்ள முடியாது என்றும் நினைவுறுத்தினார். தனது நட்பு, பாசம் ஆகிய தொடர்புகளை விட்டு, நாட்டுக்காகத் தமக்குத் தாமே என்ற உறுதி கொண்டார்
1945-ல் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் ஓரிடத்தில் கூடினர். அதில் இந்தியாவில் இருந்து வந்த மூன்று இதழியலாளர்களும் இருந்தனர். இக்கூட்டத்தில் ” இன்னும் போர் முடிவடையவில்லை நாம் இந்தியாவுக்குள் அடிவைத்து விடுதலை இலட்சியம் நிறைவேறும் வரை போராடுவோம்..” என்று இந்தியில் முழங்கினார். இச்செய்தி பிரித்தானிய இராணுவத் தலைமைக்கு எட்டியது. உடனே லட்சுமியைக் கைது செய்து “கலாப்” என்ற இடத்தில் வைத்தனர். விசாரணை எதுவும் நடத்தப்படாமல் இவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். கல்கத்தா வந்து சேர்ந்த லட்சுமி அங்குள்ள காவல்நிலையத்தில் தனது வருகையைப் பதிவிடச் சென்றார். அங்கிருந்து அவர்கள் நேதாஜியின் சகோதரி மகள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
1971ல் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார். 1972-ல் பங்களாதேசப் போர் நடைபெற்ற போது வங்காள கவர்னராக இருந்த பத்மசா நாயுடு என்பவருடன் கடிதம் மூலம் அனுமதி பெற்று வலிய உதவி செய்யச் சென்றார். போரில் சேதமடைந்தவர்களின் நிவாரணப்பணிக்கு நிதிதிரட்டி அளித்தது மட்டுமைன்றி, தாமே சென்று போர்ச்சூழலில் மருத்துவப் பணியாற்றினார்
2002ல் இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு இந்திய பொதுவுடைமை மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்